48 - திக்ர் மற்றும் துஆ புத்தகம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: என்னைக் குறித்து என் அடியான் எப்படி நினைக்கிறானோ அப்படியே நான் அவனிடம் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவுகூரும்போது அவனுடன் நான் இருப்பேன். அவன் தனது உள்ளத்தில் என்னை நினைவுகூர்ந்தால், நானும் எனது உள்ளத்தில் அவனை நினைவுகூருவேன். என்னை ஓர் அவையோர் மத்தியில் அவன் நினைவுகூர்ந்தால், அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையோரிடம் அவனை நான் நினைவுகூருவேன். அவன் என்னை ஒரு சாண் அளவு நெருங்கினால், நான் ஒரு முழம் அளவு அவனை நெருங்குவேன். அவன் ஒரு முழம் அளவு என்னை நெருங்கினால், (வலமாகவும் இடமாகவும் விரிந்த) இரு கைகளின் நீட்டளவு அவனை நான் நெருங்குவேன். என்னை நோக்கி அவன் நடந்துவந்தால், அவனை நோக்கி நான் ஓடிச்செல்வேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "அவன் ஒரு முழம் அளவு என்னை நெருங்கினால், (வலம் இடமாக விரிந்த) இரு கைகளின் நீட்டளவு அவனை நான் நெருங்குவேன்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா செல்லும் சாலையில் பயணம் மேற்கொண்ட போது "ஜும்தான்” எனப்படும் மலையொன்றைக் கடந்து சென்றார்கள். அப்போது, "செல்லுங்கள்: இது "ஜும்தான்" மலை ஆகும். தனித்துவிட்டவர்கள் வெற்றி பெற்றனர்" என்று சொன்னார்கள். மக்கள், "தனித்துவிட்டவர்கள் என்போர் யார், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் நினைவுகூரும் பெண்களும் ஆவர்" என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்குத் தொண்ணூற்று ஒன்பது பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சொர்க்கம் செல்வார். மேலும், அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னு அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("அவற்றை மனனமிட்டவர்" என்பதைக் குறிக்க "மன் ஹஃபிழஹா" என்பதற்குப் பகரமாக) "மன் அஹ்ஸாஹா" என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுக்குத் தொண்ணூற்று ஒன்பது (நூற்றுக்கு ஒன்று குறைவான) பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சொர்க்கம் நுழைவார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரும் தமக்கு நேர்ந்துவிட்ட ஒரு துன்பத்தின் காரணத்தால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித் தான் ஆகவேண்டும் என்றிருந்தால், "இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்துவிடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!" என்று கேட்கட்டும். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "தம்மைத் தாக்கிவிட்ட துன்பத்தின் காரணத்தால்" என்று காணப்படுகிறது. அத்தியாயம் :
ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரும் மரணத்தை விரும்ப வேண்டாம். மரணம் வருவதற்கு முன்பே அதை வேண்டிப் பிரார்த்திக்க வேண்டாம். (ஏனெனில்,) உங்களில் ஒருவர் இறந்துவிட்டால்,அவரது (நற்)செயல் நின்றுவிடுகிறது. இறைநம்பிக்கையாளருக்கு அவரது ஆயுள் நன்மையையே அதிகமாக்கும். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: ஒரு நன்மை செய்தவருக்கு அதைப் போன்ற பத்து மடங்கு நற்பலன்கள் உண்டு. அதைவிடக் கூடுதலாகவும் நான் வழங்குவேன். ஒரு தீமையைச் செய்தவருக்கு அதைப் போன்ற ஒரு தீமையே (குற்றமே) உண்டு. அல்லது (அவரை) நான் மன்னித்துவிடுவேன். யார் என்னிடம் ஒரு சாண் அளவுக்கு நெருங்குகிறாரோ நான் அவரிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்குகிறேன். யார் என்னிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்குகிறாரோ நான் அவரிடம் (விரிந்த) இரு கைகளின் நீட்டளவுக்கு நெருங்குகிறேன். யார் என்னிடம் நடந்து வருகிறாரோ நான் அவரிடம் ஓடிச்செல்கிறேன். ஒருவர் எதையும் எனக்கு இணை வைக்காமால் பூமி நிறைய (சிறு) பாவங்களுடன் என்னிடம் வந்தாலும் அதைப் போன்று (பூமி நிறைய) மன்னிப்புடன் நான் அவரை எதிர்கொள்கிறேன். இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூதர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "அதைப் போன்ற பத்து மடங்கு நற்பலன்கள் அவருக்கு உண்டு. அல்லது நான் அதை விடக் கூடுதலாகவும் (அவருக்கு) வழங்குவேன்" என்று (சிறு வித்தியாசத்துடன்) இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களில் ஒருவரை உடல்நலம் விசாரிப்பதற்காகச் சென்றார்கள். அவர் கோழிக் குஞ்சைப் போன்று நலிந்து பலவீனத்துடன் காணப்பட்டார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ ஏதேனும் பிரார்த்தித்து வந்தாயா? அல்லது இறைவனிடம் ஏதேனும் வேண்டிவந்தாயா?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர் "ஆம்; நான், இறைவா! நீ மறுமையில் அளிக்கவிருக்கும் தண்டனையை முன்கூட்டி இவ்வுலகிலேயே எனக்குத் தந்துவிடு என்று பிரார்த்தித்துவந்தேன்" என்று கூறினார். அதைக்கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வியப்புடன்) "அல்லாஹ் தூயவன் (சுப்ஹானல்லாஹ்!) "உன்னால் அதைத் தாங்க முடியாது". அல்லது "உன்னால் அதற்கு இயலாது" என்று கூறிவிட்டு, நீ "இறைவா! இம்மையிலும் எமக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எமக்கு நன்மையை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்து எம்மைக் காப்பாயாக!" என்று பிரார்த்தித்திருக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். பிறகு அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்; அவருக்கு அல்லாஹ் நிவாரணத்தை வழங்கினான். - மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "நரக வேதனையிலிருந்து எம்மைக் காப்பாயாக!" என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ள குறிப்புகள் இடம் பெறவில்லை. அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களில் ஒருவரை உடல் நலம் விசாரிப்பதற்காகச் சென்றார்கள். அவர் கோழிக் குஞ்சைப் போன்று மாறிவிட்டிருந்தார். மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும் அதில், "இறைவனின் வேதனையைத் தாங்க உனக்குச் சக்தி இல்லை" என்று கூறியதாகக் காணப்படுகிறது. "பிறகு அவருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். அவருக்கு அல்லாஹ் நிவாரணத்தை வழங்கினான்" எனும் குறிப்பு இல்லை. - மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ்விடம் கூடுதல் வானவர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் பூமியில் சுற்றிவருகின்றனர். அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றும் சபைகளைத் தேடி வருகின்றனர். அல்லாஹ்வைப் போற்றும் சபை ஒன்றை அவர்கள் கண்டால், அவர்களுடன் அவ்வானவர்களும் அமர்ந்துகொள்கின்றனர். அவர்களில் சிலர் வேறுசிலரைத் தம் இறக்கைகளால் சூழ்ந்து, தமக்கும் முதல் வானத்துக்கும் இடையே உள்ள பகுதியை நிரப்புகின்றனர். (இறைவனை நினைவுகூரும்) அம்மக்கள் கலைந்து சென்றதும் அ(ந்த வான)வர்கள் வானுலகிற்கு ஏறிச் செல்கின்றனர். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், அவர்களிடம் -அவர்களை நன்கறிந்திருந்தும்- "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்கிறான். அதற்கு வானவர்கள், "பூமியிலுள்ள உன் அடியார்கள் சிலரிடமிருந்து நாங்கள் வருகிறோம். அவர்கள் உன்னைத் தூய்மையானவன் என்று கூறித் துதிக்கின்றனர்; உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும், உன்னை ஏகன் என்று கூறிக்கொண்டும், உன்னைப் புகழ்ந்து போற்றிக் கொண்டும், உன்னிடத்தில் வேண்டிக்கொண்டும் இருக்கின்றனர்" என்று கூறுகின்றனர். அதற்கு இறைவன், "என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகின்றனர்?" என்று (தனக்குத் தெரியாதது போலக்)கேட்கிறான். வானவர்கள், "அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தை வேண்டுகின்றனர்" என்பார்கள். அதற்கு இறைவன், "அவர்கள் என் சொர்க்கத்தைப் பார்த்ததுண்டா?" என்று கேட்பான். அதற்கு வானவர்கள், "இல்லை, இறைவா!" என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், "அவ்வாறாயின், என் சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?" என்று கூறுவான். மேலும், "உன்னிடம் அவர்கள் பாதுகாப்புக் கோருகின்றனர்" என்றும் வானவர்கள் கூறுகின்றனர். அதற்கு இறைவன், "என்னிடம் அவர்கள் எதிலிருந்து (காக்குமாறு) பாதுகாப்புக் கோருகின்றனர்?" என்று கேட்பான். அதற்கு வானவர்கள், "உன் நரகத்திலிருந்து, இறைவா!" என்று பதிலளிப்பார்கள். இறைவன், "அவர்கள் எனது நரகத்தைப் பார்த்திருக்கிறார்களா?" என்று கேட்பான். வானவர்கள், "இல்லை" என்பார்கள். அதற்கு இறைவன், "அவ்வாறாயின் என் நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?" என்று கூறுவான். மேலும், "அவர்கள் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறார்கள்" என்றும் வானவர்கள் கூறுவார்கள். அதற்கு இறைவன், "அவர்களுடைய பாவங்களை நான் மன்னித்துவிட்டேன். அவர்கள் வேண்டியதையும் அவர்களுக்கு நான் வழங்கிவிட்டேன். அவர்கள் எதிலிருந்து பாதுகாப்புக் கோரினார்களோ அதிலிருந்து அவர்களை நான் காப்பாற்றிவிட்டேன்" என்று கூறுவான். அப்போது வானவர்கள், "இறைவா! (அந்த) சபையோரிடையே அதிகப் பாவங்கள் புரியும் இன்ன மனிதன் இருந்தான். அவன் அவ்வழியே கடந்து சென்றபோது அவர்களுடன் அமர்ந்துகொண்டான்" என்று கூறுகின்றனர். அதற்கு இறைவன், "அவனையும் நான் மன்னித்துவிட்டேன். அவர்கள் ஒரு கூட்டத்தார் ஆவர். அவர்களுடன் அமர்ந்திருந்தவர் அவர்களால் (பாக்கியம் பெறுவாரே தவிர) பாக்கியமற்றவராக ஆகமாட்டார்" என்று கூறுவான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: கத்தாதா (ரஹ்) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் அதிகமாகப் பிரார்த்தித்துவந்த பிரார்த்தனை எது?" என்று கேட்டார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் அதிகமாகப் பிரார்த்தித்துவந்த பிரார்த்தனை, "அல்லாஹும்ம! ஆத்தினா ஃபித் துன்யா ஹசனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹசனத்தன் வகினா அதாபந் நார்" (இறைவா! இம்மையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் (எங்களுக்கு) நன்மையை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!") என்பதாகும்" என்று விடையளித்தார்கள். அனஸ் (ரலி) அவர்கள் ஏதேனும் பிரார்த்தனை செய்ய நாடினால் இந்தப் பிரார்த்தனையையே செய்வார்கள். வேறு பிரார்த்தனைகள் செய்யும்போதும் இதைச் சேர்த்துக் கொள்வார்கள். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ரப்பனா! ஆத்தினா ஃபித்துன்யா ஹசனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹசனத்தன் வகினா அதாபந் நார்" (எங்கள் இறைவா! இம்மையிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை வழங்குவாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!) என்று பிரார்த்தித்துவந்தார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு, வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்கிறாரோ அவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமமாகும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரிடமிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். அந்த நாளின் மாலை நேரம் வரும்வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். அவர் புரிந்த இந்த நற்செயலை விடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது; ஒருவர் இதைவிட அதிகமான (தடவைகள் இதை ஓதினால், அல்லது மிக முக்கியமான ஒரு) நற்செயல் புரிந்தால் தவிர. "சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி" (அல்லாஹ் தூயவன் என்று போற்றித் துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவருடைய தவறுகள் அழிக்கப் படுகின்றன; அவை கடலின் நுரை போன்று (அதிகமாக) இருந்தாலும் சரியே! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் காலையிலும் மாலையிலும் நூறு முறை "சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி" (அல்லாஹ் தூயவன் எனப் போற்றிப் புகழ்கிறேன்) என்று சொல்கிறாரோ அவர் கொண்டுவந்த (நல்லறத்)தைவிடச் சிறந்ததை வேறெவரும் மறுமைநாளில் கொண்டு வருவதில்லை; அவர் சொன்ன அளவுக்குச் சொன்னவரையும் அல்லது அதைவிடக் கூடுதலாகச் சொன்னவரையும் தவிர. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை; (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை; அளவற்ற அருளாளனுக்குப் பிரியமானவை ஆகும். (அவை:) 1. சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்). 2. சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் தூயவன் எனத் துதிக்கிறேன்). இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்குஅறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
தாரிக் பின் அஷ்யம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் இறைவனிடம் பிரார்த்திக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹும்மஃக்ஃபிர்லீ வர்ஹம்னீ வ ஆஃபினீ வர்ஸுக்னீ" (இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்குக் கருணை புரிவாயாக! எனக்கு ஆரோக்கியத்தை வழங்குவாயாக! எனக்கு வாழ்வாதாரத்தை அளிப்பாயாக!) என்று சொல்வீராக" என்றார்கள். இதைக் கூறியபோது, தமது பெருவிரலைத் தவிர மற்ற விரல்களை ஒவ்வொன்றாக மடக்கிக்கொண்டு, "இவை உம்முடைய இம்மை மறுமை அனைத்தையும் உள்ளடக்கிக் கொள்ளக்கூடியவை" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள், "உங்களில் ஒருவரால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாதா?" என்று கேட்டார்கள். அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், "எங்களில் ஒருவர் (ஒவ்வொரு நாளும்) ஆயிரம் நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க முடியும்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் (ஒவ்வொரு நாளும்) நூறு முறை ("சுப்ஹானல்லாஹ்" என்று கூறித்) துதிக்க, அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் இம்மையில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ அவருடைய மறுமைத் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அகற்றுகிறான். யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி செய்கிறான். யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் மறைக்கிறான். அடியான் தன் சகோதரன் ஒருவனுக்கு உதவி செய்துகொண்டிருக்கும்வரை அந்த அடியானுக்கு அல்லாஹ் உதவி செய்துகொண்டிருக்கிறான். யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக்கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான். அறச் செயல்களில் பின்தங்கிவிட்ட ஒருவரைக் குலச்சிறப்பு முன்னுக்குக் கொண்டு வந்துவிடுவதில்லை.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் அபூஉசாமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், சிரமப்படுவோருக்கு உதவி செய்வது தொடர்பான குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :
மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: பள்ளிவாசலில் வட்டமாக அமர்ந்திருந்த ஒரு குழுவினரிடம் முஆவியா (ரலி) அவர்கள் புறப்பட்டுவந்து, "நீங்கள் இங்கு அமர்ந்திருப்பதற்கு என்ன காரணம்?" என்று கேட்டார்கள். அதற்கு அக்குழுவினர், "அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றுவதற்காக அமர்ந்துள்ளோம்" என்று கூறினர். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதற்காகத்தான் நீங்கள் அமர்ந்துள்ளீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அக்குழுவினர், "அல்லாஹ்வின்மீது சத்தியமாக! அதற்காகத்தான் நாங்கள் அமர்ந்துள்ளோம்" என்று கூறினர். முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள்: உங்கள்மீது சந்தேகப்பட்டு நான் உங்களைச் சத்தியமிட்டுக் கூறச் சொல்லவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என் அளவுக்கு நெருக்கமாக இருந்தவர்களில் எவரும் என்னைவிடக் குறைவான ஹதீஸ்களை அவர்களிடமிருந்து அறிவிக்கவில்லை. (நானே மிகக் குறைவான ஹதீஸ்களை அறிவித்தவன்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) வட்டமாக அமர்ந்திருந்த தம் தோழர்களில் சிலரிடம் வந்து, "நீங்கள் (இங்கு) அமர்ந்திருப்பதற்கு என்ன காரணம்?" என்று கேட்டார்கள். அதற்குத் தோழர்கள், "அல்லாஹ் எங்களுக்கு இஸ்லாத்திற்கு நேர்வழி காட்டியதற்காகவும், எங்களுக்கு அருட்கொடைகள் புரிந்ததற்காகவும் அவனை நினைவுகூர்ந்து போற்றுவதற்காக அமர்ந்திருக்கிறோம்" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதற்காகத் தான் நீங்கள் அமர்ந்துள்ளீர்களா?" என்று கேட்டார்கள். அதற்குத் தோழர்கள், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதற்காகத்தான் நாங்கள் அமர்ந்துள்ளோம்" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அறிந்துகொள்ளுங்கள்! உங்கள்மீது சந்தேகம் கொண்டுச் சத்தியமிட்டு உங்களிடம் நான் கேட்கவில்லை. மாறாக, (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து, "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் உங்களைப் பற்றி வானவர்களிடம் பெருமையுடன் பேசிக்கொள்கிறான்" என்று தெரிவித்தார் என்றார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாரேனும் (பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கிவிட்டுப் பின்னர் "அஊது பி கலிமாத்தில் லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்" என்று கூறிப் பிரார்த்தித்தால், அந்த இடத்திலிருந்து அவர் புறப்பட்டுச் செல்லும்வரை எதுவும் அவருக்குத் தீங்கிழைக்காது. (பொருள்: அல்லாஹ்வின் முழுமையான சொற்களின் மூலம் அவனுடைய படைப்பினங்களின் தீங்கிலிருந்து நான் பாதுகாப்புக் கோருகிறேன்.) இதை கவ்லா பின்த் ஹகீம் அஸ்ஸுலமிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உறங்கச் செல்லும்போது, "அல்லாஹும்ம! பிஸ்மிக்க அஹ்யா, வ பிஸ்மிக்க அமூத்து (இறைவா! உனது பெயராலேயே உயிர் பெறுகிறேன்; உனது பெயர் கூறியே இறக்கிறேன்.) என்று கூறுவார்கள். உறக்கத்திலிருந்து விழித்தெழும்போது, "அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர் (அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே நம்மை இறக்கச்செய்த பின்னர் நமக்கு உயிரூட்டினான். மேலும், அவனிடமே செல்ல வேண்டியுள்ளது.)" என்று கூறுவார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "ஒருவர் உறங்கச் செல்லும்போது "அல்லஹும்ம! கலக்த்த நஃப்சீ, வ அன்த்த தவஃப்பாஹா, லக்க மமாத்துஹா வ மஹ்யாஹா, இன் அஹ்யய்த்தஹா ஃபஹ்ஃபழ்ஹா, வ இன் அமத்தஹா ஃபக்ஃபிர் லஹா, அல்லஹும்ம! இன்னீ அஸ்அலுக்கல் ஆஃபியா" (இறைவா! நீயே என் உயிரைப் படைத்தாய். நீயே அதனைக் கைப்பற்றிக்கொள்கிறாய். அதன் இறப்பும் வாழ்வும் உனக்கே உரியன. அதை நீ உயிரோடு விட்டுவைத்தால் அதை நீ காப்பாற்றுவாயாக! அதை நீ இறக்கச் செய்து விட்டால் அதற்கு மன்னிப்பு வழங்குவாயாக! இறைவா! உன்னிடம் நான் ஆரோக்கியத்தை வேண்டுகிறேன்) என்று கூறும்படி உத்தரவிட்டார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், "இதைத் தாங்கள் தங்கள் தந்தை உமர் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "உமர் (ரலி) அவர்களைவிடச் சிறந்தவரான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
சுஹைல் பின் அபீஸாலிஹ் தக்வான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (எங்கள் தந்தை) அபூஸாலிஹ் தக்வான் (ரஹ்) அவர்கள், எங்களில் ஒருவர் உறங்கச் செல்லும் போது வலப் பக்கத்தில் சாய்ந்து படுத்துக்கொண்டு, "அல்லாஹும்ம! ரப்பஸ் ஸமாவாத்தி வ ரப்பல் அர்ளி வ ரப்பல் அர்ஷில் அழீம். ரப்பனா வ ரப்ப குல்லி ஷையின். ஃபாலிக்கல் ஹப்பி வந்நவா வ முன்ஸிலத் தவ்ராத்தி வல்இன்ஜீலி வல்ஃபுர்கான், அஊது பிக்க மின் ஷர்ரி குல்லி ஷையின். அன்த்த ஆகிதும் பி நாஸியத்திஹ், அல்லாஹும்ம! அன்த்தல் அவ்வலு; ஃப லைஸ கப்லக்க ஷைஉன், வ அன்த்தல் ஆகிரு; ஃப லைஸ பஅதக்க ஷைஉன். வ அன்த்தழ் ழாஹிரு; ஃப லைஸ ஃபவ்கக்க ஷைஉன், வ அன்த்தல் பாத்தினு; ஃப லைஸ தூனக்க ஷைஉன், இக்ளி அன்னா அத்தைன வ அஃக்னினா மினல் ஃபக்ர்"என்று கூறும்படி உத்தரவிடுவார்கள். மேலும் இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்ததாகவும் கூறுவார்கள். (பொருள்: இறைவா! வானங்களின் அதிபதியே! பூமியின் அதிபதியே! மகத்தான அரியணையின் அதிபதியே! எங்கள் இறைவா! அனைத்துப் பொருட்களின் அதிபதியே! தானிய வித்துகளையும் விதைகளையும் பிரி(த்து தாவர வர்க்கத்தை முளைப்பி)ப்பவனே! தவ்ராத், இன்ஜீல், ஃபுர்கான் (குர்ஆன்) ஆகிய வேதங்களை அருளியவனே! அனைத்துப் பொருட்களின் தீங்கிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். அவற்றின் முன்நெற்றி ரோமங்களை நீயே பிடித்துள்ளாய். இறைவா! நீயே ஆரம்பமானவன்; உனக்கு முன்னர் வேறெதுவும் இல்லை. நீயே இறுதியானவன்; உனக்குப் பின்னர் வேறெதுவும் இல்லை. நீயே மேலானவன்; உனக்கு மேலே வேறொன்றுமில்லை. நீயே அடித்தளமானவன்; உனக்குக் கீழே வேறொன்றுமில்லை. எங்கள் கடன்களை நிறைவேற்றி வைப்பாயாக! வறுமையிலிருந்து காத்து எங்களைத் தன்னிறைவு கொள்ளச்செய்வாயாக!) அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், (ஒரு முறை) ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து (தமக்கு ஒத்தாசையாகப் பணிபுரிய) அடிமை ஒருவரைத் தருமாறு கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹும்ம! ரப்பஸ் ஸமாவாத்திஸ் ஸப்இ..." (இறைவா! ஏழு வானங்களின் அதிபதியே!...)" என்று தொடங்கி மேற்கண்ட ஹதீஸில் உள்ளபடி பிரார்த்திக்குமாறு கூறியதாகக் காணப்படுகிறது. அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது "அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனா வ சகானா வ கஃபானா வ ஆவானா. ஃபகம் மிம்மன் லா காஃபிய லஹு, வலா முஃவிய" என்று கூறுவார்கள். (பொருள்: அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே நமக்கு உணவளித்தான்; குடிநீர் வழங்கினான்; (நம் தேவைகளை நிறைவேற்றி) போதுமான அளவுக்குக் கொடுத்தான்; (தங்க இடமளித்து) தஞ்சமளித்தான். ஆனால்,போதுமாக்கிவைப்பதற்கோ தஞ்சமளிப்பதற்கோ ஆளில்லாமல் எத்தனையோ பேர் இருக்கின்றனர்.) அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குப்பின் அதிகாலையில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நான் எனது தொழுமிடத்தில் அமர்ந்திருந்தேன். பிறகு அவர்கள் முற்பகல் தொழுகை (ளுஹா) தொழுதுவிட்டு வந்தார்கள். அப்போதும் நான் (அதே இடத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது என்னிடம், "நான் உன்னிடமிருந்து சென்றது முதல் இதே நிலையில்தான் நீ இருந்துகொண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். நபி (ஸல்) அவர்கள், "நான் உன்னிடமிருந்து சென்றதற்குப் பிறகு நான்கு (துதிச்) சொற்களை மூன்று முறை சொன்னேன். அவற்றை இன்றைக்கெல்லாம் நீ சொன்னவற்றுடன் மதிப்பிட்டால், நீ சொன்னவற்றை அவை மிகைத்துவிடும். (அவை:) சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, வ ரிளா நஃப்சிஹி, வ ஸினத்த அர்ஷிஹி, வ மிதாத கலிமாத்திஹி (ஆகியவையாகும்)" என்றார்கள். (பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவுக்கும், அவனது அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்.) இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - ஜுவைரியா (ரலி) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலைத் தொழுகையைத் தொழச் சென்றபோது, அல்லது அதிகாலைத் தொழுகையைத் தொழுது முடித்தபின் என்னைக் கடந்து சென்றார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகி மேற்கண்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் (அந்த நான்கு சொற்களைச் சற்று வித்தியாசத்துடன்) "சுப்ஹானல்லாஹி அதத கல்கிஹி, சுப்ஹானல்லாஹி ரிளா நஃப்சிஹி, சுப்ஹானல்லாஹி ஸினத்த அர்ஷிஹி, சுப்ஹானல்லாஹி மிதாத கலிமாத் திஹி" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது. (பொருள்: அல்லாஹ்வை அவனுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்குத் தூயவன் எனத் துதிக்கிறேன். அல்லாஹ்வை அவன் உவக்கும் அளவுக்குத் தூயவன் எனத் துதிக்கிறேன். அல்லாஹ்வை அவனது அரியணையின் எடையளவுக்குத் தூயவன் எனத் துதிக்கிறேன். அல்லாஹ்வை அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்குத் தூயவன் எனத் துதிக்கிறேன்.) அத்தியாயம் :
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் துணைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தமது கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (தம் தந்தை நபி (ஸல்) அவர்களிடம்) முறையிட்டார். அப்போது போர்க் கைதிக(ளான அடிமைக)ள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்திருந்தனர். ஆகவே, (தம் பணிகளில் தமக்கு உதவ அடிமையொருவரைக் கேட்பதற்காக) நபி (ஸல்) அவர்களிடம் ஃபாத்திமா சென்றார். ஆனால், நபி (ஸல்) அவர்களைக் காணமுடியவில்லை. (எனவே,) ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்தித்து, (தாம் வந்த நோக்கத்தை)த் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்கு வந்தபோது ஆயிஷா (ரலி) அவர்கள் ஃபாத்திமா வந்த விவரத்தைத் தெரிவிக்கவே, நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (நபியவர்களைப் பார்த்த) உடனே நாங்கள் எழுந்திருக்கப்போனோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அப்படியே இருங்கள்" என்று கூறிவிட்டு, எனக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள். எனது நெஞ்சின் மீது அவர்களது பாதம் பட்டு அதன் குளிர்ச்சியை நான் உணர்ந்தேன் (அந்த அளவுக்கு அவர்கள் எங்களிடையே நெருக்கமாக அமர்ந்தார்கள்). பிறகு அவர்கள், "நீங்கள் இருவரும் கேட்டதைவிடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது, முப்பத்து நான்கு முறை "அல்லாஹு அக்பர்" (அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்றும், முப்பத்து மூன்று முறை "சுப்ஹானல்லாஹ்" (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை "அல்ஹம்து லில்லாஹ்" (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும் சொல்லுங்கள். அது உங்கள் இருவருக்கும் பணியாள் ஒருவர் இருப்பதைவிடச் சிறந்ததாகும்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "நீங்கள் இருவரும் இரவில் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது..." என்று இடம்பெற்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது: அலீ (ரலி) அவர்கள், "இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறிய நாளிலிருந்து அதை நான் ஓதாமல் விட்டதில்லை" என்று சொன்னார்கள். அப்போது "ஸிஃப்பீன் போர் நடைபெற்ற இரவில்கூடவா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அலீ (ரலி) அவர்கள், "ஸிஃப்பீன் போர் நடைபெற்ற இரவில்கூட ஓதாமல் இருந்ததில்லை" என்று பதிலளித்தார்கள். முஜாஹித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான், ஸிஃப்பீன் போர் நடைபெற்ற இரவில்கூடவா?" என்று கேட்டேன் என அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது. அத்தியாயம் :
மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் துன்பத்தின்போது, பின்வருமாறு கூறுவார்கள்: லாயிலாஹ இல்லல்லாஹு அழீமுல் ஹலீம். லாயிலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில் அழீம். லாயிலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமா வாத்தி, வ ரப்புல் அர்ளி, வரப்புல் அர்ஷில் கரீம். (பொருள்: கண்ணியம் வாய்ந்தோனும் பொறுமை மிக்கோனுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மகத்தான அரியணையின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. வானங்களின் அதிபதியும் பூமியின் அதிபதியும் மாட்சிமை மிக்க அரியணையின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை.) இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், மேற்கண்ட அறிவிப்பே முழுமையானதாகும். - மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவற்றால் பிரார்த்தித்து வந்தார்கள்; துன்பம் நேரும்போது அவ்வாறு கூறிவந்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றாலும் ("ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ளி") என்பதற்குப் பகரமாக "ரப்புஸ் ஸமாவாத்தி வல்அர்ளி (வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியுமான) என்று (சிறு வித்தியாசத்துடன்) காணப்படுகிறது. - மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "நபி (ஸல்) அவர்களுக்கு எதேனும் மனக்கவலை ஏற்பட்டால்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும் அதனுடன், "லாயிலாஹ இல்லல் லாஹு ரப்புல் அர்ஷில் கரீம் (மாட்சிமை மிக்க அரியணையின் அதிபதியான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்பதும் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "(இறைவனைத் துதிக்கும்) சொற்களில் மிகவும் சிறந்தது எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹ், "தன் வானவர்களுக்காக" அல்லது "தன் அடியார்களுக்காக" "சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி" (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவன் தூயவன் எனத் துதிக்கிறேன்) என்பதையே தேர்ந்தெடுத்துள்ளான்" என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :