47 - அறிவு புத்தகம்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நபியே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் (பொருள்) உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கும் வேறுசில வசனங்களும் (அதில்) உள்ளன. யாருடைய உள்ளத்தில் கோளாறு உள்ளதோ அவர்கள், வேதத்தில் பல பொருள்களுக்கு இடமளிப்பவற்றையே பின்தொடர்வர். குழப்பம் செய்ய விரும்பியும், அவற்றுக்கு (சுயமாக) விளக்கம் அளிக்க விரும்பியுமே (அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்). ஆனால், அவற்றின் (மெய்ப்)பொருளை அல்லாஹ்வையன்றி வேறு யாரும் அறியார். கல்வியில் தேர்ந்தவர்கள், நாங்கள் அவற்றை நம்புகிறோம்; (அவை) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே" என்று கூறுவர். அறிவுடையோர் தவிர (வேறு யாரும் இதை) உணர்வதில்லை" (3:7) எனும் இறை வசனத்தை ஓதிவிட்டு, "பல பொருள்களுக்கு இடமளிக்கும் வசனங்களைப் பின்தொடர்வோரை நீங்கள் கண்டால், அவர்கள்தான் (இந்த வசனத்தில்) அல்லாஹ் குறிப்பிட்டுள்ள ஆட்கள் (என்பதை அறிந்து),அவர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள்" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: "உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை நீங்கள் சாணுக்குச் சாண், முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! ("நாங்கள் பின்பற்றக்கூடியவர்கள்" என்று) யூதர்களையும் கிறித்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)?" என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேறு யாரை?" என்று (திருப்பிக்) கேட்டார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள், "என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! (நபித்தோழர்) அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் நம்மைக் கடந்து ஹஜ்ஜுக்குச் செல்லவிருக்கிறார்கள் என எனக்குச் செய்தி வந்துள்ளது. எனவே, அவரைச் சந்தித்து அவரிடம் (மார்க்க விளக்கங்களைக்) கே(ட்டுத் தெரிந்துகொ)ள். ஏனெனில், அவர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அதிகமான கல்வியறிவைப் பெற்றுள்ளார்"என்று கூறினார்கள். ஆகவே, நான் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களைச் சந்தித்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அவர் கூறி வந்த பல்வேறு செய்திகள் குறித்துக் கேட்டேன். அவற்றில் பின்வரும் செய்தியும் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மனிதர்களி(ன் மனங்களி)லிருந்து ஒரேயடியாகக் கல்வியைப் பறித்துக்கொள்ளமாட்டான். மாறாக, கல்விமான்களை அவர்களது கல்வியுடன் கைப்பற்றிக்கொள்வான். பின்னர் மக்களிடையே அறிவீனர்களான தலைவர்களையே அல்லாஹ் விட்டுவைப்பான். அவர்கள் அறிவின்றியே மக்களுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள். (இதன்மூலம்) தாமும் வழிதவறி, பிறரையும் வழிதவறச் செய்வார்கள். பிறகு நான் இந்த ஹதீஸை ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன். அதை ஆயிஷா (ரலி) அவர்கள் பாரதூரமாகக் கருதி அதை மறுத்தார்கள். "இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக அப்துல்லாஹ் பின் அம்ர் உன்னிடம் சொன்னாரா?" என்று கேட்டார்கள். அடுத்த ஆண்டு ஆனபோதும் என்னிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், "அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்கு வந்துள்ளார்கள். அவரைச் சந்தித்துப் பேச்சுக் கொடுத்து முன்பு உன்னிடம் அவர் சொன்ன கல்வி தொடர்பான அந்த ஹதீஸைப் பற்றி அவரிடம் கேள்" என்றார்கள். அவ்வாறே நான் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களைச் சந்தித்து அவர்களிடம் கேட்டேன். முதல் முறை என்னிடம் அறிவித்ததைப் போன்றே (எந்த மாற்றமுமின்றி அந்த ஆண்டிலும்) என்னிடம் அறிவித்தார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அதைத் தெரிவித்தபோது அவர்கள், "அவர் உண்மையே கூறியிருக்கிறார் என்று நான் கருதுகிறேன்; சிறிதும் கூட்டவோ குறைக்கவோ செய்யவில்லை என்றே நான் கருதுகிறேன்"என்றார்கள். அத்தியாயம் :
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: கம்பளியாடை அணிந்த கிராமவாசிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களது வறியநிலையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டார்கள். அவர்களுக்குத் தேவை ஏற்பட்டிருந்தது. ஆகவே, (அவர்களுக்குத்) தானதர்மம் செய்யும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களைத் தூண்டினார்கள். மக்கள் (தர்மம் செய்வதில்) தயக்கம் காட்டினர். அ(தன் அடையாளமான)து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகத்தில் தென்பட்டது. பிறகு அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை நிறைய வெள்ளியுடன் வந்தார். பிறகு மற்றொருவர் (தர்மத்தைக்கொண்டு) வந்தார். பிறகு ஒவ்வொருவராக (தம்மிடமிருந்த பொருள்களுடன்) வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் இஸ்லாத்தில் (அதன் அடிப்படைக்கு முரண்படாத வகையில்) ஓர் அழகிய நடைமுறையை உருவாக்கி, அவருக்குப்பின் அந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறதோ அதன்படி செயல்படுபவர்களின் நன்மை போன்றது அ(ந்த நடைமுறையை உருவாக்கிய)வருக்கு உண்டு. அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. யார் இஸ்லாத்தில் (அதன் அடிப்படைக்கு எதிரான) ஒரு தீயநடைமுறையை உருவாக்கி விட, அவருக்குப் பிறகும் அந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறதோ அவருக்குப்பின் அதன்படி செயல்படுகிறவர்களின் பாவம் போன்றது அவருக்கு உண்டு. அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது தானதர்மம் செய்யும்படி (மக்களைத்) தூண்டினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. - மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "ஓர் அடியார் நல்ல நடைமுறையொன்றை உருவாக்கி அவருக்குப்பின் அது செயல் படுத்தப்பட்டால்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. - மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :