35 - குர்பானி புத்தகம்
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தாய்மாமா அபூபுர்தா (ரலி) அவர்கள் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது இறைச்சி(க்காக அறுக்கப்பட்ட) ஆடுதான். (குர்பானி ஆடன்று)" என்று சொன்னார்கள். உடனே அபூபுர்தா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாடு (குட்டி) ஒன்று உள்ளது. (அதை நான் குர்பானி கொடுக்கட்டுமா?)" என்று வினவினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதை அறுத்து (குர்பானி) கொடுங்கள். (ஆனால்,) இது மற்ற மக்களுக்குப் பொருந்தாது" என்று சொல்லிவிட்டு, "தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுப்பவர்,தமக்காகவே அதை அறுக்கிறார். தொழுகைக்குப் பிறகு (அதை) அறுப்பவரின் வழிபாடு முழுமையடைந்துவிட்டது. அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றிவிட்டார்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெருநாளன்று நிகழ்த்திய உரையில்), "யார் நமது தொழுகையைத் தொழுது, நமது தொழும் திசையை (கிப்லா) முன்னோக்கி, நமது குர்பானி வழிபாட்டைச் செய்கிறாரோ அவர் தொழுவதற்கு முன் (குர்பானிப் பிராணியை) அறுக்க வேண்டாம்" என்று சொன்னார்கள். அப்போது என் தாய்மாமா (அபூபுர்தா (ரலி) அவர்கள்), "அல்லாஹ்வின் தூதரே! நான் என் மகனுக்காக (தொழுகைக்கு) முன்பே குர்பானி கொடுத்துவிட்டேனே?" என்று கேட்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது நீங்கள் உங்களுடைய வீட்டாருக்காக அவசரப்பட்டு அறுத்துவிட்ட ஒன்றாகும். (அது குர்பானியாகாது)" என்று கூறினார்கள். அதற்கு என் தாய்மாமா, "என்னிடம் இரண்டு ஆடுகளைவிடச் சிறந்த ஆடொன்று உள்ளது (அதை நான் அறுக்கலாமா?)" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதை அறுத்து குர்பானி கொடுப்பீராக! அது (உமது) குர்பானிப் பிராணியில் சிறந்ததாகும்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தாய்மாமா) அபூபுர்தா (ரலி) அவர்கள் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அதற்குப் பதிலாக வேறொன்றை அறு(த்துக் குர்பானி கொடு)ப்பீராக!" என்று கூறினார்கள். உடனே அபூ புர்தா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஒரு வயதுடைய வெள்ளாடு ஒன்றைத் தவிர வேறெதுவுமில்லை. -அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "அது ஒரு வயது பூர்த்தியான ஆட்டைவிடச் சிறந்ததாகும்"என்று அபூபுர்தா (ரலி) அவர்கள் சொன்னதாக (எனக்கு அறிவிக்கப்பட்டது என்று) நான் எண்ணுகிறேன்.- அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதையே அதற்குப் பதிலாக அறுத்துக் கொள்வீராக! உமக்குப் பிறகு வேறெவருக்கும் இது செல்லாது" என்று சொன்னார்கள். - மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "அது ஒரு வயது பூர்த்தியான ஆட்டைவிடச் சிறந்ததாகும் (என்று அபூபுர்தா (ரலி) அவர்கள் சொன்னதாக எனக்கு அறிவிக்கப்பட்டது என்று நான் எண்ணுகிறேன்)" என ஷுஅபா (ரஹ்) அவர்கள் ஐயப்பாட்டுடன் கூறியுள்ள குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நஹ்ரு"டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளன்று, "(பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும்!" என்று கூறினார்கள். உடனே ஒரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! இது இறைச்சி விரும்பி உண்ணப்படும் நாள்" என்று கூறி, தம் (வீட்டார் மற்றும்) அண்டை அயலாரின் தேவை பற்றி(யும் அதனாலேயே தாம் தொழுகைக்கு முன்பே அறுத்தது பற்றியும்) குறிப்பிட்டார். மேலும், தம்மிடம் ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாடு ஒன்று இருப்பதாகவும், அது இறைச்சி ஆடுகள் இரண்டைவிடச் சிறந்தது என்றும் அதை இப்போது குர்பானி கொடுக்கலாமா என்றும் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். இந்த அனுமதி அவரல்லாத மற்றவருக்கும் பொருந்துமா, அல்லது பொருந்தாதா என்பது எனக்குத் தெரியாது. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரு செம்மறியாட்டுக் கடாக்களின் பக்கம் சென்று அவ்விரண்டையும் அறுத்தார்கள். மக்கள் ஒரு சிறிய ஆட்டு மந்தைக்குச் சென்று (அதிலிருந்த) ஆடுகளைத் தமக்குள் பிரித்துக்கொண்ட(பின் குர்பானி கொடுத்த)னர். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈதுல் அள்ஹா பெருநாளன்று எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது இறைச்சி மணம் வருவதைக் கண்டு குர்பானிப் பிராணிகளை (தொழுகைக்கு முன்பே) அறுக்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள். "யார் (தொழுகைக்கு முன்பே) குர்பானிப் பிராணியை அறுத்தாரோ அவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும்!" என்று கூறினார்கள். மற்ற விவரங்கள் மேற்கண்ட இரு ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கறுப்பில் நடக்கின்ற, கறுப்பில் படுக்கின்ற, கறுப்பில் பார்க்கின்ற (கால்கள்,வயிறு, கண் ஆகிய பகுதிகள் கறுப்பு நிறத்தில் அமைந்த) கொம்புள்ள செம்மறியாட்டுக் கடா ஒன்றைக் கொண்டுவருமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே குர்பானிக்காக அது கொண்டுவரப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "ஆயிஷா! அந்தக் கத்தியை எடு" என்றார்கள். பிறகு "அதை ஒரு கல்லில் நன்றாகத் தீட்டு" என்றார்கள். அவ்வாறே நான் செய்தேன். பிறகு அந்தக் கத்தியை வாங்கி, அந்தச் செம்மறியாட்டைப் பிடித்து, சரித்துப் படுக்கவைத்து அறுத்தார்கள். (அறுப்பதற்கு முன்) "பிஸ்மில்லாஹ். அல்லாஹும்ம தகப்பல் மின் முஹம்மதின் வ ஆலி முஹம்மதின் வமின் உம்மத்தி முஹம்மதின்" (அல்லாஹ்வின் பெயரால்! இறைவா! முஹம்மதிடமிருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந்தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக் கொள்வாயாக!)" என்று கூறி, அதை அறுத்தார்கள். அத்தியாயம் :
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! (ஒட்டகங்களை அறுக்கக் கத்திகளைப் பயன்படுத்திவிட்டால்) நாளை (கூரிய) கத்திகள் இல்லாத நிலையில் நாங்கள் எதிரிகளைச் சந்திக்க நேரிடுமே?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(பிராணி சாவதற்கு முன்பாகக் கூர்மையான ஏதேனும் ஒரு பொருளால்) "விரைவாக அறுத்துவிடுங்கள்" அல்லது "உயிரிழக்கச் செய்துவிடுங்கள்". இரத்தத்தை வழிந்தோடச் செய்யும் எதைக் கொண்டும் அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டால், அதை நீங்கள் உண்ணலாம். பல்லாலும் நகத்தாலும் (அறுத்தல்) கூடாது. (இந்த இரண்டாலும் ஏன் அறுக்கலாகாது என்பதற்கான காரணத்தை) நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். பற்களோ எலும்பு இனமாகும். நகங்களோ (இறைமறுப்பாளர்களான) அபிசீனியர்களின் கத்திகளாகும்" என்று கூறினார்கள். (அந்தப் போரில்) எங்களுக்குச் சில ஒட்டகங்களும் ஆடுகளும் போர்ச்செல்வமாகக் கிடைத்தன. அவற்றிலிருந்து ஓர் ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டது. உடனே (நபித்தோழர்களில்) ஒருவர் அந்த ஒட்டகத்தைக் குறிவைத்து அம்பெய்து, அதை ஓடவிடாமல் தடுத்து நிறுத்தினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வனவிலங்குகளில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்றே, இந்தப் பிராணிகளிலும் கட்டுக்கடங்காதவை சில உள்ளன. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (அம்பெய்து நிற்கச்) செய்யுங்கள்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
அபூஉபைத் சஅத் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (கலீஃபா) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டேன். அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே பெருநாள் தொழுகை தொழுவித்தார்கள். (தமது உரையில்) "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாம் நமது குர்பானி இறைச்சிகளை மூன்று நாட்களுக்கு மேல் (சேமித்துவைத்து) உண்பதற்குத் தடை விதித்தார்கள்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
அபூஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டுள்ளேன். பிறகு (கலீஃபா) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களுடனும் தொழுதிருக்கிறேன். அலீ (ரலி) அவர்கள் உரையாற்றுவதற்கு முன் எங்களுக்குப் பெருநாள் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு மக்களிடையே உரையாற்றினார்கள். அப்போது, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மூன்று நாட்களுக்கு மேலாக உங்கள் குர்பானி இறைச்சிகளை நீங்கள் உண்பதற்குத் தடை விதித்தார்கள். எனவே, (மூன்று நாட்களுக்கு மேலாகக் குர்பானி இறைச்சிகளை) உண்ணாதீர்கள்" என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மூன்று நாட்களுக்கு மேலாகக் குர்பானி இறைச்சி உண்ணப்படுவதைத் தடைசெய்தார்கள். இதன் அறிவிப்பாளரான சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு உமர் (ரலி) அவர்கள், குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்ணமாட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்ண வேண்டாம் என (முதலில்) தடை விதித்தார்கள். பின்னர் (அந்தத் தடையை நீக்கி) "நீங்களும் உண்ணலாம். பயணத்திலும் எடுத்துச் செல்லலாம். சேமித்தும்வைக்கலாம்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மினாவில் தங்கும் நாளிலிருந்து மூன்று நாட்களுக்கு மேல் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை உண்ணாமல் இருந்தோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இப்போது நீங்கள் உண்ணலாம்;சேமித்தும்வைக்கலாம்" என்று கூறி, எங்களுக்கு அனுமதி வழங்கினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம் "நாங்கள் மதீனா வரும்வரை (சேமித்துவைத்தோம்)" என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்" என்று விடையளித்தார்கள். அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்து வைக்காமல் இருந்துவந்தோம். பின்னர் அதை (மூன்று நாட்களுக்கு மேல்) பயண உணவாக எடுத்துச் சென்று, அதை உண்ணுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அத்தியாயம் :
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஓர் ஆண்டில்) "உங்களில் குர்பானி கொடுத்தவர், மூன்று நாட்களுக்குப் பின் தமது வீட்டில் (குர்பானி இறைச்சியில்) எதையும் வைத்திருக்க வேண்டாம்" என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! கடந்த ஆண்டில் நாங்கள் செய்ததைப் போன்றே இந்த ஆண்டும் செய்ய வேண்டுமா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை (அவ்வாறு செய்ய வேண்டியதில்லை); அந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. (குர்பானி இறைச்சி மூலம்) பரவலாக மக்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என நான் விரும்பினேன் (எனவே, மூன்று நாட்களுக்கு மேல் உண்ணவேண்டாம் எனத் தடை விதித்தேன்)" என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தம்மிடம் குர்பானிப் பிராணி உள்ள ஒருவர், குர்பானி கொடுக்க விரும்பியுள்ளபோது, (துல் ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்கள் ஆரம்பித்துவிட்டால், அவர் முடியையோ நகங்களையோ களைய வேண்டாம். இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.
மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாரிடம் அவர் அறுப்பதற்கான குர்பானிப் பிராணி இருந்து, துல்ஹஜ் பிறை காணப்பட்டு விட்டால், அவர் குர்பானி கொடுக்காத வரை தமது தலைமுடியையோ நகங்களையோ சிறிதும் வெட்ட வேண்டாம். இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - அம்ர் பின் முஸ்லிம் பின் அம்மார் அல்லைஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஈதுல் அள்ஹா பெருநாளுக்குச் சில நாட்களுக்கு முன் நாங்கள் வெண்ணீர் குளியல் அறையில் இருந்தபோது, சிலர் தம் மறைவிடத்திலிருந்த ரோமங்களை அகற்றினர். அப்போது குளியலறையில் இருந்த ஒருவர், "(குர்பானி கொடுக்க எண்ணியிருப்பவர் துல்ஹஜ் முதல் பத்துநாட்களில்) இ(வ்வாறு ரோமங்களை அகற்றுவ)தை சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் வெறுக்கிறார்கள்; அல்லது அவ்வாறு அகற்ற வேண்டாமெனத் தடை செய்கிறார்கள்" என்று கூறினார். ஆகவே, நான் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களைச் சந்தித்து அதைப் பற்றி அவர்களிடம் கூறினேன். அப்போது சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள், "என் சகோதரர் மகனே! இந்த ஹதீஸ் மறக்கப்பட்டுக் கைவிடப்பட்டுவிட்டது. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று எனக்கு அறிவித்தார்கள்" என்று கூறி னார்கள். - அம்ர் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
அபுத்துஃபைல் (ரலி) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் மட்டும் தனிப்பட்ட முறையில் ஏதேனும் விஷயத்தை (இரகசியமாகச்) சொன்னார்களா?" என்று கேட்கப்பட்டது. அலீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் அனைவருக்கும் பொதுவாகச் சொல்லாத எந்த விஷயத்தையும் எங்களிடம் தனிப்பட்ட முறையில் (இரகசியமாகச்) சொல்லவில்லை; இதோ இந்த வாளுறையில் இருப்பதைத் தவிர" என்று கூறிவிட்டு, ஓர் ஏட்டை வெளியில் எடுத்தார்கள். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது: அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணியை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். பூமியின் அடையாளச் சின்னங்களைத் திருடியவனை அல்லாஹ் சபிக்கின்றான். தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை (மார்க்கத்தின் பெயரால்) ஏற்படுத்தியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :