13 - நோன்பு புத்தகம்
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் பற்றிக் கூறுகையில் தம்மிரு கைகளையும் (மூன்று தடவை) அடித்தவாறு, "மாதம் என்பது இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவுதான்" என்று கூறினார்கள். (மூன்றாவது தடவையில் தமது பெருவிரலை மடக்கிக் கொண்டார்கள்.) மேலும் "பிறை பார்த்து நோன்பு நோறுங்கள்; பிறை பார்த்தே நோன்பை விடுங்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை முப்பது (நாட்கள்) ஆகக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களா(கவும் இருக்)கும். எனவே, பிறையைப் பார்க்காமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளா(கவும் இருக்)கும். எனவே, பிறையைப் பார்க்காமல் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு (வானில்) மேகமூட்டம் தென்பட்டால் தவிர. அவ்வாறு உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால், அந்த மாதத்தை (முப்பது நாட்களாக)க் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களா(கவும் இருக்)கும். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ரமளான் பற்றிக் கூறுகையில்) "மாதம் என்பது இவ்வளவு, இவ்வளவு, இவ்வளவுதான்" என்று கூறி, பத்து + பத்து + ஒன்பது (=இருபத்தொன்பது) என்று (கைகளால் சைகை செய்து) கூறினார்கள். அத்தியாயம் :
சஅத் பின் உபைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் "இன்றைய இரவு (மாதத்தின்) பாதி இரவாகும் (இன்றிரவுடன் அரை மாதமாகிறது)" என்று கூறியதை இப்னு உமர் (ரலி) அவர்கள் செவியுற்றார்கள். உடனே அந்த மனிதரிடம் "இன்றைய இரவுதான் (மாதத்தின்) பாதியாகும் என உமக்கு எப்படித் தெரியும்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது கை விரல்களால் இரண்டு முறை பத்து பத்து எனச் சைகை செய்து) "மாதம் என்பது இவ்வளவு இவ்வளவு இரவுகளாகும்" என்று கூறிவிட்டு, (மூன்றாவது தடவையில்) "இவ்வளவு" (என்று கூறியவாறு எல்லா விரல்களாலும் சைகை செய்து பெருவிரலை மட்டும் மடக்கிக்காட்டி மாதம் என்பது இருபத்தொன்பது இரவுகளாகவும் இருக்கும்) என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் பிறையைப் பார்த்து நோன்பு நோறுங்கள். (மறு)பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். (ரமளான் பிறை இருபத்தொன்பதாம் நாள் மாலை) உங்களுக்கு மேகமூட்டம் தென்படுமானால் முப்பதாவது நாளும் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறை பார்த்து நோன்பு வையுங்கள்; (மறு)பிறை பார்த்து நோன்பை விடுங்கள்; (மேக மூட்டத்தால்) உங்களுக்குத் திங்கள் தென்படவில்லையானால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிறை குறித்துக் கூறுகையில், "நீங்கள் பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். (மறு)பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், (மாதத்தை) முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமளானுக்கு முந்தைய நாளும் அதற்கு முந்தைய நாளும் நோன்பு நோற்காதீர்கள். (வழக்கமாக அந்த நாளில்) ஏதேனும் நோன்பு நோற்கும் மனிதரைத் தவிர! அவர் அந்நாளில் நோன்பு நோற்கட்டும். - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருடன் ஒரு மாதகாலம் சேரப் போவதில்லை என்று சத்தியம் செய்துவிட்டு (விலகி) இருந்தார்கள். பின்னர் இருபத்தொன்பது இரவுகள் முடிந்ததும் (அந்த இரவுகளை நான் எண்ணிக்கொண்டே இருந்தேன்) என்னிடம்தான் முதன்முதலில் வந்தார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஒரு மாதம் எங்களிடம் வரமாட்டீர்கள் என்று சத்தியம் செய்திருந்தீர்களே, இருபத்தொன்பது நாட்கள் முடிந்ததும் வந்துவிட்டீர்களே? நான் அந்த இரவுகளை எண்ணிக் கொண்டிருந்தேனே!" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும்" என்றார்கள். அத்தியாயம் :
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் துணைவியரிடமிருந்து ஒரு மாதகாலம் விலகியிரு(க்கப்போவதாகக் கூறியிரு)ந்தார்கள். பின்னர் இருபத்தொன்பதாம் நாள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள், "இன்று இருபத்தொன்பதாவது நாள்தான்" என்று சொன்னோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று தடவை கைகளைத் தட்டி, இறுதியில் ஒரு விரலை மட்டும் விரிக்காமல் மடக்கிவைத்திருந்துவிட்டு, "மாதம் என்பது இப்படி (இருபத்தொன்பது நாட்களாகவும்) இருக்கும்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடமிருந்து ஒரு மாதகாலம் விலகியிரு(க்கப் போவதாகக் கூறியிரு)ந்தார்கள். பின்னர் இருபத்தொன்பதாம் நாள் காலையிலேயே புறப்பட்டு எங்களிடம் வந்தார்கள். அப்போது சிலர், "அல்லாஹ்வின் தூதரே! (இன்று) இருபத்தொன்பதாம் நாள் காலைதான்" என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும்" என்று சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தம் கை விரல்களை (விரித்து) மூன்று முறை சேர்த்துக் காட்டினார்கள். இரண்டு தடவை எல்லா விரல்களையும் விரித்தார்கள்; மூன்றாவது தடவை ஒன்பது விரல்களை மட்டுமே விரித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பபாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலரிடம் ஒரு மாதகாலம் செல்லப்போவதில்லை எனச் சத்தியம் செய்து (விலகி) இருந்தார்கள். பின்னர் இருபத்தொன்பது நாட்கள் முடிந்ததும் அன்று "காலையில்" அல்லது "மாலையில்" அவர்களிடம் சென்றார்கள். அப்போது, "இறைவனின் தூதரே! எங்களிடம் ஒரு மாதகாலம் வரமாட்டீர்கள் எனச் சத்தியம் செய்திருந்தீர்களே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், "மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும்" என்று சொன்னார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த) குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் (ஒரு வேலை நிமித்தம்) என்னை ஷாம் (சிரியா) நாட்டிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் ஷாம் சென்று அவரது தேவையை நிறைவுசெய்தேன். நான் ஷாமில் இருந்தபோது ரமளான் (முதல்)பிறை எனக்குத் தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவில் நான் பிறையைக் கண்டேன். பிறகு அந்த (ரமளான்) மாதத்தின் இறுதியில் நான் மதீனா வந்துசேர்ந்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் (பயணம் குறித்து) என்னிடம் விசாரித்தார்கள். பின்னர் பிறை குறித்தும் பேசினார்கள். அப்போது "நீங்கள் (ஷாமில்) எப்போது பிறை பார்த்தீர்கள்?" என்று கேட்டார்கள். நான், "நாங்கள் வெள்ளியன்று பிறை கண்டோம்" என்று பதிலளித்தேன். அவர்கள், "நீயே அதைக் கண்டாயா?" என்று கேட்டார்கள். நான், "ஆம் (நானும் கண்டேன்). மக்களும் அதைக் கண்டார்கள். மக்களும் நோன்பு நோற்றனர். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு நோற்றார்கள்" என்று கூறினேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், "ஆனால், நாங்கள் சனிக்கிழமை இரவுதான் (முதல்) பிறை கண்டோம். எனவே, நாங்கள் (ரமளான் மாதத்தின்) எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமையாக்கும் வரை, அல்லது (ஷவ்வால் மாதத்தின் முதல்) பிறையைப் பார்க்கும்வரை நோன்பு நோற்றுக்கொண்டேயிருப்போம்" என்று சொன்னார்கள். அதற்கு நான், "முஆவியா (ரலி) அவர்கள் (முதல்பிறை) கண்டு, நோன்பு நோற்றது உங்களுக்குப் போதாதா?" என்று கேட்டேன். அதற்கு, "இல்லை. இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்" என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபுல் பக்தரீ சயீத் பின் ஃபைரூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் உம்ராவிற்காக (மக்காவிற்கு)ப் புறப்பட்டுச் சென்றோம். (வழியில்) நாங்கள் "பத்னு நக்லா" எனுமிடத்தில் தங்கியிருந்தபோது, பிறையைப் பார்க்க ஒன்றுகூடினோம். அப்போது மக்களில் சிலர், "அது மூன்றாவது பிறை" என்று கூறினர். வேறுசிலர், "(அல்ல) அது இரண்டாவது பிறை" என்று கூறினர். பின்னர் நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, "நாங்கள் பிறை பார்த்தோம். மக்களில் சிலர் "அது மூன்றாவது பிறை" என்றனர். வேறுசிலர் "அது இரண்டாவது பிறை" என்று கூறினர்" என்று சொன்னோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "எந்த இரவில் நீங்கள் பிறை கண்டீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு, "இன்ன (மாதத்தின்) இன்ன இரவில்" என்று பதிலளித்தோம். அப்போது, "பார்ப்பதற்காகவே பிறையை அல்லாஹ் சிறிதுநேரம் தென்படச் செய்கிறான். ஆகவே, அது நீங்கள் கண்ட இரவுக்குரியதே ஆகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள். அத்தியாயம் :
அபுல் பக்தரீ சயீத் பின் பைரூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் "தாத்து இர்க்" எனும் இடத்தில் இருந்தபோது ரமளான் (முதல்) பிறையைக் கண்டோம். அதைப் பற்றிக் கேட்பதற்காக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒருவரை அனுப்பினோம். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "பார்ப்பதற்காகவே பிறையை அல்லாஹ் சிறிதுநேரம் தென்படச்செய்கிறான். உங்களுக்கு (வானில்) மேகமூட்டம் தென்படுமானால் (மாதத்தின் நாட்களின்) எண்ணிக்கையை (முப்பதாக) முழுமையாக்கிக் கொள்ளுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரு பெருநாட்களின் மாதங்களான ரமளானும் துல்ஹஜ்ஜும் குறையாது. இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரு பெருநாட்களின் மாதங்கள் குறையாது. இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் காலித் பின் மஹ்ரான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இரு பெருநாட்களின் மாதங்களான ரமளானும் துல்ஹஜ்ஜும் குறையாது" என்று காணப்படுகிறது. அத்தியாயம் :
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: "கறுப்புக் கயிற்றிலிருந்து விடியலின் வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தென்படும்வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள்" (2:187) வசனம் அருளப்பெற்றபோது நான் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் வெள்ளை நிறத்தில் ஒரு கயிறு, கறுப்பு நிறத்தில் மற்றொரு கயிறு என இரு கயிறுகளை என் தலையணையின் கீழே வைத்து, பகலில் இருந்து இரவை (பிரித்து) அறிய முயன்றேன். (ஆயினும், என்னால் பிரித்தறிய முடியவில்லை)" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், "உங்கள் தலையணை நிச்சயம் (மிக) அகலமானதாய் இருக்கவேண்டும். (கறுப்புக்கயிறு, வெள்ளைக்கயிறு என்பன அவற்றின் உண்மையான பொருளில் கூறப்படவில்லை. மாறாக,) அது இரவின் கருமையும் பகலின் வெண்மையுமே ஆகும்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: "கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தென்படும்வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள்" எனும் இந்த (2:187 ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, ஒருவர் வெள்ளைக்கயிறு ஒன்றையும் கறுப்புக்கயிறு ஒன்றையும் எடுத்து வைத்துக்கொண்டு, அவையிரண்டும் பார்வைக்குத் தெளிவாகப் புலப்படும்வரை (சஹர் உணவு) சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அதன் பின்னர் அல்லாஹ், "மினல் ஃபஜ்ர்" (விடியலின்) எனும் சொல்லையும் சேர்த்து அருளி அ(வ்வசனத்)தைத் தெளிவுபடுத்தினான். அத்தியாயம் :
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: "கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தென்படும்வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள்" எனும் இந்த (2:187 ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, நோன்பு நோற்க நாடியுள்ள ஒருவர் தம் இரு கால்களில் (ஒன்றில்) கறுப்புக்கயிற்றையும் (மற்றொன்றில்) வெள்ளைக்கயிற்றையும் கட்டிக்கொண்டு, அவ்விரண்டும் தமது பார்வைக்குத் தெளிவாகப் புலப்படும்வரை சாப்பிட்டுக்கொண்டிருப்பார். ஆகவே, அதற்குப் பின்னர் அல்லாஹ், "மினல் ஃபஜ்ர்" (விடியலின்) எனும் சொல்லையும் சேர்த்து அருளினான். அப்போதுதான் மக்கள், இதன் மூலம் அல்லாஹ் அதிகாலையையும் இரவையுமே நாடுகிறான் என்பதை அறிந்துகொண்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். சூரியன் மறைந்ததும், "இன்ன மனிதரே, (ஒட்டகத்திலிருந்து) இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அவர், "அல்லாஹ்வின் தூதரே! பகல் இன்னும் எஞ்சியுள்ளதே?" என்று சொன்னார். "இன்ன மனிதரே, (ஒட்டகத்திலிருந்து) இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!" என்று (மீண்டும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். எனவே, அவர் இறங்கிவந்து, மாவு கரைத்துக் கொண்டுவந்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் அதை அருந்திவிட்டு, "சூரியன் இங்கிருந்து மறைந்து, இரவு இங்கிருந்து வந்துவிட்டால் நோன்பாளி நோன்பு துறப்பார்" என்று கையால் சைகை செய்து கூறினார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். சூரியன் மறைந்ததும் ஒரு மனிதரிடம், "(ஒட்டகத்திலிருந்து) இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக" என்று சொன்னார்கள். அவர், "அல்லாஹ்வின் தூதரே, மாலைநேரம் ஆகட்டுமே!" என்று சொன்னார். "இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக" என்று (மீண்டும்) சொன்னார்கள். அவர், "இன்னும் பகல் இருக்கிறதே!" என்று சொல்லிவிட்டு, இறங்கி நபி அவர்களுக்காக மாவு கரைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை அருந்தினார்கள். பின்னர், கிழக்குத் திசையை நோக்கி சைகை செய்து "இரவு இங்கிருந்து முன்னோக்கி வந்துவிட்டதை நீங்கள் காணும்போது நோன்பாளி நோன்பு துறப்பார்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஒரு பயணத்தில்) சென்றோம். அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும், "இன்ன மனிதரே, இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக" என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், மேற்கண்ட இரு ஹதீஸ்களில் உள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இந்த அறிவிப்புகளில் "ரமளான் மாதத்தில்" எனும் குறிப்போ, "இரவு இங்கிருந்து வந்துவிட்டால்" எனும் சொற்றொடரோ காணப்படவில்லை. ஹுஷைம் பின் பஷீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டுமே இவ்வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்நோன்பிற்குத் தடை விதித்தார்கள். அப்போது முஸ்லிம்களில் ஒருவர், "தாங்கள் மட்டும் தொடர்நோன்பு நோற்கிறீர்களே, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கிறார்? எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் வழங்குகின்ற நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன்" என்று சொன்னார்கள். ஆனால், தொடர்நோன்பு நோற்பதிலிருந்து விலகிக்கொள்ள மக்கள் மறுத்தபோது,தம்முடன் ஒரு நாள் தொடர்நோன்பு நோற்க மக்களையும் நபியவர்கள் அனுமதித்தார்கள். பின்னர் அடுத்த நாளும் அனுமதித்தார்கள். பிறகு (அடுத்த மாதத்தின்) தலைப்பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் "தலைப்பிறை இன்னும் தள்ளிப்போயிருந்தால் (உங்களால் இயலாத அளவிற்குத் தொடர்நோன்பு நோற்பதை) மேலும் நான் உங்களுக்கு அதிகப் படுத்தியிருப்பேன்" என்று சொன்னார்கள். மக்கள் தொடர்நோன்பு நோற்பதிலிருந்து விலகிக் கொள்ள மறுத்ததைக் கண்டிக்கும் விதத்திலேயே இவ்வாறு கூறினார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: தொடர்நோன்பு நோற்கலாகாது என நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தடைவிதித்தார்கள். மக்கள்மீது கொண்ட கருணையே இதற்குக் காரணம். அப்போது "தாங்கள் (மட்டும்) தொடர் நோன்பு நோற்கிறீர்களே!" என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் (இவ்விஷயத்தில்) உங்களைப் போன்றவன் அல்லன். எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் வழங்குகின்றான்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
(அனஸ் ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் ஆரம்பத்தில் தொடர்நோன்பு நோற்றார்கள். (இதைக் கண்டு) முஸ்லிம்கள் சிலரும் தொடர்நோன்பு நோற்றார்கள். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், "எமக்கு (மட்டும்) இந்த மாதம் (எத்தனை நாட்கள்) நீட்டிக்கப்பட்டிருந்தாலும் எம்மால் தொடர்நோன்பு நோற்றிருக்க முடியும். அப்போது (வழிபாடுகளில்) அதீத ஆர்வம் காட்டுபவர்கள் தங்களது போக்கைக் வைவிட்டிருப்பர். "நீங்கள் (இவ்விஷயத்தில்) என்னைப் போன்றவர்கள் அல்லர்" அல்லது "நான் உங்களைப் போன்றவன் அல்லன்". எனக்கு என் இறைவன் உண்ணவும் பருகவும் வழங்கும் நிலையில் நான் பகல் நேரத்தைக் கழிக்கிறேன்" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அப்துர் ரஹ்மான் பின் அல்காசிம் (ரஹ்) அவர்களிடம், "நீங்கள் உங்கள் தந்தை (காசிம் பின் முஹம்மத் - ரஹ்) அவர்கள் வாயிலாக "நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக் கொண்டு என்னை முத்தமிடுவார்கள்" என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸைச் செவியுற்றீரா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (பதிலளிக்காமல் சிறிது நேரம்) அமைதியாக இருந்துவிட்டுப் பிறகு "ஆம்" என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், "இளைஞர் சமுதாயமே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்துகொள்ளட்டும். அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும்.அதற்கு இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு, (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்" என்று கூறினார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் என் தந்தையின் சகோதரர் அல்கமா (ரஹ்) அவர்களும் அஸ்வத் (ரஹ்) அவர்களும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அன்று நான் இளைஞனாக இருந்தேன்.அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மேற்கண்ட ஹதீஸை அறிவித்தார்கள். அதை எனக்காகவே அவர்கள் அறிவித்தார்கள் என்றே நான் கருதினேன். நான் தாமதியாமல் (உடனடியாக) மணமுடித்துக் கொண்டேன். - மேற்கண்ட ஹதீஸ் அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். நானே (அங்கு சென்ற) மக்களில் இளவயதினனாக இருந்தேன்" என ஹதீஸ் ஆரம்பிக்கிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட அறிவிப்புகளில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆனால், "நான் தாமதியாமல் (உடனடியாக) மணமுடித்துக்கொண்டேன்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "நான் அழிந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!" என்றார். நபி (ஸல்) அவர்கள், "உமது அழிவுக்குக் காரணம் என்ன?" என்று கேட்டார்கள். "நான் ரமளானில் (நோன்பு வைத்துக்கொண்டே) என் மனைவியுடன் (பகலில்) தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்" என்று அவர் சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "(இதற்குப் பரிகாரமாக) ஓர் அடிமையை விடுதலைசெய்ய உம்மால் இயலுமா?" என்று கேட்டார்கள். அவர் "இல்லை" என்றார். "தொடர்ந்து இருமாதங்கள் நோன்பு நோற்க உம்மால் முடியுமா?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் "இல்லை" என்றார். "அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உம்மால் இயலுமா?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர் "இல்லை" என்று கூறிவிட்டுப் பிறகு அமர்ந்துவிட்டார். பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழங்கள் உள்ள ஒரு கூடை கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரிடம், "இதை(ப் பெற்று) தர்மம் செய்வீராக!" என்று கூறினார்கள். அவர், "எங்களைவிட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்)? இந்நகரத்தின் இருமலைகளுக்கு இடையே எங்களைவிட மிக வறியநிலையில் எந்த வீட்டாரும் இல்லை" என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப்பற்கள் தெரியச் சிரித்துவிட்டு, "நீர் (இதைப் பெற்றுச்) சென்று, உம் வீட்டாருக்கே ஊட்டுவீராக!" என்றார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "கூடை ("அரக்") என்பதற்கு "ஸன்பீல்" (பெரிய கூடை) என்று பொருள்" என இடம் பெற்றுள்ளது. மேலும், "உடனே நபி (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப்பற்கள் தெரியச் சிரித்தார்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ரமளானில் (நோன்பு வைத்துக்கொண்டு) தம் மனைவியுடன் (பகலில்) தாம்பத்திய உறவில் ஈடுபட்டு (வந்து), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அது குறித்துத் தீர்ப்புக்கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(விடுதலை செய்ய) ஓர் அடிமையை நீர் பெற்றுள்ளீரா?" என்று கேட்டார்கள். அவர் "இல்லை" என்றார். "(தொடர்ந்து) இருமாதங்கள் நோன்பு நோற்க உம்மால் முடியுமா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் "இல்லை" என்றார். "அவ்வாறாயின், அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பீராக!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ரமளானில் (பகலில் தாம்பத்திய உறவு கொண்டு) நோன்பை முறித்துவிட்டார். ஓர் அடிமையை விடுதலை செய்யவேண்டும்; அல்லது (தொடர்ந்து) இரு மாதங்கள் நோன்பு நோற்கவேண்டும்; அல்லது அறுபது ஏழைகளுக்கு உணவளிக்கவேண்டும் என அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் கரிந்துபோனேன்" என்றார். "ஏன் (உமக்கு என்ன நேர்ந்தது)?" என்று அவர்கள் கேட்டார்கள். அவர், "நான் ரமளானில் பகலில் (நோன்பு நோற்றுக்கொண்டு) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தர்மம் செய்வீராக, தர்மம் செய்வீராக!" என்று சொன்னார்கள். அவர், "என்னிடம் ஏதும் இல்லையே?" என்றார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கேயே) அமர்ந்திருக்குமாறு உத்தரவிட்டார்கள். பின்னர் உணவுப்பொருட்கள் உள்ள இரண்டு பெரிய கூடைகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்(து சேர்ந்)தன. அதை(ப் பெற்று) தர்மம் செய்யுமாறு அம்மனிதருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்" என ஹதீஸ் தொடங்குகிறது. ஹதீஸின் ஆரம்பத்தில் "தர்மம் செய்வீராக, தர்மம் செய்வீராக" என்பதும் "பகலில்" எனும் குறிப்பும் இடம்பெறவில்லை. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் ரமளானில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பள்ளிவாசலுக்கு வந்து, "நான் கரிந்துபோனேன், அல்லாஹ்வின் தூதரே! நான் கரிந்துபோனேன்" என்றார். "அவருக்கு என்ன ஆயிற்று?" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் வினவினார்கள். அவர், "நான் (நோன்பு நோற்றுக்கொண்டு) என் மனைவியுடன் (பகலில்) தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தர்மம் செய்வீராக!" என்றார்கள். அவர் "அல்லாஹ்வின் மீதாணையாக! நபியே! (தர்மம் செய்ய) என்னிடம் எதுவும் இல்லை. அதற்கான சக்தியும் எனக்கு இல்லை" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அமர்வீராக" என்றார்கள். அவர் அமர்ந்தார். அவர் அமர்ந்திருந்தபோது மற்றொரு மனிதர் ஒரு கழுதையை ஓட்டிக்கொண்டு (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) வந்தார். அதன் மீது உணவுப்பொருட்கள் இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சற்று முன்னர் கரிந்துபோனவர் எங்கே?" என்று கேட்டார்கள். அந்த மனிதர் எழுந்து நின்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை(ப் பெற்று) தர்மம் செய்வீராக!" என்றார்கள். அவர், "அல்லாஹ்வின் தூதரே! எங்களைவிட்டு மற்றவர்களுக்கா (தர்மம் செய்யச் சொல்கிறீர்கள்)? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்களே பசியோடு இருக்கிறோம். எங்களிடம் எதுவும் இல்லை?" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறாயின், அதை நீங்களே உண்ணுங்கள்!" என்றார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவெற்றி ஆண்டில் ரமளானில் (மதீனாவிலிருந்து மக்காவிற்குப்) புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். "அல்கதீத்" எனும் இடத்தை அடைந்ததும் நோன்பை விட்டுவிட்டார்கள். (பொதுவாக) நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயல்களில் பிந்தியதை, அடுத்து பிந்தியதையே பின்பற்றுவார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறுதியாகச் சொன்னதையே கடைப்பிடிக்கப்படும்" எனக் கூறியவர் யார் என்று எனக்குத் தெரியாது என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், (பயணத்தில்) நோன்பை விடுவதே நபி (ஸல்) அவர்களின் இரு செயல்களில் இறுதியானதாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயல்களில் இறுதியானது, அதற்கடுத்து இறுதியானது எதுவோ அதுவே எடுத்துக்கொள்ளப்படும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த ஆண்டு) ரமளான் பதிமூன்றாம் நாள் காலையில் மக்காவில் இருந்தார்கள்" என்று இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயல்களில் பிந்தியதை, அடுத்து பிந்தியதையே பின்பற்றுவார்கள். பிந்தியது, முந்தியதைக் காலாவதியாக்கக்கூடியதும் இறுதி செய்யப்பட்டதுமாகும் என்று கருதுவார்கள்" என இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் (மதீனாவிலிருந்து மக்காவிற்குப்) பயணம் மேற்கொண்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். "உஸ்ஃபான்" எனும் இடத்தை அடைந்ததும் குடிநீருள்ள பாத்திரத்தைக் கொண்டுவரச் சொல்லி, மக்கள் காண்பதற்காக பகல் நேரத்திலேயே அதை அருந்தி நோன்பை விட்டார்கள். இறுதியில் மக்காவிற்குள் நுழை(யும்வரை நோன்பு நோற்கமாலேயே இரு)ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணத்தில்) நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்; நோன்பை விட்டும் இருக்கிறார்கள். எனவே, (நோன்பு நோற்க) விரும்புகின்றவர் நோன்பு நோற்கலாம்; (விட்டுவிட) விரும்புகின்றவர் விட்டுவிடவும் செய்யலாம். அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "ஒரு மனிதர் ரமளானில் (பகலில் தாம்பத்திய உறவு கொண்டு) நோன்பை முறித்துவிட்டார். ஓர் அடிமையை விடுதலை செய்யுமாறு அம்மனிதருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்" என ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட (2036ஆவது) ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவெற்றி ஆண்டில் ரமளான் மாதத்தில் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றார்கள். மக்களும் அவர்களுடன் நோன்பு நோற்றனர். "குராஉல் ஃகமீம்" எனும் இடத்தை அடைந்ததும் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டுவரச் சொல்லி மக்கள் பார்க்கும் அளவுக்கு உயர்த்திக் காட்டிய பின் அருந்தினார்கள். அதன் பிறகு அவர்களிடம், "மக்களில் சிலர் நோன்புடனேயே இருக்கின்றனர்" என்று சொல்லப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இத்தகையோரே (எனக்கு) மாறுசெய்பவர்கள்; இத்தகையோரே (எனக்கு) மாறுசெய்பவர்கள்" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
ஹுமைத் பின் அபீஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்களிடம், ரமளானில் பயணத்தின்போது நோன்பு நோற்பது குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ரமளானில் பயணம் செய்தோம். அப்போது. நோன்பு நோற்றவர் நோன்பு நோற்காதவரையோ, நோன்பு நோற்காதவர் நோன்பு நோற்றவரையோ குறை கூறியதில்லை" என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹுமைத் பின் அபீஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (பயணம்) புறப்பட்டேன். (பயணத்தில்) நோன்பு நோற்றிருந்தேன். அப்போது மக்கள் என்னிடம், "(பயணத்தில் நோன்பு நோற்காதீர்.) பின்னர் (ஊர் திரும்பியபின்) நோற்றுக் கொள்ளுங்கள்!" என்றார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் பயணம் செய்யும்போது (சிலர் நோன்பு நோற்பர். சிலர் நோற்பதில்லை. அப்போது) நோன்பு நோற்றவர் நோன்பு நோற்காதவரையோ, நோன்பு நோற்காதவர் நோன்பு நோற்றவரையோ குறை கூறமாட்டார்" என என்னிடம் அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்றேன். பின்னர் நான் இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது அவர்கள் "மேற்கண்டவாறு ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம் அறிவித்தார்கள்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஒரு) பயணத்திலிருந்தோம். அப்போது எங்களில் நோன்பு நோற்றவர்களும் இருந்தனர்; நோன்பு நோற்காதவர்களும் இருந்தனர். அப்போது வெப்பமிக்க ஒரு நாளில் ஓர் இடத்தில் இறங்கித் தங்கினோம். எங்களில் மேல்துண்டு வைத்திருந்தவரே (அன்று) அதிகமாக நிழலைப் பெற்றார். தமது கரத்தால் வெயிலை மறைத்துக் கொண்டோரும் எங்களில் இருந்தனர். நோன்பு நோற்றிருந்தவர்கள் செயலற்றுப்போயினர். நோன்பு நோற்காதிருந்தவர்கள் எழுந்து (செயல்படத் தொடங்கினர்.) கூடாரங்களை நிறுவினர்; வாகன (ஒட்டக)ங்களுக்கு நீர் புகட்டினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்று நோன்பு நோற்காதவர்கள் நன்மையைத் தட்டிச் சென்றுவிட்டனர்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
கஸஆ பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்களைச் சுற்றி நிறைய மக்கள் குழுமியிருந்தனர். (அவர்கள் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்கள்.) மக்கள் கலைந்துசென்றதும் நான், "இவர்கள் கேட்டதையெல்லாம் உங்களிடம் நான் கேட்கமாட்டேன்" என்று கூறிவிட்டு, பயணத்தில் நோன்பு நோற்பது பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) மக்காவுக்குப் பயணம் செய்தோம். அப்போது நாங்கள் நோன்பு நோற்றிருந்தோம். (வழியில்) ஓரிடத்தில் இறங்கி(த் தங்கி)னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் உங்கள் எதிரிகளை நெருங்கிவிட்டீர்கள். இந்நிலையில் நீங்கள் நோன்பை விட்டுவிடுவதே உங்களுக்கு வலுசேர்க்கும்" என்று கூறினார்கள். இது ஒரு சலுகையாகவே இருந்தது. எனவே, எங்களில் சிலர் நோன்பு நோற்றனர்; வேறுசிலர் நோன்பை விட்டுவிட்டனர். பிறகு மற்றோர் இடத்தில் நாங்கள் இறங்கி(த் தங்கி)னோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் "நீங்கள் (நாளைக்) காலையில் எதிரிகளைச் சந்திக்கப்போகிறீர்கள்கள். இந்நிலையில் நோன்பை விட்டுவிடுவதே உங்களுக்கு வலுசேர்க்கும். எனவே, நோன்பை விட்டுவிடுங்கள்" என்று சொன்னார்கள். இது ஒரு கட்டளையாகவே இருந்தது. ஆகவே, நாங்கள் நோன்பை விட்டுவிட்டோம். அதன் பின்னர் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணத்தில் நோன்பு நோற்பவர்களாகவே இருந்தோம். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹம்ஸா பின் அம்ர் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பயணத்தில் நோன்பு நோற்பது குறித்துக் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் நாடினால் நோன்பு நோற்பீராக; நாடினால் நோன்பை விட்டுவிடுவீராக!" என்றார்கள். அத்தியாயம் :
ஹம்ஸா பின் அம்ர் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், "அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் நோன்பு நோற்க எனக்குச் சக்தி உண்டு என நான் உணர்கிறேன். (அவ்வாறு நோன்பு நோற்பது) என்மீது குற்றமாகுமா?" என்று கேட்டேன். அதற்கு "இது அல்லாஹ்விடமிருந்து (வந்துள்ள) சலுகையாகும். யார் அதைப் பயன்படுத்திக் கொள்கிறாரோ அது நல்லதே. (பயணத்தில்) நோன்பு நோற்க விரும்புகின்றவர் மீதும் குற்றம் இல்லை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், ஹாரூன் பின் சஈத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இது சலுகையாகும்" என்றே இடம்பெற்றுள்ளது. "அல்லாஹ்விடமிருந்து” எனும் குறிப்பு இல்லை. அத்தியாயம் :
அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ரமளான் மாதத்தில் கடுமையான வெப்பத்தில் (பயணம்) புறப்பட்டோம். கடும் வெப்பம் காரணமாக எங்களில் சிலர் தமது கையைத் தமது தலைமீது வைத்து (மறைத்து)க்கொண்டனர். அப்(பயணத்தின்) போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களையும் தவிர எங்களில் வேறு யாரும் நோன்பு நோற்றிருக்கவில்லை. அத்தியாயம் :
அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட பயணமொன்றில் கடுமையான வெப்பமுள்ள நாளில் அவர்களுடன் நாங்களும் இருந்தோம். கடும் வெப்பத்தின் காரணமாக சிலர் தமது கையைத் தமது தலைமீது வைத்து(மறைத்து)க்கொண்டனர். அப்(பயணத்தின்) போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களையும் தவிர வேறு யாரும் நோன்பு நோற்றிருக்கவில்லை. அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது (அவர்களுடனிருந்த) சிலர் நோன்பு நோற்றனர்;வேறுசிலர் நோன்பு நோற்காமல் விட்டு விட்டனர். நோன்பு நோற்காதவர்கள் மும்முரமாகப் பணி புரிந்துகொண்டிருந்தார்கள். நோன்பு நோற்றிருந்தவர்கள் ஒருசில வேலைகளை(க் கூட)ச் செய்யமுடியாமல் பலவீனமடைந்தனர். இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்று நோன்பு நோற்காதவர்கள் நன்மைகளைத் தட்டிச் சென்றுவிட்டனர்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்று நோன்பு நோற்றிருக்கிறார்களா?" என்று "அரஃபா" நாளில் எனக்கருகே மக்கள் சிலர் விவாதித்தனர். சிலர் "அவர்கள் நோன்பு வைத்திருக்கிறார்கள்" என்றனர். மற்றும் சிலர் "அவர்கள் நோன்பு வைக்கவில்லை" என்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பால் கோப்பை ஒன்றை நான் கொடுத்தனுப்பினேன்; அப்போது அவர்கள் "அரஃபா" பெருவெளியில் ஒட்டகத்தின் மேல் இருந்தார்கள். அதை அவர்கள் அருந்தி (தாம் நோன்பாளியல்ல என்பதை உணர்த்தி)னார்கள். இதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த உமைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "அவர்கள் ஒட்டகத்தின் மேல் இருந்தார்கள்" எனும் குறிப்பு இல்லை. "உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த உமைர் (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கிறார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதிலும், "உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த உமைர் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்" என்றே இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பது குறித்துப் பேசப்பட்டது" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்றபடி மேற்கண்ட ஹதீஸிலுள்ள தகவல்கள் (அனைத்தும்) அப்படியே இதிலும் இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அறியாமைக் கால மக்கள் (குறைஷியர்) முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) அன்று நோன்பு நோற்றுவந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்புவரை முஹர்ரம் பத்தாவது நாளில் நோன்பு நோற்றனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "முஹர்ரம் பத்தாவது நாள் அல்லாஹ்வின் நாட்களில் ஒரு நாளாகும். நாடியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம்; நாடியவர் அ(ந்நாளில் நோன்பு நோற்ப)தை விட்டுவிடலாம்" என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) குறித்துப் பேசப்பட்டது. அப்போது, "அது, அறியாமைக் காலத்தார் நோன்பு நோற்ற தினமாகும். உங்களில் அன்றையதினம் நோன்பு நோற்க விரும்புகின்றவர் நோன்பு நோற்கட்டும்! விரும்பாதவர் நோன்பை விட்டுவிடட்டும்!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டு வந்தார்கள்; அந்நோன்பை நோற்குமாறு எங்களை ஊக்குவிக்கவும் செய்வார்கள். அந்த நாளில் (நாங்கள் நோன்பு நோற்கிறோமா என) எங்களைக் கவனித்தும் வந்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டபோது, (ஆஷூரா நோன்பு நோற்குமாறு) எங்களுக்குக் கட்டளையிடவுமில்லை; எங்களுக்குத் தடைவிதிக்கவுமில்லை; அந்த நாளில் எங்களைக் கவனிக்கவுமில்லை. அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள்: கைபர்வாசிகள் (யூதர்கள்) முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்றுவந்தனர்; அந்நாளை அவர்கள் பண்டிகை நாளாகக் கொண்டாடினர்; தங்களுடைய பெண்களுக்கு அந்நாளில் ஆபரணங்களையும் அழகிய ஆடைகளையும் அவர்கள் அணிவித்தனர். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) "இந்நாளில் நீங்களும் நோன்பு நோறுங்கள்!" என்றார்கள். அத்தியாயம் :
உபைதுல்லாஹ் பின் அபீயஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) நோன்பு பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாட்களிலேயே இந்த (ஆஷூரா) நாளையும் மாதங்களிலேயே இந்த -ரமளான்- மாதத்தையும் தவிர வேறெதையும் சிறப்பாகத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்றதாக நான் அறியவில்லை" என்று விடையளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்ஹகம் பின் அல்அஃரஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "ஸம்ஸம்" கிணற்றுக்கருகில் தமது மேல்துண்டைத் தலையணையாக வைத்துச் சாய்ந்திருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். "ஆஷூரா நோன்பு பற்றி எனக்குச் சொல்லுங்கள்!" என அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், "முஹர்ரம் மாதத்தின் (முதல்) பிறையை நீர் கண்டதும் (அன்றிலிருந்து நாட்களை) எண்ணிக்கொள்வீராக! ஒன்பதாவது நாள் காலையில் நீர் நோன்பாளியாக இருப்பீராக!" என்று சொன்னார்கள். "இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த (ஆஷூரா) நோன்பை நோற்றார்களா?" என்று நான் கேட்டேன். அதற்கு, "ஆம்" என்று அவர்கள் விடையளித்தார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "ஸம்ஸம் கிணற்றுக்கருகில் தமது மேல்துண்டைத் தலையணையாக்கிச் சாய்ந்திருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்டேன்" என ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "அடுத்த ஆண்டுவரை நான் உயிரோடிருந்தால் ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பேன்" என்று இடம்பெற்றுள்ளது. அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில்" அதாவது ஆஷூரா நாளில்" எனும் குறிப்புடன் இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளன்று "அஸ்லம்" குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, "(இன்று) நோன்பு நோற்காமலிருப்பவர், நோன்பு நோற்கட்டும்; சாப்பிட்டுவிட்டவர், இரவுவரை தமது நோன்பை நிறைவு செய்யட்டும்" என்று மக்களிடையே அறிவிக்குமாறு உத்தரவிட்டார்கள். அத்தியாயம் :
ருபய்யிஉ பின்த் முஅவ்வித் பின் அஃப்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளன்று காலையில் மதீனா புறநகரிலுள்ள அன்சாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி "(இன்று) காலையில் நோன்பாளியாக இருப்பவர், தமது நோன்பைத் தொடரட்டும்;நோன்பு நோற்காமல் காலைப் பொழுதை அடைந்தவர் இன்றைய தினத்தின் எஞ்சிய பொழுதை (நோன்பிருந்து) நிறைவு செய்யட்டும்" என்று அறிவிக்கச்செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் -அல்லாஹ் நாடினால்- நோன்பு நோற்கச்செய்வோம். நாங்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும்போது, கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காகச் செய்து, அவர்களில் ஒருவன் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு துறக்கும் நேரம்வரை (அவன் பசியை மறந்திருப்பதற்காக) அவனிடம் அந்த விளையாட்டுப் பொருளைக் கொடுப்போம். அத்தியாயம் :
காலித் பின் தக்வான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்களிடம், ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) நோன்பு பற்றிக்கேட்டேன். அப்போது அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளின் கிராமங்களுக்குத் தம் தூதுவர்களை அனுப்பினார்கள்" என்று கூறியதாக மேற்கண்ட ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. இருப்பினும், அதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: நாங்கள் கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காகத் தயார்செய்து, அவற்றை எங்களுடன் எடுத்துச்செல்வோம். சிறுவர்கள் எங்களிடம் உணவு கேட்பார்களானால், விளையாட்டுப் பொருளைக் கொடுத்து, அவர்கள் நோன்பை நிறைவு செய்யும்வரை கவனத்தைத் திசைதிருப்புவோம். அத்தியாயம் :
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் அவ்ஸ் பின் அல்ஹதஸான் (ரலி) அவர்களையும் "அய்யாமுத் தஷ்ரீக்" நாட்களில் அனுப்பி, "இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்; "மினா"வின் நாட்கள் உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்" என (மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "எங்கள் இருவரையும் அறிவிக்கச் செய்தார்கள்" எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
முஹம்மத் பின் அப்பாத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துகொண்டிருந்த ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் நான், "வெள்ளிக்கிழமை (ஒரு நாள் மட்டும்) நோன்பு நோற்க வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு "ஆம், இந்த இல்லத்தின் அதிபதிமீது ஆணையாக!" என்று ஜாபிர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, "நான் என் தாயாருக்கு ஓர் அடிமைப்பெண்ணைத் தானமாக வழங்கியிருந்தேன். என் தாயார் இறந்துவிட்டார். (இப்போது அந்த அடிமைப்பெண் எனக்கே கிடைத்துவிட்டார். இந்நிலையில் தானத்திற்குரிய நற்பலன் எனக்கு உண்டா?)" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(தானம் செய்ததற்குரிய) நற்பலன் உனக்கு உறுதியாகிவிட்டது. வாரிசுரிமை, அவ்வடிமைப்பெண்ணை உனக்கே மீட்டுத் தந்துவிட்டது" என்று சொன்னார்கள். அப்பெண்மணி, "என் தாயார்மீது ஒருமாத நோன்பு (கடமையாகி) இருந்தது. அவர் சார்பாக நான் நோன்பு நோற்கலாமா?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் சார்பாக நீ நோன்பு நோற்றுக்கொள்" என்றார்கள். அப்பெண்மணி, "என் தாயார் (இதுவரை) அறவே ஹஜ் செய்யவில்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?" என்று கேட்டதற்கு, "அவருக்காக நீ ஹஜ் செய்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் நோன்பு நோற்றவராகக் காலைப்பொழுதை அடையும் நாளில் அருவருப்பாக (ஆபாசமாக)ப் பேசவேண்டாம்;அறிவீனமாக நடந்துகொள்ளவேண்டாம். எவரேனும் அவரை ஏசினாலோ அல்லது வம்புக்கு இழுத்தாலோ "நான் நோன்பு நோற்றிருக்கிறேன்; நான் நோன்பு நோற்றிருக்கிறேன்" என்று அவர் கூறிவிடட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், "ஆதமின் மைந்தனுடைய (மனிதனுடைய) ஒவ்வொரு செயலும் அவனுக்கே உரியதாகும். ஆனால், நோன்பைத் தவிர! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியதாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குவேன்" என்று கூறினான். முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரி மணத்தைவிட நறுமணமிக்கதாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) ஒவ்வொரு நற்செயலுக்கும் ஒன்றுக்குப் பத்து முதல் எழுநூறு மடங்குகள்வரை நன்மைகள் வழங்கப்படுகின்றன; அல்லாஹ் கூறுகின்றான்: நோன்பைத் தவிர. ஏனெனில், நோன்பு எனக்கு உரியதாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குகிறேன். அவன் எனக்காகவே தனது உணர்வையும் உணவையும் கைவிடுகிறான் (என அல்லாஹ் கூறுகின்றான்). நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. அவர் நோன்பைத் துறக்கும்போது ஒரு மகிழ்ச்சியும், தம் இறைவனைச் சந்திக்கும் போது மற்றொரு மகிழ்ச்சியும் (அடைகிறார்). நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் மணத்தைவிட நறுமணமிக்கதாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் "ரய்யான்" எனப்படும் ஒரு நுழைவாயில் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகளே நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறெவரும் (அதன் வழியாக) நுழையமாட்டார்கள். "நோன்பாளிகள் எங்கே?" என்று கேட்கப்படும்; உடனே அவர்கள் அதன் வழியாக நுழைவார்கள். அவர்களில் இறுதி நபர் நுழைந்ததும் அந்நுழைவாயில் அடைக்கப்பட்டுவிடும்; அதன் வழியாக வேறெவரும் நுழையமாட்டார்கள். இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் என்னிடம் (வந்து), "ஆயிஷா! உங்களிடம் (உண்பதற்கு) ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் எதுவுமில்லை" என்றேன். உடனே "அவ்வாறாயின் நான் நோன்பாளியாக இருந்துகொள்கிறேன்" என்று கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்கள். பின்னர் "எங்களுக்கு ஓர் அன்பளிப்பு வழங்கப்பட்டது" (அல்லது "எங்களைச் சந்திக்கச் சிலர் (அன்பளிப்புடன்) வந்தனர்"). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிவந்தபோது, நான் "அல்லாஹ்வின் தூதரே! "நமக்கு ஓர் அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது" (அல்லது "நம்மைச் சந்திக்கச் சிலர் (அன்பளிப்புடன்) வந்தனர்"). (அந்த அன்பளிப்பிலிருந்து) சிறிதளவைத் தங்களுக்காக நான் எடுத்துவைத்துள்ளேன்" என்று சொன்னேன். அதற்கு அவர்கள் "என்ன அது?" என்று கேட்டார்கள். நான் "(பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் ஆகியவற்றால் தயாரிக்கப்படும்) "ஹைஸ்" எனும் பலகாரம்" என்று சொன்னேன். "அதைக் கொண்டு வா" என்று அவர்கள் சொன்னார்கள். நான் அதைக் கொண்டுவந்தேன். அவர்கள் உண்டார்கள். பிறகு "நான் இன்று காலையில் நோன்பு நோற்றி(ட எண்ணியி)ருந்தேன்" என்று கூறினார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான தல்ஹா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் இந்த ஹதீஸை முஜாஹித் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது அவர்கள், இ(வ்வாறு நோற்க எண்ணியிருந்த நோன்பை விட்டுவிடுவதான)து, ஒருவர் தமது செல்வத்திலிருந்து தர்மப் பொருளை எடுத்துவைப்பதைப் போன்றதுதான். அவர் நாடினால், (எடுத்து வைத்த) அதை வழங்கலாம்; நாடினால் தம்மிடமே அதை வைத்துக்கொள்ளலாம்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் என்னிடம் வந்து, "உங்களிடம் (உண்பதற்கு) ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். நாங்கள் "இல்லை" என்றோம். "அப்படியானால் நான் (இன்று) நோன்பாளியாக இருந்துகொள்கிறேன்" என்றார்கள். பிறகு மற்றொரு நாள் அவர்கள் எம்மிடம் வந்தபோது, "அல்லாஹ்வின் தூதரே! நமக்கு "ஹைஸ்" எனும் பலகாரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது" என்றோம். அதற்கு அவர்கள், "எனக்கு அதைக் காட்டு. நான் இன்று காலை நோன்பு நோற்றிருந்தேன்" என்று கூறிவிட்டு, அதை (வாங்கி)ச் சாப்பிட்டார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் நோன்பு நோற்றுக்கொண்டு மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் நோன்பைத் தொடரட்டும். அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் ரமளானைத் தவிர வேறெந்த குறிப்பிட்ட மாதத்திலாவது (மாதம் முழுக்க) நோன்பு நோற்றிருக்கிறார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் இறக்கும்வரை ரமளான் அல்லாத வேறெந்த குறிப்பிட்ட மாதத்திலும் (மாதம் முழுக்க) நோன்பு நோற்றதுமில்லை; ஒரு சில நாட்களாவது நோன்பு நோற்காமல் எந்த மாதத்தையும் (அடியோடு) விட்டதுமில்லை" என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ரமளானைத் தவிர வேறு மாதங்களில்) ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்றார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் ஒருமாதம் முழுவதும் நோன்பு நோற்றதில்லை. அவர்கள் இறக்கும்வரை எந்தவொரு மாதத்திலும் ஒரு சில நாட்களேனும் நோன்பு நோற்காமல் இருந்ததில்லை" என்று விடையளித்தார்கள். அத்தியாயம் :
இறைநம்பிக்கையார்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இனி) நோன்பை விடவே மாட்டார்களோ என்று நாங்கள் சொல்லுமளவிற்கு அவர்கள் நோன்பு நோற்றுக்கொண்டே இருப்பார்கள்; (இனி) அவர்கள் நோன்பே நோற்கமாட்டார்களோ என்று நாங்கள் சொல்லுமளவிற்கு அவர்கள் நோன்பு நோற்காமல் விட்டுவிடவும் செய்வார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் மாதம் முழுக்க நோன்பு நோற்றதை நான் கண்டதில்லை. ஷஅபானைத் தவிர வேறெந்த மாதத்திலும் அதிகமாக நோன்பு நோற்றதை நான் கண்டதில்லை. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓராண்டில் ஷஅபான் மாதத்தைவிட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. "நற்செயல்களில் உங்களால் இயன்றதையே செய்யுங்கள். நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்" என்று அவர்கள் கூறுவார்கள். மேலும், "குறைவாக இருந்தாலும் தொடர்ந்து ஒருவர் செய்துவரும் நற்செயலே அல்லாஹ்விற்கு மிக விருப்பமானதாகும்" என்றும் அவர்கள் கூறுவார்கள். அத்தியாயம் :
உஸ்மான் பின் ஹகீம் அல்அன்சாரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம் ரஜப் மாதத்தில் நோன்பு நோற்பது குறித்துக் கேட்டேன். (அப்போது நாங்கள் ரஜப் மாதத்தில் இருந்தோம்) அதற்கு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இனி விடாமல்) நோன்பு நோற்றுக்கொண்டே இருப்பார்களோ என்று நாங்கள் சொல்லுமளவிற்கு நோன்பு நோற்றுக்கொண்டே இருப்பார்கள். (இனி) நோன்பே நோற்கமாட்டார்களோ என்று நாங்கள் சொல்லுமளவிற்கு நோன்பு நோற்காமல் இருந்துவிடவும் செய்வார்கள்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் அப்துல்லாஹ் பின் யஸீத் (ரஹ்) அவர்களும் அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்களிடம் சென்றோம். அவர்களை அழைத்துவருமாறு ஆளனுப்பிவிட்டு, அவர்கள் எங்களிடம் வரும்வரை அவர்களது வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு பள்ளிவாசலில் நாங்கள் (காத்து) இருந்தோம். அவர்கள் எங்களிடம் வந்தபோது, "நீங்கள் நாடினால் (என் வீட்டுக்குள்) வரலாம்; நீங்கள் நாடினால் இங்கேயே அமரலாம்" என்றார்கள். நாங்கள், "இல்லை, இங்கேயே அமருகிறோம். எங்களுக்கு ஹதீஸ் அறிவியுங்கள்" என்றோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: என்னிடம் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: நான் பகலெல்லாம் நோன்பு நோற்று, ஒவ்வோர் இரவிலும் குர்ஆன் முழுவதையும் ஓதியும் வந்தேன். அப்போது "என்னைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் சொல்லப்பட்டது" அல்லது "(என்னை அழைத்து வருமாறு) அவர்கள் என்னிடம் ஆளனுப்பினார்கள்." நான் அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் என்னிடம், "நீர் (பகற்)காலமெல்லாம் நோன்பு நோற்று, ஒவ்வோர் இரவிலும் குர்ஆன் முழுவதையும் ஓதிவருவதாக எனக்குச் செய்தி வந்ததே (அது உண்மையா)?" என்று கேட்டார்கள். நான், "ஆம், அல்லாஹ்வின் தூதரே! இதன் மூலம் நான் நன்மையைத் தவிர வேறெதையும் நாடவில்லை" என்றேன். அவர்கள், "ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது உமக்குப் போதுமே!" என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னால் இதைவிடக் கூடுதலாகச் செய்ய முடியும்" என்றேன். அவர்கள், "உம் துணைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன. உம் விருந்தினருக்குச் செய்யவேண்டிய கடமைகள் உமக்கு உள்ளன. உமது உடலுக்குச் செய்யவேண்டிய கடமைகளும் உமக்கு உண்டு. எனவே, இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்களைப் போன்று நோன்பு நோற்பீராக! ஏனெனில், தாவூத் (அலை) அவர்கள் மக்களிடையே மாபெரும் வணக்கசாலியாக இருந்தார்கள்" என்று கூறினார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! தாவூத் (அலை) அவர்களின் நோன்பு என்ன?" என்று கேட்டேன். "ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விடுவதே அவர்களது நோன்பாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், "மாதத்திற்கு ஒரு தடவை குர்ஆனை ஓதி நிறைவு செய்வீராக!" என்று கூறினார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னால் இதைவிடக் கூடுதலாகச் செய்யமுடியும்" என்றேன். "அவ்வாறாயின் இருபது நாட்களுக்கு ஒரு தடவை குர்ஆனை ஓதி நிறைவு செய்வீராக!" என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னால் இதைவிடக் கூடுதலாகச் செய்ய முடியும்" என்றேன். "அப்படியானால், பத்து நாட்களுக்கு ஒரு தடவை குர்ஆனை ஓதி நிறைவு செய்வீராக!" என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னால் இதைவிடக் கூடுதலாகச் செய்யமுடியும்!" என்றேன். "அவ்வாறாயின் வாரத்துக்கு ஒரு தடவை குர்ஆனை ஓதி நிறைவு செய்வீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம். ஏனெனில், உம் துணைவிக்குச் செய்யவேண்டிய கடமைகள் உமக்கு உள்ளன;உம் விருந்தினருக்குச் செய்யவேண்டிய கடமைகளும் உமக்கு உள்ளன; உமது உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு உள்ளன" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால், நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக்கொண்டேன்; அதனால் என்மீது சிரமம் சுமத்தப்பட்டது. என்னிடம் நபி (ஸல்) அவர்கள், "உமக்குத் தெரியாது; உமது வயது நீளக்கூடும் (அப்போது தொடர்நோன்பும் தொடர்வழிபாடும் உம்மால் முடியாமல் போகலாம்)" என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் போன்று நான் ஆனேன். முதுமை அடைந்த பின், நபி (ஸல்) அவர்களின் சலுகையை நான் ஏற்றுக்கொண்டிருந்தால் நன்றாயிருந்திருக்குமே என்று நான் விரும்பினேன். (அந்த அளவிற்கு நான் பலவீனப்பட்டு விட்டேன்). அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஒவ்வொரு மாதமும் (ஒருமுறை) குர்ஆனை ஓதி நிறைவு செய்வீராக!" என்றார்கள். அப்போது நான், "(அதைவிடவும் குறைந்த நாட்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளது" என்று கூறினேன். "அப்படியானால் இருபது இரவுகளில் (ஒருமுறை) ஓதி நிறைவு செய்வீராக!" என்றார்கள். அப்போதும் நான், "(அதை டவும் குறைந்த நாட்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளது" என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியானால் ஏழு நாட்களில் (ஒருமுறை) ஓதி நிறைவு செய்வீராக! அதைவிட (ஓதுவதை) அதிகமாக்கிவிடாதீர்!" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் ஆண்டில் பாதி நாட்கள் நோன்பு நோற்பார்கள். வலிவும் மாண்புமிக்க அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத் (அலை) அவர்களின் தொழுகையாகும். அவர்கள் பாதி இரவுவரை உறங்குவார்கள். பிறகு எழுந்து வழிபட்டு விட்டுப் பின்னர் இரவின் இறுதிப் பகுதியில் உறங்குவார்கள். இரவின் பாதி நேரம் கழிந்த பின்னர் இரவின் மூன்றிலொரு பகுதி நேரம் வழிபடுவார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம் "அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்களா "தாவூத் (அலை) அவர்கள் இரவில் பாதி நேரம் கழிந்த பின் இரவின் மூன்றிலொரு பகுதி நேரம்வரை நின்று வழிபடுவார்கள்" என்று கூறுவார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள், "ஆம்" என்றார்கள். அத்தியாயம் :
அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபுல்மலீஹ் ஆமிர் பின் உசாமா (ரஹ்) அவர்கள் என்னிடம், "நான் உம்முடைய தந்தை (ஸைத் பின் அம்ர் -ரஹ்) அவர்களுடன் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள் என்றார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எனது நோன்பு குறித்துச் சொல்லப்பட்டது. எனவே, அவர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்காக நான் ஈச்ச நாரால் நிரப்பப்பட்டிருந்த தோல் தலையணை ஒன்றை எடுத்துவைத்தேன். அவர்கள் (அதில் அமராமல்) தரையில் அமர்ந்தார்கள். தலையணை எனக்கும் அவர்களுக்கும் இடையில் கிடந்தது. அப்போது அவர்கள் என்னிடம், "ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் (நோன்பு நோற்பது) உமக்குப் போதாதா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! (என்னால் இதைவிட அதிகமாக நோன்பு நோற்க இயலும்)" என்றேன். அவர்கள், "(மாதத்தில்) ஐந்து நாட்கள் (நோற்றுக்கொள்)" என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! (என்னால் இதைவிட அதிகமாக நோன்பு நோற்க இயலும்)" என்றேன். அவர்கள் "ஏழு நாட்கள் (நோற்றுக்கொள்)" என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே....!" என்றேன். அவர்கள், "ஒன்பது நாட்கள்..." என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே...! என்றேன். அவர்கள், "பதினோரு நாட்கள்..." என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! (என்னால் இதைவிட அதிகமாக நோன்பு நோற்க முடியும்)" என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "தாவூத் (அலை) அவர்களின் நோன்புக்கு மேல் (சிறப்பான) எந்த நோன்பும் கிடையாது. வருடத்தின் பாதி நாட்கள் (நோன்பு நோற்றலே அது). ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்றலாகும்" என்றார்கள். அத்தியாயம் :
அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு "அன்றுதான் நான் பிறந்தேன்; அதில்தான் எனக்குக் குர்ஆன் (முதன்முதலில்) அருளப்பெற்றது" என்று கூறினார்கள். அத்தியாயம் :
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், "நீர் இந்த (ஷஅபான்) மாதத்தின் இறுதியில் ஏதேனும் நோன்பு நோற்றீரா?" என்று கேட்டார்கள். அம்மனிதர், "இல்லை" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் ரமளான் நோன்பை முடித்ததும் அதற்குப் பகரமாக இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!" என்று கூறினார்கள். இதை முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "லைலத்துல் கத்ர்" இரவு தொடர்பாகக் கூறுகையில், "உங்களில் சிலர், (கனவில்) ரமளானின் முந்தைய ஏழு இரவுகளில் (ஒன்றில்) "லைலத்துல் கத்ர்" இரவு இருப்பதாகக் காட்டப்பெற்றனர்; உங்களில் வேறுசிலர் (கனவில்) ரமளானின் பிந்தைய ஏழு இரவுகளில் (ஒன்றில்) "லைலத்துல் கத்ர்" இரவு இருப்பதாகக் காட்டப்பெற்றனர். ஆகவே,நீங்கள் ரமளானின் பிந்தைய பத்தில் (ஒற்றைப்படையான இரவு ஒன்றில்) அதைத் தேடிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் அந்த (லைலத்துல் கத்ர்) இரவை (ரமளானின்) இறுதிப்பத்து இரவுகளில் (ஒன்றில்) தேடிக்கொள்ளுங்கள். உங்களில் ஒருவருக்குப் பலவீனம், அல்லது இயலாமை ஏற்பட்டால், எஞ்சிய (இறுதி) ஏழு இரவுகளில் (ஒன்றிலாவது அதைத் தேடும் முயற்சியில்) தளர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுவிட வேண்டாம். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அந்த (லைலத்துல் கத்ர்) இரவைத் தேடுபவர் ரமளானின் இறுதிப்பத்து இரவுகளில் (ஒன்றில்) தேடட்டும்! இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் (ரமளானின்) இறுதிப்பத்து இரவுகளில், அல்லது இறுதி ஒன்பது இரவுகளில் (ஒன்றில்) "லைலத்துல் கத்ர்" இரவைத் தேடிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (உறங்கிக் கொண்டிருந்தபோது கனவில்) "லைலத்துல் கத்ர்" இரவு எனக்குக் காட்டப்பெற்றது. பின்னர் என் வீட்டாரில் ஒருவர் என்னை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்தபோது, அதை நான் மறக்கவைக்கப்பட்டேன். ஆகவே, (ரமளானின்) இறுதிப்பத்து இரவுகளில் (ஒன்றில்) அதைத் தேடிக்கொள்ளுங்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹர்மலா பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "பின்னர் அதை நான் மறந்துவிட்டேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல் குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் நடுப்பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மேலும் ("அதே இடத்திலேயே தங்கி (இஃதிகாஃப்) இருக்கட்டும்" என்பதைக் குறிக்க "ஃபல்யபித் ஃபீ முஅத கிஃபிஹி" என்பதற்குப் பகரமாக) "ஃபல்யஸ்புத் ஃபீ முஅதகிஃபிஹி" எனும் வாசகம் இடம் பெற்றுள்ளது. (அவர்களது முகத்தில் ஈரமான களிமண் என்பதற்குப் பதிலாக) "அவர்களது நெற்றியில் ஈரமான களிமண்" என்று காணப்படுகிறது. அத்தியாயம் :
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நாங்கள் லைலத்துல் கத்ர் இரவு பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் என் நண்பராயிருந்தார்கள். அவர்களிடம், "நீங்கள் எங்களுடன் பேரீச்சந்தோப்புவரை புறப்பட்டுவரக் கூடாதா?" என்று கேட்டேன். உடனே புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் கறுப்புக் கம்பளியாடை அணிந்திருந்தார்கள். அவர்களிடம் "லைலத்துல் கத்ர் இரவு குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அவர்கள், "ஆம், நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ரமளான் மாதத்தின் நடுப்பத்து நாட்களில் "இஃதிகாஃப்" இருந்தோம். இருபதாவது நாள் காலையில் நாங்கள் (பள்ளிவாசலில் இருந்து) வெளியேறினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே உரையாற்றினார்கள்: எனக்கு லைலத்துல் கத்ர் இரவு (கனவில்) காட்டப் பெற்றது. ஆனால், அதை நான் மறந்துவிட்டேன். (அல்லது அதை மறக்கவைக்கப்பட்டேன்.) எனவே, ரமளானின் இறுதிப்பத்து நாட்களில் ஒற்றைப்படையான ஒவ்வோர் இரவிலும் அதை நீங்கள் தேடிக்கொள்ளுங்கள். நான் (அந்த இரவில்) தண்ணீரிலும் களிமண்ணிலும் சிரவணக்கம் (சஜ்தா) செய்வதைப் போன்று எனக்குக் காட்டப்பெற்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "இஃதிகாஃப்" இருந்தவர் மறுபடியும் (பள்ளிவாசலுக்கு) வரட்டும்!" என்றார்கள். நாங்கள் மீண்டும் சென்றோம். அப்போது வானில் மழை மேகத்தின் ஒரு துண்டைக்கூட நாங்கள் காணவில்லை. (திடீரென) ஒரு மேகம் (திரண்டு) வந்தது; எங்களுக்கு மழை பெய்தது. பள்ளிவாசலின் கூரையிலிருந்து மழை நீர் சொட்டியது. அப்போதைய கூரை பேரீச்ச மட்டையால் வேயப்பட்டிருந்தது. தொழுகைக்காக "இகாமத்" சொல்லப்பட்ட போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீரிலும் களிமண்ணிலும் சிரவணக்கம் (சஜ்தா) செய்ததை நான் கண்டேன். அவர்களது நெற்றியில் களிமண் படிந்திருந்ததைக் கண்டேன். - அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பிய போது அவர்களை நான் கண்டேன். அவர்களது நெற்றியிலும் மூக்கு நுனியிலும் களி மண்ணின் அடையாளம் இருந்தது" என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "லைலத்துல் கத்ர் (எந்த இரவு என்பது) பற்றி எனக்குக் கனவில் காட்டப்பெற்றது. பின்னர் அதை மறக்கவும் செய்யப்பட்டேன். அன்று காலை நான் தண்ணீரிலும் களிமண்ணிலும் சிரவணக்கம் (சஜ்தா) செய்வதைப் போன்று (கனவில்) கண்டேன்" என்று கூறினார்கள். இருபத்து மூன்றாவது நாள் இரவில் மழை பெய்தது. (அன்று காலையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (சுப்ஹுத் தொழுகை) தொழுவித்தார்கள். அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியபோது தண்ணீர் மற்றும் களிமண்ணின் அடையாளம் அவர்களது நெற்றியிலும் மூக்கிலும் படிந்திருந்தது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இதன் அறிவிப்பாளரான புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) அவர்கள் (இருபத்து மூன்றாவது நாள் இரவில் என்பதைக் குறிக்க) "ஸலாஸின் வ இஷ்ரீன்" எனும் சொற்றொடரையே பயன்படுத்தினார்கள். (சில அறிவிப்புகளில் உள்ளதைப் போன்று "ஸலாஸின் வ இஷ்ரூன்" என்று குறிப்பிடவில்லை.) அத்தியாயம் :
ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், "தங்கள் சகோதரர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் "வருடம் முழுவதும் (இரவில்) நின்று வழிபடுபவர் லைலத்துல் கத்ர் இரவை அடைந்துகொள்வார்" என்று கூறுகிறாரே?" என்று கேட்டேன். அதற்கு உபை (ரலி) அவர்கள், "இப்னு மஸ்ஊதுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! மக்கள் (மற்ற நாட்களில் வழி பாடுகளில் ஈடுபடாமல்) அசட்டு நம்பிக்கையோடு இருந்துவிடக்கூடாது என அவர்கள் கருதினார்கள் (போலும்)! லைலத்துல் கத்ர் இரவு ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் இருபத்தேழாவது இரவுதான் என்பதை இப்னு மஸ்ஊத் அறிந்தே உள்ளார்கள்" என்று பதிலளித்தார்கள். பிறகு "அல்லாஹ் நாடினால்" என்று கூறாமல் "அது (ரமளானின்) இருபத்தேழாவது இரவே ஆகும்" என்று சத்தியமிட்டுச் சொன்னார்கள். நான், "அபுல் முன்திரே! எதை வைத்து அவ்வாறு கூறுகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு உபை (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் "அன்றைய நாளில் (காலையில்) சூரியன் சுடரின்றி உதிக்கும்" என்று கூறினார்கள். அந்த அடையாளத்தின் மூலமே (அறிந்துகொண்டேன்)" என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் "லைலத்துல் கத்ர்" இரவு பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், "உணவுத் தட்டின் பாதித்துண்டைப் போன்று நிலா தோன்றும் இரவே (லைலத்துல் கத்ர்) ஆகும் என்பதை உங்களில் நினைவில் கொள்பவர் யார்?" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. பள்ளிவாசலில் தங்குதல் (இஃதிகாஃப்) அத்தியாயம் :