12 - ஸகாத் புத்தகம்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் வசூலிப்பதற்காக உமர் (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அப்போது "இப்னு ஜமீல்,காலித் பின் அல்வலீத் மற்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தை அப்பாஸ் (ரலி) ஆகியோர் (ஸகாத் வழங்க) மறுத்துவிட்டனர்" என்று கூறப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இப்னு ஜமீல் ஏழையாக இருந்து, அல்லாஹ் அவரைச் செல்வ(ந்த)ராக ஆக்கிய பிறகே அவர் (ஸகாத் வழங்க) மறுத்துள்ளார். காலிதைப் பொறுத்தவரை, நீங்கள் காலிதுக்கு அநீதி இழைக்கின்றீர்கள். அவரோ தம் கவசஉடைகளையும் போர்த்தளவாடங்களையும் அல்லாஹ்வின் பாதையில் (அறக்கொடையாக) வழங்க முடிவு செய்திருந்தார். அப்பாஸ் அவர்களைப் பொறுத்தவரையில் அவரது ஸகாத்தையும் அதைப்போன்ற இன்னொரு மடங்கையும் வழங்குவது என்மீது பொறுப்பாகும். உமரே! ஒருவருடைய தந்தையின் சகோதரர் அவருடைய தந்தையைப் போன்றவர் ஆவார் என்பது உமக்குத் தெரியாதா?" என்று கூறினார்கள். அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அடிமைகள், சுதந்திரமானவர்கள் ஆகியோரில் சிறியவர், பெரியவர் அனைவர்மீதும் பேரீச்சம் பழத்தில் ஒரு "ஸாஉ" அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையில் ஒரு "ஸாஉ" (ஏழைகளுக்கு வழங்குவது கடமையாகும்) என நோன்புப் பெருநாள் தர்மத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு "ஸாஉ" பேரீச்சம்பழத்தையோ அல்லது ஒரு "ஸாஉ" தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையையோ நோன்புப் பெருநாள் தர்மமாக வழங்கும்படி கட்டளையிட்டார்கள். மக்கள் ஒரு "ஸாஉ" தோல் நீக்கப்படாத கோதுமைக்குச் சமமாக இரண்டு "முத்"து (அரை "ஸாஉ") தோல் நீக்கப்பட்ட (மணிக்) கோதுமையை ஆக்கிக்கொண்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்த காலத்தில் சிறியவர், பெரியவர், சுதந்திரமானவர், அடிமை என அனைவருக்காகவும் நாங்கள் ஏதேனும் உணவிலிருந்து ஒரு ஸாஉ, அல்லது பாலாடைக் கட்டியிலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையிலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது பேரீச்சம் பழத்திலிருந்து ஒரு "ஸாஉ", அல்லது உலர்ந்த திராட்சையிலிருந்து ஒரு "ஸாஉ" நோன்புப் பெருநாள் தர்மமாக வழங்கிவந்தோம். முஆவியா பின் அபீ சுஃப்யான் (ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராவிற்காக எங்களிடம் வரும்வரையில் இவ்வாறே நாங்கள் வழங்கிவந்தோம். முஆவியா (ரலி) அவர்கள் (எங்களிடம் வந்ததும்) சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் மக்களுக்கு ஆற்றிய உரையில் "ஷாம் (சிரியா) பகுதியின் தோல் நீக்கப்பட்ட (மணிக்) கோதுமையில் இரு "முத்"துகள், பேரீச்சம் பழத்தின் ஒரு "ஸாஉ"க்கு நிகரானதாகும் என நான் கருதுகிறேன்" என்று குறிப்பிட்டார்கள். மக்கள் அதைப் பிடித்துக்கொண்டனர். நானோ (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) வழங்கியதைப் போன்றே நான் உயிர் வாழும்வரை வழங்கிக்கொண்டிருப்பேன். அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் பாலாடைக்கட்டி, பேரீச்சம் பழம், தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமை ஆகிய மூன்று இனங்களிலிருந்தே நோன்புப் பெருநாள் தர்மத்தை வழங்கிவந்தோம். அத்தியாயம் :
இயாள் பின் அப்தில்லாஹ் பின் அபீசர்ஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்கள் தோல் நீக்கப்பட்ட அரை "ஸாஉ" (மணிக்)கோதுமையை ஒரு ஸாஉ பேரீச்சம்பழத்திற்கு ஈடாக்கியபோது அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அதை ஆட்சேபித்தார்கள். "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் வழங்கி வந்ததைப் போன்று பேரீச்சம்பழத்தில் ஒரு "ஸாஉ", அல்லது உலர்ந்த திராட்சையில் ஒரு "ஸாஉ", அல்லது தோல் நீக்கப்படாத (வாற்)கோதுமையில் ஒரு "ஸாஉ", அல்லது பாலாடைக்கட்டியில் ஒரு "ஸாஉ"வைத் தவிர வேறெதையும் நோன்புப்பெருநாள் தர்மமாக வழங்கமாட்டேன்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமைகளைச் செய்யாமல் இருந்தால், மறுமை நாளில் அவை, முன்பு ஒருபோதும் இருந்திராத அளவிற்குக் கொழுத்த நிலையில் வரும். அவற்றுக்காக அவர் விசாலமான ஒரு மைதானத்தில் உட்காருவார். அந்த ஒட்டகங்கள் குதித்தோடி வந்து தம் கால்களால் அவரை மிதிக்கும். மாடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமைகளைச் செய்யாமல் இருந்தால், மறுமை நாளில் அவை ஏற்கெனவே இருந்ததைவிடப் பெருத்த நிலையில் அவரிடம் வரும். அவற்றுக்காக அவர் விசாலமான ஒரு மைதானத்தில் உட்காருவார். அந்த மாடுகள் வந்து அவரைக் கொம்புகளால் முட்டும்; கால்களால் மிதிக்கும். அவ்வாறே ஆடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையைச் செய்யாமலிருந்தால், அவை முன்பு இருந்ததைவிடப் பெரியவையாக மறுமை நாளில் வரும். அவற்றுக்காக அவர் விசாலமானதொரு மைதானத்தில் அமர்வார். அவை தம் கொம்புகளால் அவரை முட்டும்; கால்குளம்புகளால் மிதிக்கும். அந்த ஆடுகளில் கொம்பற்றவையோ கொம்பு முறிந்தவையோ இருக்காது. (பொன், வெள்ளி போன்ற) கருவூலச் செல்வங்களை உடையவர் அவற்றுக்கான கடமைகளைச் செய்யாமலிருந்தால், அவருடைய செல்வங்கள் மறுமைநாளில் கொடிய நஞ்சுடைய பெரிய பாம்பாக மாறி, தனது வாயைத் திறந்தநிலையில் அவரைப் பின்தொடரும். அவரிடம் அது வந்ததும் அவர் அங்கிருந்து வெருண்டோடுவார். அப்போது "நீ சேமித்துவைத்த உனது கருவூலத்தை நீயே எடுத்துக்கொள். அது எனக்கு வேண்டாம்" என்று அது அவரை அழைத்துக் கூறும். அதனிடமிருந்து தம்மால் தப்பமுடியாது என்று அவர் அறியும் போது, தமது கையை அதன் வாய்க்குள் நுழைப்பார். அது அவரது கையை ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிக்கும். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல் அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த ஹதீஸை உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றேன். பிறகு ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்டபோது, அவர்களும் உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதைப் போன்றே அறிவித்தார்கள். உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஒரு மனிதர் "அல்லாஹ்வின் தூதரே! ஒட்டகங்களுக்குரிய கடமை என்ன?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தண்ணீர் புகட்டும் நாளில் அவற்றில் பால் கறந்து ஏழைகளுக்கு வழங்குவதும், அவற்றின் வாளியை இரவலாக வழங்குவதும், பொலி ஒட்டகங்களை இரவல் தருவதும், அ(தன் பால், உரோமம் ஆகிய)வற்றைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அவற்றை அன்பளிப்பாக வழங்குவதும், அல்லாஹ்வின் பாதையில் அவற்றின் மீது சுமைகளை ஏற்றுவதும் ஆகும்" என்று கூறினார்கள்" என இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், "ஒட்டகம், மாடு, ஆடு ஆகிய கால்நடைகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் உட்காரவைக்கப்படுவார். அப்போது கால்குளம்புகள் உடையவை தம் கால்குளம்புகளால் அவரை மிதிக்கும்; கொம்புடையவை தமது கொம்பால் அவரை முட்டித் தள்ளும். அன்றைய தினம் அவற்றுக்கிடையே கொம்புகளற்றவையும் இருக்காது; கொம்புகள் முறிந்தவையும் இராது" என்று கூறினார்கள். நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவற்றுக்குரிய கடமைகள் என்ன?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள், "பொலி ஒட்டகங்களை இரவலாக வழங்குவதும், அவற்றின் வாளியை இரவலாகக் கொடுப்பதும், அவற்றிலிருந்து பால் கறந்துகொள்வதற்கு(ம் உரோமத்தை எடுத்துக்கொள்வதற்கும்) அனபளிப்பாக வழங்குவதும், தண்ணீர் புகட்டும் நாளில் அவற்றிலிருந்து பால் கறந்து ஏழைகளுக்கு அளிப்பதும், அல்லாஹ்வின் பாதையில் அவற்றின் மீது சுமைகளை ஏற்றுவதும் ஆகும்" என்று கூறினார்கள். மேலும், "(பொன், வெள்ளி, பணம் உள்ளிட்ட) செல்வங்களை உடையவர் அவற்றுக்குரிய ஸகாத்தை நிறைவேற்றாவிட்டால், மறுமை நாளில் அவை கொடிய நஞ்சுடைய பாம்பாக மாறி தம்மவரை எங்கு சென்றாலும் விடாமல் பின்தொடரும். அப்போது "இதுதான் நீ கருமித்தனம் செய்து (சேர்த்து)வந்த உனது செல்வம்" என்று கூறப்படும். அவர் அதனிடமிருந்து வெருண்டோடுவார். அதனிடமிருந்து தம்மால் தப்பமுடியாது என்று அவர் காணும் போது, தமது கரத்தை அவர் அதன் வாய்க்குள் வைப்பார். ஒட்டகம் கடிப்பதைப் போன்று அது அவரது கரத்தைக் கடிக்க ஆரம்பிக்கும். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உஹுத் மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்து, அதிலிருந்து ஒரேயொரு பொற்காசு என்னிடம் (எஞ்சி) இருந்தாலும் (அதை மக்கள் நலனுக்காகச் செலவிடாமல்) மூன்று இரவுகள்கூட கழிந்துசெல்வது எனக்கு மகிழ்ச்சியளிக்காது; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கும் பொற்காசைத் தவிர. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் இரவு நேரத்தில் நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவின் (பாறைகள் நிறைந்த) "ஹர்ரா"ப் பகுதியில் (எதிரிலிருந்த) உஹுத் மலையைப் பார்த்தவாறே நடந்துசென்று கொண்டிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூதர்ரே!" என்று என்னை அழைத்தார்கள். நான் "இதோ! காத்திருக்கிறேன்; கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். நபி (ஸல்) அவர்கள் "இந்த உஹுத் மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்து, அதிலிருந்து ஒரேயோரு பொற்காசு என்னிடம் (எஞ்சி) இருந்தாலும் அதை அல்லாஹ்வின் அடியார்களிடையே இப்படி இப்படி இப்படியெல்லாம் செலவிடாமல் மூன்று இரவுகள்கூட கழிந்து செல்வதை நான் விரும்பவில்லை. கடனை அடைப்பதற்காக நான் எடுத்துவைக்கும் பொற்காசைத் தவிர" என்று கூறி, வாரி இறைப்பதைப் போன்று தமது முன் பக்கமும் வலப் பக்கமும் இடப் பக்கமும் சைகை செய்தார்கள். பிறகு (சிறிது தூரம்) நாங்கள் நடந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் "அபூதர்ரே!" என்று (மீண்டும்) அழைத்தார்கள். நான் "இதோ! காத்திருக்கிறேன்; கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். நபி ஸல்) அவர்கள் "(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர்" என்று கூறிவிட்டு, முன்பு செய்ததைப் போன்றே செய்து, "இப்படி இப்படி இப்படி (நல்வழியில்) செலவு செய்தவர்கள் தவிர" என்று கூறினார்கள். பிறகு (இன்னும் சிறிது தூரம்) நாங்கள் சென்றதும் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் "அபூதர்! நான் வரும்வரை இங்கேயே இருங்கள்!" என்று கூறிவிட்டு (இருளுக்குள் நடந்து) என்னை விட்டும் மறைந்துவிட்டார்கள். அப்போது ஏதோ மர்மமான உரத்த சப்தம் ஒன்றை நான் கேட்டு "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏதோ ஏற்பட்டுவிட்டது போலும்" என்று கூறிக்கொண்டு, அவர்களைப் பின்தொடர எண்ணினேன். பிறகு என்னிடம் நபி (ஸல்) அவர்கள் "நான் வரும்வரை இங்கேயே இருங்கள்" என்று சொன்னது என் நினைவுக்கு வந்தது. ஆதலால், அவர்கள் என்னிடம் வரும்வரை அவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அவர்கள் வந்ததும் நான் கேட்ட சப்தத்தைப் பற்றி அவர்களிடம் எடுத்துச் சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் "அது (வானவர்) ஜிப்ரீல்தாம். அவர் என்னிடம் வந்து "உங்கள் சமுதாயத்தாரில் யார் (ஏக இறைவனாம்) அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல் (வாழ்ந்து) இறந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கம் செல்வார்" என்றார். நான் (ஜிப்ரீலிடம்) "அவர் விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலுமா (சொர்க்கம் புகுவார்)?" என்று கேட்டேன். அவர் "(ஆம்) விபச்சாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே (இறுதியில் அவர் சொர்க்கம் செல்வார்)" என்று பதிலளித்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஓர் இரவு நேரத்தில் வெளியில் புறப்பட்டுச் சென்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்தார்கள்; அவர்களுடன் எந்த மனிதரும் இருக்க வில்லை. அவர்கள் தம்முடன் யாரும் வருவதை விரும்பவில்லை என்று நான் எண்ணிக் கொண்டேன். நிலா வெளிச்சம்படாத இடத்தில் நான் (அவர்களுக்குப் பின்னால்) நடக்கலானேன். அவர்கள் திரும்பி என்னைப் பார்த்துவிட்டு, "யார் இது?" என்று கேட்டார்கள். "(நான்) அபூதர், அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்" என்று பதிலளித்தேன். அவர்கள் "அபூதர்ரே, இங்கே வாருங்கள்" என்று அழைத்தார்கள். நான் அவர்களுடன் சிறிது நேரம் நடந்தேன். அப்போது அவர்கள், "(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர் ஆவர். அல்லாஹ் தந்த நல்லதை (செல்வத்தை) அள்ளித் தமது வலப்பக்கமும் இடப்பக்கமும் முன்பக்கமும் பின்பக்கமும் வாரி இறைத்து, நன்மை புரிந்தவரைத் தவிர" என்று கூறினார்கள். பிறகு இன்னும் சிறிது நேரம் நான் அவர்களுடன் நடந்தேன். அப்போது அவர்கள் "இந்த இடத்திலேயே அமர்ந்திருங்கள்" என்று கூறினார்கள். பாறைகள் சூழ்ந்த ஒரு வெட்டவெளியில் "நான் திரும்பி வரும்வரையில் இந்த இடத்திலேயே அமர்ந்திருங்கள்" என்று கூறி என்னை உட்கார வைத்தார்கள். பின்னர் (பாறைகள் நிறைந்த அந்த) "ஹர்ரா"ப் பகுதியில் நடந்து சென்றார்கள். அவர்களை நான் பார்க்க முடியாத இடத்திற்குச் சென்று நீண்ட நேரம் இருந்துவிட்டு, என்னை நோக்கி வந்தார்கள். அப்போது "அவன் திருடினாலும் விபச்சாரம் புரிந்தாலும் சரியே!" என்று கூறிக்கொண்டிருந்ததை நான் செவியுற்றேன். அவர்கள் (என் அருகில்) வந்ததும் என்னால் பொறுமையுடன் இருக்க முடியாமல், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்! "ஹர்ரா"ப் பகுதியில் தாங்கள் யாருடன் பேசிக்கொண்டிருந்தீர்கள்? யாரும் தங்களுக்கு எந்த பதிலும் அளிப்பதை நான் செவியுறவில்லையே?" என்று கேட்டேன். அதற்கு "அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். அவர் ஹர்ராப் பகுதியில் என்னிடம் வந்து "யார் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் எனும் நற்செய்தியை உங்கள் சமுதாயத்தாரிடம் கூறி விடுங்கள்" என்றார். உடனே நான் "ஜிப்ரீலே! அவர் திருடினாலும் விபச்சாரம் புரிந்தாலுமா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "ஆம்" என்று பதிலளித்தார். நான் "அவர் திருடினாலும் விபச்சாரம் புரிந்தாலுமா?" என்று (மீண்டும்) கேட்டேன். அவர் "ஆம்" என்றார். நான் "அவர் திருடினாலும் விபச்சாரம் புரிந்தாலுமா?" என்று (மீண்டும்) கேட்டேன். அவர் "ஆம்;அவர் மது அருந்தினாலும் சரியே!" என்று கூறினார் என்றார்கள். அத்தியாயம் :
அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் மதீனாவிற்குச் சென்றேன். அங்கு ஓர் அவையில் பங்கேற்றேன். அந்த அவையில் குறைஷிப் பிரமுகர்களும் இருந்தனர். அப்போது மிகவும் சொரசொரப்பான ஆடையும் முரட்டுத்தனமான தோற்றமும் முகமும் கொண்ட ஒரு மனிதர் (அங்கு) வந்து அவர்கள் முன் நின்று, "(ஸகாத் வழங்காமல்) செல்வத்தைக் குவித்து வைத்திருப்போருக்கு "நற்செய்தி" கூறுக: நரக நெருப்பில் சூடாக்கப்பட்ட ஒரு கல் அவருக்கு உண்டு. அந்தக் கல் அவர்களில் ஒருவரது மார்புக் காம்பின் மேல் வைக்கப்படும். உடனே அது அவரது தோளின் மேற்பகுதி எலும்பின் வழியாக வெளியேறும். பிறகு அந்தக் கல் அவரது தோளின் மேற்பகுதியில் வைக்கப்படும். உடனே அது மார்புக்காம்பின் வழியாக ஊடுருவி வெளியேறும்" என்று கூறினார். (இதைக் கேட்டவுடன்) மக்கள் தங்கள் தலைகளைத் தாழ்த்திக்கொண்டனர். அவர்களில் ஒருவர்கூட அவருக்கு எந்தப் பதிலும் அளித்ததை நான் பார்க்கவில்லை. பிறகு அந்த மனிதர் திரும்பிச்சென்றார். அவரைப் பின்தொடர்ந்து நான் சென்றேன். அவர் ஒரு தூணுக்கு அருகில் போய் உட்கார்ந்தார். அப்போது அவரிடம் நான், "தாங்கள் கூறியதைக் கேட்டு இம்மக்கள் வெறுப்படைந்ததையே நான் கண்டேன்" என்றேன். அதற்கு அவர், "இவர்கள் விவரமற்ற மக்கள். என் உற்ற தோழர் அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னை அழைத்தார்கள். நான் அவர்களது அழைப்பிற்குப் பதிலளித்தேன். அப்போது அவர்கள் "உஹுத் மலையை நீர் பார்க்கிறீரா?" என்று கேட்டார்கள். தமது தேவை ஒன்றுக்காக அவர்கள் என்னை அங்கு அனுப்பப்போகிறார்கள் என எண்ணியவாறு (நேரத்தை அறிந்துகொள்ள) எனக்கு மேலே உள்ள சூரியனைப் பார்த்து விட்டு, "(ஆம்; உஹுத் மலையைப்) பார்க்கிறேன்" என்றேன். அப்போது "இந்த (உஹுத் மலை) அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும், அதில் அனைத்தையும் ஈந்து மகிழவே நான் விரும்புவேன். (அதில் எதையும் சேகரித்து வைக்கமாட்டேன். என் கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கும்) மூன்று பொற்காசுகளைத் தவிர" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால், இந்த மக்களோ எதையுமே அறியாதவர்களாய் உலக ஆதாயங்களைச் சேகரித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினார். நான், "உங்களுக்கும் உங்களுடைய குறைஷி சகோதர்களுக்கும் என்ன ஆயிற்று? நீங்கள் அவர்களை அணுகி அவர்களிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்வதில்லையே?" என்று கேட்டேன். அதற்கு அவர், "உம்முடைய இறைவன் மீதாணையாக! நான் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் சந்திக்கும்வரை இவர்களிடம் இவ்வுலகப் பொருட்கள் எதையும் கேட்கமாட்டேன்; மார்க்க விஷயங்களைப் பற்றிய எந்தத் தீர்ப்பையும் கோரவுமாட்டேன்" என்று கூறினார். அத்தியாயம் :
அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் குறைஷிக் குலத்தார் சிலருடன் (ஓர் அவையில்) இருந்தேன். அப்போது அவ்வழியாகச் சென்ற அபூதர் (ரலி) அவர்கள் "(ஸகாத் கொடுக்காமல்) செல்வத்தைக் குவித்து வைப்பவர்களுக்கு (பழுக்கக் காய்ச்சப்பட்ட கம்பியால்) அவர்களது முதுகில் சூடு போடப்படும். அது அவர்களது விலாவிலிருந்து வெளியேறும். அவர்களது பிடரிப் பகுதியில் ஒரு சூடு போடப்படும். அது அவர்களின் நெற்றியிலிருந்து வெளியேறும் என நற்செய்தி கூறுங்கள்" என்று கூறிவிட்டு, அங்கிருந்து விலகிப்போய் (ஓரிடத்தில்) அமர்ந்தார்கள். நான் "இவர் யார்?" என்று கேட்டேன். மக்கள் "இவர்தாம் அபூதர் (ரலி)" என்று கூறினார்கள். உடனே நான் எழுந்து அவர்களிடம் சென்று, "சற்று முன்பாகத் தாங்கள் ஏதோ கூறிக் கொண்டிருந்தீர்களே அது என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "அவர்களுடைய நபி (முஹம்மத்-ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒரு செய்தியையே நான் கூறினேன்" என்றார்கள். நான், "(தலைவர்கள் முஸ்லிம்களுக்கு வழங்கும்) இந்த நன்கொடை தொடர்பாகத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அபூதர் (ரலி) அவர்கள், "அதை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், இன்று அது உங்களுக்கு உதவியாக இருக்கும். அது உங்களது மார்க்கத்திற்கான கூலியாக இருக்குமாயின், அதை விட்டுவிடுங்கள் (பெற்றுக்கொள்ளாதீர்கள்)" என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ், "ஆதமின் மகனே (மனிதா)! நீ (பிறருக்கு) ஈந்திடு. உனக்கு நான் ஈவேன்" என்று சொன்னான். மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் வலக்கரம் நிரம்பியுள்ளது; இரவிலும் பகலிலும் அது வாரி வழங்குகிறது. அதை எதுவும் குறைத்துவிடாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின் வரும் ஹதீஸும் ஒன்றாகும்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் அல்லாஹ், "நீர் (பிறருக்கு ஈந்திடுக. நான் உமக்கு ஈவேன்" என்று சொன்னான். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் வலக்கரம் நிரம்பியுள்ளது. அது இரவிலும் பகலிலும் வாரி வழங்கிக் கொண்டேயிருக்கிறது. எதுவும் அதைக் குறைத்துவிடவில்லை. வானத்தையும் பூமியையும் அவன் படைத்தது முதல் வழங்கியது எதுவும் அவனது வலக்கரத்திலுள்ள (செல்வத்)தை குறைத்துவிடவில்லை பார்த்தீர்களா? (வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு முன்னர்) அவனது அரியாசனம் நீரின் மீ(து அமைந்)திருந்தது. அவனது மற்றொரு கரத்தில் மரணம் (உள்ளிட்ட தலைவிதியின் தராசு) உள்ளது. அவனே உயர்த்துகிறான்; தாழ்த்துகிறான். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவிட்ட ஒரு பொற்காசு, நீங்கள் ஓர் அடிமை(யின் விடுதலை)க்காகச் செலவிட்ட ஒரு பொற்காசு, நீங்கள் ஓர் ஏழைக்குத் தர்மம் செய்த ஒரு பொற்காசு, நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்காகச் செலவிட்ட ஒரு பொற்காசு - இவற்றில் நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்காகச் செலவிட்ட ஒரு பொற்காசே அதிக நற்பலனை உடையதாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: "பனூ உத்ரா" குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர், தாம் இறந்த பிறகு தம்முடைய அடிமை ஒருவர் விடுதலையாகிக் கொள்ளட்டும் என்று (பின்விடுதலை) அறிவித்திருந்தார். இந்த விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (அவரிடம்), "அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவும் உம்மிடம் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். அவர் "இல்லை" என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த அடிமையைக் காட்டி), "இவரை என்னிடமிருந்து வாங்கிக்கொள்பவர் யார்?" என்று கேட்டார்கள். நுஐம் பின் அப்தில்லாஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் அவ்வடிமையை எண்ணூறு வெள்ளிக்காசுகளுக்கு வாங்கிக்கொண்டார்கள். நுஐம் (ரலி) அவர்கள் அந்தக் காசுகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவர, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த அடிமையின் உரிமையாளரிடம் அவற்றைக் கொடுத்து, "உமது தர்மத்தை முதலில் உம்மிடமிருந்து தொடங்குவீராக! பிறகு உமது தேவைபோக ஏதேனும் எஞ்சினால், அது உம்முடைய குடும்பத்தாருக்கு உரியதாகும்! உன் வீட்டாருக்கு வழங்கியது போக ஏதேனும் எஞ்சினால், அது உம் உறவினர்களுக்கு உரியதாகும். உம் உறவினர்களுக்கு வழங்கியது போக ஏதேனும் எஞ்சினால், அது இவ்வாறு இவ்வாறு உமக்கு முன் பக்கமும் வலப்பக்கமும் இடப்பக்கமும் (அறவழிகளின் அனைத்து முனைகளிலும் செலவு செய்வீராக!)" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "அன்சாரிகளில் "அபூமத்கூர்" என்று சொல்லப்படும் ஒரு மனிதர் "யஅகூப்" எனப்படும் தம் அடிமை, தமது இறப்புக்குப் பிறகு விடுதலை பெற்றவராவார் என (பின்விடுதலை) அறிவித்திருந்தார்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனா அன்சாரிகளிலேயே அபூதல்ஹா (ஸைத் பின் சஹ்ல்-ரலி) அவர்கள் பெரும் செல்வராக இருந்தார். அவருடைய செல்வங்களில் "பைரஹா" எனும் தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குச் சென்று அங்குள்ள நல்ல (சுவை) நீரை அருந்துவது வழக்கம். "நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாதவரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்" எனும் இந்த (3:92ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, அபூதல்ஹா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுந்துசென்று, "அல்லாஹ் தனது வேதத்தில் "நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாதவரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான) பலனை அடையமாட்டீர்கள்" எனக் கூறுகின்றான். என் செல்வங்களில் எனக்கு மிகவும் விருப்பமானது "பைரஹா" (எனும் இந்தத் தோட்டமே) ஆகும். (இனி) அது அல்லாஹ்வுக்காக (நான் வழங்கும்) தர்மமாகும். அதற்கான நன்மையையும் அது (மறுமையில் எனக்குரிய) சேமிப்பாக இருப்பதையும் நான் அல்லாஹ்விடம் எதிர்பார்க்கிறேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் விரும்பிய வழியில் அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்" என்று சொன்னார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நல்லது. அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே! அது (மறுமையில்) இலாபம் தரும் செல்வம்தானே! நீங்கள் அது தொடர்பாகக் கூறியதை நான் செவியுற்றேன். அதை உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே (தானமாக) வழங்குவதையே நான் (உசிதமாகக்) கருதுகிறேன்" என்று சொன்னார்கள்.எனவே, அதை அபூதல்ஹா (ரலி) அவர்கள் தம் நெருங்கிய உறவினர்களுக்கும், தம் தந்தையின் சகோதரர் மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்து விட்டார்கள். அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: "நீங்கள் விரும்புகின்றவற்றிலிருந்து தானம் செய்யாதவரை ஒருபோதும் நீங்கள் (நிறைவான)பலனை அடையமாட்டீர்கள்"எனும் இந்த (3:92ஆவது) வசனம் அருளப்பெற்றதும் அபூதல்ஹா (ரலி) அவர்கள், "நம் இறைவன் நம் செல்வங்களிலிருந்து சிலவற்றை நம்மிடம் (தர்மம் செய்யுமாறு) கோருவதாகவே நான் கருதுகின்றேன். ஆகவே, நான் எனது "பரீஹா" (பைரஹா) எனும் நிலத்தை அல்லாஹ்வுக்காக வழங்கிவிட்டேன். இதற்குத் தங்களையே சாட்சியாக ஆக்குகிறேன், அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதை உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே (தானமாக) வழங்குவீராக!" என்று கூறினார்கள். அவ்வாறே அபூதல்ஹா (ரலி) அவர்கள் அதை (தம் உறவினர்களான) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி), உபை பின் கஅப் (ரலி) ஆகியோருக்கு (தானமாக) வழங்கிவிட்டார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் துணைவியார் ஸைனப் பின்த் முஆவியா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பெண்களே! உங்கள் நகைகளிலிருந்தாவது தர்மம் செய்யுங்கள்!" என்று கூறினார்கள். நான் (என் கணவர்) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்று "நீங்களே கையில் காசில்லாதவர்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெண்களாகிய) எங்களைத் தர்மம் செய்யுமாறு பணித்தார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (வறுமையில் வாழும் உங்களுக்கே அதை நான் வழங்கலாமா எனக்) கேளுங்கள். அதுவே எனக்குப் போதுமாகும் என்றால் (நான் உங்களுக்கே வழங்கிவிடுவேன்). இல்லை (கணவனுக்கு மனைவி வழங்குவது தர்மமாகக் கருதப்படாது) என்றால், அதை நான் பிறருக்குக் கொடுத்துவிடுவேன்" என்று கூறினேன். அப்போது (என் கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் என்னிடம் "இல்லை, நீயே அவர்களிடம் செல்" என்று கூறிவிட்டார்கள். எனவே, நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வீட்டுவாசலில் (ஏற்கெனவே) ஓர் அன்சாரிப்பெண்ணும் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது (எங்களுக்கு) மதிப்பு கலந்த அச்சம் இருந்தது. (எனவே, வெளியிலேயே நின்றுகொண்டிருந்தோம்.) பின்னர் பிலால் (ரலி) அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்தபோது அவரிடம் நாங்கள், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, இரு பெண்கள் வீட்டுவாசலில் நின்றுகொண்டு, தம் கணவன்மார்களுக்கும் தமது மடியில் வளரும் (தந்தையற்ற) அநாதைக் குழந்தைகளுக்கும் தம்மீது கடமையான தர்மத்தை வழங்கலாமா என வினவுகிறார்கள் என்று கேளுங்கள். ஆனால், நாங்கள் யார் என்று அவர்களிடம் சொல்லவேண்டாம்" என்று கூறினோம். பிலால் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவ்வாறே கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவ்விருவரும் யார்?" என்று பிலாலிடம் கேட்டார்கள். அதற்கு "ஓர் அன்சாரிப் பெண்ணும் ஸைனபும்" என்று பிலால் பதிலளித்தார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "எந்த ஸைனப்?" என்று கேட்டார்கள். "அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடைய துணைவியார்"" என்று பிலால் பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்விருவருக்கும் இரு நன்மைகள் உண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது" என்று கூறினார்கள். அத்தியாயம் :
(அன்னை) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! (என் முதல் கணவரான) அபூ சலமாவின் பிள்ளைகளுக்குச் செலவழிப்பதால் (தர்மம் செய்த) நன்மை எனக்கு உண்டா? அவர்களை நான் இன்னின்னவாறு (பிறரிடம் கையேந்தும் நிலையில்) விட்டுவிடமாட்டேன். அவர்களும் என் பிள்ளைகளே" எனக் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம். அவர்களுக்காக நீ செலவிட்ட(டால் அ)தற்கான நன்மை உனக்கு உண்டு" என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவிக்காமல் திடீரென இறந்துவிட்டார். அவர் (மட்டும் இறுதி நேரத்தில்) பேசியிருந்தால் தர்மம் செய்யுமாறு அறிவுறுத்தியிருப்பார் என்று நான் எண்ணுகிறேன். இந்நிலையில் அவருக்காக நான் தர்மம் செய்தால் அவருக்கு நன்மை கிட்டுமா?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம்" என்றார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் அபூஉசாமா (ஹம்மாத் பின் உசாமா பின் ஸைத்-ரஹ்) அவர்களது அறிவிப்பிலேயே "அவர் இறுதிவிருப்பம் (வஸிய்யத்) தெரிவிக்காமல்" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது. மற்றவர்களது அறிவிப்பில் இக்குறிப்பு இல்லை. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எல்லா நல்லறமும் தர்மமே. இதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபித்தோழர்களில் (ஏழைகளான) சிலர் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! வசதிபடைத்தோர் நன்மைகளை (தட்டி)க் கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர்; நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர்; (ஆனால், அவர்கள்) தங்களது அதிகப்படியான செல்வங்களைத் தானதர்மம் செய்கின்றனர். (அவ்வாறு தானதர்மங்கள் செய்ய எங்களிடம் வசதி இல்லையே!)" என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்களும் தர்மம் செய்வதற்கான (முகாந்தரத்)தை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லையா? இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும்; இறைவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமாகும்; ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும்; ஒவ்வொரு "ஓரிறை உறுதிமொழி"யும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; நல்லதை ஏவுதலும் தர்மமே; தீமையைத் தடுத்தலும் தர்மமே;உங்களில் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப் பயன்படுத்துகின்ற விதத்தி)லும் தர்மம் உண்டு" என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தம் துணைவியிடம்) இச்சைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும் நன்மை கிடைக்குமா?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(நீங்களே) சொல்லுங்கள்: தடைசெய்யப்பட்ட வழியில் அவர் தமது இச்சையைத் தீர்த்துக்கொண்டால் அவருக்குக் குற்றம் உண்டல்லவா! அவ்வாறே அனுமதிக்கப்பட்ட வழியில் அவர் தமது இச்சையை நிறைவேற்றிக்கொள்ளும்போது அதற்காக அவருக்கு நன்மை கிடைக்கவே செய்யும்" என்று விடையளித்தார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு விஷயம் (சொல்கிறேன்:) ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப்பட்டுள்ளார்கள். எனவே, யார் அந்த முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளின் எண்ணிக்கை அளவிற்கு அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி (தக்பீர்), அல்லாஹ்வைப் புகழ்ந்து (தஹ்மீத்), அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று (ஏகத்துவ உறுதி) கூறி, அல்லாஹ்வைத் துதித்து (தஸ்பீஹ்), அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி (இஸ்திஃக்ஃபார்), மக்களின் நடைபாதையில் (இடையூறாகக்) கிடந்த ஒரு கல்லையோ அல்லது முள்ளையோ அல்லது எலும்பையோ அகற்றி, நல்லதை ஏவி, அல்லது தீமையைத் தடுத்(து நல்லறங்கள் புரிந்)தாரோ அவர் அன்றைய தினத்தில் தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திவிட்ட நிலையிலேயே நடமாடுகிறார். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூதவ்பா அர்ரபீஉ பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் சில நேரங்களில் ("அவர் நடமாடுகிறார்" என்பதற்கு பதிலாக) "அவர் மாலைப் பொழுதை அடைகிறார்" என்று அறிவித்துள்ளார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் ("நல்லதை ஏவி" என்பதுடன் "அல்லது" என்பதைச் சேர்த்து) "அல்லது நல்லதை ஏவி" என்றும், "அவர் மாலைப் பொழுதை அடைகிறார்" என்றும் இடம்பெற்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "ஒவ்வொரு மனிதனும் (முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன்) படைக்கப் பட்டுள்ளான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது. இந்த அறிவிப்பில் "அன்றைய தினத்தில் (தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திவிட்ட நிலையிலேயே) அவர் நடமாடுகிறார்" என்றே இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் "தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்" என்று கூறினார்கள். அப்போது "(தர்மம்செய்ய ஏதும்) அவருக்குக் கிடைக்கவில்லையானால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "அவர் தம் கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; பிறருக்கும் தர்மம் செய்வார்" என்று சொன்னார்கள். "அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால் (என்ன செய்வார்), சொல்லுங்கள்?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் "பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்" என்றார்கள். "(இதற்கும் அவர்) சக்தி பெறாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் "அவர் "நல்லதை" அல்லது "நற்செயலை"(ச் செய்யும்படி பிறரை) ஏவட்டும்" என்றார்கள். "(இயலாமையால் இதையும்) அவர் செய்யாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?" என்று கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், "அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே தர்மம்தான்" என்றார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்த ஹதீஸ்களாகும். பின்வரும் ஹதீஸும் அவற்றில் ஒன்றாகும்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்கள் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தம்முடைய ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தமது வாகனத்தின் மீது ஏறி அமர உதவுவதும் அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றிவிடுவதும் தர்மமாகும். இன்சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு நாளும் அடியார்கள் காலை நேரத்தை அடையும்போது இரு வானவர்கள் (வானத்திலிருந்து) இறங்குகின்றனர். அவர்களில் ஒருவர், "இறைவா! (நல்வழியில்) செலவு செய்பவருக்குப் பிரதிபலனை அளிப்பாயாக!" என்று கூறுவார். மற்றொருவர், "இறைவா! (கடமையானவற்றில்கூடச்) செலவு செய்ய மறுப்பவருக்கு இழப்பைக் கொடுப்பாயாக!" என்று கூறுவார்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இப்போதே) தானதர்மம் செய்துகொள்ளுங்கள். ஏனெனில், மக்களுக்கு ஒரு காலம் வரப் போகிறது; அப்போது ஒருவர் தமது தர்மப் பொருளை எடுத்துக்கொண்டு (அதைப் பெறுபவர் யாரேனும் கிடைப்பாரா என) அலைவார். ஆனால், அதை ஏற்பவர் எவரையும் காண மாட்டார். அந்தப் பொருள் வழங்கப்படுகின்ற ஒருவன் "நேற்றே இதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் ஏற்றுக்கொண்டிருப்பேன்; இன்றோ இது எனக்குத் தேவையில்லை" என்று கூறிவிடுவான். இதை ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது ஒருவர் தங்கத்தை எடுத்துக்கொண்டு தர்மம் செய்வதற்காக அலைவார். ஆனால், அதைப் பெற்றுக்கொள்ளக்கூடிய எவரையும் அவர் காணமாட்டார். மேலும், (அப்போது போர்கள் மிகுந்து) ஆண்கள் குறைந்து, பெண்கள் அதிகரித்துவிடுவதால் ஓர் ஆணை நாற்பது பெண்கள் பின்தொடர்ந்துவந்து, அவனைச் சார்ந்திருக்கும் நிலை காணப்படும். இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துல்லாஹ் பின் பர்ராத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஓர் ஆணை (இந்த நிலையில்) நீங்கள் காண்பீர்கள்" என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காதவரை யுகமுடிவு நாள் ஏற்படாது. எந்த அளவிற்கு (செல்வம் பெருகும்) எனில்,அந்நாளில் பொருளின் உரிமையாளருக்கு, அவரிடமிருந்து தர்மத்தைப் பெற்றுக்கொள்பவர் குறித்த கவலை ஏற்படும். தர்மத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு ஒருவர் அழைக்கப்படுவார். ஆனால், அவரோ "இது எனக்குத் தேவையில்லை" என்று கூறிவிடுவார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பூமி தனது வயிற்றிலுள்ள புதையல்களான தங்கக் கட்டி, வெள்ளிக் கட்டி ஆகியவற்றைத் தூண்களைப் போன்று வாந்தியெடுக்கும். அப்போது கொலை செய்தவன் வந்து, "இதற்காகவே நான் கொலை செய்தேன்" என்று கூறுவான். உறவுகளை அரவணைக்காதவன் வந்து, "இதற்காகவே நான் என் இரத்த உறவுகளைத் துண்டித்தேன்" என்று கூறுவான். திருடன் வந்து, "இதற்காகவே எனது கரம் துண்டிக்கப்பட்டது" என்று கூறுவான். பிறகு அதை (அப்படியே) விட்டுவிடுவார்கள்; அதிலிருந்து எதையும் எடுக்கமாட்டார்கள் (அந்த அளவிற்கு அவர்கள் ஏற்கெனவே வசதியுடனிருப்பார்கள்). இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தூய்மையானதை மட்டுமே ஏற்பான். யார் தூய்மையான சம்பாத்தியத்திலிருந்து தர்மம் செய்கிறாரோ அதை அளவற்ற அருளாள(னான இறைவ)ன் தனது வலக்கரத்தால் வாங்கிக்கொள்கிறான். அது ஒரு பேரீச்சங்கனியாக இருந்தாலும் சரியே! அது அந்த அருளாளனின் கையில் வளர்ச்சி அடைந்து மலையைவிடப் பெரியதாகிவிடுகின்றது. உங்களில் ஒருவர் "தமது குதிரைக் குட்டியை" அல்லது "தமது ஒட்டகக் குட்டியை" வளர்ப்பதைப் போன்று.-இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த "கம்பளி ஆடை" அல்லது "நீளங்கி" அணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்கவிட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் "முளர்"குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே "முளர்" குலத்தைச் சேர்ந்தவர்கள்தாம். அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது "மக்களே! உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்த உங்கள் இறைவனை பயந்துகொள்ளுங்கள்" எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும், "அல்ஹஷ்ர்" அத்தியாயத்திலுள்ள "நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ஒவ்வொரு ஆன்மாவும் நாளைக்கென்று எதனை அனுப்பியுள்ளது என்பதை கவனத்திற்கொள்ளட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்" எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக்காட்டி (முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள். அப்போது "(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக்காசு, துணி, ஒரு "ஸாஉ" கோதுமை, ஒரு "ஸாஉ" பேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்" என்று கூறி, "பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்" என்று வலியுறுத்தினார்கள். உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக்காசுகளிலிருந்தும் ஆடைகளிலிருந்தும் ஒரு "ஸாஉ" கோதுமையிலிருந்தும் ஒரு "ஸாஉ" பேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டுவந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது;ஏன் தூக்கவே முடியவில்லை. பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்துகொண்டிருந்தனர். இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக் கொண்டிருப்பதையும் நான் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே,யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டு" என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றிலும் "(ஒரு நாள்) முற்பகல் நேரத்தில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம்"என்றே ஹதீஸ் தொடங்குகிறது. உபைதுல்லாஹ் பின் முஆத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகை தொழுவித்துவிட்டுப் பிறகு உரை நிகழ்த்தினார்கள்" என்று சற்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: தானதர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, நாங்கள் (சுமைதூக்கி) கூலி வேலை செய்யலானோம். அபூ அகீல் (ஹப்ஹாப்-ரலி) அவர்கள் (கூலி வேலை செய்து) அரை "ஸாஉ" பேரீச்சம் பழம் (கொண்டு வந்து) தர்மம் செய்தார். மற்றொரு மனிதர் அதைவிடச் சிறிது அதிகமாகக் கொண்டுவந்(து தர்மம் செய்)தார். இதைக் கண்ட நயவஞ்சகர்கள், (அரை "ஸாஉ" கொண்டுவந்த) இவரது தர்மமெல்லாம் அல்லாஹ்விற்குத் தேவையில்லை; (அதைவிட அதிகமாகக் கொண்டுவந்த) இந்த மற்றொரு மனிதர் பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காகவே (தர்மம்) செய்தார்" என்று (குறை) சொன்னார்கள். அப்போதுதான் "(நயவஞ்சகர்களான) அவர்கள் எத்தகையவர்கள் என்றால், இறை நம்பிக்கையாளர்களில் மனமுவந்து வாரி வழங்குவோரின் தானதர்மங்களைப் பற்றியும் குறை பேசுகின்றார்கள். (இறைவழியில் ஈவதற்காகச்) சிரமப்பட்டு சம்பாதித்ததைத் தவிர வேறெதுவும் இல்லாதவர்களைப் பற்றியும் அவர்கள் நகைக்கின்றார்கள். அல்லாஹ் அவர்களை நகைக்கின்றான். மேலும்,அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு" எனும் (9:79ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் பிஷ்ர் பின் காலித் (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில் "மனமுவந்து வாரி வழங்குவோர்" எனும் சொல்லைக் குறிப்பிடவில்லை. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், சயீத் பின் அர்ரபீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நாங்கள் எங்களுடைய முதுகுகளில் (சுமை)தூக்கி கூலிவேலை செய்யலானோம்" என்று (அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: காலையில் ஒரு பெரிய பாத்திரம் (நிறையப்) பாலும் மாலையில் ஒரு பெரிய பாத்திரம் (நிறையப்) பாலும் தருகின்ற ஓர் ஒட்டகத்தை ஒரு வீட்டாருக்கு இரவலாகத் தரக்கூடிய மனிதர் எவரேனும் (உங்களில்) உண்டா? இதற்குரிய நற்பலன் நிச்சயமாக மிகப் பெரியதாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கஞ்சன் மற்றும் தர்மம் செய்கின்றவரின் நிலையானது, இரும்பாலான இரு கவசங்கள் அணிந்த இரு மனிதர்களின் நிலைக்கு ஒத்திருக்கிறது. தர்மம் செய்பவர் ஒன்றைத் தர்மம் செய்ய எண்ணும்போது, அவரது கவசம் விரிவடைந்து, அவரது பாதச்சுவடுகளைக்கூட(த் தொட்டு) அழித்துவிடுகிறது. (ஆனால்,) கஞ்சனோ ஒன்றைத் தர்மம் செய்ய எண்ணும்போது, அவனது கவசம் அவனை அழுத்தி, அவனுடைய கைகள் கழுத்தெலும்புவரை சென்று ஒட்டிக்கொள்கின்றன. கவசத்தின் ஒவ்வொரு வளையமும் மற்றதன் இடத்தை இறுக்கிப் பிடிக்கிறது. அதை விரிவுபடுத்த அவன் முனைவான். ஆனால், அவனால் இயலாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கஞ்சனின் நிலையோடு ஒப்பிடுகையில் தாராள மனத்துடன்)செலவு செய்கின்ற தர்மசீலரின் நிலையானது, மார்பிலிருந்து கழுத்தெலும்பு வரை (இரும்பாலான) "இரு நீளங்கிகள்" அல்லது "இரு கவசஆடைகள்" அணிந்துள்ள (இரு) மனிதரின் நிலையைப் போன்றதாகும். "(தாராள மனத்துடன்) செலவு செய்கின்றவர்" அல்லது "தர்மம் செய்கின்றவர்" தர்மம் செய்ய எண்ணும் போது அவரது கவசம் "விரிவடைந்து" அல்லது "(நீண்டு) சென்று" அவரது விரல் நுனிகளை மறைத்து (அதற்கப்பால்) அவரது பாதச் சுவடுகளைக்கூட(த் தொட்டு) அழித்து விடுகிறது. (ஆனால்,) கஞ்சன் செலவு செய்ய எண்ணும்போது அவனது கவசம் அவனை அழுத்தி, அதன் ஒவ்வொரு வளையமும் அதனதன் இடத்தை (இறுகப்) பிடித்துவிடுகிறது. அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது - அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஞ்சனுக்கும் தர்மம் செய்கின்றவனுக்கும் பின்வருமாறு உதாரணம் கூறினார்கள்: அவ்விருவரின் நிலையானது, இரும்பாலான இரு கவசங்கள் அணிந்துள்ள இரு மனிதர்களின் நிலையை ஒத்திருக்கிறது. அவர்களின் கைகள் அவர்களுடைய மார்போடும் கழுத்தெலும்புகளோடும் பிணைக்கப்பட்டுள்ளன. தர்மம் செய்கின்றவர் ஒன்றைத் தர்மம் செய்யும் போதெல்லாம் அவரது கவசம் விரிந்து, அவரது விரல்நுனிகளை மறைத்து, பாதச்சுவடுகளைக் கூட(த் தொட்டு) அழிக்கத் தொடங்குகிறது. (ஆனால்,) கஞ்சனோ ஒன்றைத் தர்மம் செய்ய எண்ணும் போதெல்லாம் அவனது கவசம் அவனை அழுத்தி, அதன் ஒவ்வொரு வளையமும் அதனதன் இடத்தை (இறுக்கிப்) பிடிக்கத் துவங்குகிறது. அவன் தனது கவசத்தை விரிவுபடுத்த முயலும்போது நீ பார்த்தால் (வியப்புத்தான் ஏற்படும்; ஏனெனில்,) அது விரியாது. இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (இதைக் கூறியபோது) அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்கள் தமது விரலால் தமது சட்டைக் கழுத்தை (நெருக்கி), (இவ்வாறு) சுட்டிக் காட்டினார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) ஒருவர் "நான் இன்றிரவு தர்மம் செய்யப்போகிறேன்" எனக் கூறிக்கொண்டு, (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து, (தெரியாமல்) அதை ஒரு விபச்சாரியிடம் கொடுத்து விட்டார். காலையில் மக்கள், "இன்றிரவு ஒரு விபச்சாரிக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது" எனப் பேசிக்கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், "இறைவா! விபச்சாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே புகழ் அனைத்தும் உரியது. (நாளையும்) நான் தர்மம் செய்வேன்" என்று கூறினார். மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) வெளியே வந்து, அதை ஒரு பணக்காரரின் கையில் கொடுத்துவிட்டார். மறுநாள் காலையில் மக்கள், "ஒரு பணக்காரருக்குத் தர்மம் செய்யப்பட்டுள்ளது" எனப் பேசிக்கொண்டனர். (இதைக்கேட்ட) அவர், "இறைவா! பணக்காரருக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே புகழ் அனைத்தும் உரியது. (நாளையும்) நான் தர்மம் செய்வேன்" என்று கூறினார். (மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் புறப்பட்டுச் சென்று, ஒரு திருடனின் கையில் அதைக் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், "இன்றிரவு ஒரு திருடனுக்குத் தர்மம் செய்யப் பட்டுள்ளது" என்று பேசிக்கொண்டனர். உடனே அவர், "இறைவா! விபச்சாரிக்கும் பணக்காரனுக்கும் திருடனுக்கும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும் உரியது" எனக் கூறினார். பின்னர் (கனவில்) அவரிடம் (வானவர்) அனுப்பிவைக்கப்பட்டு (பின்வருமாறு) கூறப்பட்டது: உமது தர்மம் ஏற்கப்பட்டுவிட்டது. விபச்சாரிக்கு நீர் கொடுத்த தர்மம், அவள் விபச்சாரத்திலிருந்து விலகி கற்பைப் பேணக் காரணமாக அமையலாம். பணக்காரனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தால் அவன் படிப்பினை பெற்று, அல்லாஹ் தனக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்யக்கூடும். திருடனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மம் அவன் களவைக் கைவிடக் காரணமாக அமையலாம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்தைச் செயல்படுத்தக்கூடிய -அல்லது அந்தக் காரியத்திற்காக வழங்கக்கூடிய- நேர்மையான முஸ்லிம் காசாளர், தர்மத்தில் பங்கு வகிக்கும் இருவரில் ஒருவராவார். அவர் முழுமையாகவும் குறைவின்றியும் மனப்பூர்வமாகவும் அக்காரியத்திற்கு வழங்குகிறார். இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை முறையோடு தர்மம் செய்தால், (அறவழியில்) செலவழித்தற்காக அவளுக்கும் நற்பலன் உண்டு. அதைச் சம்பாதித்தவன் என்ற அடிப்படையில் கணவனுக்கும் நற்பலன் உண்டு. அதைப் போன்றே காசாளருக்கும் (செலவிட உதவியதற்காக நற்பலன்) உண்டு. இவர்களில் யாரும் யாருடைய நற்பலனிலும் சிறிதும் குறைத்துவிடமாட்டார்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் ("தனது வீட்டிலுள்ள உணவை" என்பதற்குப் பதிலாக) "அவளுடைய கணவனின் உணவிலிருந்து" என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் தன் கணவனின் வீட்டிலுள்ளவற்றை முறையோடு (அறவழியில்) செலவழித்தால் அவளுக்கும் நற்பலன் உண்டு. அதைப் போன்றே, அதைச் சம்பாதித்தவன் என்ற அடிப்படையில் கணவனுக்கும் நற்பலன் உண்டு. அதைப் போன்றே, காசாளருக்கும் (செலவிட உதவியதற்காக நற்பலன்) உண்டு. அவர்களுடைய நற்பலன்களில் சிறிதும் குறைந்துவிடாது. இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆபில் லஹ்ம்" என்பாரின் அடிமையாயிருந்த உமைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அடிமையாக இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "நான் என் உரிமையாளரின் செல்வத்திலிருந்து எதையேனும் தர்மம் செய்யலாமா?" என்று கேட்டேன். அதற்கு "ஆம். (தர்மம் செய்யலாம்.) உங்கள் இருவருக்கும் சரிபாதி நற்பலன் உண்டு" என்று அவர்கள் பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆபில் லஹ்ம்" என்பாரின் அடிமையாயிருந்த உமைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) என் உரிமையாளர் என்னிடம் இறைச்சியை (நீளமாக வெட்டி உப்புக் கண்டத்திற்காக)க் காயப்போடுமாறு கட்டளையிட்டார். அப்போது என்னிடம் ஓர் ஏழை வந்தார். அதிலிருந்து சிறிதளவு இறைச்சியை அவருக்கு நான் வழங்கிவிட்டேன். இதை என் உரிமையாளர் அறிந்தபோது என்னை அடித்துவிட்டார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் உரிமையாளரை அழைத்து, "அவரை ஏன் அடித்தீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு "நான் சொல்லாமலேயே எனது உணவை மற்றவர்களுக்கு இவர் கொடுக்கிறார்" என்று என் உரிமையாளர் கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(ஏழைக்கு வழங்கியதால்) உங்கள் இருவருக்குமே நறபலன் உண்டு"என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இவை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் தன் கணவன் உள்ளூரில் இருக்கும்போது அவனது அனுமதி இல்லாமல் (கூடுதலான- நஃபில்) நோன்பு நோற்கவேண்டாம். கணவன் ஊரில் இருக்கும்போது அவனது அனுமதி இல்லாமல் யாரையும் அவனது வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம். அவள் தன் கணவனின் உத்தரவு இல்லாமல் அவனது சம்பாத்தியத்திலிருந்து (அறவழியில்) செலவு செய்தால் அதன் நற்பலனில் பாதி அவனுக்கும் கிடைக்கும். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவிட்டாரோ அவர் சொர்க்கத்தி(ன் வாசல்களில் ஒவ்வொன்றி)ல் இருந்து "அல்லாஹ்வின் அடியாரே! இது சிறந்ததாகும். (இதன் வழியாக நுழையுங்கள்)" என்று அழைக்கப்படுவார். அதாவது தொழுகையாளியாக இருந்தவர், தொழுகைக்குரிய வாசலில் இருந்து அழைக்கப்படுவார். அறப்போராளியாக இருந்தவர், அறப்போருக்குரிய வாசலில் இருந்து அழைக்கப்படுவார். தர்மம் செய்பவராக இருந்தவர் தர்மத்திற்குரிய வாசலில் இருந்து அழைக்கப்படுவார். நோன்பாளியாக இருந்தவர் (நோன்பாளிகளுக்கே உரிய) "அர்ரய்யான்" எனும் வாசலில் இருந்து அழைக்கப்படுவார்" என்று சொன்னார்கள். உடனே அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இந்த வாசல்களில் இருந்து அழைக்கப்படும் ஒருவருக்கு (வேறுவாசல் வழியாகச் செல்ல வேண்டிய) அவசியம் இராது. (ஏனெனில், எந்த வழியிலாவது அவர் சொர்க்கம் சென்றுவிடுவார். இருந்தாலும்,) அந்தத் தலைவாயில்கள் ஒவ்வொன்றிலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம். அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன்" என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவிட்டாரோ அவரைச் சொர்க்கத்தின் காவலர்கள் அழைப்பார்கள். ஒவ்வொரு வாசலின் காவலர்களும் "இன்ன மனிதரே! இங்கே வாரும்!" என்று அழைப்பார்கள்" என்று கூறினார்கள். இதைக்கேட்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! இப்படிப்பட்டவருக்குக் கவலையே கிடையாது (எந்த வாசல் வழியாகவும் அவர் சொர்க்கத்தினுள் நுழையலாம்)" என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கவேண்டுமென நான் எதிர்பார்க்கிறேன்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?" என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்" என்றார்கள். "இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவை (பிரேதம்) பின்தொடர்ந்து சென்றவர் யார்?" என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்" என்றார்கள். "இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?" என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்" என்றார்கள். "இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் "நான்" என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எந்த மனிதர் (நல்லறங்களான) இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை" என்றார்கள். அத்தியாயம் :
மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்: 1. நீதி மிக்க ஆட்சியாளர். 2. இறைவழிபாட்டிலேயே வளர்ந்த இளைஞன். 3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர். 4. இறைவனுக்காகவே நேசித்து, அவனுக்காகவே இணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர். 5. தகுதியும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை(த் தவறுசெய்ய) அழைத்தபோதும் "நான் அல்லாஹ்விற்கு அஞ்சுகிறேன்" என்று கூறியவர். 6. தமது இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம்கூட அறியாத வகையில் இரகசியமாகத் தர்மம் செய்தவர். 7. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் சிந்திய மனிதர். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து, அல்லது அபூசயீத் அல் குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுச் சென்றாலும் திரும்பி வரும்வரை அதனுடனேயே தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்" என்று இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீதிருந்தபடி தர்மம் செய்வது, பிறரிடம் கையேந்தாமல் தன்மானத்துடன் இருப்பது ஆகியவற்றைப் பற்றி உபதேசித்தார்கள். அப்போது "மேலிருக்கும் கை கீழிருக்கும் கையைவிடச் சிறந்ததாகும். மேல் கை என்பது கொடுக்கக்கூடியதும், கீழ் கை என்பது யாசிக்கக்கூடியதும் ஆகும்" என்று குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே "தர்மத்தில் சிறந்தது" அல்லது "நல்ல தர்மம்" ஆகும். மேல் கை, கீழ் கையைவிடச் சிறந்ததாகும். உங்கள் குடும்பத்தாரிலிருந்தே (உங்களது தர்மத்தைத்) தொடங்குங்கள். இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் (தர்மம்) கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகும் நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களிடம் நான் கேட்டேன். எனக்குக் கொடுத்தார்கள். பிறகு "இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். யார் இதை(ப் பேராசையின்றி) நல்ல எண்ணத்துடன் பெறுகிறாரோ அவருக்கு அதில் வளம் (பரக்கத்) வழங்கப்படும். யார் மனத்தை அலையவிட்டு(ப் பேராசையுடன்) இதை எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு அதில் வளம் வழங்கப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார். மேல் கைதான் கீழ்க் கையைவிடச் சிறந்ததாகும்" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகனே! (மனிதனே!) உன் தேவைபோக எஞ்சியதை நீ தர்மம் செய்வதே உனக்கு நல்லதாகும். அதை (யாருக்கும் கொடுக்காமல்) இறுக்கிவைப்பது உனக்குத் தீமையாகும். தேவையுள்ள அளவு சேமித்துவைத்தால் நீ பழிக்கப்படமாட்டாய். உன் வீட்டாரிலிருந்தே உனது தர்மத்தைத் தொடங்கு. மேல் கைதான் கீழ்க் கையைவிடச் சிறந்ததாகும். இதை அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் ஆமிர் அல்யஹ்ஸபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்கள், "மக்களே! (வரைமுறையின்றி) நபிமொழிகளை அறிவிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஆனால், உமர் (ரலி) அவர்கள் காலத்தில் இருந்துவந்த நபிமொழிகளைத் தவிர. ஏனெனில், உமர் (ரலி) அவர்கள் வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ்வின் (மார்க்கம்) விஷயத்தில் (பொய்யுரைப்பதிலிருந்து) மக்களைப் பயமுறுத்திவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் எவருக்கு நன்மை நாடுகின்றானோ அவரை மார்க்கத்தில் விளக்கமுள்ளவராக ஆக்குகின்றான். நான் கருவூலக் காவலன் மட்டுமே. ஒருவருக்கு நான் மனப்பூர்வமாகக் கொடுத்தால், அவருக்கு அதில் வளம் வழங்கப்படும். ஒருவர் யாசித்ததை முன்னிட்டு, அல்லது அவரது பேராசையைக் கண்டு அவருக்கு நான் கொடுத்தால், அவர் உண்டாலும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள். அத்தியாயம் :
முஆவியா (ரலி) அவர்கள் தமது உரையில் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ் எவருக்கு நன்மை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கமுள்ளவராக ஆக்குகிறான். நான் பங்கிடுபவன் மட்டுமே. அல்லாஹ்தான் கொடுக்கிறான்" என்று சொல்ல நான் கேட்டேன். இதை ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களிடம் யாசிப்பதையே வழக்கமாகக் கொண்ட மனிதன், தனது முகத்தில் சதைத் துண்டு ஏதும் இல்லாதவனாகவே மறுமை நாளில் வருவான். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு நன்கொடை வழங்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். (அப்போதெல்லாம்) நான் "என்னைவிட அதிகத் தேவையுடையவருக்கு இதைக் கொடுங்களேன்" என்று சொல்வேன். (ஒருமுறை இவ்வாறு) அவர்கள் எனக்குப் பொருள் ஒன்றைக் கொடுத்தபோது "என்னைவிட அதிகத் தேவையுடையவருக்கு இதைக் கொடுங்கள்" என்று நான் சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள். இந்தச் செல்வத்திலிருந்து எது நீங்கள் ஆசையோடு எதிர்பார்க்காமலும் நீங்களாகக் கேட்காமலும் உங்களிடம் வருகிறதோ அதை (மறுக்காமல்) பெற்றுக்கொள்ளுங்கள். இ(வ்வாறு ஏதும் கிடைக்கவி)ல்லையாயின், நீங்களாக அதைத் தேடிச் செல்லாதீர்கள்" என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அஸ்ஸாஇதீ அல்மாலிகீ (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் என்னை ஸகாத் வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். நான் அந்தப் பணியை முடித்துவிட்டு (வந்து), உமர் (ரலி) அவர்களிடம் ஸகாத் பொருட்களை ஒப்படைத்தபோது எனக்கு ஊதியம் கொடுக்க உத்தரவிட்டார்கள். அப்போது நான், "நான் இந்த வேலையை அல்லாஹ்விற்காகவே செய்தேன். எனக்குரிய ஊதியம் அல்லாஹ்விடமே உள்ளது" என்று சொன்னேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (நீங்களாகக் கேட்காமல்) உங்களுக்கு (ஏதேனும்) வழங்கப் பட்டால், அதை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஸகாத் வசூலிப்பவனாக இருந்தேன். அதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு ஊதியம் வழங்கினார்கள். நீங்கள் சொன்னதைப் போன்றே நானும் சொன்னேன். அப்போது என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீங்களாகக் கேட்காமல் ஏதேனும் உங்களுக்கு (நீங்கள் செய்த பணிக்காக) வழங்கப்பட்டால் அதை நீங்கள் (வாங்கி) உட்கொள்ளுங்கள்; தர்மமும் செய்யுங்கள்" என்று சொன்னார்கள். - மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அஸ்ஸாஇதீ அல்மாலிகீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முதியவரின் மனம்கூட இரண்டை நேசிப்பதில் இளமையாகவே உள்ளது: 1, இம்மை வாழ்வின் மீதுள்ள ஆசை. 2, பொருளாசை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகனுக்குத் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தாலும், (அதைப் போன்று) மற்றொரு நீரோடையும் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான்.அவனது வாயை (சவக்குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) ஒரு நீரோடை நிறைய செல்வம் இருந்தாலும் அதனுடன் அதைப்போன்ற மற்றொரு நீரோடை தனக்கு இருக்க வேண்டுமென்றே அவன் விரும்புவான். அவனது மனத்தை (சவக்குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த வாசகம் குர்ஆனில் உள்ளதா, அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியாது. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இந்த வாசகம் குர்ஆனில் உள்ளதா என்று எனக்குத் தெரியாது" என்று (மட்டும்) இடம்பெற்றுள்ளது. (இவ்வாறு) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாகக் காணப்படவில்லை. அத்தியாயம் :
அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் பஸ்ரா (இராக்) நகரத்திலுள்ள குர்ஆன் அறிஞர்களிடம் (அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினார்கள். (அவர்களது அழைப்பை ஏற்று) குர்ஆனைக் கற்றறிந்த முன்னூறு பேர் அவர்களிடம் வந்தார்கள். அப்போது அவர்களிடம் அபூமூசா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: பஸ்ராவாசிகளிலேயே நீங்கள்தாம் சிறந்தவர்கள் ஆவீர்கள்; அவர்களிலேயே குர்ஆனை நன்கறிந்தவர்களும் ஆவீர்கள். எனவே, (தொடர்ந்து) குர்ஆனை ஓதிவாருங்கள். காலம் நீண்டுவிட்ட போது உங்களுக்கு முன் வாழ்ந்த (வேதம் அருளப்பெற்ற சமுதாயத்த)வர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டதைப் போன்று உங்களுடைய உள்ளங்களும் இறுகிவிட வேண்டாம். நாங்கள் (நபி (ஸல்) அவர்களது காலத்தில்) ஓர் அத்தியாயத்தை ஓதிவந்தோம்; நீளத்திலும் கடுமை(யான எச்சரிக்கை விடுக்கும் தோரணை)யிலும் "பராஅத்" எனப்படும் (9ஆவது) அத்தியாயத்திற்கு நிகராக அதை நாங்கள் கருதினோம். ஆனால், அந்த அத்தியாயத்தை நான் மறக்கச் செய்யப்பட்டுவிட்டேன். ஆயினும், அதில் "ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு ஓடைகள் (நிரம்ப) செல்வம் இருந்தாலும் மூன்றாவது ஓடையை அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை (சவக்குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது" எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன். மேலும், மற்றோர் அத்தியாயத்தையும் நாங்கள் ஓதிவந்தோம். அதை (சப்பஹ, யுசப்பிஹு, சப்பிஹ் என) இறைத்துதியில் தொடங்கும் அத்தியாயங்களில் ஒன்றுக்கு நிகராகவே நாங்கள் கருதினோம். அந்த அத்தியாயத்தையும் நான் மறக்கச்செய்யப்பட்டுவிட்டேன். ஆயினும்,அதில் "நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? (அவ்வாறு நீங்கள் செய்யாததைப் பிறருக்குச் சொல்வீர்களாயின்) அது உங்களுக்கு எதிரான சாட்சியாக உங்களுடைய கழுத்துகளின் மீது எழுதப்படும். பின்னர் மறுமை நாளில் அது குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்" எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன். (இந்த அத்தியாயங்கள் பின்னர் மாற்றப்பட்டுவிட்டன.) அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக, போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து (சொற்பொழிவு மேடைமீது) நின்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது, "மக்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உங்களுக்காக வெளிப்படுத்தும் இவ்வுலகின் கவர்ச்சிப் பொருட்க(ளான கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர்வகை)களைத் தான் உங்கள் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகிறேன்" என்று கூறினார்கள். அப்போது ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா?" என்று கேட்டார். அதற்கு (பதிலளிக்காமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். பிறகு (அந்த மனிதரிடம்) "என்ன கேட்டீர்கள்?" என்றார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே, நன்மை தீமையை உருவாக்குமா என்று கேட்டேன்" என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நன்மையால் நன்மையே விளையும். ஆனால், இ(ந்தக் கவர்ச்சியான)து ஒரு நன்மையா? வசந்த காலத்தில் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை,) வயிறு புடைக்கத் தின்னவைத்துக் கொன்றுவிடுகின்றன; அல்லது கொல்லும் அளவிற்குச் சென்றுவிடுகின்றன; (அப்போதுதான் துளிர்விட்ட) பசும் புற்களைத் தின்னும் கால்நடையைத் தவிர. (அது மடிவதில்லை. ஏனெனில்,) அது (பசும் புல்லைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது, (அசைபோடுவதற்காகச்) சூரியனை நோக்கி(ப் படுத்து)க்கொள்கிறது. (இதனால் நன்கு சீரணமாகி குழைவு நிலையில்) சாணமிடுகின்றது. அல்லது சிறுநீரை வெளியேற்றுகிறது. பின்னர் (வயிறு காலியானவுடன் மீண்டும் மேய்ந்துவிட்டு வந்து) அசைபோடுகின்றது. பிறகு (வயிறு காலியானவுடன்) மறுபடியும் சென்று மேய்கிறது. (அவ்வாறுதான்) யார் ஒரு செல்வத்தை உரிய முறையில் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு அதில் வளம் (பரகத்) வழங்கப்படும். யார் ஒரு செல்வத்தை முறையற்ற வழிகளில் எடுத்துக்கொள்கிறாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவன் உங்களுக்காக வெளிப்படுத்தும் இவ்வுலகின் கவர்ச்சிப் பொருட்களைத்தான் உங்கள் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகிறேன்" என்று கூறினார்கள். அப்போது மக்கள், "இவ்வுலகின் கவர்ச்சிப் பொருட்கள் எவை, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய) பூமியின் வளங்கள்(தாம் அவை)" என்று பதிலளித்தார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! நன்மை தீமையை உருவாக்குமா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நன்மையால் நன்மையே விளையும். நன்மையால் நன்மையே விளையும். நன்மையால் நன்மையே விளையும். வசந்த காலத்தில் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால் நடைகளை), வயிறு புடைக்கத் தின்ன வைத்துக் கொன்றுவிடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் கொண்டுசென்றுவிடுகின்றன; பசுமையான புல்லைத் தின்னும் கால்நடையைத் தவிர. (அது மடிவதில்லை. ஏனெனில்,) அது (புல்லைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது, சூரியனை நோக்கி(ப் படுத்துக்கொண்டு) அசைபோடுகின்றது. (இதனால் நன்கு சீரணமாகி குழைவு நிலையில்) சிறுநீரையும் வெளியேற்றி சாணமுமிடுகிறது. பின்னர் (வயிறு காலியானவுடன்) மீண்டும் சென்று மேய்கிறது. இந்த (உலகின்) செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். யார் அதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகிறாரோ அவருக்கு அது நல்லுதவியாக அமையும். யார் அதை முறையற்ற வழிகளில் சம்பாதிக்கிறாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்று இருக்கிறார்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சொற்பொழிவு மேடைமீது அமர்ந்தார்கள். அவர்களைச் சுற்றி நாங்களும் அமர்ந்தோம். அப்போது அவர்கள் "எனக்குப் பின், உங்களிடையே இவ்வுலகின் கவர்ச்சியும் அதன் அலங்காரங்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதானது, உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகின்றவற்றில் ஒன்றாகும்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா?" என்று கேட்டார். அதற்கு (பதிலளிக்காமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாக இருந்தார்கள். அப்போது அந்த மனிதரிடம் "உமக்கு என்ன ஆயிற்று? நீர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேச்சுக் கொடுக்கிறீர். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே!" என்று கேட்கப்பட்டது. (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மௌனம் தொடருவதைக் கண்ட)நாங்கள் அவர்களுக்கு இறைஅறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறது என்று கருதினோம். பிறகு அவர்கள் இயல்பு நிலைக்கு வந்து தம்மீதிருந்த வியர்வைத் துளிகளைத் துடைத்துவிட்டு, "இந்தக் கேள்வி கேட்டவர் (எங்கே?)" என்று (அவரைப் பாராட்டுவதைப் போல) கேட்டார்கள். பின்னர், ""நன்மையால் நன்மையே விளையும். வசந்த காலத்தில் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை), வயிறு புடைக்கத் தின்ன வைத்துக் கொன்றுவிடுகின்றன; அல்லது கொல்லும் அளவிற்குச் சென்றுவிடுகின்றன. பச்சைப் புற்களைத் தின்னும் கால்நடையைத் தவிர. (அது மடிவதில்லை. ஏனெனில்,) அது (பச்சைப் புற்களைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது, சூரியனை நேராக நோக்கி(ப் படுத்துக்கொண்டு அசை போடுகின்றது); சாணமிட்டு சிறுநீரும் கழிக்கின்றது. பின்னர் (வயிறு காலியானவுடன் மீண்டும் சென்று) மேய்கிறது. இந்த (உலகின்) செல்வம் இனிமையும் பசுமையும் உடையதாகும். ஒரு முஸ்லிம் தமது செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அ(வரது செல்வமான)து அவருக்குச் சிறந்த தோழனாகும்.-(இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்) அல்லது அவர்கள் கூறியதைப் போன்று.- யார் முறையற்ற வழிகளில் செல்வத்தை எடுத்துக்கொள்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார். மேலும், மறுமை நாளில் அந்தச் செல்வம் அவருக்கு எதிரான சாட்சியாக அமையும்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும், செலவுக்குப் பணமும்) கேட்டார்கள். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். பிறகு (மீண்டும் மீண்டும்) அவர்கள் கேட்டபோதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். இறுதியாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்த அனைத்தும் (கொடுத்துத்) தீர்ந்துவிட்டபோது, "என்னிடத்தில் உள்ள எந்தச் செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப்போவதில்லை. (இருப்பினும்,) யார் சுயமரியாதையோடு நடந்துகொள்கிறாரோ அவரை அல்லாஹ் தன்மானத்துடன் வாழச்செய்வான். யார் பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். யார் (இன்னல்களைச்) சகித்துக்கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் (மேலும்) சகிப்புத் தன்மையை வழங்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை வேறெதுவும் எவருக்கும் வழங்கப்படுவதில்லை" என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்துகொண்டிருந்தேன். அப்போது அவர்கள் தடித்த கரையுள்ள நஜ்ரான் (யமன்) நாட்டு சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களை அடைந்து, அந்தச் சால்வையை வேகமாக இழுத்தார். அந்தக் கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப்பகுதி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கழுத்தின் ஒரு மூலையில் (காயப்படுத்தி) அடையாளம் பதித்துவிட்டிருந்ததை நான் கண்டேன். பிறகு அவர், "முஹம்மதே! உங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்" என்று சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டு, பிறகு அவருக்கு நன்கொடை வழங்குமாறு உத்தரவிட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், இக்ரிமா பின் அம்மார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பிறகு அந்தக் கிராமவாசி அந்தச் சால்வையை வேகமாக இழுத்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவர்மீது கோபப்படாமல்) தமது நெஞ்சை அந்தக் கிராமவாசிக்கு நேராகத் திருப்பினார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர் வேகமாக இழுத்தபோது சால்வை (இரண்டாகக்) கிழிந்துவிட்டது. அதன் ஓர் ஓரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கழுத்திலேயே இருந்தது" என்று இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியரிடையே போர்ச்செல்வங்களைப் பங்கிட்டார்கள். அப்போது அன்சாரிகள் (சிலர்), "இந்த விஷயம் எங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. எதிரிகளின் இரத்தம் எங்களின் வாட்களில் சொட்டிக்கொண்டிருக்க, எங்களுக்குச் சேரவேண்டிய போர்ச்செல்வங்கள் (புதிய முஸ்லிம்களான) குறைஷியரிடையே திருப்பிவிடப்படுகின்றன" என்று பேசிக்கொண்டனர். இந்த விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, அன்சாரிகளை (ஒரு கூடாரத்தினுள்) ஒன்று திரட்டி, "உங்களைக் குறித்து எனக்கு எட்டிய செய்தி என்ன? (உண்மைதானா?)" என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகள் "உங்களுக்கு எட்டியது உண்மைதான்" என்று பதிலளித்தனர். -அன்சாரிகள் பொய் பேசாதவர்களாய் இருந்தனர்- அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்கள் உலகச்செல்வங்களைப் பெற்றுக்கொண்டு தம் வீடுகளுக்குத் திரும்பிச்செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதரைப் பெற்றுக்கொண்டு உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச்செல்வதை விரும்பவில்லையா? மக்கள் ஒரு கணவாயிலோ பள்ளத்தாக்கிலோ நடந்து செல்ல, அன்சாரிகள் வேறொரு கணவாயிலோ பள்ளத்தாக்கிலோ நடந்துசென்றால், நான் அன்சாரிகளின் கணவாயிலேயே அல்லது அன்சாரிகளின் பள்ளத்தாக்கிலேயே செல்வேன்" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுனைன் போரின்போது (எதிரிகளான) "ஹவாஸின்" குலத்தாரும் "கத்ஃபான்" குலத்தாரும் தம் குழந்தை குட்டிகளுடனும் கால்நடைகளுடனும் (இஸ்லாமியப் படையினரை) நோக்கி வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களுடன் (அறப்) போராளிகள் பத்தாயிரம் பேரும் (மக்கா வெற்றியின்போது) மன்னிப்பு அளிக்கப்பட்டவர்களும் இருந்தனர். அவர்கள் (அனைவரும் எதிரிகளின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல்) நபி (ஸல்) அவர்களைத் தனியாக விட்டுவிட்டுப் பின்வாங்கிச் சென்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் இருமுறை அழைப்பு விடுத்தார்கள்; அவ்விரண்டுக்குமிடையே வேறெதுவும் பேசாமல் (தொடர்ச்சியாக) அழைத்தார்கள். தமது வலப்பக்கம் திரும்பி "அன்சாரிகளே!" என்று அழைக்க, அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இதோ வந்துவிட்டோம். நற்செய்தி பெறுங்கள்; நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்" என்று கூறினர். பிறகு தம் இடப்பக்கம் திரும்பி, "அன்சாரிகளே!" என்று அழைத்தார்கள். அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! இதோ வந்துவிட்டோம். நற்செய்தி பெறுங்கள்; நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்" என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் வெள்ளைக் கோவேறு கழுதையின் மீது இருந்தார்கள். பிறகு அதிலிருந்து இறங்கி, "நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவேன்" என்று சொன்னார்கள். பிறகு (அந்தப் போரில் ஹவாஸின் மற்றும் ஃகத்ஃபான் குலத்தைச் சேர்ந்த) இணைவைப்பாளர்கள் தோல்வி கண்டதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகமான போர்ச்செல்வங்களைப் பெற்றார்கள்; அவற்றை முஹாஜிர்களிடையேயும் (மக்கா வெற்றியின்போது) மன்னிப்பு அளிக்கப் பட்டவர்களிடையேயும் பங்கிட்டார்கள். அன்சாரிகளுக்கு எதையும் கொடுக்கவில்லை. ஆகவே, அன்சாரிகள் (சிலர்), "கடுமையான பிரச்சினை என்றால் நாங்கள் அழைக்கப்படுகிறோம். போர்ச் செல்வங்களோ மற்றவர்களுக்குக் கொடுக்கப்படுகின்றன" என்று (மனக்குறையுடன்) பேசிக்கொண்டனர். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளை ஒரு கூடாரத்தில் ஒன்று கூட்டி, "அன்சாரிகளே! உங்களைக் குறித்து எனக்கு எட்டிய செய்தி என்ன? (உண்மைதானா?)" என்று கேட்டார்கள். அவர்கள் (அதை ஒப்புக்கொள்வதைப் போன்று) மௌனமாயிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அன்சாரிகளே! மக்கள் உலகச் செல்வத்தைத் தங்களுடன் கொண்டுசெல்ல, நீங்கள் (இறைத்தூதர்) முஹம்மதை உடைமையாக்கிக் கொண்டு உங்கள் இல்லங்களுக்குச் செல்வதை நீங்கள் விரும்பவில்லையா?" என்று கேட்டார்கள். அன்சாரிகள், "ஆம், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (அதையே) விரும்புகிறோம்" என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "மக்களெல்லாம் ஒரு பள்ளத்தாக்கில் செல்ல, அன்சாரிகள் மட்டும் ஒரு கணவாயில் செல்வார்களாயின், நான் அன்சாரிகள் செல்லும் கணவாயையே தேர்ந்தெடுப்பேன்" என்று சொன்னார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் (இதைத் தமக்கு அறிவித்த தம் பாட்டனாரான அனஸ் (ரலி) அவர்களிடம்), "அபூஹம்ஸா! (இந்நிகழ்ச்சி நடைபெற்றபோது) தாங்கள் அங்கு இருந்தீர்களா?" என்று கேட்க, அனஸ் (ரலி) அவர்கள், "நான் நபி (ஸல்) அவர்களைவிட்டு எங்கே போவேன்?" என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மக்காவை வெற்றிகொண்டோம். பின்னர் ஹுனைனை நோக்கிப் போருக்காகப் புறப்பட்டோம். அப்போது (எதிரிகளான) இணைவைப்பாளர்கள் நான் பார்த்தவற்றிலேயே மிக அழகான முறையில் அணிவகுத்து வந்தனர். முதலில் குதிரைப் படைகள் நிறுத்தப்பட்டன. பிறகு காலாட்படையினரும் அதற்குப் பின் பெண்கள் அணியும் நிறுத்தப்பட்டது. பிறகு ஆடுகளும் பின்னர் இதர கால்நடைகளும் நிறுத்தப்பட்டன. அப்போது (எங்கள் அணியில்) அதிகமான வீரர்கள் இருந்தனர்; நாங்கள் ஆறாயிரம் பேர் இருந்தோம். எங்கள் சாலையோரக் குதிரைப்படைக்கு காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் (தளபதியாக) இருந்தார்கள். எங்கள் குதிரைப்படை எங்கள் முதுகுக்குப் பின்னால் திரும்பலாயிற்று. சிறிது நேரமே கழிந்திருக்கும்; அதற்குள் அவை எங்கள் (களத்திலிருந்து) விலகிச் செல்லத்தொடங்கின. எங்கள் (அணியிலிருந்த) கிராமவாசிகளும் நாங்கள் அறிந்த வேறு சிலரும் வெருண்டோடலாயினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "முஹாஜிர்களே, முஹாஜிர்களே" என்று அழைத்தார்கள். பின்னர் "அன்சாரிகளே, அன்சாரிகளே" என்று அழைத்தார்கள். -இது என் தந்தையின் சகோதரர்கள் (அல்லது என் கூட்டத்தார்) அறிவித்த தகவலாகும்- அப்போது நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! தங்கள் அழைப்புக்குக் கீழ்படிந்தோம்" என்று கூறி(முன்னே வந்து எதிரிகளுடன் போரிடலா)னோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முன்னேறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் எதிரிகளை நோக்கி முன்னேறிச் சென்றபோது, அல்லாஹ் எங்கள் எதிரிகளை தோல்வியுறச்செய்தான். (எதிரிகள் விட்டுச் சென்ற) அந்த(ப் போர்)ச் செல்வங்களை நாங்கள் கைப்பற்றினோம். பின்னர் தாயிஃப் (நகர மக்களை) நோக்கி நடந்து அவர்களை நாற்பது இரவுகள் முற்றுகையிட்டோம். பிறகு மக்காவிற்குத் திரும்பி வந்து (அங்கு) தங்கினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களில்) ஒருவருக்கு நூறு ஒட்டகங்கள் (போர்ப் பரிசாக) வழங்கலானார்கள். மற்ற விவரங்கள் முந்தைய ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹுனைன் போர்ச்செல்வங்களிலிருந்து) அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி), ஸஃப்வான் பின் உமய்யா (ரலி), உயைனா பின் ஹிஸ்ன் (பின் பத்ர்-ரலி) மற்றும் அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) ஆகியோருக்குத் தலா நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள். அப்பாஸ் பின் மிர்தாஸ் (ரலி) அவர்களுக்கு அதைவிடக் குறைவாகவே கொடுத்தார்கள். அப்போது அப்பாஸ் பின் மிர்தாஸ் ரலி) அவர்கள் பின்வருமாறு கவி பாடினார்கள்: எனது பங்கையும் (என் குதிரை) உபைதின் பங்கையும் உயைனாவுக்கும் அக்ரஉக்குமிடையே பங்கிடுகிறீரா? சபைகளில் மிர்தாஸை மிஞ்சுபவர்களாக பத்ருமில்லை; ஹாபிஸும் இல்லை. அவ்விருவரையும்விட நான் குறைந்தவனுமில்லை. யாரை இன்று நீர் தாழ்த்திவிட்டீரோ அவர் உயர்த்தப்படப்போவதில்லை. அப்போது அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை முழுமையாக்கி (வழங்கி)னார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுனைன் போரில் வெற்றி கண்டபோது, போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டார்கள். அப்போது உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டிய (மக்கா வெற்றியின்போது புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய)வர்களுக்கு (மட்டும்) அவற்றைக் கொடுத்தார்கள். (அன்சாரிகளுக்கு எதுவும் கொடுக்கவில்லை.) அந்த மக்களுக்குக் கிடைத்ததைப் போன்று தமக்கும் கிடைக்கவேண்டுமென அன்சாரிகள் விரும்புகின்றார்கள் என்ற செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, அன்சாரிகளிடையே (அவர்களுக்கு ஆறுதலளிக்கும் விதமாக) உரையாற்றினார்கள். அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிறகு, "அன்சாரிகளே! உங்களை வழிதவறியவர்களாக நான் கண்டேன்; அல்லாஹ் என் மூலமாக உங்களுக்கு நேர்வழி காட்டவில்லையா? நீங்கள் ஏழைகளாக இருந்தீர்கள். அல்லாஹ், என் மூலமாக உங்களைத் தன்னிறைவுடையவர்களாய் ஆக்கவில்லையா? நீங்கள் (இனவாதம் பேசி) பிரிந்து (சிதறிக்) கிடந்தீர்கள். அல்லாஹ் என் மூலமாக உங்களை இணக்கமாக்கவில்லையா?" என்று கேட்டார்கள். (தமது வருகையால் அன்சாரிகள் அடைந்த நன்மைகளை ஒவ்வொன்றாக நபியவர்கள் சொல்லும்போதெல்லாம்) "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அதிக உபகாரிகள்" என்று அன்சாரிகள் கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறிருக்க, எனக்கு நீங்கள் பதிலளிக்கமாட்டீர்களா?" என்று கேட்க, அன்சாரிகள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே மிகப்பெரும் உபகாரிகள்" என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்களும் விரும்பினால் இன்னின்னவாறு இன்னின்ன நேரத்தில் நடந்தது என்று (நீங்கள் எனக்குச் செய்த உதவிகளையும் பட்டியலிட்டுக்) கூறலாம்" என்று சில விஷயங்களைச் சொல்லிக்காட்டினார்கள். -அந்த விஷயங்கள் எவையெவை என்பதைத் தாம் மனனமிடவில்லை என இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.- மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(புதிதாக இஸ்லாத்தை ஏற்றுள்ள) இந்த மக்கள் (நான் கொடுக்கும்) ஆடுகளையும் ஒட்டகங்களையும் (ஓட்டிக்) கொண்டுசெல்ல, நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைவனின் தூதரையே (என்னையே) கொண்டுசெல்வதை விரும்பமாட்டீர்களா? அன்சாரி(களாகிய நீங்)கள் (மேனியுடன் ஒட்டிய) உள்ளாடைகள் போன்றவர்கள். மற்றவர்கள் மேலாடை போன்றவர்கள். ஹிஜ்ரத் (மார்க்கத்திற்காகப் பிறந்தகத்தைத் துறந்து செல்வது) மட்டும் நடந்திராவிட்டால், நான் அன்சாரிகளில் ஒருவனாயிருந்திருப்பேன். மக்களெல்லாம் ஒரு கணவாயிலும் பள்ளத்தாக்கிலும் நடந்து சென்றால், நான் அன்சாரிகள் செல்லும் கணவாயிலும் பள்ளத்தாக்கிலும்தான் செல்வேன். (அன்சாரிகளாகிய) நீங்கள் விரைவில் (ஆட்சியதிகாரத்தில்) உங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை தரப்படுவதைக் காண்பீர்கள். ஆகவே, (எனக்குச் சிறப்புப் பரிசாக மறுமையில் கிடைக்கவிருக்கும் "ஹவ்ளுல் கவ்ஸர்" எனும்) தடாகம் அருகே என்னைச் சந்திக்கும்வரை பொறுமையுடன் இருங்கள்" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுனைன் போரின் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் சிலருக்கு முன்னுரிமை (அளித்துப் போர்ச்செல்வங்களிலிருந்து அதிகமாக) வழங்கினார்கள். (புதிய முஸ்லிம்களில் ஒருவரான) அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். உயைனா (பின் ஹிஸ்ன்-ரலி) அவர்களுக்கும் அதைப் போன்றே (நூறு ஒட்டகங்கள்) கொடுத்தார்கள். அரபுகளில் முக்கியமானவர்கள் சிலருக்கும் கொடுத்தார்கள். அன்றையதினம் அவர்களுக்கெல்லாம் பங்கீட்டில் முன்னுரிமை அளித்தார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்தப் பங்கீட்டில் நீதி வழங்கப்படவில்லை; அல்லாஹ்வின் திருப்தி நாடப்படவில்லை" என்று சொன்னார். உடனே நான், "இதை நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிப்பேன்" என்று சொல்லிவிட்டு, அவர்களிடம் சென்று அவர் சொன்னதைத் தெரிவித்தேன். இதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் சிவப்புச்சாயம் போல் மாறிவிட்டது. பிறகு "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீதியுடன் நடந்து கொள்ளாவிட்டால் வேறுயார் தாம் நீதியுடன் நடந்துகொள்வார்கள்? அல்லாஹ் (இறைத்தூதர்) மூசா (அலை) அவர்களுக்கு கருணை புரிவானாக! அவர்கள் இதைவிட அதிகமாக மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும், (அதைச்) சகித்துக் கொண்டார்கள்" என்று கூறினார்கள். நான் "உறுதியாக! இனிமேல் எந்தச் செய்தியையும் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லமாட்டேன்" என்று சொன்னேன். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள் யமன் நாட்டிலிருந்து மண் அகற்றப்பட்டிராத தங்கக்கட்டி ஒன்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அனுப்பிவைத்தார்கள். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள்: அக்ரஉ பின் ஹாபிஸ் அல்ஹன்ழலீ (ரலி), உயைனா பின் பத்ர் அல்ஃபஸாரீ (ரலி), பனூ கிலாப் குலத்தாரில் ஒருவரான அல்கமா பின் உலாஸா அல்ஆமிரீ (ரலி) மற்றும் பனூ நப்ஹான் குலத்தாரில் ஒருவரான ஸைத் அல்கைர் அத்தாயீ (ரலி) ஆகியோரே அந்நால்வரும். இதைக் கண்ட குறைஷி (முஸ்லிம்)கள் கோபமடைந்தனர். "நஜ்த்வாசிகளின் தலைவர்களுக்குக் கொடுக்கிறீர்கள்; எங்களை விட்டுவிடுகிறீர்களே!" என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(புதிதாக இஸ்லாத்தைத் தழுவியுள்ள) அவர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே நான் இவ்வாறு செய்தேன்" என்று கூறினார்கள். அப்போது அடர்த்தியான தாடி கொண்ட, கன்னங்கள் தடித்திருந்த, கண்கள் பஞ்சடைந்த, நெற்றி புடைத்திருந்த, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த மனிதர் ஒருவர் வந்து, "முஹம்மதே! அல்லாஹ்விற்கு அஞ்சுவீராக!" என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானே (அல்லாஹ்விற்கு) மாறுசெய்தால் வேறெவர்தாம் அவனுக்குக் கீழ்ப்படிவார்? பூமியில் வசிப்பவர்கள் விஷயத்தில் அவ(ர்களைப் படைத்த இறைவ)ன் என்மீது நம்பிக்கை வைத்திருக்க, நீங்கள் என்மீது நம்பிக்கை வைக்கமாட்டீர்களா?" என்று கேட்டார்கள். பின்னர் அந்த மனிதர் திரும்பிச் சென்றபோது, அங்கிருந்த மக்களில் ஒருவர் அவரைக் கொல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். (அனுமதி கேட்டவர் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் என்றே கருதப்படுகிறது.) பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இ(வ்வாறு என்னிடம் பேசிய அ)ந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய தொண்டைக்குழிகளைத் தாண்டிச் செல்லாது; இஸ்லாமியர்களைக் கொல்வார்கள்: சிலை வணக்கம் செய்பவர்களை விட்டுவிடுவார்கள். (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (மறுபக்கமாக) வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் "ஆத்" கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நான் நிச்சயம் அழித்துவிடுவேன்" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கருவேல இலையால் பதனிடப்பட்ட தோல்பை ஒன்றில், மண் அகற்றப்பட்டிராத தங்கக்கட்டி ஒன்றை யமனிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அனுப்பிவைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டார்கள்: உயைனா பின் ஹிஸ்ன் (ரலி), அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி), ஸைத் அல்கைல் (ரலி). நான்காமவர் அல்கமா பின் உலாஸா (ரலி); அல்லது ஆமிர் பின் அத்துஃபைல் (ரலி). அப்போது நபித்தோழர்களில் ஒருவர், "இதைப் பெறுவதற்கு இவர்களைவிடத் தகுதி வாய்ந்தவர்கள் நாம்தாம்" என்று கூறினார். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், "நான் வானத்திலுள்ளவனின் நம்பிக்கைக்குரியவனாயிருக்க, என்மீது நீங்கள் நம்பிக்கை வைக்கமாட்டீர்களா? காலையிலும் மாலையிலும் எனக்கு வானத்தின் செய்திகள் வந்தவண்ணமுள்ளன" என்று சொன்னார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் உப்பிய, நெற்றி புடைத்த,அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த, கீழாடையை வரிந்து கட்டியிருந்த மனிதர் ஒருவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்" என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், "உமக்குக் கேடுதான். பூமியிலிருப்பவர்களில் அல்லாஹ்வை அஞ்சுவதற்கு நானல்லவா மிகவும் அருகதை வாய்ந்தவன்?" என்று கேட்டார்கள். பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றார். அப்போது காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் அவருடைய தலையைக் கொய்துவிடட்டுமா?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "(அவரைக் கொல்ல) வேண்டாம். அவர் தொழக்கூடியவராக இருக்கலாம்" என்று சொன்னார்கள். அதற்கு காலித் (ரலி) அவர்கள், "எத்தனையோ தொழுகையாளிகள் தமது இதயத்தில் இல்லாததை நாவில் மொழிகின்றார்கள்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்களின் இதயங்களைத் துளையிட்டுப் பார்க்கவோ அவர்களின் வயிறுகளைக் கிழித்துப் பார்க்கவோ எனக்கு உத்தரவிடப்படவில்லை" என்று கூறினார்கள். பின்னர் திரும்பிச் சென்றுகொண்டிருந்த அந்த மனிதரைப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை இனிமையாக ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (மறுபக்கமாக) வெளியேறி விடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து (சுவடே தெரியாமல்) வெளியேறிவிடுவார்கள்" என்று கூறினார்கள். "நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் "ஸமூத்" கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போல அவர்களை நிச்சயம் அழித்துவிடுவேன்" என்று கூறியதாகவும் நான் எண்ணுகிறேன். அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "(அல்கமா பின் உலாஸாவா, அல்லது ஆமிர் பின் அத்துஃபைலா என்ற ஐயப்பாடின்றி) அல்கமா பின் உலாஸா என்றே இடம்பெற்றுள்ளது. ஆமிர் பின் அத்துஃபைல் (ரலி) அவர்களது பெயர் காணப்படவில்லை. மேலும் ("நெற்றி புடைத்த" என்பதைக் குறிக்க) "நாத்திஉல் ஜப்ஹா" எனும் சொற்றொடரே இடம்பெற்றுள்ளது. "நாஷிஸுல் ஜப்ஹா" எனும் சொற்றொடர் இல்லை. மேலும், இந்த அறிவிப்பில், "அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் எழுந்து வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அவரது தலையைக் கொய்துவிடட்டுமா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேண்டாம்" என்று கூறிவிட்டார்கள். பின்னர் அந்த மனிதர் திரும்பிச் சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் வாள்" (என்று சொல்லப்பட்ட) காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் எழுந்து வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அவரது தலையைக் கொய்துவிடட்டுமா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேண்டாம்" என்று கூறிவிட்டு, "இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை இனிமையாக, அநாயசமாக ஓதுவார்கள்" என்று கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. மேலும், "நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் "ஸமூத்" கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நிச்சயம் அழித்துவிடுவேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக நான் கருதுகிறேன் என அறிவிப்பாளர் உமாரா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("ஹவாஸின்") போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக்கொண்டிருந்தபோது அவர்களின் அருகே நாங்கள் இருந்தோம். அப்போது "பனூ தமீம்" குலத்தைச் சேர்ந்த "துல்குவைஸிரா" எனும் மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நீதியுடன் நடந்துகொள்ளுங்கள்" என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள், "உனக்குக் கேடுதான். நான் நீதியுடன் நடந்துகொள்ளவில்லையென்றால் வேறு யார்தாம் நீதியுடன் நடந்துகொள்வார்? நான் நீதியுடன் நடந்துகொள்ளவில்லையென்றால் நான் இழப்புக்குள்ளாகி நஷ்டமடைந்துவிடுவேன்" என்று பதிலளித்தார்கள். உடனே உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இவரது விவகாரத்தில் எனக்கு அனுமதி கொடுங்கள். இவரது கழுத்தைக் கொய்துவிடுகிறேன்" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவரை விட்டுவிடுங்கள். நிச்சயமாக, இவருக்குத் தோழர்கள் சிலர் இருக்கின்றார்கள். அவர்களது தொழுகையுடன் உங்களது தொழுகையையும், அவர்களது நோன்புடன் உங்களது நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களது தொழுகையையும் உங்களது நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆயினும்,) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களது கழுத்தெலும்பை (தொண்டையை)த் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளிவந்ததற்கான இரத்தக்குறி எதுவும் இருக்கிறதா என்று) அம்பின் முனை பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு (அம்பில்) அதன் (முனையைப் பொருத்துவதற்குப் பயன்படும்) நாண் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு, அம்பின் (அடிப்பாகக்) குச்சி பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணப் படாது. பிறகு, அம்பின் இறகு பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணப்படாது. அம்பானது சாணத்தையும் இரத்தத்தையும் (அவை தன்மீது படாதவாறு) முந்திக்கொண்டு விட்டிருக்கும். அவர்களின் அடையாளம் ஒரு கறுப்புநிற மனிதராவார். அவருடைய இரு கை புஜங்களில் ஒன்று "பெண்ணின் கொங்கை போன்றிருக்கும்" அல்லது "துடிக்கும் இறைச்சித்துண்டு போன்றிருக்கும்". அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் புறப்படுவார்கள்" என்று சொன்னார்கள். நான் இந்த நபிமொழியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடமிருந்து கேட்டேன் என்று உறுதி அளிக்கின்றேன். மேலும், அந்தக் கூட்டத்தாருடன் அலீ (ரலி) அவர்கள் போர் புரிந்தார்கள்.அப்போது நானும் அலீயுடன் இருந்தேன். அலீ (ரலி) அவர்கள், (நபி (ஸல்) அவர்கள் அடையாளம் கூறிய) அந்த மனிதரைக் கொண்டுவரும்படி கட்டளையிட, அவ்வாறே அவர் தேடப்பட்டு கொண்டு வரப்பட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட வர்ணனையின்படியே அவர் இருப்பதை நான் பார்த்தேன் என்றும் உறுதி கூறுகின்றேன். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றால், (உண்மையில் அவர்கள் சொன்னதையே அறிவிக்கிறேன். ஏனெனில்,) நான் வானத்திலிருந்து கீழே விழுந்துவிடுவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது அவர்கள் சொல்லாததைப் புனைந்து சொல்வதைவிட எனக்கு விருப்பமானதாகும். எனக்கும் உங்களுக்கும் இடையே உள்ள ஒரு விவகாரத்தில் நான் உங்களிடம் பேசினால் (ராஜதந்திரத்தைப் பயன்படுத்தாமல் இருக்கமுடியாது. ஏனெனில்,) போர் என்பது சூழ்ச்சிதான் (என்பதை நினைவில் கொள்ளவும்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் இளம் வயதினராயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச்சிறந்த சொல்லை (குர்ஆன் வசனங்களை) எடுத்துச்சொல்வார்கள். குர்ஆனை ஓதுவார்கள். வேட்டைப் பிராணியை விட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள். (இஸ்லாமிய ஆட்சியாளர்களே!) அவர்களை நீங்கள் எங்கு சந்தித்தாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களைக் கொன்றவர்களுக்கு, அவர்களைக் கொன்றதற்காக மறுமை நாளில் நற்பலன் கிடைக்கும்" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்றுவிடுவார்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :
அபீதா பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அலீ (ரலி) அவர்கள் காரிஜிய்யாக்களைப் பற்றிக் கூறுகையில், "அவர்களிடையே ஊனமான கையுடைய ஒரு மனிதர் இருப்பார். நீங்கள் வரம்பு மீறிவிடுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லையாயின், அவர்களைக் கொல்பவர்களுக்கு அல்லாஹ் தன் தூதரின் நாவினால் வாக்களித்துள்ள நற்பலனை உங்களுக்கு நான் அறிவித்துவிடுவேன்" என்று கூறினார்கள். நான், "இதைத் தாங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அலீ (ரலி) அவர்கள், "ஆம்; கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக! ஆம்; கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக! ஆம்; கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக!" என்று (மூன்று முறை) சொன்னார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ("ஊனமான கையுடைய மனிதர்" என்பதைக் குறிக்க ஹதீஸின் மூலத்தில்) "முக்தஜுல் யதி" அல்லது "மூதனுல் யதி" அல்லது "மஸ்தூனுல் யதி" எனும் சொற்றொடர்கள் ஆளப்பட்டுள்ளன. - மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், அறிவிப்பாளர் அபீதா (ரஹ்) அவர்கள் "நான் செவியுற்ற செய்தியைத்தான் உங்களுக்கு அறிவிப்பேன்" என்று கூறிவிட்டு,அலீ (ரலி) அவர்கள் தொடர்பான மேற்கண்ட ஹதீஸை அறிவித்தார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எனக்குப் பின் என் சமுதாயத்தில்" ("அல்லது எனக்குப் பின் விரைவில் என் சமுதாயத்தில்") ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய கழுத்துகளைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போன்று, மார்க்கத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்று விடுவார்கள். பிறகு அதன் பக்கம் திரும்பமாட்டார்கள். அவர்கள்தாம் மனிதர்கள் மற்றும் உயிரினங்களிலேயே மோசமானவர்கள் ஆவர். இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இந்த ஹதீஸை அபூதர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் ஹகம் அல்கிஃபாரீ (ரலி) அவர்களுடைய சகோதரர் ராஃபிஉ பின் அம்ர் அல்கிஃபாரீ (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, "அபூதர் (ரலி) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற இன்னின்ன ஹதீஸ்கள் என்ன?" என்று கூறிவிட்டு, மேற்கண்ட ஹதீஸையும் அவர்களிடம் சொன்னேன். அப்போது ராஃபிஉ பின் அம்ர் (ரலி) அவர்கள், "நானும் இந்த ஹதீஸை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கிழக்கு (இராக்) திசையிலிருந்து வழிதவறிய ஒரு கூட்டத்தார் கிளம்புவார்கள். அவர்களுடைய தலைகள் மழிக்கப்பட்டு (மொட்டையாக) இருக்கும். இதை சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் என் வீட்டாரிடம் திரும்பிச்செல்லும் போது எனது படுக்கையின் மீது பேரீச்சம்பழம் கிடப்பதைப் பார்த்து, அதை உண்பதற்காக எடுப்பதுண்டு. பின்னர் அது தர்மப்பொருளாக இருக்குமோ என்று நான் அஞ்சி, உடனே அதைப் போட்டுவிடுகின்றேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இவை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக.! நான் எனது வீட்டாரிடம் திரும்பிச் செல்லும் போது "எனது படுக்கையின் மீது" (அல்லது "எனது வீட்டில்") பேரீச்சம் பழம் கிடப்பதைப் பார்த்து, அதை உண்பதற்காக எடுப்பதுண்டு. பின்னர் அது "தர்மப்பொருளாக" (அல்லது "தர்மப்பொருட்களில் ஒன்றாக") இருக்குமோ என்று அஞ்சி உடனே அதைப் போட்டுவிடுகின்றேன். அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தைக் கண்டபோது, "இது தர்மப்பொருளாக இருக்காது என்றிருந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்" என்றார்கள். அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாலையில் (கிடந்த) ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றபோது, "இது தர்மப் பொருளாக இருக்காது என்றிருந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்" என்றார்கள். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தைக் கண்டபோது, "இது தர்மப்பொருளாக இருக்காது என்றிருந்தால், இதை நான் சாப்பிட்டிருப்பேன்" என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் அப்துல் முத்தலிப் பின் ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "என் தந்தை ரபிஆ பின் அல் ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) மற்றும் அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) ஆகியோர் என்னிடமும் ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடமும் "நீங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்" என்று கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும் அதில், அலீ (ரலி) அவர்கள் தமது மேல்துண்டைப் போட்டு அதன் மீது சாய்ந்து படுத்துக்கொண்டார்கள். மேலும், "நான் ஹசனின் தந்தை (அபுல் ஹசன்) ஆவேன்; கருத்துடையவனும் ஆவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறியனுப்பிய விஷயத்திற்கு உங்களுடைய புதல்வர்கள் இருவரும் பதில் கொண்டுவரும் வரை இவ்விடத்தைவிட்டு நான் நகரமாட்டேன்" என்று அலீ (ரலி) அவர்கள் கூறியதாகவும் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த ஹதீஸில் பின்வருமாறும் காணப்படுகிறது: பிறகு எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இந்தத் தர்மப்பொருட்கள், மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள்தாம். இவை முஹம்மதுக்கோ முஹம்மதின் குடும்பத்தாருக்கோ அனுமதிக்கப்படவில்லை" என்று கூறினார்கள். மேலும், "மஹ்மியா பின் ஜஸ்உவை என்னிடம் வரச் சொல்லுங்கள்" என்றார்கள். அவர் பனூ அசத் குலத்தைச் சேர்ந்தவராவார். அவரை போரில் கிடைத்த செல்வங்களில் ஐந்தில் ஒரு பாக (குமுஸ்) நிதியைப் பாதுகாக்கும் பொறுப்பில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நியமித்திருந்தார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, "உணவேதும் உள்ளதா?" என்று கேட்டார்கள். நான், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! எங்களிடம் ஆட்டின் ஓர் எலும்பைத் தவிர வேறெந்த உணவும் இல்லை, அல்லாஹ்வின் தூதரே! அந்த எலும்புகூட என் முன்னாள் அடிமைப் பெண்ணுக்குத் தர்மமாக வழங்கப்பட்டதாகும்" என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அதை எனக்கு அருகில் வை! அது தனது இடத்தை (அன்பளிப்பின் தகுதியை) அடைந்துவிட்டது" என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: பரீரா (ரலி) அவர்கள் தமக்குத் தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சியை நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக அளித்தார்கள். அப்போது (இது தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சியாயிற்றே என்று வினவப்பட்டது. அதற்கு) நபி (ஸல்) அவர்கள் "இது பரீராவுக்குத்தான் தர்மமாகும்; ஆனால், நமக்கு அன்பளிப்பாகும்" என்றார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் மாட்டிறைச்சி கொண்டுவரப்பட்டது. அப்போது "இது பரீராவுக்குத் தர்மமாகக் கொடுக்கப்பட்டதாகும்" என்று சொல்லப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இது பரீராவுக்குத்தான் தர்மமாகும்; ஆனால், நமக்கு அன்பளிப்பாகும்"என்றார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தர்ம ஆடு ஒன்றை எனக்கு அனுப்பிவைத்தார்கள். அதில் சிறிது இறைச்சியை நான் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றபோது, "உங்களிடம் (உண்பதற்கு) ஏதும் உள்ளதா?" எனக் கேட்டார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், "இல்லை. நீங்கள் நுஸைபா (உம்மு அத்திய்யா)வுக்கு (தர்மமாக) அனுப்பிய ஆட்டின் ஒரு பகுதியை அவர் நமக்கு அனுப்பிவைத்தார். அதைத் தவிர வேறொன்றுமில்லை" என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது தனது இடத்தை (அன்பளிப்பின் தகுதியை) அடைந்துவிட்டது" என்று சொன்னார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஓர் உணவுப் பொருள் கொண்டுவரப்படும்போது, அது குறித்து (இது அன்பளிப்பா, தர்மமா என்று) கேட்பார்கள். அது அன்பளிப்பு என்று பதிலளிக்கப்பட்டால், அதைச் சாப்பிடுவார்கள்; தர்மம் என்று கூறப்பட்டால் அதைச் சாப்பிடமாட்டார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களிடம் ஸகாத் வசூலிப்பவர் வந்தால், உங்கள்மீது திருப்தி கொண்ட நிலையிலேயே அவர் உங்களிடமிருந்து திரும்பிச் செல்லட்டும். இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :