72 - வேட்டை மற்றும் அறுத்தல்
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: இறகு இல்லாத அம்பின் (‘மிஅராள்’) மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள். ‘‘பிராணி அம்பின் முனையால் கொல்லப்பட்டிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்ட(து போன்ற)தேயாகும். (எனவே, அதைச் சாப்பிடா தீர்கள்)” என்று பதிலளித்தார்கள். நான் அவர்களிடம் (பயிற்சியளிக் கப்பட்ட) நாய், வேட்டையாடிய பிராணி குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘உங்களுக்காக அது கவ்விக் கொண்டு வருவதை நீங்கள் சாப்பிடுங்கள். ஏனெனில், (பழக்கப்படுத்தப்பட்ட) நாய் (வேட்டைப் பிராணியைக்) கவ்விப் பிடிப்பதும் (அதை முறைப்படி) அறுப்பதாகவே அமையும். ‘உங்களது நாயுடன்’ அல்லது ‘உங்கள் நாய்களுடன்’ வேறொரு நாயையும் நீங்கள் கண்டு அந்த நாயும் உங்களது நாயுடன் சேர்ந்து வேட்டைப் பிராணியைப் பிடித்துக் கொன்றிருக்குமோ என்று நீங்கள் அஞ்சினால் அதை உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொன்னது உங்களது நாயை அனுப்பியபோதுதான். வேறொரு நாய்க்காக அல்ல” என்று பதிலளித்தார்கள்.3 அத்தியாயம் :
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் இறகு இல்லாத அம்பு (‘மிஅராள்’ மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அதன் முனையால் (அந்தப் பிராணியை) நீங்கள் தாக்கியிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கிக் கொன்றிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டது(போல்)தான். எனவே, (அதைச்) சாப்பிடாதீர்கள்” என்று சொன்னார்கள். நான், ‘‘எனது நாயை (வேட்டைக்காக) அவிழ்த்துவிட்டேன். (அது வேட்டையாடிக் கொண்டுவருவதை நான் சாப்பிடலாமா)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அந்த நாயை அவிழ்த்துவிட்டிருந்தால் (அது வேட்டையாடிக் கொண்டுவருவதை) நீங்கள் சாப்பிடுங்கள்” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘அந்த நாய் வேட்டைப் பிராணியைத் தின்றிருந்தால்...?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘அப்படியென்றால், அதை உண்ணாதீர்கள். ஏனெனில், அது உங்களுக்காக அதைக் கொண்டு வரவில்லை; தனக்காகவே கவ்விப் பிடித்திருக்கிறது” என்று பதிலளித்தார்கள். ‘‘நான் எனது நாயை அனுப்புகிறேன். (வேட்டையாடித் திரும்பி வரும்போது) அதனுடன் வேறொரு நாயையும் பார்க்கிறேன் என்றால்... (இப்போது என்ன செய்வது? அது வேட்டையாடி கொண்டு வந்த பிராணியை நான் உண்ணலாமா?)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறியது உங்களது நாய்க்காகத்தான்; மற்றொரு நாய்க்கு நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை” என்று பதிலளித்தார்கள்.4 அத்தியாயம் :
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பயிற்சியளிக்கப்பட்ட நாய்களை (வேட்டைக்காக) அனுப்புகிறோம். (அவை வேட்டையாடிக் கொண்டுவருகின்றவற்றை நாங்கள் உண்ணலாமா?)” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவை உங்களுக்காக (வேட்டையாடி)க் கவ்விப்பிடித்தவற்றை நீங்கள் சாப்பிடுங்கள்” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலும் சரியே” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘நாங்கள் இறகு இல்லாத அம்பை (வேட்டைப் பிராணிகள்மீது) எய்கிறோமே! (அதன் சட்டம் என்ன?)” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அது (தனது முனையால்) குத்தி (வீழ்த்தி)யதைச் சாப்பிடுங்கள். அந்த அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கப்பட்டதைச் சாப்பிடாதீர்கள்” என்று சொன்னார்கள்.5 அத்தியாயம் :
அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், ‘‘அல்லாஹ்வின் நபியே! நாங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரின் நாட்டில் இருக்கிறோம். அவர்களுடைய பாத்திரத்தில் நாங்கள் சாப்பிடலாமா?6 மேலும், வேட்டைப் பிராணிகள் உள்ள ஒரு நாட்டில் நாங்கள் இருக்கின்றோம். நான் எனது வில்லாலும், பயிற்சியளிக்கப்படாத மற்றும் பயிற்சி யளிக்கப்பட்ட எனது நாயை ஏவியும் வேட்டையாடுவேன்; (இவற்றில்) எது எனக்கு (சட்டப்படி) தகும்?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் குறிப்பிட்ட வேதக்காரர்களின் (பாத்திரத்தில் உண்ணும்) விஷயம் எப்படியெனில், அவர்களின் பாத்திரமல்லாத வேறு பாத்திரம் உங்களுக்குக் கிடைத்தால் அவர்களின் பாத்திரத்தில் நீங்கள் சாப்பிடாதீர்கள். வேறு பாத்திரம் கிடைக்கா விட்டால் கழுவிவிட்டு அவர்களின் பாத்திரங்களில் உண்ணுங்கள். அல்லாஹ்வின் பெயர் கூறி உங்கள் வில்லால் நீங்கள் வேட்டையாடிய பிராணியை உண்ணுங்கள். பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பி வேட்டையாடிய பிராணியையும் சாப்பிடுங்கள். பயிற்சியளிக்கப்படாத உங்கள் நாயை அனுப்பி நீங்கள் வேட்யைôடிய பிராணியை (அது இறப்பதற்கு முன்பாக) நீங்கள் (அல்லாஹ்வின் பெயர் கூறி) அறுக்க முடிந்தால் (அதைச்) சாப்பிடுங்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் சிறு கற்களை எறிந்து (வேட்டை யாடிக்)கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன். அவரிடம், ‘‘சிறு கற்களை எறியாதே. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்’ அல்லது ‘சிறுகற்களை எறிவதை வெறுத்து வந்தார்கள்’. மேலும், நபி அவர்கள் ‘அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாது; எந்த எதிரியும் வீழ்த்தப்படமாட்டான். மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்துவிடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)’ என்று சொன்னார்கள்” எனக் கூறினேன். அதன் பிறகு ஒருமுறை அதே மனிதர் சிறு கற்களை எறிந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள்’ அல்லது ‘சிறு கற்கள் எறிவதை வெறுத்தார்கள்’ என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால், நீயோ (அதை அலட்சியம் செய்துவிட்டு) சிறு கற்களை எறிகிறாயே? நான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்” என்று சொன்னேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கால்நடைகளைப் பாதுகாப்பதற் காகவோ வேட்டையாடுவதற்காகவோ அல்லாமல் எவர் நாய் வைத்திருக்கிறாரோ அவருடைய நற்செய(ன் நன்மை ‘)ருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு ‘கீராத்’கள் அளவு குறைந்துவிடும்.8 இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் நாய் வைத்திருக்கிறாரோ அவருடைய (நற்செயல்களுக்குரிய) நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு ‘கீராத்’கள் அளவு குறைந்துவிடும்; பிராணிகளை வேட்டையாடும் நாயையும், கால்நடைகளைப் பாதுகாக்கும் நாயையும் தவிர. இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் நாய் வைத்திருக்கிறாரோ அவருடைய நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு ‘கீராத்’கள் அளவுக்குக் குறைந்துவிடும்; கால்நடைகளைப் பாதுகாக்கும் நாயையும் வேட்டையாடும் நாயையும் தவிர! இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘நாங்கள் இந்த (வேட்டை) நாய்களின் மூலம் வேட்டையாடும் ஒரு சமுதாயத்தார் ஆவோம்” என்று நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறி (அதன் சட்டம் என்னவென்று) வினவினேன். அதற்கு அவர்கள், ‘‘பயிற்சியளிக்கப் பட்ட உங்கள் (வேட்டை) நாய்களை அல்லாஹ்வின் பெயர் சொல்லி (வேட்டை யாட) நீங்கள் அனுப்பியிருந்தால் உங்களுக்காக அவை கவ்விப் பிடித்து வைத்திருப்பவற்றை நீங்கள் உண்ணலாம்; அவை அதைக் கொன்றுவிட்டாலும் சரியே! நாய் தின்றுவிட்டதை மட்டும் உண்ணாதீர்கள்! ஏனென்றால், அது தனக்காக அதைப் பிடித்துவைத்திருக்குமோ என நான் அஞ்சுகிறேன். இவ்வாறே வேறு நாய்கள் அதனுடன் கலந்துவிட்டிருந்தாலும் (அது வேட்டையாடிக் கொண்டுவரும் பிராணியை) உண்ணாதீர்கள்” என்று கூறினார்கள்.9 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி, உங்களது (வேட்டை) நாயை (வேட்டையாட) அனுப்பி, அது வேட்டைப் பிராணியைக் கவ்விப் பிடித்துவைத்துக் கொன்றுவிட்டிருந்தால் அதை நீங்கள் உண்ணலாம். அது (அந்தப் பிராணியைத்) தின்றிருந்தால் நீங்கள் அதை உண்ணாதீர் கள். ஏனெனில், அப்போது அது அந்தப் பிராணியைத் தனக்காகவே பிடித்து வைத்துக்கொண்டுள்ளது. அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பப் படாத பல நாய்களுடன் உங்கள் வேட்டை நாயும் கலந்துவிட அவை (அப்பிராணி யைப்) பிடித்துவைத்துக் கொன்றுவிட்டி ருந்தால் அதை நீங்கள் உண்ணாதீர்கள். ஏனெனில், அவற்றில் எது அப்பிராணி யைக் கொன்றது என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் வேட்டைப் பிராணியின் மீது அம்பெய்து ஒன்று அல்லது இரண்டு நாட்கள் கழித்து அதன் மீது உங்கள் அம்பின் அடையாளத்தைத் தவிர வேறெதுவுமில்லாதிருக்க நீங்கள் அதைக் கண்டால், அதை நீங்கள் உண்ணலாம். அது தண்ணீரில் விழுந்துவிட்டால் அதை நீங்கள் உண்ணாதீர்கள். (ஏனெனில், அது தண்ணீரில் விழுந்ததால் இறந்திருக்கலாம்.) இதை அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், ‘‘ஒருவர் ஒரு வேட்டைப் பிராணியின் மீது அம்பெய்து, (அது தலைமறை வாகிவிட) இரண்டு அல்லது மூன்று நாட்கள் அவர் அதன் கால்சுவட்டைத் தொடர்ந்து சென்று தமது அம்பு அதன் உடல் இருக்க, அது இறந்திருக்கக் கண்டால் (அவர் அதை உண்ணலாமா?)” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(கெட்டுப்போகாமல் இருக்கையில்) அவர் விரும்பினால் உண்ணலாம்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்வின் பெயர் கூறி எனது (வேட்டை) நாயை (வேட்யைôடி வர) அனுப்புகிறேன் (என்றால் அதன் சட்டம் என்ன?)” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் சொல்லி அனுப்ப, அது (ஒரு பிராணியைப்) பிடித்து அதைக் கொன்றது மட்டுமன்றி, (அதிலிருந்து சிறிது) தின்றுவிட்டால், அதை நீங்கள் உண்ணாதீர்கள்! ஏனெனில், அப்போது அது (அப்பிராணியைத்) தனக்காகவே கவ்விக்கொண்டுள்ளது” என்று பதிலளித்தார்கள். ‘‘நான் எனது நாயை (வேட்டையாட) அனுப்புகிறேன். (வேட்டையாடித் திரும்பும் போது) அதனுடன் வேறொரு நாயையும் பார்க்கிறேன். அவ்விரு நாய்களில் எந்த நாய் அந்தப் பிராணியைப் பிடித்தது என்பது எனக்குத் தெரியாது (இந்நிலையில் என்ன செய்வது?)” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(அதை) நீங்கள் உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறியது உங்களது நாயின் மீதுதான்; மற்றதன்மீது நீங்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லவில்லை” என்று பதிலளித்தார்கள். இறகு இல்லாத அம்பின் (‘மிஅராள்’) மூலம் வேட்டையாடுவது குறித்து நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அம்பின் முனையால் அதை நீங்கள் தாக்கிக் கொன்றிருந்தால், (அதை) நீங்கள் உண்ணலாம். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கியிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டது தான் (என்றே கருதப்படும்). ஆகவே, நீங்கள் (அதை) உண்ணாதீர்கள்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் (தூதர்) அவர்களிடம் (வேட்டையாடுவது குறித்து) வினவினேன். ‘‘நாங்கள் இந்த நாய்களின் மூலம் வேட்டையாடுகின்ற சமுதாயத்தார் ஆவோம். (ஆகவே, அதன் சட்டத்தை எங்களுக்குக் கூறுங்கள்)” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘‘பயிற்சி அளிக்கப் பட்ட உங்கள் நாய்களை அல்லாஹ்வின் பெயர் கூறி நீங்கள் அனுப்பியிருந்தால் அவை உங்களுக்காகக் கவ்விக் கொண்டு வந்தவற்றை நீங்கள் உண்ணலாம். ஆனால், நாய் (அதில் சிறிது) தின்றுவிட்டிருந்தால் (அதை) நீங்கள் உண்ணாதீர்கள். ஏனெனில், அப்போது நாய் (அப்பிராணியைத்) தனக்காகப் பிடித்து வைத்திருக்கலாம் என்று நான் அஞ்சுகிறேன். அதனுடன் வேறொரு நாய் கலந்துவிட்டால் (அவை வேட்டையாடிக் கொண்டுவரும் பிராணியை) நீங்கள் உண்ணாதீர்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாவது.: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரின் நாட்டில் வசிக்கின் றோம்; அவர்களின் பாத்திரத்தில் சாப்பிடு கின்றோம். மேலும், நான் வேட்டைப் பிராணிகள் நிறைந்த ஒரு நாட்டில் வசிக்கின்றேன். நான் எனது வில்லாலும் வேட்டையாடுகின்றேன். பயிற்சியளிக்கப் பட்ட எனது நாயை அனுப்பியும் வேட்டை யாடுகின்றேன்; பயிற்சியளிக்கப்படாத நாயின் மூலமாகவும் வேட்டையாடுகின் றேன். ஆகவே, இவற்றில் எது எங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: வேதம் வழங்கப்பெற்றவர்களின் நாட்டில் நீங்கள் வசிப்பதாகவும் அவர் களின் பாத்திரத்தில் உண்பதாகவும் நீங்கள் சொன்னதைப் பொறுத்த அளவில், அவர்களின் பாத்திரமல்லாத வேறு பாத்திரம் உங்களுக்குக் கிடைத்தால் அவர்களின் பாத்திரத்தில் நீங்கள் உண்ணாதீர்கள். (வேறு பாத்திரம்) உங்களுக்குக் கிடைக்காவிட்டால், அதைக் கழுவிவிட்டுப் பின்னர் அதில் உண்ணுங்கள். வேட்டைப் பிராணிகள் நிறைந்த ஒரு நாட்டில் நீங்கள் வசிப்பதாகச் சொன்னதைப் பொறுத்த வரை, உங்கள் வில்லால் நீங்கள் வேட்டையாடியதை நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி (அறுத்து) பிறகு உண்ணலாம். பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் நாயின் மூலம் நீங்கள் வேட்டையாடியதை அல்லாஹ்வின் பெயர் கூறி நீங்கள் உண்ணலாம். பயிற்சியளிக்கப்படாத உங்கள் நாயின் மூலம் நீங்கள் வேட்டையாடியது அறுப்பதற்கு ஏதுவாக (உயிர் பிரியாத நிலையில்) உங்களுக்குக் கிடைத்திருந்தால் அதை (அறுத்து) நீங்கள் உண்ணலாம்.11 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ‘மர்ருழ் ழஹ்ரான்’ எனுமிடத்தில் முயல் ஒன்றைத் துரத்திச் சென்றோம். மக்கள் அதைப் பிடிக்க முயன்று இறுதியில் களைத்துவிட்டனர். நான் அதைப் பிடிக்க முயன்று இறுதியில் பிடித்தேவிட்டேன். அதை எடுத்துக் கொண்டு அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் ‘அதன் பின் சப்பைகளை’ அல்லது ‘அதன் இரு தொடைகளை’ நபி (ஸல்) அவர்களுக்கு (அன்பளிப்பாக) அனுப்பிவைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள்.12 அத்தியாயம் :
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களுடன் (பயணத்தில்) இருந்தேன். நான் மக்கா (செல்லும்) சாலை ஒன்றில் இருந்தபோது (உம்ராவுக்காக) ‘இஹ்ராம்’ கட்டியிருந்த என் தோழர்கள் சிலருடன் பின்தங்கிவிட்டேன். அப்போது நான் இஹ்ராம் கட்டியிருக்கவில்லை. இந்நிலையில் நான் (வழியில்) காட்டுக் கழுதையொன்றைக் கண்டு எனது குதிரையின் மீது நன்கு அமர்ந்துகொண்டு என் தோழர்களிடம் என் சாட்டையை எடுத்துத் தரும்படி கேட்டேன். அவர்கள் (இஹ்ராம் கட்டியிருந்ததால் எடுத்துத் தர) மறுத்துவிட்டார்கள். அவர்களிடம் எனது ஈட்டியை எடுத்துத் தரும்படி கேட்டேன். அதற்கும் அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஆகவே, நானே அதையெடுத்து அந்தக் கழுதையைத் தாக்கிக் கொன்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர் அதிலிருந்து உண்டார் கள். வேறுசிலர் (உண்ண) மறுத்துவிட்டனர். அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போய்ச்சேர்ந்தபோது அதைப்பற்றி அவர்களிடம் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘இதுவெல்லாம் அல்லாஹ் உங்களுக்கு உண்ணக்கொடுத்த உணவாகும்” என்று பதிலளித்தார்கள்.13 அத்தியாயம் :
அதாஉ பின் யசார் (ரஹ்) அவர்கள் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து இதே ஹதீஸை அறிவித்துள்ளார்கள். அந்த அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்களிடம் அதன் இறைச்சியில் ஏதேனும் (மீதி) உள்ளதா?” என்று கேட்டார்கள் என (கூடுதலாக) வந்துள்ளது. அத்தியாயம் :
அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் மக்கா வுக்கும் மதீனாவுக்குமிடையே (‘அல்காஹா’ எனுமிடத்தில்) இருந்தேன். அப்போது மக்கள் (உம்ராவுக்காக) ‘இஹ்ராம்’ கட்டியிருந்தார்கள். நான் ‘இஹ்ராம்’ கட்டாமல் குதிரைமீது (பயணம் செய்து கொண்டு) இருந்தேன். நான் அதிகமாக மலையேறுபவனாக இருந்தேன். இந்நிலையில் மக்கள் ஆவலுடன் எதையோ பார்ப்பதைக் கண்டேன். நானும் கூர்ந்து கவனிக்கலானேன். அப்போது அங்கு ஒரு காட்டுக் கழுதை தென்பட்டது. நான் மக்களிடம், ‘‘என்ன இது?” என்று கேட்டேன். அவர்கள் (இஹ்ராம் கட்டியிருந்த காரணத்தால்) ‘‘எங்களுக்குத் தெரியாது” என்றனர். நான், ‘‘இது ஒரு காட்டுக் கழுதை” என்று சொன்னேன். அப்போது மக்கள், ‘‘நீங்கள் பார்த்தது அதுதான்” என்று கூறினார்கள். நான் என்னுடைய சாட்டையை மறந்துவிட்டிருந்தேன். ஆகவே, அவர்களிடம் ‘‘என் சாட்டையை எடுத்து என்னிடம் கொடுங்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நாங்கள் உங்களுக்கு இந்த விஷயத்தில் உதவமாட்டோம்” என்றனர். உடனே நானே இறங்கி அதை எடுத்தேன். பிறகு காட்டுக் கழுதையைப் பின்தொடர்ந்து சென்று தாக்கினேன். சிறிது நேரத்திற்குள் அதன் கால் நரம்புகளை வெட்டி (வீழ்த்தி)விட்டேன். பிறகு மக்களிடம் சென்று, ‘‘(இப்போது) எழுந்து, கழுதையை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘‘நாங்கள் அதைத் தொட மாட்டோம்” என்று கூறினர். ஆகவே, நானே அதைச் சுமந்து அவர்களிடம் கொண்டுசென்றேன். அவர்களில் சிலர் (அதை உண்ண) மறுத்துவிட்டனர். வேறு சிலர் உண்டனர். நான் ‘‘உங்களுக்காக நபி (ஸல்) அவர்களிடம் (இதன் சட்டம் என்ன என்று) கேட்டுத் தெரிந்து வருகிறேன்” என்று சொன்னேன். பிறகு நபி (ஸல்) அவர்களைச் சென்றடைந்து செய்தியை அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் என்னிடம், ‘‘அதிலிருந்து உங்களிடம் ஏதேனும் எஞ்சியுள்ளதா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம் (எஞ்சியுள்ளது)” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘‘உண்ணுங்கள்; அது அல்லாஹ் உங்களுக்கு உண்ணக்கொடுத்த உணவாகும்” என்று சொன்னார்கள்.14 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘கருவேல இலை’ (‘கபத்’) படை(ப் பிரிவு)ப் போருக்கு நாங்கள் சென்றோம். (எங்களுக்கு) அபூஉபைதா (ரலி) அவர்கள் தளபதியாக நியமிக்கப்பட்டார்கள். (வழியில்) எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அப்போது செத்துப்போன பெரிய (திமிங்கல வகை) மீன் ஒன்று கரையில் ஒதுங்கியது. (அதற்கு முன்பு) அது போன்ற (பெரிய) மீன் காணப்பட்டதில்லை. அது ‘அம்பர்’ என்றழைக்கப்படும். அதிலிருந்து நாங்கள் அரை மாதம் உண்டோம். அபூஉபைதா (ரலி) அவர்கள் அதன் எலும்புகளில் ஒன்றை எடுத்து (நட்டு) வைத்தார்கள். அதன்கீழ் வாகனத்தில் ஏறி ஒருவர் சென்றார். (அந்த அளவுக்கு அந்த எலும்பு பெரியதாக இருந்தது.)16 அத்தியாயம் :
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எங்களில் வாகனப் படைவீரர்களான முன்னூறு பேரை (ஓர் அறப்போருக்கு) அனுப்பினார்கள். எங்கள் (படைப் பிரிவின் தலைவராக) அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்கள் இருந்தார்கள். நாங்கள் குறைஷியரின் ஒரு வணிகக் குழுவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். அப்போது எங்களுக்குக் கடும் பசி ஏற்பட்டது. (உணவு ஏதும் இல்லாததால்) கருவேல மரத்தின் இலைகளை நாங்கள் சாப்பிட்டோம். அதன் காரணமாக (எங்கள் படைக்கு) ‘கருவேல இலைப் படை’ (‘ஜைஷுல் கபத்’) என்று பெயர் சூட்டப்பட்டது. அப்போது ‘அம்பர்’ என்றழைக்கப்படும் பெரிய (திமிங்கல) மீன் ஒன்று கடற்கரையில் ஒதுங்கியது. அதை நாங்கள் அரை மாதம்வரை சாப்பிட்டோம். எங்கள் மேனிகள் செழுமையடையும் அளவுக்கு நாங்கள் அதன் கொழுப்பை எடுத்துப் பூசிக்கொண்டோம். அப்போது அபூஉபைதா (ரலி) அவர்கள் அதன் விலா எலும்புகளில் ஒன்றையெடுத்து (பூமியில்) நட்டு வைக்க, அதன் கீழே வாகனத்தில் ஏறி ஒருவர் சென்றார். எங்களிடையே இருந்த ஒரு மனிதர் பசி கடுமையாக வாட்டியபோது மூன்று ஒட்டகங்களை அறுத்தார். மறுபடியும் இன்னும் மூன்று ஒட்டகங்களை அறுத்தார். பிறகு அவரை (அப்படி அறுக்க வேண்டாமென) அபூஉபைதா (ரலி) அவர்கள் தடுத்துவிட்டார்கள்.17 அத்தியாயம் :
இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ‘ஏழு’ அல்லது ‘ஆறு’ அறப்போர்களில் கலந்துகொண்டோம். நபி (ஸல்) அவர்களு டன் நாங்களும் வெட்டுக்கிளிகளைச் சாப்பிட்டுவந்தோம். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) உள்ளிட்டோர் தம் அறிவிப்புகளில் கூறுகிறார்கள்: ‘‘நபி (ஸல்) அவர்களுடன் ஏழு அறப்போர்களில் கலந்துகொண்டோம்” என (ஆறா, ஏழா என்ற சந்தேகமின்றி) இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். அத்தியாயம் :
அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வேதம் வழங்கப் பெற்றவர்களின் நாட்டில் வசிக்கிறோம். ஆகவே, அவர்களின் பாத்திரங்களில் உண்கிறோம். மேலும், வேட்டைப் பிராணிகள் நிறைந்த ஒரு நாட்டில் நாங்கள் வசிக்கிறோம். நான் எனது வில்லாலும் வேட்டையாடுவேன்; பயிற்சியளிக்கப்பட்ட எனது நாயை அனுப்பியும் நான் வேட்டையாடுவேன்; பயிற்சியளிக்கப்படாத எனது நாயின் மூலமாகவும் வேட்டையாடுவேன்” என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘வேதம் வழங்கப்பெற்றவர்களின் நாட்டில் வசிப்பதாக நீங்கள் சொன்னதைப் பொறுத்த வரை (அதன் சட்டம் என்ன வெனில்), மாற்று கிடைக்காதபோதே தவிர, (வேறு எப்போதும்) அவர்களின் பாத்திரங்களில் நீங்கள் சாப்பிடாதீர்கள். மாற்று கிடைக்கவில்லையென்றால், அவர்களின் பாத்திரங்களை (நன்கு) கழுவிவிட்டு அவற்றில் சாப்பிடுங்கள். நீங்கள் வேட்டைப் பிராணிகள் நிறைந்த ஒரு நாட்டில் இருப்பதாகச் சொன்னதைப் பொறுத்த வரை (அதன் சட்டம் என்னவென்றால்), நீங்கள் உங்கள் வில்லால் வேட்டையாடியதை அல்லாஹ்வின் பெயர் சொல்லிச் சாப்பிட்டுக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் பெயர் கூறி நீங்கள் அனுப்பிய பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் நாயின் மூலம் நீங்கள் வேட்டையாடியதை உண்ணலாம். ஆனால், பயிற்சியளிக்கப்படாத உங்கள் நாயின் மூலம் நீங்கள் வேட்டையாடியது அறுப்பதற்கு ஏதுவாக (உயிருள்ள நிலையில்) உங்களுக்குக் கிடைத்திருந்தால் அதை (அறுத்து) நீங்கள் உண்ணலாம்” என்று சொன்னார்கள்.18 அத்தியாயம் :
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபரை வெற்றிகொண்ட அன்று மாலையில் மக்கள் நெருப்பு மூட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் இந்த நெருப்பை எதற்காக மூட்டினீர்கள்?” என்று கேட்டார்கள். மக்கள், ‘‘நாட்டுக் கழுதைகளின் இறைச்சிகளை சமைப்பதற் காக” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அந்த அடுப்புகளில் இருப்ப வற்றைக் கொட்டிவிட்டு, அவற்றின் பாத்திரங்களை உடைத்துவிடுங்கள்” என்று சொன்னார்கள். அப்போது மக்களிடையே இருந்த ஒருவர் எழுந்து, ‘‘பாத்திரங்களில் இருப்பவற்றைக் கொட்டிவிட்டு அவற்றை நாங்கள் கழுவி(ப் பயன்படுத்தி)க் கொள்ளலாமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவ்வாறே ஆகட்டும்” என்று சொன்னார்கள்.19 அத்தியாயம் :
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் துல்ஹுலைஃபாவில் இருந்தோம். அப்போது மக்களுக்குப் பசி ஏற்பட்டது. (இந்நிலையில்) எங்களுக்குச் சில ஒட்டகமும் ஆடுகளும் (போர்ச் செல்வத்திலிருந்து) கிடைத்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களின் பின் வரிசையில் இருந்தார்கள். ஆகவே, மக்கள் அவசரப்பட்டு (அவற்றைப் பங்கிடுவதற்கு முன்பாகவே அறுத்துப்) பாத்திரங்களை (அடுப்புகளில்) ஏற்றி (சமைக்கத் தொடங்கி)விட்டார்கள். (இதை அறிந்த) நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் வந்துசேர்ந்து, பாத்திரங்களைக் கவிழ்க்கும்படி உத்தரவிட அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்(டு அவற்றிலிருந்த இறைச்சிகள் வெளியே கொட்டப்பட்)டன. பிறகு நபி (ஸல்) அவர்கள் அவற்றைப் பங்கிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் பத்து ஆடுகளை ஓர் ஒட்டகத்திற்குச் சமமாக்கினார்கள். அப்போது அவற்றிலிருந்து ஓர் ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டது. மக்களிடம் குதிரைகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தன. மக்கள் (ஓடிப்போன) அந்த ஒட்டகத்தைத் தேடிச் சென்றார்கள். அது (அவர்களுக்கு அகப்படாமல்) அவர்களைக் களைப்படையச் செய்துவிட்டது. (நபித்தோழர்களில்) ஒருவர் அந்த ஒட்டகத்தைக் குறி வைத்து ஓர் அம்பை எய்தார். அல்லாஹ் அதை (ஓட விடாமல்) தடுத்து நிறுத்திவிட்டான். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘வன விலங்குகளில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்றே இந்தப் பிராணி களிலும் கட்டுக்கடங்காதவை சில உள்ளன. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (அம்பெய்து நிற்கச்) செய்யுங்கள்” என்று கூறினார்கள். நான் ‘‘(ஒட்டகத்தை அறுக்க வாட்களை இன்று நாங்கள் பயன்படுத்திவிட்டால் அதன் கூர்முனை சேதமடைந்து) நாளை எங்களிடம் வாட்களே இல்லாத நிலையில் எதிரியை நாங்கள் சந்திக்க நேரிடுமோ என்று ‘அஞ்சுகிறோம்’ அல்லது ‘உத்தேசிக்கின்றோம்’. ஆகவே, நாங்கள் (கூரான) மூங்கில்களால் (ஒட்டகங்களை) அறுக்கலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இரத்தத்தைச் சிந்தச்செய்கின்ற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும்போது) அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில், அதை நீங்கள் உண்ணலாம்; பல்லையும் நகத்தையும் (கொண்டு அறுப்பதைத்) தவிர. இதைப் பற்றி (இந்த இரண்டாலும் ஏன் அறுக்கலாகாது என்பதற்கான காரணத்தை) நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். பற்களோ எலும்பாகும். நகங்களோ அபிசீனிய (எத்தியோப்பிய)ர்களின் கத்திகளாகும்” என்று கூறினார்கள்.21 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்கு வேதஅறிவிப்பு (‘வஹீ’) அருளப்படுவதற்கு முன்பு (மக்கா அருகிலுள்ள) ‘பல்தஹ்’ எனும் இடத்திற்குக் கீழ் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமக்குமுன் வைக்கப்பட்ட குறைஷியரின்) பயண உணவு ஒன்றை ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அவர்களுக்குமுன் வைத்தார்கள். அதில் (பலிபீடங்களில் அறுக்கப்பட்டவற்றின்) இறைச்சி இருந்தது. ஆகவே, அதிலிருந்து உண்ண ஸைத் அவர்கள் மறுத்துவிட்டார்கள். பிறகு ஸைத் (உணவைப் பரிமாறிய குறைஷியரிடம்), ‘‘நீங்கள் உங்கள் (சிலைகளுக்குப் பலியிடும்) பலிபீடக் கற்களில் வைத்து அறுப்பவற்றை நான் உண்ணமாட்டேன். (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் எதன் மீது கூறப் பட்டதோ அதைத் தவிர வேறெதையும் நான் உண்ணமாட்டேன்” என்று சொன்னார்கள்.22 அத்தியாயம் :
ஜுன்தப் பின் சுஃப்யான் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு (ஹஜ்ஜுப் பெரு)நாளின்போது (தொழுகை முடிந்தபிறகு) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் குர்பானி பிராணிகளை அறுத்து குர்பானி கொடுத்தோம். (அன்று) சிலர் தங்களுடைய குர்பானி பிராணியை தொழுகைக்கு முன்பாகவே அறுத்துவிட்டனர். (தொழுகையிலிருந்து) திரும்பிய நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்னதாகவே அவர்கள் ‘குர்பானி’ கொடுத்துவிட்டிருப்பதைக் கண்டபோது, ‘‘யார் தொழுகைக்குமுன் அறுத்து விட்டாரோ அவர் அதற்குப் பதிலாக வேறொன்றை அறுக்கட்டும். யார் தொழும்வரை அறுத்திருக்கவில்லையோ அவர் அல்லாஹ்வின் பெயர் சொல் அறுக்கட்டும்” என்று கூறினார்கள்.23 அத்தியாயம் :
அப்துர் ரஹ்மான் பின் கஅப் பின் மாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: என் தந்தை கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் (பின்வருமாறு) தெரிவித்தார்கள்: எங்கள் பணிப்பெண் ஒருவர் ‘சல்உ’ எனுமிடத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தபோது தம் ஆடுகளில் ஒன்று சாகும் நிலையில் இருப்பதைப் பார்த்தார். உடனே ஒரு கல்லை (கூர்மையாக) உடைத்து அதன் மூலம் அந்த ஆட்டை அறுத்துவிட்டார். (விவரம் அறிந்த) நான் என் வீட்டாரிடம், ‘‘நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதைப் பற்றி நான் கேட்கும்வரை’ அல்லது ‘நபி (ஸல்) அவர்களிடம் ஆளனுப்பி இது குறித்துக் கேட்கும்வரை’ (இதைச்) சாப்பிடாதீர்கள்” என்று சொன்னேன். பிறகு ‘நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்’ அல்லது ‘அவர்களிடம் ஆளனுப்பி வைத்தேன்’. அப்போது நபி (ஸல்) அவர்கள் அதைச் சாப்பிடுமாறு உத்தரவிட்டார்கள்.25 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களின் ஆடுகளை அவர்களுடைய அடிமைப் பெண் ஒருவர் மதீனாவின் கடைவீதிக்கு அருகில் ‘சல்உ’ எனும் இடத்திலுள்ள சிறிய மலையொன்றில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆடு ஒன்று காயமடைந்தது. உடனே அப்பெண் கல் ஒன்றை (கூர்மையாக) உடைத்து அதனால் அந்த ஆட்டை அறுத்தார். மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் இதைக் கூறி (இதை உண்ணலாமா என்று கேட்ட)னர். நபி (ஸல்) அவர்கள் அதை உண்ணும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அத்தியாயம் :
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் (கூரான) கத்திகள் இல்லையே” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இரத்தத்தைச் சிந்தக்கூடியது எதுவானாலும் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு (அதனால் அறுக்கப்பட்டு)விட்டால் அதை நீங்கள் உண்ணலாம். நகத்தாலும் பல்லாலும் (அறுக்கப்பட்டதைத்) தவிர. நகங்களோ அபிசீனியர்களின் கத்திகளாகும். பல்லோ எலும்பாகும். (நபி (ஸல்) அவர்கள் பங்கிட்டுக் கொடுத்திருந்த) ஒட்டகம் ஒன்று வெருண்டோடியது. அதை ஒருவர் (அம்பெய்து) தடுத்து நிறுத்தினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் வன விலங்குகளுக்கிடையே கட்டுக்கடங் காதவை சில இருப்பதைப் போன்றே, இந்த ஒட்டகங்களுக்கு இடையேயும் கட்டுக்கடங்காதவை சில உண்டு. ஆகவே, அவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (தடுத்து நிறுத்தச்) செய்யுங்கள்” என்று சொன்னார்கள்.26 அத்தியாயம் :
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண் ஓர் ஆட்டை (கூர்மையான) கல் ஒன்றால் அறுத்தார். அது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்கள் அதை உண்ணும்படி உத்தர விட்டார்கள். மற்றோர் அறிவிப்பில், ‘‘கஅப் (ரலி) அவர்களுக்குரிய அடிமைப் பெண் ஒருவர் (இவ்விதம் செய்தார்)” என அன்சாரிகளில் ஒருவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.27 அத்தியாயம் :
முஆத் பின் சஅத் (ரலி), அல்லது சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் கூறியதாவது: கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களுடைய அடிமைப் பெண் ஒருவர் ‘சல்உ’ எனும் மலைப் பகுதியில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அவற்றில் ஓர் ஆடு காயமுற்றது. உடனே அதைப் பிடித்து (கூர்மையான) கல் ஒன்றால் அப்பெண் அறுத்தார். (இது குறித்து) நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ‘‘அதை நீங்கள் உண்ணலாம்” என்று கூறினார்கள்.28 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரத்தத்தை வடியச்செய்யும் (கூரிய ஆயுதம்) எதுவாயினும் அ(தனால் அறுக்கப்பட்ட)தை உண்ணுங்கள்; பல் மற்றும் நகம் (ஆகியவற்றால் அறுக்கப் பட்டதைத்) தவிர. இதை ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.29 அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு கூட்டத்தார் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘(கிராமத்திலிருந்து) சிலர் எங்களிடம் இறைச்சி கொண்டுவருகிறார்கள். (அதை அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதா, இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. (இந்நிலையில் நாங்கள் அதை உண்ணலாமா?)” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அதன்மீது அல்லாஹ்வின் பெயர் சொல்லி அதை உண்ணுங்கள்” என்று பதில் சொன்னார் கள். கேள்வி கேட்ட கூட்டத்தார் இறை மறுப்பை அப்போதுதான் கைவிட்டுப் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்தார் கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.30 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் கைபர் கோட்டையை முற்றுகையிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது ஒருவர் கொழுப்பு நிரம்பிய தோல்பை ஒன்றை எறிந்தார். அதை எடுக்க நான் பாய்ந்து சென்றேன். அப்போது நான் திரும்பிப் பார்க்க, அங்கே நபி (ஸல்) அவர்கள் (நின்றுகொண்டு) இருந்தார்கள். (என் ஆசை அவர்களுக்குத் தெரிந்துவிட்டதால்) அவர்களைக் கண்டு நான் வெட்கமடைந்தேன்.32 அத்தியாயம் :
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (துல்ஹுலைஃபாவில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது) ‘‘அல்லாஹ்வின் தூதரே! (நம்மிடம் உள்ள கத்திகளால் ஒட்டகங்களை இன்று அறுத்துவிட்டால், அவற்றின் முனை மழுங்கி) நம்மிடம் கத்திகளே இல்லாத நிலையில் நாளை நாம் எதிரியைச் சந்திக்க நேருமே!” என்று சொன்னேன். அப்போது அவர்கள், ‘‘ ‘விரைவாக’ அல்லது ‘தாமதமின்றி’ (எதைக் கொண்டாவது அறுத்திடுங்கள்). இரத்தத்தை சிந்தச்செய்யும் (ஆயுதம்) எதுவாயினும் அதைக் கொண்டு அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டிருந்தால் அதை நீங்கள் உண்ணலாம்; பல்லாலும் நகத்தாலும் அறுக்கப்பட்டதைத் தவிர! அவற்றைக் குறித்து உங்களுக்கு இதோ கூறுகிறேன்: பல்லோ எலும்பாகும்; நகங்களோ அபிசீனியர்களின் கத்திகளாகும்” என்று சொன்னார்கள். (அப்போது) நாங்கள் போர்ச் செல்வமாக ஒட்டகத்தையும் ஆட்டையும் பெற்றோம். அவற்றிலிருந்து ஒட்டகம் ஒன்று வெருண்டோடியது. அதன் மீது ஒருவர் ஓர் அம்பை எய்து அதை (ஓடவிடாமல்) தடுத்து (நிறுத்தி)விட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘வனவிலங்குகளில் கட்டுக்கடங்காதவை சில இருப்பதைப் போன்றே, இந்த ஒட்டகங்களிலும் கட்டுக்கடங்காதவை உண்டு. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (அம்பெய்து தடுத்து நிறுத்தச்) செய்யுங்கள்” என்று சொன்னார்கள்.34 அத்தியாயம் :
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஒரு குதிரையை (அதன் கழுத்து நரம்பை) அறுத்து (‘நஹ்ர்’ செய்து) அதை உண்டோம். அத்தியாயம் :
அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மதீனாவில் இருந்த போது குதிரையொன்றை (அதன் குரல் வளையை) அறுத்து (‘தப்ஹ்’ செய்து) அதை உண்டோம். அத்தியாயம் :
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலத்தில் குதிரை யொன்றை (அதன் கழுத்து நரம்புகளை) அறுத்து (‘நஹ்ர்’ செய்து) அதை உண்டோம். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.36 அத்தியாயம் :
ஹிஷாம் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (ஒரு தடவை என் பாட்டனார்) அனஸ் (ரலி) அவர்களுடன் (பஸ்ராவின் ஆட்சியரான) ஹகம் பின் அய்யூபிடம் சென்றேன். அங்கு சில ‘சிறுவர்கள்’ அல்லது ‘இளைஞர்கள்’ கோழியொன்றைக் கட்டிவைத்து அதன் மீது அம்பெய்து கொண்டிருந்ததை அனஸ் (ரலி) அவர்கள் பார்த்தார்கள். அப்போது அனஸ் (ரலி) அவர்கள் ‘‘விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
சயீத் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் (என் தந்தையின் சகோதரர்) யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்களிடம் வந்தார்கள். அங்கு யஹ்யாவின் மக்களில் ஒரு சிறுவர் கோழியொன்றைக் கட்டிவைத்து அதன் மீது அம்பெய்துகொண்டிருந்தார். இப்னு உமர் (ரலி) அவர்கள் அந்தக் கோழியை நோக்கிச் சென்று அதை அவிழ்த்துவிட்டார்கள். பிறகு அந்தக் கோழியையும் அந்தச் சிறுவரையும் தம்முடன் அழைத்துக் கொண்டு (யஹ்யா பின் சயீத் அவர்களிடம்) சென்று, ‘‘இந்தப் பறவையை அம்பெய்து கொல்வதற்காகக் கட்டிவைக்க வேண்டாமென்று உங்கள் சிறுவரைக் கண்டித்துவையுங்கள். ஏனெனில், ஒரு விலங்கையோ (பறவை போன்ற) வேறெதையுமோ கொல்வதற்காகக் கட்டிவைக்க வேண்டாமென்று நபி (ஸல்) அவர்கள் தடை விதித்ததை நான் கேட்டுள்ளேன்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது நாங்கள் ‘இளைஞர்கள் சிலரை’ அல்லது ‘மக்கள் சிலரைக்’ கடந்து சென்றோம். அவர்கள் கோழியொன்றைக் கட்டிவைத்து அதன் மீது அம்பெய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் இப்னு உமர் (ரலி) அவர்களைக் கண்டவுடன் அதை அப்படியே விட்டுவிட்டு கலைந்து சென்றுவிட்டனர். இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘இதைச் செய்தது யார்? இவ்வாறு செய்பவர்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியிருப்பதாவது: பிராணிகளின் அங்கங்களைச் சிதைப்பவனை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். இதையே நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பிறர் பொருளை அபகரிப்பதையும் (பிராணிகள் மற்றும் மனிதர்களின்) அங்கங்களைச் சிதைப்பதையும் தடை செய்தார்கள். அத்தியாயம் :
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கோழி (இறைச்சி) உண்பதை நான் பார்த்தேன். இதை ஸஹ்தம் அல்ஜர்மீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஸஹ்தம் பின் முளர்ரிப் அல்ஜர்மீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடம் இருந்துகொண்டிருந் தோம்.- ‘ஜர்ம்’ கூட்டத்தைச் சேர்ந்த எங்களுக்கும் இந்த (அஷ்அரீ) கூட்டத்தாருக்குமிடையே சகோதரத்துவ உறவு (நட்பு) இருந்தது.- அப்போது கோழி இறைச்சியுடன் உணவு கொண்டு வரப்பட்டது. மக்களிடையே சிவப்பான மனிதர் ஒருவர் அமர்ந்திருந்தார். (அவரை உணவு உண்ண அபூமூசா (ரலி) அவர்கள் அழைத்தார்கள்.) ஆனால், அவர் உணவை நெருங்கவில்லை. அப்போது அபூமூசா (ரலி) அவர்கள், ‘‘அருகில் வாருங்கள் (வந்து சாப்பிடுங்கள்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைச் சாப்பிட நான் பார்த்துள்ளேன்” என்று சொன் னார்கள். அதற்கு அம்மனிதர், ‘‘இந்தக் கோழி (இனம், அசுத்தம்) எதையோ தின்பதை நான் பார்த்தேன். அது எனக்கு அருவருப்பை உண்டாக்கவே ‘இதை இனிமேல் நான் உண்ணமாட்டேன்’ என்று சத்தியம் செய்துவிட்டேன்” என்று சொன்னார். அதற்கு அபூமூசா (ரலி) அவர்கள் ‘‘அருகில் வாருங்கள்; உங்களுக்கு (விவரமாக)த் தெரிவிக்கிறேன்” என்று கூறி(விட்டுப் பின்வருமாறு சொன்)னார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் (என்) அஷ்அரீ குலத்தார் சிலருடன் சென்றேன். அப்போது அவர்கள் சினத்துடன் இருந்தார்கள். தர்ம ஒட்டகங்களை அவர்கள் பங்கிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது எங்களை(யும் எங்கள் பயணச் சுமைகளை யும்) சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யும்படி அவர்களிடம் நாங்கள் வேண்டினோம். அப்போது அவர்கள் ‘‘உங்களைச் சுமந்து செல்ல ஒட்டகங்கள் தரமாட்டேன்” என்று சத்தியம் செய்தார்கள். மேலும், ‘‘உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் (தற்போது கைவசம்) இல்லை” என்று சொன்னார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போரில் கிடைத்த சில ஒட்டகங்கள் கொண்டுவரப் பட்டன. உடனே (எங்களைக் குறித்து) ‘‘அஷ்அரீ குலத்தைச் சேர்ந்தவர்கள் எங்கே? அஷ்அரீ குலத்தைச் சேர்ந்தவர் கள் எங்கே?” என்று (இருமுறை) கேட்டுவிட்டு, (நாங்கள் வந்தபோது) எங்களுக்கு வெள்ளைத் திமில்கள் கொண்ட ஐந்து ஒட்டக மந்தைகளை வழங்கினார்கள். நாங்கள் சிறிது நேரமே (அங்கு) இருந்திருப்போம். அப்போது நான் என் தோழர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நாம் ஏறிச்செல்ல ஒட்டகம் தரமாட்டேன் என்று செய்த) தமது சத்தியத்தை மறந்துவிட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை, அவர்கள் செய்த சத்தியத்திலிருந்து கவனத்தைத் திருப்பியிருந்தால் நாம் ஒருபோதும் வெற்றியடையமாட்டோம்” என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் திரும்பி வந்தோம். அப்போது நாங்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஏறிச்செல்வதற்காகத் தங்களிடம் ஒட்டகம் கேட்டோம். அப்போது தாங்கள், எங்களை ஏற்றிச்செல்லும் ஒட்டகம் தரமாட்டேன் என்று சத்தியம் செய்தீர்கள். (ஆனால், பிறகு போரில் கிடைத்த ஒட்டகங்களை எங்களுக்குத் தந்தீர்கள்.) ஆகவே, நீங்கள் உங்களது சத்தியத்தை மறந்துவிட்டீர்கள் என்று நாங்கள் எண்ணினோம்” என்று சொன்னோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வே உங்களை ஒட்டகத்தில் ஏற்றி அனுப்பிடச்செய்தான். அல்லாஹ் வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனி எந்த ஒன்றுக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாததை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்து அதற்காகப் பரிகாரமும் செய்து விடுவேன்” என்று சொன்னார்கள்.37 அத்தியாயம் :
அஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் நாங்கள் குதிரை யொன்றை அறுத்து உண்டோம்.38 இதை ஃபாத்திமா பின்த் முன்திர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் போரின்போது நபி (ஸல்) அவர்கள் (நாட்டுக்) கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமெனத் தடை செய்தார்கள். குதிரையின் இறைச்சியை உண்ண அனுமதியளித்தார்கள்.39 இதை முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள் அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின் போது நாட்டுக் கழுதைகளின் இறைச் சியை உண்ணக் கூடாதெனத் தடை விதித்தார்கள்.41 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதை களின் இறைச்சியை உண்ண வேண்டா மெனத் தடை செய்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் போர் நடந்த ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இனி(த் தவணை முறைத் திருமணமான) ‘முத்ஆ’ செய்யக் கூடாது என்றும், நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமென்றும் தடை விதித்தார்கள்.42 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின் போது (நாட்டுக்) கழுதைகளின் இறைச் சியை உண்ண வேண்டாமென்று தடை செய்தார்கள். குதிரைகளின் இறைச்சியை உண்ண அனுமதியளித்தார்கள்.43 அத்தியாயம் :
பராஉ (ரலி) அவர்களும் இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்களும் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (நாட்டுக்) கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமெனத் தடை செய்தார்கள்.44 அத்தியாயம் :
அபூஸஅலபா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்குத் தடை விதித்தார்கள். இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியிருப்பதாவது: நபி (ஸல்) அவர்கள், (வன) விலங்கு களில் கோரைப் பற்கள் உடைய எதையும் உண்ண வேண்டாமெனத் தடை செய்தார்கள். அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (கைபர் போரின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘‘கழுதைகள் உண்ணப்பட்டு விட்டன” என்று சொன்னார். பிறகு ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘கழுதைகள் உண்ணப்பட்டுவிட்டன” என்று சொன்னார். மீண்டும் ஒருவர் வந்து, ‘‘கழுதை இறைச்சி (உண்டு) தீர்க்கப்பட்டுவிட்டது” என்று சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவருக்கு (மக்களிடையே அறிவிப்புச் செய்யும்படி) கட்டளையிட, அவரும் மக்களிடையே, ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களை நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமெனத் தடை செய்கிறார்கள். ஏனெனில், அவை அசுத்தமானவை யாகும்” என்று பொது அறிவிப்புச் செய்தார். உடனே இறைச்சி வெந்து கொதித்துக்கொண்டிருந்த பாத்திரங்கள் கவிழ்க்கப்பட்டு (அதிலிருந்த இறைச்சி கொட்டப்பட்டு)விட்டது.45 அத்தியாயம் :
அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஜாபிர் பின் ஸைத் (ரஹ்) அவர்களிடம் ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளை உண்ணக் கூடாதெனத் தடை செய்திருப்பதாக (மக்கள்) கருதுகிறார்களே” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஹ(க்)கம் பின் அம்ர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள் பஸ்ராவில் வைத்து எம்மிடம் இதைச் சொல்லிவந்தார்கள். ஆனால், (கல்விக்) கடலான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அதை மறுத்து, ‘‘(நபியே! இவர்களிடம்) கூறுவீராக: எனக்கு அருளப்பெற்ற வேத அறிவிப்பில் (வஹீயில்), உண்பவர்களுக்கு எந்த உணவும் தடை செய்யப்பட்டதாக நான் காணவில்லை; செத்த பிராணியையும் சிந்தப்பட்ட இரத்தத்தையும் பன்றி இறைச் சியையும் தவிர. நிச்சயம் இவை அசுத்தமாகும்” எனும் (6:145ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். அத்தியாயம் :
அபூஸஅலபா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வன) விலங்குகளில் கோரைப் பற்கள் உள்ள எதையும் உண்ணக் கூடாதெனத் தடை விதித்தார்கள்.46 இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செத்த ஆடு ஒன்று கிடந்த வழியாகச் சென்றார்கள். அப்போது ‘‘இதன் தோலால் நீங்கள் பயனடையக் கூடாதா?” என்று கேட்டார்கள். மக்கள் ‘‘இது செத்துப்போன தாயிற்றே!” என்று கேட்க, அதற்கு அவர்கள், ‘‘இதை உண்பதுதான் தடை செய்யப்பட்டுள்ளது” என்று பதிலளித் தார்கள்.47 அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செத்துப்போன பெட்டை வெள்ளாடு ஒன்று கிடந்த வழியாகச் சென்றார்கள். அப்போது ‘‘இதன் தோலால் பயன் அடைவதால் இதன் உரிமையாளர்மீது குற்றம் ஏதுமில்லை” என்று சொன் னார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் வழியில் (அறப் போரில்) காயப்படுத்தப்பட்டவர் தமது காயத்தில் இரத்தம் வழிய, மறுமை நாளில் (இறைவன் முன்னால்) வருவார். அவரது (காயத்திலிருந்து வழியும் திரவத்தின்) நிறம் இரத்த(ச் சிவப்பு) நிறமாயிருக்கும்; (அதன்) மணமோ கஸ்தூரி மணமாயிருக்கும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.49 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல நண்பன் மற்றும் கெட்ட நண்பனின் நிலையானது கஸ்தூரியைச் சுமக்கின்றவனின் நிலையையும், (உலைக் களத்தில்) உலை ஊதுகின்றவனின் நிலையையும் ஒத்திருக்கிறது. கஸ்தூரியைச் சுமப்பவன் ஒன்று அதை உனக்கு அன்பளிப்பாக வழங்கலாம். அல்லது நீ அவனிடமிருந்து (அதை விலைக்கு) வாங்கிக்கொள்ளலாம். அல்லது அதிலிருந்து நீ நறுமணத்தையேனும் பெறலாம். ஆனால், உலை ஊதுபவனோ ஒன்று உனது ஆடையை எரித்துக் கரித்து விடுவான்; அல்லது (அவனிடமிருந்து) நீ துர்வாடையையாவது அடைந்தே தீருவாய். இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.50 அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ‘மர்ருழ் ழஹ்ரான்’ எனுமிடத்தில் இருந்தபோது முயல் ஒன்றைத் துரத்திச் சென்றோம். மக்கள் அதைப் பிடிக்க முயன்று களைத்துவிட்டனர். நான் அதைப் பிடித்து (என் வளர்ப்புத் தந்தை) அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் அதை அறுத்து ‘அதன் இரண்டு பின்சப்பைகளையும்’ அல்லது ‘அதன் இரு தொடைகளையும்’ (அன்பளிப்பாக) நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பிவைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.51 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உடும்பை நான் உண்ணவுமாட்டேன்; அதை (உண்ண வேண்டாமென) நான் தடை செய்யவுமாட்டேன். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (அன்னாரின் துணைவி யாரும் என் சிறிய தாயாருமான) மைமூனா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அப்போது பொரிக்கப்பட்ட உடும்புக் கறி கொண்டுவரப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தை அந்த உடும்பை நோக்கி நீட்ட (அங்கிருந்த) பெண்களில் ஒருவர், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதைச் சாப்பிடப்போகிறார்கள் என்பதை அவர்களுக்கு (முன்பே) தெரிவித்துவிடுங்கள்” என்று சொன்னார். அப்போது, ‘‘இது உடும்பு, அல்லாஹ்வின் தூதரே!” என்று (அங்கிருந்தவர்கள்) கூறினார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தை (உடும்பைவிட்டு) எடுத்துவிட்டார்கள். அப்போது நான், ‘‘உடும்பு தடை செய்யப்பட்டதா, அல்லாஹ்வின் தூதரே?!” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இல்லை (தடை செய்யப்பட்டதன்று). ஆயினும், அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. ஆதலால், என் மனம் அதை விரும்பவில்லை” என்று பதிலளித்தார்கள். நான் அதை (என் பக்கம்) இழுத்து வைத்துச் சாப்பிட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னைப்) பார்த்துக்கொண்டிருந்தார்கள்.52 அத்தியாயம் :
மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) எலி ஒன்று நெய்யில் விழுந்து இறந்துவிட்டது. (அந்த நெய்யை உண்ணலாமா? என்று) அது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(உடனே) அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் (எடுத்து) எறிந்துவிட்டு, அ(தில் மீதியுள்ள)தை உண்ணுங்கள்” என்று பதிலளித்தார்கள்.54 (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களிடமிருந்தே அறிவிக் கிறார்கள். ஸுஹ்ரீயிடமிருந்து நான் இந்த ஹதீஸைப் பலமுறை செவியுற் றுள்ளேன். அத்தியாயம் :
யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், எலி போன்ற உயிரினம் உறைந்த அல்லது உறையாத எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றில் விழுந்து இறந்துவிட்டால் (அப்பொருளை உண்ணலாமா?) என்பது குறித்து வினவப்பட்டது. அவர்கள், ‘‘அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் நெய்யில் (விழுந்து) இறந்துவிட்ட எலியையும் அதையொட்டி இருந்த நெய்யையும் (உடனே எடுத்து) எறியும்படி கட்டளையிட் டார்கள். அவ்வாறே அவை (எடுத்து) எறியப்பட்டன. பிறகு (அந்த மீதி நெய்) உண்ணப்பட்டது” என்று உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸ் குறித்து எங்களுக்குச் செய்தி எட்டியது” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் நெய்யில் விழுந்து (செத்து)விட்ட எலி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ‘‘(உடனே) அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும் (எடுத்து) எறிந்துவிட்டு (மீதி நெய்யை) உண்ணுங்கள்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் பிராணியின் முகத்தில் அடையாள மிடுவதை வெறுத்தார்கள். மேலும் அவர்கள், ‘‘பிராணிகளை அடிப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்” என்றும் கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில் ‘‘(பிராணிகளின்) முகத்தில் அடிப்பதற்கு...” என வந்துள்ளது.55 அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் (தாய்வழிச்) சகோதரன் ஒருவனை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். நபியவர்கள் இனிப்புப் பொருளை மென்று (குழந்தை யாயிருந்த) அவனது வாயிலிடுவதற்காக அவனை நான் கொண்டுசென்றபோது அவர்கள் தமது (ஆட்டுத்) தொழுவம் ஒன்றில் இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டிற்கு அதன் காதுகளில் அடையாளம் இட்டுக்கொண்டிருந்ததைக் கண்டேன். அத்தியாயம் :
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘(அல்லாஹ்வின் தூதரே! நாம் உணவுக்காக ஒட்டகங்களை அறுக்க நம் வாட்களை இன்று பயன்படுத்திவிட்டால், அவற்றின் கூர் மழுங்கி) நாளை நம்மிடம் (கூரான) வாட்களே இல்லாத நிலையில் எதிரியைச் சந்திக்க வேண்டிவருமே” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இரத்தத்தைச் சிந்தச்செய்கின்ற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருந்தால் (அதை) உண்ணுங்கள். ஆனால், அது பல்லாலோ நகத்தாலோ மட்டும் அறுக்கப்பட்டிருக்கக் கூடாது. அது (ஏன் கூடாது என்பது) பற்றி இதோ நான் உங்களுக்குக் கூறுகிறேன்: பல்லோ எலும்பாகும்; நகமோ அபிசீனியர்களின் கத்தியாகும்” என்று பதிலளித்தார்கள். மக்களில் அவசரப்பட்ட சிலர் (வேகமாக) முந்திச்சென்று போர்ச் செல்வங்களை எடுத்துக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களோ மக்களின் பின்வரிசையில் இருந்தார்கள். (போர்ச் செல்வமாகக் கிடைத்த பிராணிகளைப் பெற்ற) அந்த மக்கள் சமையல் பாத்திரங்களை (அடுப்புகளின் மீது) வைத்து (சமைக்கத் தொடங்கி) விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (பங்கிட்டுத் தருவதற்கு முன்பே இப்படி அவர்கள் செய்ததால்) அந்தப் பாத்திரங்களைக் கவிழ்த்து (அவற்றில் இருப்பவற்றைக் கொட்டி)விடும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்டன. (பின்னர்) நபி (ஸல்) அவர்கள் மக்களி டையே (அச்செல்வங்களை) பங்கிட்டார்கள். அப்போது ஓர் ஒட்டகத்திற்குப் பத்து ஆடுகளைச் சமமாக்கினார்கள். பிறகு (பங்குவைக்கப்பட்ட) ஒட்டகம் ஒன்று முன்வரிசையிலிருந்த மக்களிடையே இருந்து வெருண்டோடியது. அவர்களிடம் அப்போது (அதைப் பிடித்து வர) குதிரை எதுவும் இருக்கவில்லை. அப்போது ஒரு மனிதர் அதை நோக்கி ஓர் அம்பை எய்தார். அல்லாஹ் அதைத் தடுத்து நிறுத்திவிட்டான். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘வன விலங்குகளில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்றே, இந்தப் பிராணிகளிடையேயும் கட்டுக்கடங்காதவை உள்ளன. ஆகவே, இவற்றில் இப்படிக் கட்டுக்கடங்காமல் வெருண்டோடும் பிராணியை இதைப் போன்றே (அம்பெய்து தடுத்து நிறுத்தச்) செய்யுங்கள்” என்று சொன்னார்கள்.56 அத்தியாயம் :
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது ஒட்டகக் கூட்டத்திலிருந்து ஓர் ஒட்டகம் வெருண்டோடியது. அப்போது ஒரு மனிதர் அம்புகளை அதன் மீது எய்து அதைத் தடுத்து நிறுத்தினார். பிறகு நபி (ஸல்) அவர்கள் ‘‘வனவிலங்குகளில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்றே இவற்றிலும் கட்டுக்கடங்காதவை உள்ளன. ஆகவே, இவற்றில் எது உங்களை மீறிச்செல்கிறதோ அதை இவ்வாறே (அம்பெய்து தடுத்து நிறுத்தச்) செய்யுங்கள்” என்று கூறினார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறப்போர்களிலும் பயணங்களிலும் இருப்போம். அப்போது நாங்கள் பிராணிகளை அறுக்க விரும்புவோம். (எங்களிடம்) கத்தி இருக்காது. (அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?)” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இரத்தத்தைச் சிந்தச்செய்யும் எதுவாயினும் அதைக் கொண்டு விரைவாக அறுத்திடுங்கள். (அதன் மீது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும்பட்சத்தில் (அதைச்) சாப்பிடுங்கள்; பல்லாலும் நகத்தாலும் அறுக்கப்பட்டதைத் தவிர. ஏனெனில், பல் எலும்பாகும்; நகம் அபிசீனியர்களின் கத்தியாகும்” என்று பதிலளித்தார்கள்.57 அத்தியாயம் :