42 - கனவுகள் புத்தகம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். ஒருவர் கனவு ஒன்றைக் கண்டு அதில் எதையேனும் அவர் வெறுத்தால், அவர் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிட்டு,ஷைத்தானிடமிருந்து (காக்குமாறு) அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். அப்படிச் செய்தால் அவருக்கு அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும், அதைப் பற்றி யாரிடமும் அவர் தெரிவிக்க வேண்டாம். அழகிய கனவு ஒன்றை அவர் கண்டால், அவர் ஆனந்தமடையட்டும். அதைப் பற்றி தமது நேசத்திற்குரியவரைத் தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தாம் விரும்பாத கனவொன்றைக் கண்டால் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிட்டு,ஷைத்தானிடமிருந்து (காக்குமாறு) அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரிவிட்டு, வேறு பக்கத்தில் திரும்பிப் படுத்துக்கொள்ளட்டும். இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அந்த மேகத்திலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக்கொண்டிருந்தன. உடனே மக்கள் தம் கைகளைக் காட்டி அவற்றைப் பிடித்துக்கொண்டிருக்கக் கண்டேன். (அவர்களில்) அதிகம் பிடித்தவர்களும் உண்டு; குறைவாகப் பிடித்தவர்களும் உண்டு. அப்போது ஒரு கயிறு வானத்திலிருந்து பூமிவரை வந்து சேர்ந்ததையும் நான் கண்டேன். உடனே (அல்லாஹ்வின் தூதரே!) நீங்கள் அந்தக் கயிற்றைப் பற்றிக்கொண்டு மேலே சென்றுவிடக் கண்டேன். பிறகு உங்களுக்குப்பின் மற்றொரு மனிதர் அதைப் பற்றிக்கொண்டு அவரும் மேலே சென்று விட்டார். பிறகு (மூன்றாவதாக) இன்னொரு மனிதரும் அதைப் பற்றிக்கொண்டு அவரும் மேலே சென்றுவிட்டார். பிறகு (நான்காவதாக) இன்னொரு மனிதர் அதைப் பற்றிக்கொள்ள கயிறு அறுந்துவிட்டது. பிறகு மறுபடியும் அக்கயிறு அவருக்காக இணைக்கப்பட்டபோது, அந்த மனிதர் (அதைப் பற்றிக்கொண்டு) மேலே சென்றுவிட்டார்" என்று சொன்னார். அப்போது (அங்கிருந்த) அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! என்னை விடுங்கள்; இந்தக் கனவுக்கு நான் விளக்கமளிக்கிறேன்" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(சரி) இதற்கு விளக்கம் சொல்லுங்கள்" என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், "அந்த மேகம் "இஸ்லாம்" எனும் மேகமாகும். அதிலிருந்து சொட்டிக் கொண்டிருந்த நெய்யும் தேனும் குர்ஆனின் இனிமையும் மென்மையும் ஆகும். மக்கள் (தங்கள் கைகளைக் காட்டி) அதிலிருந்து பிடித்ததானது, குர்ஆனிலிருந்து அதிகம் கற்றவர்களையும் குறைவாகக் கற்றவர்களையும் குறிக்கிறது. வானிலிருந்து பூமிவரை வந்துசேர்ந்த அந்தக் கயிறானது, நீங்கள் இருந்துவருகின்ற சத்திய (மார்க்க)மாகும். அதை நீங்கள் (பின்)பற்றுகிறீர்கள். அல்லாஹ் உங்களை (வானளவுக்கு) உயர்த்திவிடுகிறான். பிறகு உங்களுக்குப் பின்னால் இன்னொரு மனிதர் அதைப் பற்றுகிறார். அதன்மூலம் அவரும் உயர்ந்துவிடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக்கொண்டு அவரும் உயர்ந்துவிடுகிறார். அதை (நான்காவதாக) மற்றொருவர் பற்றுகிறார். (முதலில்) அக்கயிறு அறுந்துவிடுகிறது. பிறகு அவருக்காக மீண்டும் அக்கயிறு இணைக்கப்பட்டவுடன் அதைப் பற்றிக்கொண்டு அவரும் உயர்ந்துவிடுகிறார்"என்று கூறிவிட்டு, "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! சொல்லுங்கள்! (நான் சொன்ன விளக்கம்) சரியா? அல்லது தவறா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சிலவற்றைச் சரியாகச் சொன்னீர்கள்; சிலவற்றைத் தவறாகச் சொல்லிவிட்டீர்கள்" என்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தவறாகக் கூறியதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்க வேண்டும்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இதை) சத்தியம் செய்து கேட்காதீர்கள் (நான் இதைப் பற்றிச் சொல்லப் போவதில்லை)" என்றார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. (மேற்கண்ட அறிவிப்பு அல்லாத) மற்ற அறிவிப்புகளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லது அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாகத் துவங்குகிறது. - மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போரை முடித்துக்கொண்டு திரும்பியபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அதிலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக்கொண்டிருந்தது..." என்று கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. - மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி), அல்லது அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் அறிவிப்பாளர் அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்கள் பின்வரும் குறிப்பையும் தெரிவித்துள்ளார்கள்: மஅமர் (ரஹ்) அவர்கள் சில வேளைகளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தும் வேறுசில வேளைகளில் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கிறார்கள். அதில் "ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, நான் நேற்றிரவு (கனவில்) மேகம் ஒன்றைக் கண்டேன்..." என்று கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. - மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் "உங்களில் எவரேனும் கனவு கண்டிருந்தால் அதை என்னிடம் கூறுங்கள்; அதற்கு நான் விளக்கம் சொல்கிறேன்" என்று கேட்பது வழக்கம். அப்போது ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் மேகமொன்றைக் கண்டேன்..." என்று கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஒரு நாள் இரவில் கனவு ஒன்றைக் கண்டேன். நாம் (தோழர்) உக்பா பின் ராஃபிஉ அல் அன்சாரீ அவர்களது இல்லத்தில் இருந்தோம். அப்போது நம்மிடம் "ருதப் பின் தாப்" (எனும் உயர்) வகை பேரீச்சம் பழங்கள் கொண்டுவரப்பட்டதைப் போன்றிருந்தது. அதற்கு நான், இம்மையில் நமக்கு கிடைக்கும் உயர்வையும் மறுமையில் கிடைக்கும் நல்ல முடிவையும் நமது மார்க்கம் (பலமான அடித்தளத்தைக் கொண்டு) முழுமையாகிவிட்டது என்பதையும் விளக்கமாகக் கண்டேன். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் கனவில் ஒரு குச்சியால் பல் துலக்குவதைப் போன்று கண்டேன். அப்போது (என் அருகிலிருந்த) இரு மனிதர்கள் (அந்தக் குச்சிக்காகப் போட்டியிட்டுக்கொண்டு) என்னை இழுத்தனர். அவர்களில் ஒருவர் மற்றவரைவிட வயதில் பெரியவராக இருந்தார். அவர்களில் வயதில் சிறியவரிடம் பல் துலக்கும் அந்தக் குச்சியை நான் கொடுத்தேன். அப்போது என்னிடம் "வயதில் மூத்தவருக்கு முன்னுரிமை தருவீராக" என்று சொல்லப் பட்டது. ஆகவே, நான் பெரியவரிடம் அந்தக் குச்சியைக் கொடுத்தேன். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் மக்கா நகரிலிருந்து புலம்பெயர்ந்து பேரீச்சந்தோட்டங்கள் நிறைந்த ஒரு பூமிக்குச் செல்வதாகக் கனவு கண்டேன். அந்தப் பூமி "யமாமா"வாகவோ அல்லது "ஹஜரா"கவோ இருக்கும் என்றுதான் நான் எண்ணினேன். ஆனால், நான் கண்ட அந்த நகரம் யஸ்ரிப் - மதீனா- ஆகிவிட்டது. மேலும், அக்கனவில் நான் (என்) வாள் ஒன்றை அசைக்க, அதன் முனை முறிந்துவிட்டதாகக் கண்டேன். அது உஹுதுப் போரின்போது இறை நம்பிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பைக் குறித்தது. பிறகு (அதே கனவில்) மற்றொரு முறை அந்த வாளை நான் அசைக்க, அது முன்பிருந்ததைவிட மிக அழகாக மாறிவிட்டது. அது அல்லாஹ் (அதே உஹுதுப் போரில்) கொணர்ந்த மறுமலர்ச்சியையும் (சிதறி ஓடிய) முஸ்லிம்கள் மீண்டும் ஒன்றுதிரண்டதையும் குறிக்கும். மேலும், அக்கனவில் காளை மாடுகள் சிலவற்றை (அறுக்கப்படுவதைப் போன்று) நான் கண்டேன். அல்லாஹ் நன்மையளிப்பவன். (அதாவது "வல்லாஹு கைர்" எனும் சப்தத்தைக் கேட்டேன்.) காளை மாடுகள் என்பது உஹுதுப் போர் நாளில் கொல்லப்பட்ட இறைநம்பிக்கையாளர்களைக் குறிப்பதாகும். நன்மை (கைர்) என்பது (உஹுதுப் போருக்குப்) பின்னர் அல்லாஹ் நமக்குக் கொணர்ந்த நன்மையும் (இரண்டாம்) பத்ருப் போருக்குப் பிறகு அல்லாஹ் நமக்களித்த வாய்மைக்கான பரிசும் (அதாவது கைபர் மற்றும் மக்கா வெற்றிகளும்) ஆகும். இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை.
ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது (கனவில்) பூமியின் கருவூலங்கள் எனக்கு வழங்கப்பட்டன. அப்போது என் கையில் தங்கக் காப்புகள் இரண்டு வைக்கப்பட்டன. அவை எனக்குப் பெரும் சுமையாகத் தென்பட்டன; அவற்றின் (விளக்கம் தெரியாத) நிலை என்னைக் கவலையில் ஆழ்த்தியது. அப்போது அவ்விரண்டையும் ஊதிவிடும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. அவ்விரண்டையும் நான் ஊதிவிட்டேன். அவ்விரண்டும் (பறந்து) சென்றுவிட்டன. "அவ்விரண்டும் எந்த இரு மகாபொய்யர்களுக்கிடையே நான் இருக்கிறேனோ அவர்களைக் குறிக்கும்" என்று நான் விளக்கம் கண்டேன். அவ்விரு பொய்யர்கள் (அன்ஸீ என்ற) "ஸன்ஆ"வாசியும் (முசைலிமா என்ற) "யமாமா"வாசியும் ஆவர். அத்தியாயம் :
சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையை முடித்ததும் எங்களை நோக்கித் திரும்பி, "உங்களில் யாரேனும் இன்றிரவு கனவு ஏதேனும் கண்டீர்களா?" என்று கேட்பார்கள். அத்தியாயம் :