3 - மாதவிடாய் புத்தகம்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்துகொண்டிருக்கும் போது (அருகிலிருக்கும் வீட்டிலிருந்த) என் பக்கம் தலையை நீட்டுவார்கள். நான் அவர்களுக்குத் தலை வாரிவிடுவேன். இயற்கைத் தேவைக்காக மட்டுமே வீட்டுக்குள் நுழைவார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃபில்) இருந்துகொண்டு (வெளியே உள்ள) தொழுகை விரிப்பை எடுத்து வருமாறு என்னிடம் கூறினார்கள். அதற்கு நான் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே! என்றேன். அப்போது அவர்கள் அதை எடுத்துவா! மாதவிடாய் என்பது உனது கையில் (ஒட்டிக்கொண்டிருப்பது) இல்லை என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃபில்) இருந்துகொண்டு, (அறையிலுள்ள) தொழுகை விரிப்பை எடு என்று என்னிடம் சொன்னார்கள். அதற்கு நான் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே! என்றேன். அப்போது அவர்கள் மாதவிடாய் என்பது உனது கையில் (ஒட்டிக்கொண்டிருப்பது) இல்லை என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நான் (ஏதேனும் பானத்தைப்) பருகிவிட்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் எற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்துவிட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அவர்கள் அருந்துவார்கள் எனும் வாசகம் இடம்பெறவில்லை. அத்தியாயம் :
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் பாலுணர்வு கிளர்ச்சி நீர் (மதீ) பற்றிக் கேட்க வெட்கப்பட்டேன். (நபி (ஸல்) அவர்களின் புதல்வி) ஃபாத்திமா என் துணைவியாராக இருந்ததே இதற்குக் காரணம். எனவே, நான் மிக்தாத் (ரலி) அவர்களிடம் (இது பற்றிக் கேட்கச்) சொன்னேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், அதற்காக அங்கத் தூய்மை (உளூ) செய்தல் வேண்டும் (குளிக்க வேண்டியதில்லை) என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் பாலுணர்வு கிளர்ச்சி நீர் (மதீ) அதிகமாக வெளிப்படும் ஆடவனாக இருந்தேன். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்க வெட்கப்பட்டுக் கொண்டிருந்தேன். நபியவர்களின் புதல்வியார் (ஃபாத்திமா) என் துணைவியாராக இருந்ததே இதற்குக் காரணம். எனவே, நான் மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களிடம் (இது குறித்து நபியவர்களிடம் கேட்குமாறு) கூறினேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், பிறவி உறுப்பைக் கழுவிக்கொண்டு அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ள வேண்டும் (குளிக்க வேண்டியதில்லை) என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நான் என் சிறிய தாயாரும் நபியவர்களின் துணைவியாருமான மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் ஓரிரவு தங்கியிருந்தேன்.) நபி (ஸல்) அவர்கள் இரவில் விழித்தெழுந்து இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். பிறகு முகத்தையும் கைகளையும் அலம்பிவிட்டு வந்து பின்னர் (மீண்டும்) உறங்கினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது அத்தியாயம் :
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: மனிதனிலிருந்து வெளியாகும் பாலுணர்வு கிளர்ச்சி நீர் குறித்து, அது கசிந்தால் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்பதற்காக மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாம் அனுப்பிவைத்தோம். அ(வர் கேட்ட)தற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ளுங்கள்: பிறவி உறுப்பில் தண்ணீர் ஊற்றி(க் கழுவி)விடுங்கள் என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு எற்பட்டு (குளியல் கடமையாகி) இருக்கும்போது உண்ணவோ உறங்கவோ விரும்பினால் (முன்னதாக) தொழுகைக்கு அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள்வார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இரவு நேரத்தில் தமக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டுவிடுவது பற்றிக் கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அங்கத் தூய்மை (உளூ) செய்து கொள்ளுங்கள்; பிறவி உறுப்பைக் கழுவிக் கொள்ளுங்கள். பிறகு உறங்குங்கள் என்று கூறினார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் இல்லாளிடம் பாலுறவு கொண்டுவிட்டுப் பின்னர் மீண்டும் (உறவுகொள்ள) விரும்பினால் அவர் (இடையில்) அங்கத் தூய்மை (உளூ) செய்து கொள்ளட்டும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், சிறு வாசக மாற்றத்துடன் அவ்விரண்டுக்குமிடையே அவர் ஒரு முறை உளூச் செய்துகொள்ளட்டும் என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் (தாம்பத்தியஉறவு கொள்ளச்) சென்றுவிட்டு வந்து ஒரேயொரு தடவை குளிப்பார்கள். அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஆண்கள் உறக்கத்தில் (கனவில்) காண்பதைப் போன்று பெண்ணும் கண்டு, ஆண்கள் தம்மிடம் காண்பதைப் போன்றே பெண்ணும் தம்மிடம் (நீரைக்) கண்டாள். (இந்நிலையில் அவள்மீது குளியல் கடமையாகுமா?) என்று கேட்டார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களும் அங்கு இருந்தார்கள். அவர்கள், உம்மு சுலைம்! (இவ்வாறு வெட்கமின்றி கேட்டதன் மூலம்) பெண்ணினத்தையே கேவலப்படுத்திவிட்டாயே! உன் வலக் கை மண்ணைக் கவ்வட்டும் என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம், இல்லை; நீதான் (பெண்ணினத்தைக் கேவலப் படுத்திவிட்டாய்!) உனது வலக் கை மண்ணைக் கவ்வட்டும்! என்று கூறிவிட்டு, ஆம்; அவ்வாறு அவள் கண்டால் அவள் குளித்துக்கொள்ள வேண்டும் என்று (உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம்) கூறினார்கள். இதை இஸ்ஹாக் பின் அப்தில்லாஹ் பின் அபீதல்ஹா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அன்னாருடைய பாட்டிதான் உம்முசுலைம் (ரலி) அவர்கள். அத்தியாயம் :
உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஓர் ஆண்மகன் தூக்கத்தில் காண்பதைப் போன்று தனது தூக்கத்தில் காணும் பெண்ணைப் பற்றி (அவள்மீது குளியல் கடமையாகுமா? என்று) கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவ்வாறு ஒரு பெண் கண்டால் அவள் குளித்துக் கொள்ளவேண்டும் என்று கூறினார்கள். (இவ்வாறு நான் கேட்டுவிட்டு) அதற்காக நானே வெட்கப்பட்டேன். மேலும், இவ்வாறு (பெண்ணுக்கும் தூக்கத்தில் ஸ்தலிதம்) ஏற்படுமா? என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம்; பிறகு எப்படி (தாயின்) சாயல் (சேயில்) ஏற்படுகிறது? ஆணின் நீர் (விந்து) வெள்ளை நிறத்தில் கெட்டியானதாய் இருக்கும்; பெண்ணின் (மதன) நீர் மஞ்சள் நிறத்தில் இளகலானதாய் இருக்கும். இவ்விரு(வரின்) நீரில் எது மேலோங்கிவிடுகிறதோ அல்லது முந்திக்கொண்டுவிடுகிறதோ அந்தச் சாயலில்தான் குழந்தை பிறக்கிறது என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது முதலில் தம் கைகளை (மணிக்கட்டுவரை) கழுவுவார்கள். பிறகு வலக் கையால் (தண்ணீர் அள்ளி) இடக் கையின் மீது ஊற்றிப் பிறவி உறுப்பைக் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்வார்கள். அதன் பின்னர் தண்ணீரை அள்ளி மயிர்க்கால்களுக்கு இடையே விரல்களை நுழை(த்துத் தலையைத் தேய்)ப்பார்கள். தலைமுடி முழுவதும் நனைந்துவிட்டதாகத் தெரிந்ததும் இரு கைகளிலும் மூன்று தடவை தண்ணீர் அள்ளி தலையில் ஊற்றுவார்கள். பிறகு மேனி முழுவதிலும் தண்ணீர் ஊற்றுவார்கள். பின்னர் கால்களைக் கழுவுவார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், கால்களைக் கழுவியது பற்றியக் குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :
மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்குக் குளிப்பதற்காக தண்ணீர் கொண்டுவந்து வைத்தேன். அவர்கள் (முதலில்) தம்மிரு கைகளையும் (மணிக்கட்டுவரை) இரண்டு அல்லது மூன்று தடவை கழுவினார்கள். பிறகு பாத்திரத்திற்குள் கையை நுழைத்து (தண்ணீரை அள்ளி) பிறவி உறுப்பின் மீது ஊற்றி, தமது இடக் கையால் கழுவினார்கள். பிறகு தமது இடக் கையை பூமியில் வைத்து நன்கு தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் தொழுகைக்கு அங்கத் தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு தம் கைகள் நிரம்ப மூன்று முறை தண்ணீர் அள்ளித் தமது தலையில் ஊற்றினார்கள். பின்னர் மேனி முழுவதையும் கழுவினார்கள். பிறகு அங்கிருந்து சற்று நகர்ந்து (நின்று) தம் கால்களைக் கழுவினார்கள். பின்னர் நான் அவர்களுக்காகத் துவாலையைக் கொண்டு வந்தேன்.ஆனால், அவர்கள் அதை வாங்கி(த் துடைத்து)க்கொள்ள மறுத்துவிட்டார்கள். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஏழு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், மூன்று முறை கை நிரம்ப தலைக்குத் தண்ணீர் ஊற்றியது பற்றிய வாசகம் இடம்பெறவில்லை. வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அங்கத் தூய்மை செய்த முறை முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது. வாய் கொப்புளித்தது, மூக்கிற்கு நீர் செலுத்தியது பற்றியக் குறிப்பு இடம்பெற்றுள்ளது. அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் துவாலை (கொண்டுவந்தது) பற்றிய குறிப்பு இல்லை. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஃபரக் கொள்ளளவு கொண்ட பாத்திரத்தில் குளிப்பார்கள். நானும் அவர்களும் ஒரே பாத்திரத்தில் குளிப்போம். இந்த ஹதீஸ் ஏழு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், சுஃப்யான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர் எடுத்து) குளிப்போம் என்றும் ஒரு ஃபரக் என்பது மூன்று ஸாஉ கொள்ளளவாகும் என்றும் இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் ஆயிஷா (ரலி) அவர்களுடைய பால்குடிச் சகோதரர் ஒருவரும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம்.அப்போது அவர்களுடைய சகோதரர், நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளித்த முறை பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு ஸாஉ அளவுள்ள பாத்திரம் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி குளித்துக் காட்டினார்கள். அப்போது எங்களுக்கும் அவர்களுக்குமிடையே திரை ஒன்றிருந்தது. தமது தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றினார்கள்.(அது மட்டும் எங்களுக்குத் தெரிந்தது.) நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர், காதின் சோனைவரை இருக்கும் அளவிற்குத் தம் தலை முடியிலிருந்து சிறிதளவை(க் கத்தரித்து) எடுத்துவிடுவார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிக்கும்போது முதலில் தம் (உடலின்) வலப் பக்கத்தில் தண்ணீர் ஊற்றிக் கழுவுவார்கள். பிறகு தம்மீதுள்ள அசுசிமீது தமது வலக் கரத்தால் தண்ணீர் ஊற்றி இடக் கரத்தால் அதை(த் தேய்த்து)க் கழுவுவார்கள். இவற்றைச் செய்து முடித்துவிட்டுத்தான் தலைக்குத் தண்ணீர் உற்றுவார்கள். நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது ஒரே பாத்திரத்தில் குளிப்போம். இதை அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் நபி (ஸல்) அவர்களும் மூன்று முத்து அல்லது அதற்கு நெருக்கமான அளவு கொண்ட பாத்திரத்தில் குளிப்போம். இதை ஹஃப்ஸா பின்த் அப்திர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பெருந்துடக்கிற்காக (சேர்ந்து) ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம். அப்போது எங்கள் இருவருடைய கைகளும் அந்தப் பாத்திரத்தினுள் மாறிமாறிச் செல்லும். இதைக் காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பெருந்துடக்குடையவர்களாய் இருக்கும் போது ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர் அள்ளிக்) குளிப்போம். அது எனக்கும் அவர்களுக்கும் இடையே இருக்கும். அப்போது அவர்கள் என்னை முந்திக்கொண்டு தண்ணீர் அள்ளுவார்கள். அப்போது நான் எனக்கும் விட்டுவையுங்கள்; எனக்கும் விட்டு வையுங்கள் என்று கூறுவேன். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் குளிப்போம். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியாரும் என் சிறிய தாயாருமான) மைமூனா (ரலி) அவர்கள் மிச்சம் வைத்த தண்ணீரில் குளிப்பார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பெருந்துடக்கிற்காக ஒரே பாத்திரத்தில் குளிப்போம். இதை ஸைனப் பின்த் உம்மி சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஐந்து முத்து அளவுத் தண்ணீரில் குளிப்பார்கள்; ஒரு முத்து அளவுத் தண்ணீரில் அங்கத் தூய்மை (உளூ) செய்வார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு முத்து அளவுத் தண்ணீரில் அங்கத் தூய்மை (உளூ) செய்வார்கள். ஒரு ஸாஉ அளவு முதல் ஐந்து முத்து வரைத் தண்ணீரில் குளிப்பார்கள். அத்தியாயம் :
(நபித்தோழர் அபூஅப்திர் ரஹ்மான்) சஃபீனா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஸாஉத் தண்ணீரில் பெருந்துடக்கிற்காகக் குளித்து விடுவார்கள்; ஒரு முத்துத் தண்ணீரில் உளூச் செய்துவிடுவார்கள். இதை அபூரைஹானா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
நபித்தோழர் சஃபீனா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஸாஉ அளவுத் தண்ணீரில் குளிப்பார்கள்; ஒரு முத் அளவுத் தண்ணீரில் அங்கத் தூய்மை (உளூ) செய்வார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அலீ பின் ஹுஜ்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ஒரு முத்து அளவுத் தண்ணீரில் அங்கத் தூய்மை (உளூ) செய்துவிடுவார்கள் என்று இடம்பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளரான அபூரைஹானா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: சஃபீனா (ரலி) அவர்கள் (நினைவாற்றல் குறைந்த) முதுமைப் பருவத்தை அடைந்திருந்தார்கள். எனவே, அன்னாரது அறிவிப்பின் மீது எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஸகீஃப் குலத்தாரின் தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம், எங்கள் நாடு குளிர் பிரதேசமாகும்; (நாங்கள்) எப்படிக் குளிப்பது? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நானோ என் தலையின் மீது மூன்று முறை தண்ணீர் ஊற்றுகிறேன் என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இஸ்மாயீல் பின் சாலிம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ஸகீஃப் குலத்தாரின் தூதுக் குழுவினர், அல்லாஹ்வின் தூதரே! என்று (அழைத்து மேற்கண்டவாறு) வினவினார்கள் என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
முஹம்மத் பின் அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது இரு கைகள் நிரம்பத் தண்ணீர் அள்ளித் தமது தலையில் மூன்று முறை ஊற்றுவார்கள் என்று ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ஜாபிர் (ரலி) அவர்களிடம் ஹசன் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள், எனக்குத் தலைமுடி அதிகமாக இருக்கிறதே? (மூன்று முறை ஊற்றினால் போதாதே!) என்று கேட்டார்கள். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், என் சகோதரர் மகனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலைமுடி உமது முடியைவிட அதிகமாகவும் சிறந்ததாகவும் இருந்தது (அவர்களே மூன்று முறைதான் தலைக்குத் தண்ணீர் ஊற்றினார்கள்) என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், அல்லாஹ்வின் தூதரே! நான் தலைமுடியை இறுக்கமாகப் பின்னிக்கொள்ளும் பெண் ஆவேன். பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது பின்னலை நான் அவிழ்த்துவிட வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இல்லை; நீ இரு கையளவுத் தண்ணீரை உன் தலைமீது மூன்று முறை ஊற்றினால் போதும். பிறகு உன் (உடல்)மீது தண்ணீர் ஊற்றிக்கொள்; துப்பரவாகி விடுவாய் என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், மாதவிடாய் மற்றும் பெருந்துடக்கிற்காக (குளிக்கும்போது) பின்னலை அவிழ்த்துவிட வேண்டுமா? என்று உம்மு சலமா (ரலி) அவர்கள் வினவியதாகவும், அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இல்லை என்று கூறியதாகவும், பிறகு மேற்கண்ட ஹதீஸின் கருத்துப்படி கூறியதாகவும் இடம் பெற்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் போது அந்தப் பின்னலை நான் அவிழ்த்துக் கழுவ வேண்டுமா? என்று உம்மு சலமா (ரலி) அவர்கள் வினவியதாக இடம்பெற்றுள்ளது. மாதவிடாய் பற்றியக் குறிப்பு அதில் இடம்பெறவில்லை. அத்தியாயம் :
உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் பெண்கள் குளிக்கும்போது தம் பின்னலை அவிழ்த்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்த செய்தி ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், இந்த இப்னு அம்ரைப் பார்த்து நான் வியப்படைகிறேன். பெண்கள் குளிக்கும்போது தம் பின்னலை அவிழ்த்துவிடுமாறு பணிக்கிறாரே! ஏன் தலையை மழித்துக்கொள்ளுமாறு பெண்களுக்கு அவர் கட்டளையிட வேண்டியதுதானே! நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் குளிப்போம். என் தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றுவதைவிடக் கூடுதாலாக வேறொன்றும் நான் செய்யவில்லை என்றார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அஸ்மா பின்த் ஷகல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மாதவிடாய்க் குளியல் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களில் ஒருவர் (மாதவிடாய்க் குளியலின் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள்ளட்டும். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்த்து தலையின் சருமம் நனையும்வரைக் கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்துகொள்ளட்டும் என்று சொன்னார்கள். அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள், அதை வைத்து அவள் எவ்வாறு சுத்தம் செய்வாள்? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்!). அதனால் சுத்தம் செய்துகொள்ளட்டும் என்று (மீண்டும்) சொன்னார்கள். உடனே நான், இரத்தம் படிந்த இடத்தில் தடவிக்கொள் என்று -பிறர் காதில் விழாதவாறு அதை இரகசியமாகச்- சொன்னேன். மேலும், அஸ்மா நபி (ஸல்) அவர்களிடம், பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிக் கேட்டார். அதற்கு அவர்கள்,தண்ணீர் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி தலையின் சருமம் நனையும் அளவுக்கு நன்கு தேய்த்துக்கொள். பின்னர் உன் (மேனியின்) மீது தண்ணீர் ஊற்று! என்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: பெண்களிலேயே மிகச் சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்களாவர். மார்க்கத்தை விளங்கிக் கொள்வதில் வெட்கம் அவர்களுக்குத் தடையாக இருந்ததில்லை. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், அல்லாஹ் தூயவன்! அதனால் துப்புரவு செய்துகொள் என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள் தமது முகத்தை (வெட்கப்பட்டு) மறைத்துக்கொண்டார்கள் என்று இடம் பெற்றுள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் (பின்வருமாறு) இடம்பெற்றுள்ளது: ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அஸ்மா பின்த் ஷகல் எனும் பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே, எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் நின்று விட்டால் அவர் எவ்வாறு குளிக்க வேண்டும்? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸிலுள்ளபடி பதிலளித்தார்கள். இந்த அறிவிப்பில் பெருந்துடக்கிற்கான குளியலைப் பற்றியக் குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் எனும் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் உயர் இரத்தப் போக்கு (இஸ்திஹாளா) ஏற்படுபவளாக இருக்கிறேன்; (மாதம் முழுதும்) நான் சுத்தமாவதில்லை. எனவே,நான் தொழுகையை விட்டுவிடலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை (தொழுகையை விட்டுவிடாதே!) ஏனெனில், இது(இஸ்திஹாளா), இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும்; (கர்ப்பப் பையிலிருந்து வெளிவரும்) மாதவிடாயன்று. (மாதத்தில் வழக்கமாக) மாதவிடாய் ஏற்படும் நாட்களில் தொழுகையை விட்டுவிடு! மாதவிடாய்க் காலம் முடிந்துவிட்டால் இரத்தத்தைக் கழுவிவிட்டுத் தொழுது கொள்! என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், ஜரீர் (ரஹ்) அவர்களிடமிருந்து குதைபா (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் பின் அப்தில் முத்தலிப் பின் அசத் (ரலி) அவர்கள் (நபியவர்களிடம்) வந்தார்கள். அவர் எங்கள் குலத்தைச் சேர்ந்த பெண்மணியாவார் எனும் குறிப்பு (கூடுதலாக) இடம்பெற்றுள்ளது. ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ஒரு கூடுதலான தகவல் காணப்படுகிறது. (இரத்தத்தைக் கழுவிக்கொள்; உளூச் செய்துகொள் என்பதே அந்தத் தகவலாகும்.) ஆயினும், அதை நாம் குறிப்பிடவில்லை. (ஹம்மாத் ஒருவர் மட்டுமே இதை அறிவித்திருப்பதே அதற்குக் காரணம்.) அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் உயர் இரத்தப்போக்கு ஏற்படுபவளாக இருக்கிறேன் என்று கூறி தீர்ப்புக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும். எனவே (மாதவிடாய் காலம் முடிந்தவுடன்) குளித்துவிட்டுத் தொழுது கொள்! என்றார்கள். எனவே உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் குளித்துவந்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், உம்மு ஹபீபா (ரலி) அவர்களை ஒவ்வொரு தொழுகைக்கும் குளிக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள் என்று கூறவில்லை. மாறாக (தனிப்பட்ட விருப்பில்) உம்மு ஹபீபா அவர்கள் தாமாகவே அவ்வாறு செய்துவந்தார்கள். இப்னு ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இப்னத்து ஜஹ்ஷ் என்று இடம்பெற்றுள்ளது. உம்மு ஹபீபா எனும் பெயர் இடம்பெறவில்லை. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மைத்துனியும், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் துணைவியாருமான உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுக்கு ஏழு வருட காலமாக உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) இருந்துவந்தது. எனவே, அவர் இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கோரினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இது மாதவிடாயன்று; இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும். எனவே நீ (மாதவிடாய்க் காலம் முடிந்ததும்) குளித்துவிட்டுத் தொழுதுகொள்! என்று கூறினார்கள். தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் தம் சகோதரி(யும் நபியவர்களின் துணைவியாருமான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களது இல்லத்திலிருந்த துணி அலசும் பாத்திரத்தில் (நின்று) குளிப்பார்கள். (அவ்வாறு அவர்கள் குளிக்கும்போது அந்தப் பாத்திரத்தில்) அவர்களது இரத்தத்தின் நிறம் தண்ணீரை மிகைத்திருக்கும். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் இந்த ஹதீஸை அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது அபூபக்ர் (ரஹ்) அவர்கள், ஹிந்தாவுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! (நபி (ஸல்) அவர்கள் அளித்த) இந்தத் தீர்ப்பை அவர் செவியுற்றிருந்தால் அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் அழுதுவிடுவார். ஏனெனில், ஹிந்தா (உயர் இரத்தப்போக்கின் காரணமாக) தொழாமல் இருந்துவந்தார் என்று கூறினார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்களது கூற்று இடம்பெறவில்லை. - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுக்கு ஏழாண்டுகளாக உயர் இரத்தப்போக்கு இருந்து வந்தது என்று ஹதீஸ் தொடங்குகிறது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் துணைவியார் உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் தமக்கு (உயர்) இரத்தப்போக்கு ஏற்படுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மாதவிடாய் நிற்கும் நாட்கள்வரை நீ காத்திரு! பின்னர் குளித்துக்கொள்! என்று அவரிடம் கூறினார்கள். உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் குளிப்பவராய் இருந்தார்கள். அத்தியாயம் :
முஆதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், மாதவிடாய் ஏற்பட்ட பெண் விடுபட்டத் தொழுகைகளை மீண்டும் நிறைவேற்ற வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நீ ஹரூரா எனும் இடத்தைச் சேர்ந்தவளா?அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியருக்கு மாதவிடாய் ஏற்படும்போது (விடுபட்டத் தொழுகைகளை மீண்டும்) நிறைவேற்றுமாறு அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிடவா செய்தார்கள்? என்று (திருப்பிக்) கேட்டார்கள். அத்தியாயம் :
உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளித்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். அவர்களை, அவர்களுடைய புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஒரு துணியால் திரையிட்டு மறைத்துக்கொண்டிருந்தார்கள். அத்தியாயம் :
உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் மக்காவின் மேட்டுப் பகுதியில் இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளியலுக்காக எழுந்தார்கள். அப்போது அவர்களை ஃபாத்திமா (ரலி) அவர்கள் திரையிட்டு மறைத்தார்கள். (குளித்த) பிறகு தமது ஆடையை வாங்கிப் போர்த்திக்கொண்டார்கள். பின்னர் முற்பகல் தொழுகை (ளுஹா) எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், அவர்களுடைய புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் அவர்களது ஆடையினால் திரையிட்டு மறைத்துக்கொண்டார்கள். குளித்து முடிந்த பின் அந்த ஆடையை வாங்கிப் போர்த்திக்கொண்டார்கள். பின்னர் நின்று எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். அது முற்பகல் (ளுஹா) நேரமாகும் என்று உம்மு ஹானி (ரலி) அவர்கள் கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபியவர்களுக்கு நபித்துவம் வழங்கப்படுவதற்கு முன்பு) கஅபா புதுப்பித்துக் கட்டப்பட்ட போது நபி (ஸல்) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் கற்களைச் சுமந்து எடுத்து வந்தார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள், (சிறுவராயிருந்த) நபி (ஸல்) அவர்களை நோக்கி கல் சுமப்பதற்கு (வசதியாக) உமது வேட்டியை அவிழ்த்துத் தோளில் (சும்மாடாக) வைத்துக் கொள்க! என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் அவ்வாறே செய்தார்கள். உடனே மயக்கமுற்றுக் கீழே விழுந்தார்கள். அவர்களுடைய கண்கள் வானத்தை நோக்கி நிலைகுத்தி நின்றன. பிறகு எழுந்து என் வேட்டி, என் வேட்டி என்றார்கள். வேட்டியை (எடுத்துக் கொடுத்த உடனே அதை) இறுக்கமாகக் கட்டிக் கொண்டார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மது பின் ராஃபிஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், உமது தோளில் என்பதற்கு பதிலாக உமது பிடரியில் என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (குறைஷிக் குலத்தார் கஅபாவைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சிறுவராயிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் மக்களுடன் கஅபாவுக்காகக் கற்களை(ச் சுமந்து) எடுத்து வந்துகொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் ஒரு வேட்டி அணிந்திருந்தார்கள். அவர்களிடம் அவர்களுடைய பெரிய தந்தையான அப்பாஸ் (ரலி) அவர்கள், என் சகோதரரின் மகனே! நீங்கள் உங்கள் வேட்டியை அவிழ்த்து, தோள்மீது கல்லுக்குக் கீழே வைத்துக்கொள்ளலாமே!என்று கூறினார்கள். (சிறுவராயிருந்த) அல்லாஹ்வின் தூதரும் அவ்வாறே அதை அவிழ்த்துத் தமது தோள்மீது வைத்தார்கள். உடனே மயக்கம் ஏற்பட்டுக் கீழே விழுந்தார்கள். அந்த நாளுக்குப் பின் ஒருபோதும் அவர்கள் (ஆடையின்றி) பிறந்த மேனியுடன் காணப்பட்டதில்லை. அத்தியாயம் :
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு கனமான கல்லைத் தூக்கிக்கொண்டு வந்துகொண்டிருந்தேன். அப்போது என் உடலில் ஒரு மெல்லிய வேட்டி இருந்தது. அது அவிழ்ந்துவிட்டது. என்னிடமோ பெரிய கல். எனவே, என்னால் அதை இறக்கி வை(த்துவிட்டு வேட்டியைப் பிடி)க்க முடியாமல் சேர வேண்டிய இடம்வரை போய்ச் சேர்ந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உமது ஆடையை நோக்கிச் சென்று அதை எடுத்து (உடுத்தி)க்கொள்க! நிர்வாணமாக நடக்காதீர்! என்று கூறினார்கள். அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு திங்கள் கிழமை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிற்கு அருகிலுள்ள) குபா எனும் இடத்திற்குச் சென்றேன். நாங்கள் பனூ சாலிம் கோத்திரத்தார் வசிக்குமிடத்திற்கு வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்களது வீட்டு வாசலில் நின்று அவர்களைச் சப்தமிட்டு அழைத்தார்கள். உடனே இத்பான் (ரலி) அவர்கள் தமது கீழங்கியை இழுத்தபடி (அவசர அவசரமாக) வெளியே வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாம் இம்மனிதரை அவசரப்படுத்திவிட்டோம் என்று கூறினார்கள். அப்போது இத்பான் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் (தாம்பத்திய உறவுகொள்ளும்போது) விந்து வெளிவருவதற்கு முன்பே தம் மனைவியைவிட்டு அவசரப்படுத்தப்பட்டு (விலக்கப்பட்டு)விட்டார். இந்நிலையில் என்ன சட்டம், (அவர்மீது குளியல் கடமையாகுமா) கூறுங்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தண்ணீர் (விந்து) வெளிப்பட்டால்தான் தண்ணீர் (குளியல்) கடமையாகும் என்றார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தண்ணீர் (விந்து) வெளிப்பட்டால்தான் தண்ணீர் (குளியல்) கடமையாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஒருவர் தம் மனைவியுடன் சிறிது நேரம் தாம்பத்திய உறவு கொண்டு,விந்தை வெளியேற்ற முடியாமற்போவது பற்றிக் கேட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,மனைவியிடமிருந்து தம்மீது பட்டதை அவர் கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டு தொழலாம் என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சமைக்கப்பட்ட) ஆட்டின் சப்பை இறைச்சியைச் சாப்பிட்ட பின் (புதிதாக) உளூச் செய்யாமலேயே தொழுதார்கள். - இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (சமைக்கப்பட்ட) இறைச்சி அல்லது இறைச்சியுள்ள எலும்பைச் சாப்பிட்ட பின் தொழுதார்கள். (புதிதாக)உளூச் செய்யவுமில்லை; தண்ணீரைத் தொடவுமில்லை. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது கரத்திலிருந்த) ஆட்டுச் சப்பையை (க் கத்தியால்) துண்டுபோட்டுச் சாப்பிடுவதை நான் பார்த்தேன். பிறகு (புதிதாக) உளூச் செய்யாமலேயே தொழுதார்கள். அத்தியாயம் :
அபூராஃபிஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக ஆட்டு ஈரலையும் அதையொட்டி உள்ள பகுதியையும் பொரித்துக்கொடுத்துள்ளேன் என்று உறுதி கூறுகிறேன். (அவர்கள் அதை உண்டுவிட்டுத்) தொழுதார்கள்.(புதிதாக) உளூச் செய்யவில்லை. அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பால் அருந்திய பின்னர் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி வாய் கொப்புளித்தார்கள். பிறகு இதில் கொழுப்பு இருக்கிறது (ஆகவேதான், வாய் கொப்புளித்தேன்) என்று கூறினார்கள். - மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமது வயிற்றில் ஏதோ ஏற்படுவதைப் போன்று உணர்ந்து, அதிலிருந்து ஏதேனும் வெளியேறிவிட்டதா இல்லையா என்று சந்தேகப்பட்டால், அவர் (வாயு பிரிவதன்) சப்தத்தைக் கேட்காதவரை, அல்லது நாற்றத்தை உணராதவரை (உளூ முறிந்துவிட்டதென எண்ணி) பள்ளிவாசலில் இருந்து வெளியேறிவிட வேண்டாம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் சிறிய தாயார்) மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண்ணுக்குரிய ஆடு ஒன்று (செத்துவிட்டது. அது) கிடந்த வழியே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது நீங்கள் இதன் தோலால் பயனடையக் கூடாதா? என்று கேட்டார்கள். அத்தியாயம் :
அப்துர் ரஹ்மான் பின் வஅலா அஸ்ஸபஇய்யீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், நாங்கள் மேற்கே வசித்துவருகிறோம். அக்னி ஆராதனையாளர்(மஜூசி)கள் தோல்பைகளில் தண்ணீரையும் கொழுப்பையும் எங்களிடம் கொண்டுவருகின்றனர். (நாங்கள் அந்தத் தோல் பைகளில் அருந்தலாமா?) என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அருந்தலாம் என்றார்கள். நான், இது உங்களது சுயமான கருத்தா?என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைப் பதப்படுத்துவதே அதைத் தூய்மையாக்கிவிடும் என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஒரு பயணத்தில் (பனூ முஸ்தலிக் போரின் பயணத்தில்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம். நாங்கள் (மதீனாவுக்கும் கைபருக்கும் இடையே) பைதா அல்லது தாத்துல் ஜைஷ் எனுமிடத்தில் (வந்துகொண்டு) இருந்தபோது (என் சகோதரி அஸ்மாவிடம் நான் இரவல் வாங்கியிருந்த) எனது கழுத்தணி அவிழ்ந்து (காணாமற்போய்)விட்டது. அதைத் தேடுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) தங்கினார்கள். அவர்களுடன் மக்களும் தங்கினர். அப்போது அவர்கள் எந்த நீர்நிலை அருகிலும் இருக்கவில்லை; அவர்களிடமும் தண்ணீர் எதுவும் இருக்கவில்லை. அப்போது மக்கள் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, (உங்கள் புதல்வி) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (இங்கு) தங்கும்படி செய்துவிட்டார். இங்கும் தண்ணீர் இல்லை;மக்களிடமும் தண்ணீர் இல்லை என்று முறையிட்டனர். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னைப் பார்த்து), அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (பயணத்தைத் தொடர முடியாமல்) தடுத்துவிட்டாயே! இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை என்று கூறினார்கள். அவர்கள் எதை எதைச் சொல்ல இறைவன் நாடினானோ அதையெல்லாம் சொல்லி என்னைக் கண்டித்தபடி தமது கரத்தால் எனது இடுப்பில் குத்தலானார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது (தலைவைத்துப் படுத்து) இருந்ததுதான் என்னை அசையவிடாமல் (அடிவாங்கிக் கொண்டிருக்கும் படி) செய்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலையில் விழித்தெழுந்த போதும் தண்ணீர் இருக்கவில்லை. அப்போது தான் தயம்மும் உடைய (5:6ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். மக்கள் தயம்மும் செய்தனர். (இது குறித்து) அல்அகபா உறுதிமொழி அளித்த தலைவர்களில் ஒருவரான- உசைத் பின் அல்ஹுளைர் (ரலி) அவர்கள், அபூபக்ரின் குடும்பத்தாரே! உங்கள் மூலமாக ஏற்பட்ட பரக்கத் (சமுதாய நலன்)களில் இ(ந்தத் தயம்மும் எனும் சலுகையான)து, முதலாவதாக இல்லை. (எத்தனையோ நலன்கள் இதற்கு முன்பும் உங்கள் மூலம் ஏற்பட்டுள்ளன) என்று கூறினார்கள். (பிறகு) நானிருந்த ஒட்டகத்தைக் கிளப்பியபோது, அதன் அடியில் (காணாமற்போன) அந்தக் கழுத்தணி கிடந்தது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (என் சகோதரி) அஸ்மாவிடம் கழுத்தணி ஒன்றை இரவல் வாங்கினேன். அது (பனூ முஸ்தலிக் போரின் பயணத்தில்) தொலைந்துபோய்விட்டது. ஆகவே, அதைத் தேடுவதற்காக தம் தோழர்களில் சிலரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். (அவர்கள் அதைத் தேடச் சென்றனர்.) அப்போது (வழியில்) அவர்களுக்குத் தொழுகை நேரம் வந்துவிட்டது. அந்த நேரம் (உளூச் செய்வதற்குத் தண்ணீர் கிடைக்காததால்) உளூச் செய்யாமலேயே அவர்கள் தொழுதார்கள். அவர்கள் திரும்பி வந்தபோது (உளூச் செய்யாமல் தொழுதது குறித்து) நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டனர். அப்போதுதான் தயம்மும் தொடர்பான (5:6ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. இதையடுத்து (என்னிடம்) உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள், தங்களுக்கு அல்லாஹ் நற்பலன் வழங்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! ஓர் (இக்கட்டான) சம்பவம் நேரும்போதெல்லாம் அதிலிருந்து விடுபடுவதற்கான முகாந்திரத்தைத் தங்களுக்கும், அதில் ஒரு சுபிட்சத்தை முஸ்லிம்களுக்கும் அல்லாஹ் ஏற்படுத்தாமல் இருந்ததில்லை என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான உமைர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான அப்துர் ரஹ்மான் பின் யசார் (ரஹ்) அவர்களும் அபுல்ஜஹ்ம் பின் ஹாரிஸ் பின் ஸிம்மா அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அபுல்ஜஹ்ம் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள) பிஃரு ஜமல் எனும் இடத்திலிருந்து வந்துகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களை ஒருவர் சந்தித்து சலாம் சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு உடனடியாக பதில் சலாம் சொல்லாமல் ஒரு சுவரை நோக்கிப் போய் (அதில் தம் கைகளை அடித்து) தமது முகத்தையும் இரு கைகளையும் தடவி (தயம்மும் செய்து)கொண்ட பின்னர் அவருக்கு பதில் சலாம் சொன்னார்கள். அத்தியாயம் :