20 - அடிமை விடுதலை புத்தகம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஓர் அடிமையில் தமக்குரிய பங்கை விடுதலை செய்கிறாரோ அவரிடம் அந்த அடிமையின் (முழு) விலையையும் எட்டுகின்ற அளவுக்குச் செல்வம் இருந்தால், அந்த அடிமையை ஒத்த மற்றோர் அடிமையின் விலையை மதிப்பிட்டு,தம் கூட்டாளிகளுக்கு அவர்களுக்குரிய பங்குகளின் விலையைக் கொடுத்து, அந்த அடிமையை (முழுமையாக) விடுதலை செய்துவிட வேண்டும். இல்லையெனில், அவர் எந்த அளவுக்கு விடுதலை செய்தாரோ, அந்த (தமது பங்கின்) அளவுக்குத்தான் விடுதலை செய்தவர் ஆவார். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பத்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. $ அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: பரீரா(எனும் அடிமைப் பெண்), தமது விடுதலைப் பத்திரத்தின் தொகையைச் செலுத்துவதற்கு உதவிகோரி என்னிடம் வந்தார். (அப்போது) அவர் தமது விடுதலைத் தொகையில் எதையும் செலுத்தியிருக்கவில்லை. நான் அவரிடம், "நீ உன் உரிமையாளர்களிடம் திரும்பிச்செல். (நான் உன் சார்பாக) உன் விடுதலைப் பத்திரத்தின் தொகையைச் செலுத்திவிடுகிறேன். (ஆனால்,) உனது வாரிசுரிமை எனக்கே உரியதாகும். இதற்கு அவர்கள் சம்மதித்தால், நானே அதைச் செலுத்திவிடுகிறேன்" என்று கூறினேன். அவ்வாறே, பரீரா தம் உரிமையாளர்களிடம் கேட்க, அவர்கள் (சம்மதிக்க) மறுத்து, "உன்(னை வாங்கி விடுதலை செய்வதன்) வாயிலாக, அவர் இறைவனிடம் நன்மையைப் பெற விரும்புவாராயின் அவ்வாறே செய்யட்டும்! ஆனால்,உனது வாரிசுரிமை எங்களுக்கே உரியதாக இருக்கும்" என்று கூறிவிட்டார்கள். இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், விடுதலை செய்பவருக்கே வாரி சுரிமை உரியதாகும்"என்று கூறினார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று (உரையாற்றுகையில்), "சிலருக்கு என்ன ஆயிற்று?அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கிறார்களே! அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனையை ஒருவர் விதித்தால் அது செல்லத் தக்கதன்று; அவர் நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனையே (ஏற்று) பின்பற்றத்தகுந்ததும் உறுதி வாய்ந்ததும் ஆகும்" என்று கூறினார்கள். அத்தியாயம் :
மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ஜரீர் பின் அப்தில் ஹமீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது: பரீராவின் கணவரும் அடிமையாக இருந்தார். (விடுதலையடைந்த) பரீராவுக்கு (அவர் தம் கணவருடன் சேர்ந்து வாழ, அல்லது பிரிந்துவிட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விருப்பஉரிமை அளித்தார்கள். அப்போது பரீரா தம்மையே (அதாவது தனித்து வாழ்வதையே) தேர்ந்தெடுத்தார். பரீராவின் கணவர் (அடிமையாக இல்லாமல்) சுதந்திரமானவராக இருந்திருப்பின், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பரீராவுக்கு விருப்ப உரிமை வழங்கியிருக்கமாட்டார்கள். இந்த அறிவிப்புகளில், "இறைவாழ்த்துக்குப் பின்" ("அம்மா பஅத்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்) எனும் குறிப்பு இடம்பெறவில்லை. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அடிமையாயிருந்து விடுதலை பெற்ற) பரீராவால் மூன்று தீர்வுகள் (நமக்கு) கிட்டின: 1. அவருடைய உரிமையாளர்கள் அவருடைய வாரிசுரிமை தமக்கே உரியது என நிபந்தனையிட்டு, அவரை விற்பதற்கு முன் வந்தனர். அதை நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது "நீ அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், விடுதலை செய்தவருக்கே (அவ்வடிமையின்) வாரிசுரிமை உரியதாகும்" என்று கூறினார்கள். 2. அவர் விடுதலை செய்யப்பட்டபோது, (தம் அடிமைக் கணவருடனான உறவைத் தொடரவும் முறித்துக்கொள்ளவும்) அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விருப்பஉரிமை வழங்கினார்கள். அப்போது அவர் தம்மையே (அதாவது தனித்து வாழ்வதையே) தேர்ந்தெடுத்துக்கொண்டார். 3. மக்கள் அவருக்கு தர்மப்பொருட்களை வழங்குவார்கள்; (அவற்றை) அவர் எங்களுக்கு அன்பளிப்பாக வழங்குவார். அது குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, "இது அவருக்குத் தர்மமாகும்; உங்களுக்கு அது அன்பளிப்பாகும். எனவே, அதை நீங்கள் உண்ணலாம்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள், ஓர் அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்ய விரும்பினார்கள். அப்பெண்ணின் உரிமையாளர்கள் "இவளுக்கு வாரிசாகும் உரிமை எங்களுக்கே இருக்கவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் உங்களுக்கு இவளை விற்கிறோம்" என்று கூறினர். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது, "அ(வர்களின் நிபந்தனையான)து உனக்குத் தடையாக இராது. ஏனெனில், விடுதலை செய்தவருக்கே (அடிமையின் சொத்துக்கான) வாரிசுரிமை உரியதாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ஒவ்வொரு குலத்தாரின் மீதும், (அவர்களில் ஒருவர் தவறுதலாகச் செய்துவிட்ட கொலைக் குற்றத்திற்கு) உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என விதியாக்கினார்கள். பிறகு "எந்த ஒரு முஸ்லிமும் மற்றொரு முஸ்லிமான மனிதரால் விடுதலை செய்யப்பட்ட அடிமைக்கு, அவரது அனுமதியின்றி வாரிசாகிக்கொள்வது சட்டப்படி கூடாது" என்றும் விதியாக்கினார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவ்வாறு செய்பவரை நபி (ஸல்) அவர்கள் (பல்வேறு குலங்களுக்கு எழுதிய) தமது கடிதத்தில் சபித்திருந்தார்கள் என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தம்மை விடுதலை செய்த உரிமையாளர்களின் அனுமதியின்றி, தமக்கு வாரிசாகும் உரிமையை வேறொரு கூட்டத்தாருக்கு வழங்குகிறாரோ அந்த அடிமைமீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவர் புரிந்த கடமையான மற்றும் கூடுதலான வழிபாடுகள் எதுவும் அவரிடமிருந்து ஏற்கப்படாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தம்மை விடுதலை செய்த உரிமையாளர்களின் அனுமதியின்றி, தமக்கு வாரிசாகும் உரிமையை வேறொரு கூட்டத்தாருக்கு வழங்குகிறாரோ அந்த அடிமைமீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். அவர் புரிந்த கடமையான மற்றும் கூடுதலான வழிபாடுகள் எதுவும் மறுமை நாளில் அவரிடமிருந்து ஏற்கப்படாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். - மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "யார் தம்மை விடுதலை செய்த உரிமையாளர்களின் அனுமதியின்றி, அவர்கள் அல்லாதவர்களை உரிமையாளர்களாக ஆக்கிக்கொள்கிறாரோ" என இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :
அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்களின் தோழரான சயீத் பின் அப்தில்லாஹ் இப்னு மர்ஜானா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: "ஒரு முஸ்லிமான மனிதர் மற்றொரு முஸ்லிமான (அடிமை) மனிதரை விடுதலை செய்தால், (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவரின்) ஓர் உறுப்பை அல்லாஹ் நரகத்திலிருந்து காப்பாற்றுவான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்ததை நான் கேட்டேன். இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்ற நான், அதை அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். இதைக் கேட்ட அலீ (ரஹ்) அவர்கள், உடனே தம் அடிமை ஒருவரை விடுதலை செய்துவிட்டார்கள். அந்த அடிமைக்கு (விலையாக) அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் பத்தாயிரம் திர்ஹம்களை, அல்லது ஆயிரம் தீனாரை அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்களிடம் கொடுத்திருந்தார்கள். (ஆயினும், அந்த விலைக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு அந்த அடிமையை விடுதலை செய்துவிட்டார்கள்.) அத்தியாயம் :