81 - உள்ளத்தின் மென்மை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு.2 இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அகழ்ப் போருக்காக அகழ் தோண் டிக்கொண்டிருந்தபோது) நபி (ஸல்) அவர்கள், “இறைவா!மறுமை வாழ்வேவாழ்வாகும்.ஆகவே, (அதற்காக உழைக்கும்அன்சாரிகளையும் முஹாஜிர்களையும்செம்மைப்படுத்துவாயாக!” என்று (பாடியபடி) சொன்னார்கள்.3 அத்தியாயம் :
சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாயிதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு டன் இருந்தோம். அவர்கள் அகழ் தோண்டிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் மண் சுமந்து எடுத்து வந்துகொண்டிருந் தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களைப் பார்த்துவிட்டு, “இறைவா!மறுமை வாழ்வேவாழ்வாகும்.ஆகவே, (அதற்காக உழைக்கும்)அன்சாரிகளையும் முஹாஜிர்களையும்மன்னிப்பாயாக!” என்று (பாடியபடி) கூறினார்கள்.4 அத்தியாயம் :
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: “சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவுக்கு இடம் (கிடைப்பது), உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்.6 காலையில் சிறிது நேரம் அல்லது மாலையில் சிறிது நேரம் அல்லாஹ்வின் பாதையில் (போருக்குச்) செல்வது உலகத்தையும் அதிலிருப்பவற்றையும்விடச் சிறந்ததாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.7 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக்கொண்டு “உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு” என்று சொன்னார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்:) “நீ மாலை நேரத்தை அடைந்து விட்டால் காலைவேளையை எதிர்பார்க் காதே! நீ காலைவேளையை அடைந்து விட்டால் மாலை நேரத்தை எதிர்பார்க் காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உனது ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உனது இறப்பு(க்குப் பிந்திய நாளு)க்காக உனது வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.9 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் (நிலத்தில்) ஒரு சதுரக் கட்டம் வரைந் தார்கள். அதன் நடுவிலிருந்து சதுரத்திற்கு வெளியே செல்லுமாறு ஒரு கோடு வரைந்தார்கள். பின்னர் நடுவிலுள்ள அந்தக் கோட்டின் ஓர் ஓரத்திலிருந்து (சதுரத்துடன் முடியும்) மறு ஓரம்வரை சிறு சிறு கோடுகள் வரைந்தார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: (நடுவிலுள்ள மையப் புள்ளியான) இதுதான் மனிதன். இந்தச் சதுரம்தான் அவனைச் ‘சூழ்ந்துள்ள’ அல்லது ‘சூழ்ந்துகொண்டுவிட்ட’ வாழ்நாளாகும். (நடுவிலிருந்து) வெளியே செல்லும் கோடுதான் அவனுடைய எதிர்பார்ப்பு களாகும். இதோ இந்தச் சிறிய கோடுகள் (மனிதனை வந்தடையும்) சோதனை களாகும். (சோதனைகளில்) ஒன்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் மற்றொன்று அவனைத் தீண்டவே செய்யும். (இடையில் ஏற்படும் சோதனைகளான) இவற்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் இ(யற்கை மரணமான)து அவனைத் தீண்டவே செய்யும்.11 அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (முந்தைய ஹதீஸில் உள்ளபடி) சில கோடுகள் வரைந்தார்கள். பிறகு “(சதுரத்தின் நடுவி லுள்ள கோட்டைக் காட்டி) இதுதான் (மனிதனின்) எதிர்பார்ப்புகள் (என்றும், சதுரத்தைக் காட்டி) இதுதான் அவனது ஆயுள் (என்றும் கூறிவிட்டு,) இவ்வாறு அவன் (எதிர்பார்ப்புகளில்) இருந்து கொண்டிருக்கும்போது அருகிலுள்ள (மரணம்-ஆயுள் முடிவு எனும்) கோடு அவனை வந்தடைகிறது” என்று கூறினார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதனின் வயது அறுபது ஆண்டுகளை எட்டும்வரை வாழ்நாளைத் தள்ளிப்போட்ட பிறகும் அவன் (ஆயுள் விஷயத்தில்) கூறும் சாக்குப்போக்குகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முதியவரின் மனம்கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்து வரும். 1. இம்மை வாழ்வின் (செல்வத்தின்) மீதுள்ள பிரியம். 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன: 1. பொருளாசை. 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை. இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
மஹ்மூத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: (நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிலிருந்த வாளி ஒன்றில் (கிணற்று) நீர் எடுத்து (தமது வாயில் ஊற்றி வளத்திற்காக என்மீது) உமிழ்ந்தது எனக்கு நினைவுண்டு.15 இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
(தொடர்ந்து) மஹ்மூத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: இத்பான் பின் மாலிக் அல்அன்சாரி (ரலி) அவர்கள் (பின்வருமாறு) சொல்ல நான் கேட்டேன்: (ஒருநாள்) அதிகாலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்திருந்தபோது “அல்லாஹ்வின் அன்பை நாடி ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை) என்று கூறியவாறு மறுமை நாளில் ஓர் அடியார் வந்தால் அவர்மீது நரகத்தை அல்லாஹ் தடை செய்யாமல் இருப்பதில்லை” என்று கூறினார்கள்.16 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரது உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமைகாப்பாரானால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ர் போரில் கலந்துகொண்டவருமான அம்ர் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை, ஜிஸ்யா (காப்பு)வரி வசூலித்துக்கொண்டுவருமாறு பஹ் ரைனுக்கு அனுப்பினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அக்னி ஆராதனையாளர்களான) பஹ்ரைன்வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்களுக்கு அலா பின் அல்ஹள்ரமீ (ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூஉபைதா (ரலி) அவர்கள் (வரி வசூலித்துக்கொண்டு) பஹ்ரைனிலிருந்து நிதியுடன் (மதீனாவுக்கு) வந்தார்கள். அபூஉபைதா (ரலி) அவர்கள் வந்துவிட்டதைக் கேள்விப்பட்ட அன்சாரிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்ல, அது சரியாக ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக அமைந்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அன்சாரிகள் தொழுகையை நிறைவேற்றினார்கள். தொழுகை முடிந்து நபி (ஸல்) அவர்கள் திரும்ப, அன்சாரிகள் தங்கள் எண்ணத்தை சைகையால் வெளியிட்டனர். (ஆர்வத்துடன் இருந்த) அவர்களைக் கண்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துவிட்டு, “அபூஉபைதா வந்துவிட்டார்; அவர் ஏதோ கொண்டுவந்திருக்கிறார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்” என்றார்கள். அன்சாரிகள் “ஆம்; அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். “அவ்வாறாயின் ஒரு நற்செய்தி. உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்ச வில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் தாராளமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, அது (மறுமையின் எண்ணத்திலிருந்து) அவர்களின் கவனத்தைத் திருப்பிவிட்ட தைப் போன்று உங்களின் கவனத்தையும் அ(ந்த உலகாசையான)து திருப்பிவிடுமோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.17 அத்தியாயம் :
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து இறந்த வர்களுக்காகத் தொழுவிப்பதைப் போன்று உஹுத் போர் உயிர்த் தியாகிகளுக்காகத் தொழவைத்தார்கள். பிறகு சொற்பொழிவு (மிம்பர்) மேடைக்குத் திரும்பிவந்து “உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்) காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (‘அல்கவ்ஸர்’ எனும்) எனது தடாகத்தைக் காண்கின்றேன். எனக்கு ‘பூமியின் கருவூலத் திறவுகோல்கள்’ அல்லது ‘பூமியின் திறவு கோல்கள்’ வழங்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குப் பின்னால் நீங்கள் (இறைவனுக்கு) இணை வைப்போராக மாறிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகத் திற்காக நீங்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு (மோதி)க்கொள்வீர்களோ என்றுதான் நான் அஞ்சுகின்றேன்” என்று சொன்னார்கள்.18 அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையில் அமர்ந்து) “இறைவன் உங்களுக்காக வெளிக்கொணரும் பூமியின் வளங்களைத்தான் உங்கள் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள். “பூமியின் வளங்கள் எவை?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் “(கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய) இவ்வுலகக் கவர்ச்சிப்பொருட்கள்(தான் அவை)” என்று பதிலளித்தார்கள். அப்போது ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “(செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா?” என்று வினவினார். அதற்கு (பதிலளிக்காமல்) நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். எந்த அளவுக்கென்றால், அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறதோ என்று நாங்கள் நினைத்தோம். பிறகு, தமது நெற்றியைத் துடைக்கலானார்கள். பின்னர் “கேள்வி கேட்டவர் எங்கே?” என்று வினவினார்கள். அம்மனிதர் “(இதோ) நான் (இங்கிருக்கிறேன்)” என்று கூறினார். (அவர் கேள்வி கேட்டதையடுத்து மக்களுக்குப் பயனளிக்கும்) அந்தப் பதில் வெளிப்பட்டதற்காக அவரை நாங்கள் மெச்சினோம். நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நன்மையால் நன்மையே விளையும். இந்த (உலகின்) செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். வாய்க்கால் விளைவிக்கின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை,) வயிறுபுடைக்கத் தின்னவைத்துக் கொன்றுவிடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் சென்றுவிடுகின்றன. பசுமையான புல்லைத் தின்னும் கால் நடைகளைத் தவிர. (அவை மடிவதில்லை. ஏனெனில்,) அவை (புல்லைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது, சூரியனை நோக்கி(ப் படுத்து)க்கொண்டு அசை போடுகின்றன. (இதனால் நன்கு சீரணமாகி) சாணமும் சிறுநீரும் வெளியேறுகின்றன. பின்னர் (வயிறு காலியானவுடன்) மறுபடியும் சென்று மேய்கின்றன.19 இந்த (உலகின்) செல்வம் இனிமை யானதாகும். யார் இதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடு கின்றாரோ அவருக்கு அது நல்லுதவி யாக அமையும். யார் இதை முறையற்ற வழிகளில் சம்பாதிக்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார்.20 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். -இதன் அறிவிப்பாளரான இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் “தமது தலைமுறைக்குப் பிறகு இரண்டாவது தலைமுறையை மட்டும் சொன்னார்களா? அல்லது மூன்றாவது தலைமுறையையும் குறிப்பிட்டார்களா என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.- (தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) இவர்களுக்குப்பின் ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்கள் சாட்சியமளிக்க தாமாக முன்வருவார்கள். ஆனால், சாட்சியம் அளிக்கும்படி அவர்களை யாரும் கோரமாட்டார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களை நம்பி எதையும் ஒப்படைக்கப்படாது. அவர்கள் நேர்ச்சை செய்வார்கள். ஆனால், அதை நிறைவேற்றமாட்டார்கள். (அதிகமாக உண்டு குடித்ததால்) பருமன் (தொந்தி) ஏற்படும் நிலை அவர்களிடையே தோன்றும். இதை இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.21 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். இவர்களுக்குப் பிறகு சில சமுதாயத்தார் வருவர். அவர்களுடைய சாட்சியம் அவர்களின் சத்தியங்களையும் அவர்களுடைய சத்தியங்கள் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக்கொள்ளும். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.22 அத்தியாயம் :
கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் (கடும் வயிற்றுவலிக்குச் சிகிச்சை பெறுவதற்காகத்) தமது வயிற்றில் ஏழுமுறை சூடுபோட்டிருந்தார்கள். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறக் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்திருக்காவிட்டால் மரணத்தை வேண்டி நான் பிரார்த்தனை புரிந்திருப்பேன். முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்கள் பலர் தம(து நன்மைகளு)க்குஇவ்வுலக வாழ்க்கை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திடாத நிலையில் (வாழ்ந்து) மறைந்துவிட்டார்கள். (ஆனால், அவர்களுக்குப்பின்) நாங்கள் (வீடுகட்ட) மண்ணுக்குச் செலவழிப்பதைத் தவிர வேறு தேவையே இல்லாத அளவுக்கு இவ்வுலக(ச் செல்வ)த்தைப் பெற்றுள்ளோம்.23 அத்தியாயம் :
கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (ஒருமுறை) கப்பாப் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தமது (வீட்டுச்) சுவர் ஒன்றை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்: மறைந்துவிட்ட எம் தோழர்(கள் புரிந்த நன்மை)களை இவ்வுலக வாழ்க்கை எந்த வகையிலும் பாதித்துவிடவில்லை. (ஆனால்,) அவர்களுக்குப் பிறகு நாங்கள் (நிறைய) செல்வத்தைப் பெற்றுள்ளோம். (வீடு கட்டத் தேவைப் படும்) மண்ணைத் தவிர, அதைச் செலவழிக்க வேறு துறை எதையும் நாங்கள் காணவில்லை. அத்தியாயம் :
கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புலம்பெயர்ந்து (மதீனாவுக்கு ஹிஜ்ரத்) சென்றோம்.24 அத்தியாயம் :
ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மதீனாவிலுள்ள) ‘மகாயித்’ எனுமிடத்தில் அமர்ந்திருந்த உஸ்மான் (ரலி) அவர்களிடம் நான் தண்ணீருடன் சென்றேன். அப்போது அவர்கள் பரிபூரணமாக அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிறகு “நபி (ஸல்) அவர்கள் இந்த இடத்தில் பரிபூரணமாக அங்கத் தூய்மை செய்யக் கண்டேன்” என்று கூறிவிட்டு, “யார் இதைப் போன்று (முழுமையாக) அங்கத் தூய்மை செய்து, பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுது விட்டுப் பிறகு அமருவாரோ அவர் அதற்கு முன்செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “(ஆனால், இதைக் கொண்டு) ஏமாந்து (பாவங்களில் மூழ்கி)விடாதீர்கள்” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.25 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்லவர்களில் முதன்மையானவர்கள் முதலாவதாகவும் அவர்களுக்கு அடுத்த (படித்தரத்திலுள்ள)வர்கள் அடுத்ததாகவும் (இவ்வுலகைவிட்டுப்) போய்விடுவார்கள். (இவ்வாறு நல்லவர்கள் மறைந்த பின் இப்புவியில்) ‘மட்டமான தொலி நீக்கப்படாத கோதுமை போன்ற’, அல்லது ‘மட்டமான பேரீச்சம்பழம் போன்ற’ தரம் தாழ்ந்த மக்களே எஞ்சியிருப்பார்கள். அவர்களை அல்லாஹ் சற்றும் பொருட் படுத்தமாட்டான். இதை மிர்தாஸ் பின் மாலிக் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.26 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: (‘மட்டம்’ என்பதைக் குறிக்க மூலத்தில்) ‘ஹுஃபாலத்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு ‘ஹுஸாலத்’ என்றும் கூறப்படும். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்டவன் நற்பேறற்றவன் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான்; (செல்வம்) வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.28 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்களிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) ஒரு நீரோடை நிறைய செல்வம் இருந் தாலும் அதனுடன் அதைப் போன்ற மற்றொரு நீரோடை இருக்க வேண்டும் என்றே அவன் விரும்புவான். ஆதமின் மகனுடைய கண்ணை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. மேலும், (பாவங்களிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த வாசகம் திருக்குர்ஆனில் உள்ளதா? அல்லது இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் (மக்கா விலுள்ள) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தவாறு கூறக் கேட்டுள்ளேன். அத்தியாயம் :
அப்பாஸ் பின் சஹ்ல் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் மக்காவில் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) உரையாற்றும்போது சொல்லக் கேட்டேன்: மக்களே! நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) ஒரு நீரோடை நிறைய பொன் வழங்கப்பட்டாலும் அதனுடன் இரண்டாவது நீரோடை கிடைக்க வேண்டுமென்று அவன் விரும்புவான். இரண்டாவது நீரோடை அவனுக்கு வழங்கப்பட்டால் அதனுடன் மூன்றாவது கிடைக்க வேண்டுமென்று அவன் விரும்புவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் மூடாது. மேலும், (மேற்கண்ட பேராசை போன்ற பாவங்களிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு)த் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தால் தனக்கு இரண்டு நீரோடைகள் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படு வான். அவனுடைய வாயை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. மேலும், (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது: இ(ந்த ஹதீஸான)து குர்ஆனிலுள்ள ஒரு வசனம் என்றே நாங்கள் கருதி வந்தோம்; “செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களைத் திசை திருப்பிவிட்டது” எனும் (102:1ஆவது) வசனம் அருளப் பெறும்வரை.29 அத்தியாயம் :
ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் (தர்மம்) கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகும் நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களி டம் நான் கேட்டேன். எனக்குக் கொடுத் தார்கள். பிறகு “ ‘இந்தச் செல்வம்’ அல்லது ‘என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ஹகீமே! இந்தச் செல்வம்’ பசுமையானதும் இனிமையானதும் ஆகும். யார் இதை(ப் பேராசையின்றி) நல்ல எண்ணத்துடன் பெறுகிறாரோ அவருக்கு அதில் வளம் வழங்கப்படும். யார் மனத்தை அலையவிட்டு(ப் பேராசையுடன்) இதை எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு அதில் வளம் வழங்கப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார். மேல் கைதான் கீழ்க் கையைவிடச் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள்.30 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் “உங்களில் யாருக்காவது தமது செல்வத்தை விடத் தம்முடைய வாரிசுகளின் செல்வம் விருப்பமானதாக இருக்குமா?” என்று கேட்டார்கள். தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் அனைவருக்குமே (வாரிசுகளின் செல்வத்தைவிட) எங்களின் செல்வமே விருப்பமானதாகும்” என்று பதிலளித்தார்கள். “அவ்வாறாயின், ஒருவர் (இறப்பதற்குமுன் அறவழியில்) எதைச் செலவிட்டாரோ அதுதான் அவரது செல்வமாகும். (இறக்கும்போது) எதை விட்டுச்செல்கிறாரோ அது அவருடைய வாரிசுகளின் செல்வமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.31 அத்தியாயம் :
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருநாள் இரவு நான் (வீட்டிலிருந்து) வெளியேறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனியாக நடந்து சென்றுகொண்டிருந் தார்கள். அவர்களுடன் யாரும் இருக்கவில்லை. (அந்தச் சமயத்தில்) அவர்களுடன் எவரும் வருவதை அவர்கள் விரும்பமாட்டார்கள் என்று நான் எண்ணினேன். ஆகவே, நான் நிலவின் (ஒளி படாத) நிழலில் நடக்கலானேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னைத் திரும்பிப் பார்த்து “யார் அது?” என்று கேட்டார்கள். நான் “அபூதர். அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்” என்றேன். நபி (ஸல்) அவர்கள் “அபூதர்ரே! (இங்கே) வாருங்கள்!” என்றார்கள். நான் அவர்களுடன் சிறிது நேரம் நடந்தேன். அப்போது அவர்கள் “(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர்; ஒரு சிலரைத் தவிர. அவர்களுக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அதை அவர்கள் தம் வலப் பக்கமும் இடப் பக்கமும் தம் முன் பக்கமும் பின்பக்கமும் வாரி வழங்கி அந்தச் செல்வத்தால் நன்மை புரிகிறார்கள். (இவர்களைத் தவிர)” என்று சொன்னார்கள். இன்னும் சிறிது நேரம் நான் அவர்களுடன் நடந்தேன். அப்போது அவர்கள் என்னிடம் “இங்கேயே அமர்ந்திருங்கள்” என்று கூறி, சுற்றிலும் கற்கள் இருந்த ஒரு சமவெளியில் என்னை அமரச் செய்தார்கள். “நான் உங்களிடம் திரும்பி வரும்வரை இங்கேயே அமர்ந்திருங்கள்” என என்னிடம் சொல்லிவிட்டு, (பாறைகள் நிறைந்த) ‘அல்ஹர்ரா’ பகுதியில் நடந்து சென்றார்கள். பிறகு அவர்களை நான் காண முடியவில்லை. நீண்ட நேரம் அங்கேயே இருந்தார்கள். வெகு நேரமாகியும் என்னிடம் அவர்கள் வரவில்லை. பிறகு அவர்கள் முன்னோக்கி வந்துகொண்டே “அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலும் சரியே!” என்று கூறுவதைக் கேட்டேன். அவர்கள் வந்தபோது என்னால் பொறுமையாக இருக்க முடியாமல், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்! ‘அல்ஹர்ரா’ பகுதியில் தாங்கள் யாரிடம் பேசினீர்கள்? தங்களுக்கு யாரும் எந்தப் பதிலும் அளிப்பதை நான் கேட்கவில்லையே?” என்று வினவினேன். நபி (ஸல்) அவர்கள் “அது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள்தான். அவர் ‘அல்ஹர்ரா’ பகுதியில் என்முன் தோன்றி, “யார் (ஏக இறைவனாகிய) அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காத நிலையில் இறந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கம் செல்வார் என உங்கள் சமுதாயத்தாருக்கு நற்செய்தி கூறுங்கள்” என்றார். நான் “ஜிப்ரீலே! அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா (சொர்க்கம் புகுவார்)?” என்று கேட்டேன். அவர் ‘ஆம்’ என்றார். நான் “அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா?” என்று (மீண்டும்) கேட்டேன். அவர் ‘ஆம்’ என்று சொன்னார். நான் “அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா?” என்று கேட்டேன். அவர் ‘ஆம்’ என்றார்.33 இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. இதே ஹதீஸ் அபுத்தர்தா (ரலி) அவர்களாலும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது (அறிவிப்பாளர்தொடர் முறிந்த) ‘முர்சல்’ ஆகும். அபூதர் (ரலி) அவர்களது அறிவிப்பே சரியானதாகும். அபுத்தர்தா (ரலி) அவர்களது அறிவிப் பில் “லா இலாஹ இல்லல்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை) என்று கூறி இறந்தால்” என்று காணப்படுகிறது. அத்தியாயம் :
அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (இரவு நேரத்தில்) நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவின் (பாறைகள் நிறைந்த) ‘ஹர்ரா’ பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது உஹுத் மலை எங்களை எதிர்கொண்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அபூதர்ரே!’ என்று அழைத்தார்கள். நான் “இதோ! காத்திருக்கிறேன்; கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். நபி (ஸல்) அவர்கள் “இந்த உஹுத் மலை அளவுக்கு என்னிடம் தங்கம் இருந்து, அதிலிருந்து ஒரேயொரு பொற்காசு என்னிடம் (எஞ்சி) இருந்தாலும் அதை அல்லாஹ்வின் அடியார்களிடையே இப்படி இப்படியெல்லாம் செலவிடாமல் மூன்று இரவுகள் கழிந்துசெல்வதுகூட எனக்கு மகிழ்ச்சியளிக்காது. கடனை அடைப்பதற்காக நான் எடுத்துவைக்கும் சில பொற்காசுகளைத் தவிர!” என்று கூறி, தமது வலப் பக்கமும் இடப் பக்கமும் பின்பக்கமும் சைகை செய்தார்கள். பிறகு (சிறிது தூரம்) நடந்துவிட்டு “(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ள வர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர்; இப்படி இப்படி யெல்லாம் (இறைவழியில் தமது செல்வத் தைச்) செலவிட்டவர்களைத் தவிர” என்று கூறி, தமது வலப் பக்கமும் இடப் பக்கமும் பின்பக்கமும் சைகை செய்தார்கள். “(ஆனால்,) இத்தகையவர்கள் சொற்பமானவர்களே” என்றும் கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் என்னிடம் “நான் வரும்வரை இந்த இடத்திலேயே இருங்கள்” என்று கூறிவிட்டு, இரவு இருளில் நடந்துசென்று மறைந்துவிட்டார்கள். அப்போது உரத்த குரல் ஒன்றை நான் கேட்டு நபி (ஸல்) அவர்களை யாரோ ஏதோ செய்துவிட்டார்கள் என்று அஞ்சினேன். அவர்களிடம் செல்லலாம் என்று நினைத்தேன். (ஆனால்,) என்னிடம் நபி (ஸல்) அவர்கள் “நான் வரும்வரை இங்கேயே இருங்கள்” என்று சொன்னது என் நினைவுக்கு வந்தது. ஆதலால், அவர்கள் என்னிடம் வரும்வரை அங்கேயே இருந்தேன். (அவர்கள் வந்ததும்) “அல்லாஹ்வின் தூதரே! ஏதோ ஒரு குரலைக் கேட்டு நான் பயந்துவிட்டேன்” என்று கூறி, (நான் நினைத்தது பற்றியும்) அவர்களிடம் எடுத்துச் சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அதை நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். அது (வானவர்) ஜிப்ரீல்தான். அவர் என்னிடம் வந்து, “உங்கள் சமுதாயத்தாரில் யார் (ஏக இறைவனாம்) அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் (வாழ்ந்து) மரணமடைந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கம் செல்வார்” என்றார். நான் (ஜிப்ரீலிடம்), “அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா (சொர்க்கம் புகுவார்)?” என்று கேட்டேன். அவர் “(ஆம்) விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே (சொர்க்கம் செல்வார்)” என்று பதிலளித்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உஹுத் மலை அளவுக்கு என்னிடம் தங்கம் இருந்தாலும் அதிலிருந்து சிறிது என்னிடம் (எஞ்சி) இருக்கும் நிலையில் என்மீது மூன்று நாட்கள் கழிவதுகூட எனக்கு மகிழ்ச்சி அளிக்காது; கடனை அடைப்பதற்காக நான் (அதிலிருந்து) எடுத்து வைக்கும் சிறிதளவு (தங்கத்தைத்) தவிர. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.34 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: (வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்.35 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாயிதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (செல்வமும் செல்வாக்கும் பெற்ற) ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கருகில் நடந்து சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம்மருகில் அமர்ந்திருந்த ஒருவரிடம், “இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் “மக்களில் இவர் ஒரு பிரமுகர் ஆவார். அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படவும் தகுதியான மனிதர்” என்று பதிலளித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சற்று நேரம்) அமைதியாக இருந்தார்கள். பின்பு மற்றொரு மனிதர் (அவ்வழி யாகச்) சென்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதலில் கேட்ட அதே நண்பரிடம்) “இவரைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அவர் “அல்லாஹ்வின் தூதரே! இவர் ஏழை முஸ்லிம்களில் ஒருவராவார். இவர் பெண் கேட்டால் மணமுடித்துவைக்கப்படாமலும் இவர் பரிந்து பேசினால் ஏற்றுக்கொள்ளப்படாமலும் இவர் பேசினால் செவிதாழ்த்தப்படாமலும் இருக்கத் தகுதியானவர்” என்று பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவரைப் போன்ற (செல்)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும்விட) இந்த ஏழையே மேலானவர்” என்று கூறினார்கள்.37 அத்தியாயம் :
அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (உடல் நலமில்லாதிருந்த) கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்களை நாங்கள் நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: நாங்கள் அல்லாஹ்வின் அன்பை நாடியவர்களாக நபி (ஸல்) அவர்களுடன் (புலம்பெயர்ந்து) ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கு (அதற்கான) பிரதிபலன் அளிப்பது உயர்ந்தோனான அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. எங்களில் சிலர் தமக்குரிய பிரதிபலனில் எதையுமே (இவ்வுலகத்தில்) அனுபவிக்காமல் சென்றுவிட்டனர். அத்தகையவர்களில் ஒருவர்தான் முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள். அவர் உஹுத் போர் நாளில் கொல்லப்பட்டார். அவர் கோடு போட்ட வண்ணத் துணி ஒன்றை மட்டுமே விட்டுச்சென்றார். (அதன் மூலம் அவருக்கு ‘கஃபன்’ அணிவிக்க) அவரது தலையை நாங்கள் மறைத்தபோது அவருடைய கால்கள் வெளியே தெரிந்தன. அவருடைய கால்களை நாங்கள் மறைத்தபோது அவரது தலை வெளியே தெரிந்தது. ஆகவே, அவரது தலையை (அத்துணியால்) மறைத்துவிட்டு அவருடைய கால்கள்மீது ‘இத்கிர்’ புல்லையிடுமாறு நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். (ஹிஜ்ரத் செய்ததற்கான இவ்வுலகப்) பலன் கனிந்து அதைப் பறித்து (சுவைத்து)க்கொண்டிருப்பவர்களும் எங்களில் உள்ளனர்.38 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (விண்ணுலகப் பயணத்தின்போது) சொர்க்கத்தை எட்டிப்பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களையே கண்டேன். இதை இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.39 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக இரு அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளது. அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறக்கும் வரை உணவு மேசையில் (அமர்ந்து) உணவருந்தியதில்லை. இறக்கும்வரை மிருதுவான ரொட்டியை அவர்கள் சாப்பிட்டதில்லை.40 அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என் (வீட்டு) நிலைப்பேழையிலிருந்த சிறிது தொலி நீக்கப்படாத கோதுமையைத் தவிர, உயிருள்ளவர் உண்ணக்கூடிய பொருள் எதுவும் என் (வீட்டு) நிலைப்பேழையில் இல்லாத நிலையில்தான் நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள். அதிலிருந்து எடுத்து நீண்ட காலம் நான் உண்டேன். பிறகு, அதை நான் அளந்தேன். அதனால் (சிறிது காலத்திற்குப் பின்) அது தீர்ந்துபோய்விட்டது.41 அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: யாரைத் தவிர வேறு இறைவ னில்லையோ அந்த அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (கடும்) பசியால் என் வயிற்றைத் தரையில் வைத்து அழுத்திக்கொண்டு படுத்திருக்கிறேன். மேலும், (கடும்) பசியால் வயிற்றில் நான் கல்லை வைத்துக் கட்டிக்கொண்டதும் உண்டு. ஒருநாள் நான் நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் (பள்ளி வாசலுக்குச்) செல்லும் பாதையில் அமர்ந்து கொண்டேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னைக்) கடந்துசென்றார்கள். உடனே நான் இறைவேதத்திலுள்ள ஒரு வசனத்தைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். எனக்கு வயிறார உணவளிப்பார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கடந்து சென்று விட்டார்கள்; (என் பசி நீங்க எதுவும்) அவர்கள் செய்யவில்லை. பிறகு உமர் (ரலி) அவர்கள் என்னைக் கடந்துசென்றார்கள். உடனே நான் அவர்களிடமும் இறைவேதத்திலுள்ள ஒரு வசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் எனக்கு வயிறார உணவளிப்பார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் நான் கேட்டேன். அவர்களும் (என் பசியைப் போக்க) ஒன்றும் செய்யாமல் போய்விட்டார்கள். பிறகு அபுல்காசிம் (நபி -ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். என்னைக் கண்டு, எனக்கு ஏற்பட்டுள்ள (பசி) நிலையையும் என் முகமாற்றத்தையும் அவர்கள் புரிந்து கொண்டு புன்னகைத்தார்கள். பிறகு, ‘அபூஹிர்ரே!’ (அபூஹுரைராவே!) என்று அழைத்தார்கள். நான் “இதோ காத்திருக்கிறேன்; அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். “(என்னைப்) பின்தொடர்ந்து வா!” என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். நான் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்தில்) நுழைந்தார்கள். நான் (உள்ளே செல்ல) அனுமதி கோர, எனக்கு அனுமதியளித்தார்கள். நான் உள்ளே சென்றேன். அப்போது (வீட்டில்) ஒரு கோப்பையில் பாலைக் கண்டார்கள். உடனே (தம் துணைவியாரிடம்) “இந்தப் பால் எங்கிருந்து வந்தது?” என்று கேட்டார்கள். அவர்கள் “இன்ன ‘ஆண்’ அல்லது ‘பெண்’ தங்களுக்கு இதை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘அபூஹிர்’ என அழைத்தார்கள். நான் “இதோ வந்துவிட்டேன்; அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். “திண்ணைவாசிகளிடம் சென்று என்னிடம் அவர்களை அழைத்துவாருங்கள்” என்று சொன்னார்கள். திண்ணைவாசிகள் (அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா) இஸ்லாத்தின் விருந்தினர்கள் ஆவர். அவர்கள் புகலிடம் தேட அவர்களுக்குக் குடும்பமோ செல்வமோ கிடையாது. வேறு யாரிடமும் செல்லவுமாட்டார்கள். நபி (ஸல்) அவர்களிடம் ஏதேனும் தானப் பொருள் வந்தால் அதை இவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் அனுப்பிவிடுவார்கள். அதிலிருந்து தாம் எதையும் எடுத்துக்கொள்ளமாட்டார்கள். தம்மிடம் ஏதேனும் அன்பளிப்புப் பொருட்கள் வந்தால் இவர்களைத் தம்மிடம் அழைத்து வரும்படி ஆளனுப்பிவிடுவார்கள். (அவர்கள் வந்தவுடன்) அவர்களுடன் சேர்ந்து தாமும் உண்பார்கள். இப்போது நபி (ஸல்) அவர்கள் (திண்ணைவாசிகளை அழைத்துவரச்) சொன்னதால் எனக்குக் கவலைதான் ஏற்பட்டது. “(இருப்பதோ சிறிதளவு பால்.) திண்ணைவாசிகளுக்கு இந்தப் பால் எம்மாத்திரம்? இதைச் சிறிதளவு பருகி என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கு நானே பொருத்தமானவன். திண்ணை வாசிகள் வந்தால், நபியவர்கள் எனக்கு உத்தரவிட, நானே அவர்களுக்குக் கொடுத்துவிட்டு (இறுதியில்) எனக்கு இந்தப் பாலில் ஒன்றும் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியாமல் இருக்க இயலாது” என (மனத்துக்குள்) சொல்லிக்கொண்டேன். பிறகு, நான் திண்ணைவாசிகளிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்களும் (அழைப்பை ஏற்று) வந்து (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோரினார்கள். நபி (ஸல்) அவர்கள் திண்ணைவாசிகளுக்கு அனுமதி வழங்கினார்கள். அவர்கள் அந்த வீட்டில் ஆங்காங்கே இடம்பிடித்து அமரலானார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘அபூஹிர்’ என அழைத்தார்கள். நான் “இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “இதை எடுத்து இவர்களுக்குக் கொடுங்கள்” என்று சொன்னார்கள். நான் அந்தக் கோப்பையை எடுத்து ஒரு மனிதருக்குக் கொடுத்தேன். அவர் தாகம் தணியும்வரை குடித்தார். பிறகு அவர் என்னிடம் அந்தக் கோப்பையைத் திருப்பித் தந்தார். நான் அதை இன்னொரு மனிதரிடம் கொடுத்தேன். அவரும் தாகம் தீரும்வரை குடித்துவிட்டுக் கோப்பையை என்னிடம் தந்தார். பிறகு இன்னொருவர் தாகம் தீரும்வரை குடித்தார். பிறகு என்னிடம் அதைத் திருப்பித் தந்தார். இறுதியில் நான் நபி (ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டுசென்றேன். அப்போது மக்கள் அனைவரும் தாகம் தணிந்திருந்தனர். நபி (ஸல்) அவர்கள் அந்தக் கோப்பையை வாங்கித் தமது கையில் வைத்துக்கொண்டு என்னைக் கூர்ந்துப் பார்த்துப் புன்னகைத்தார்கள். பிறகு ‘அபூஹிர்!’ என்று அழைத்தார்கள். நான் “இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னேன். அதற்கு அவர்கள் “நானும் நீங்களும் (மட்டும்தான்) எஞ்சியுள்ளோம் (அப்படித்தானே?)” என்று கேட்டார்கள். நான் “அல்லாஹ்வின் தூதரே! (ஆம்.) உண்மைதான்” என்றேன். நபி (ஸல்) அவர்கள் “உட்கார்ந்து (இதைப்) பருகுங்கள்” என்றார்கள். நான் உட்கார்ந்து பருகினேன். “இன்னும் பருகுங்கள்” என்றார்கள். பருகினேன். இவ்வாறு அவர்கள் ‘பருகுங்கள்’ என்று சொல்óக் கொண்டேயிருக்க, நான் பருகிக் கொண்டேயிருந்தேன். இறுதியில் “இல்லை; சத்திய (மார்க்க)த் தைக் கொண்டு தங்களை அனுப்பிவைத்த (இறை)வன்மீது ஆணையாக! இனிப் பருகுவதற்கு வழியே இல்லை” என்றேன். நபி (ஸல்) அவர்கள் “(சரி) அதை எனக்குக் காட்டுங்கள்” என்று சொன்னார்கள். ஆகவே, நான் அவர்களிடம் அந்தக் கோப்பையைக் கொடுத்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுடைய (திருப்)பெயர் கூறி எஞ்சியதைப் பருகினார்கள். அத்தியாயம் :
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் பாதையில் அம்பெய்த அரபுகளில் நானே முதல் ஆள் ஆவேன். எங்களுக்குக் கருவேல மரத்தின் இலைகளையும் இந்த நாணற்புல்லையும் தவிர உணவு எதுவும் இல்லாதிருக்கும் நிலையில் அறப்போரில் நாங்கள் ஈடுபட்ட (காலத்)தைக் கண்கூடாகக் கண்டுள்ளேன். நாங்கள் ஆடுகள் கெட்டிச் சாணம் இடுவதைப்போல் ஒன்றோடொன்று ஒட்டாமல் மலம் கழித்துவந்தோம். பிறகு (கூஃபாவாசிகளான) பனூ அசத் குலத்தார் (நான் முறையாகத் தொழுவிப்பதில்லை என்று என்னுடைய) இஸ்லாம் தொடர்பாக என்னைக் குறைகூறலானார்கள். அப்படியானால் நான் (இதுவரை) செய்துவந்த வழிபாடு வீணாகி நான் இழப்புக்குள்ளாகிவிட்டேன் (போலும் என வருந்தினேன்).42 அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனா வுக்கு வந்ததிலிருந்து அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை.43 அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் ஒரு நாளில் இரண்டு முறை உணவு உண்டால் அதில் ஒன்று (வெறும்) பேரீச்சம்பழமாகவே இருக்கும். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: பேரீச்சம் நாரால் நிரப்பப்பட்ட பதனிடப்பட்ட தோலே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் படுக்கை விரிப்பாக இருந்தது. அத்தியாயம் :
கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்றுவருவோம். (அவர் களுடன்) அவர்களுக்காக ரொட்டி தயாரிப்பவர் ஒருவரும் இருப்பார். (ஒருநாள்) அனஸ் (ரலி) அவர்கள் “சாப்பிடுங்கள்; (ஆனால்,) நான் அறிந்தமட்டில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும்வரை மிருதுவான ரொட்டியை அவர்கள் பார்த்ததில்லை. வெந்நீரால் முடி களையப்பட்டு தோலுடன் சமைக்கப்பட்ட ஆட்டை அவர்கள் தமது கண்ணாலும் ஒருபோதும் கண்டதில்லை” என்று சொன்னார்கள்.44 அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களின் குடும்பத் தாராகிய) நாங்கள் (சமைப்பதற்காக அடுப்பில்) நெருப்பு பற்றவைக்காம லேயே ஒரு மாத காலம்கூட எங்களுக்குக் கழிந்திருக்கிறது. அப்போதெல்லாம் (வெறும்) பேரீச்சம்பழமும் நீரும்தான் (எங்கள் உணவாகும்); (எப்போதாவது) சிறிது இறைச்சி எங்களுக்கு அனுப்பிவைக்கப் பட்டால் தவிர. அத்தியாயம் :
உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம், “என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! நாங்கள் பிறை பார்ப்போம். இரண்டு மாதங்களில் மூன்று முறை பிறை பார்த்துவிடுவோம். (ஆனால்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (துணைவியர்) இல்லங்களில் (சமைப்பதற்காக அடுப்பில்) நெருப்பு பற்றவைக்கப்பட்டிராது” என்று கூறினார்கள். அதற்கு நான் “(அப்படியானால்) நீங்கள் எப்படி வாழ்க்கை நடத்தினீர்கள்?” என்று கேட்டேன். (அதற்கு) அவர்கள் கறுப்புப் பொருட்களான பேரீச்சம்பழமும் நீரும்தான் (அப்போது எங்கள் உணவு). இருப்பினும், அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அண்டைவீட்டாராக இருந்தனர். அவர்களிடம் (இலவசமாகப் பால் கறந்துகொள்வதற்கான) இரவல் ஒட்டகங்கள் இருந்தன. (அவற்றிலிருந்து பால் கறந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தம் இல்லங்களிலிருந்து அவர்கள் கொடுத்தனுப்புவார்கள். அந்தப் பாலை நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள்.45 அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வே! முஹம்மதின் குடும்பத் தாருக்கு(ப் பசிக்கு) உணவு வழங்குவாயாக!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். அத்தியாயம் :
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமான செயலாக இருந்தது எது?” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் “நிரந்தரமாகச் செய்யப்படும் செயல்” என்று விடையளித்தார்கள். “(இரவில்) நபி (ஸல்) அவர்கள் (தொழுகைக்காக) எப்போது எழுவார்கள்?” என்று கேட்டேன். அவர்கள், “சேவல் கூவும்போது (நடுநிசி நேரம்) எழு(ந்து தொழு)வார்கள்” என்று விடையளித்தார்கள்.47 அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருவர் நிரந்தரமாக(த் தொடர்ந்து) செய்யும் நற்செயலே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமான செயலாக இருந்தது. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் யாரையும் அவரது நற்செயல் ஒருபோதும் காப்பாற்றாது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் காப்பாற்றப்படுவார்)” என்று கூறினார்கள். மக்கள் “அல்லாஹ்வின் தூதரே! தங்களையுமா (தங்களது நற்செயல் காப்பாற்றாது)?” என்று வினவினார்கள். நபி (ஸல்) அவர்கள் “(ஆம்) என்னையும்தான்; அல்லாஹ் (தனது) அருளால் என்னை அரவணைத்துக்கொண்டால் தவிர” என்று கூறிவிட்டு, “(ஆகவே,) நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். (வரம்பு மீறிவிடாதீர்கள்.) காலையிலும், மாலையிலும், இரவில் சிறிது நேரமும் நற்செயல் புரியுங்கள். (எதிலும்) நடுநிலை (தவறாதீர்கள்). நடுநிலை(யைக் கடைப்பிடியுங்கள்). (இவ்வாறு செய்தால் இலட்சியத்தை) நீங்கள் அடைவீர்கள்” என்று சொன்னார்கள்.48 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாகச் செயல் படுங்கள். (வரம்பு மீறிவிடாதீர்கள்.) அறிந்துகொள்ளுங்கள்: உங்களில் யாரையும் அவரது நற்செயல் சொர்க்கத் தில் ஒருபோதும் நுழைவிக்காது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புக முடியும்.) நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?” என்று நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் “(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே” என்று விடையளித்தார்கள். மேலும், “நற்செயல்கள் புரிவதில் இயன்ற வரை அதன் எல்லையைத் தொட முயலுங்கள்” என்றும் கூறினார்கள். அத்தியாயம் :
அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களின் வழிபாடு எவ்வாறிருந்தது? (வழிபாட்டுக்காக என்று) குறிப்பிட்ட நாட்கள் எதையும் ஒதுக்கிக்கொண்டிருந்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “இல்லை. அவர்களின் (எந்த) வணக்க(வழிபாடு)ம்நிரந்தரமானதாகவே இருந்தது” என்று கூறிவிட்டு, “நபி (ஸல்) அவர்களால் செய்ய முடிந்ததைப் போன்று உங்களில் எவரால் செய்ய முடியும்?” என்று கேட்டார்கள்.49 அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள், “(வணக்க வழிபாடுகளிலும் நற்செயல்கள் புரிவதிலும்) நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். (வரம்பு மீறாதீர்கள். நற்செயல் சிறிதே ஆயினும் அதற்குரிய பிரதிபலன் இறைவனிடம் கிடைக்கும் என்ற) நற்செய்தி பெறுங்கள். ஏனெனில், (இறையருள் இல்லாவிட்டால்) யாரையும் அவரது நற்செயல் சொர்க்கத்தில் நுழைத்துவிடாது” என்று கூறினார்கள். மக்கள் “தங்களையுமா? அல்லாஹ்வின் தூதரே!” என்று வினவினார்கள். என்னையும்தான்; மன்னிப்பாலும் கருணையாலும் என்னை அல்லாஹ் அரவணைத்துக்கொண்டால் தவிர” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில் “நேர்மையோடு செயல்படுங்கள்; நற்செய்தி பெறுங்கள்” என்று இடம்பெற்றுள்ளது. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நேர்மை (அல்லது நடுநிலை) என்பதற்கு ‘வாய்மை’ என்பது இங்கு பொருளாகும். இதை (அரபியில்) ‘சதீத்’ மற்றும் ‘சதாத்’ என்பர். அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருநாள் எங்களுக்கு (லுஹ்ர்) தொழுகையை தொழவைத்துவிட்டுப் பிறகு சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) ஏறி கிப்லா திசையில் தமது கையால் சைகை செய்தவாறு கூறினார்கள்: நான் உங்களுக்குத் தொழுவித்துக் கொண்டிருந்தபோது இந்த முன்சுவற்றில் சொர்க்கம் மற்றும் நரகத்தின் காட்சி எனக்குக் காட்டப்பட்டது. நன்மை தீமை(களின் விளைவு)களை இன்று கண்டதைப் போன்று என்றும் நான் கண்டதில்லை. நன்மை தீமை(களின் விளைவு)களை இன்று கண்டதைப் போன்று என்றுமே நான் கண்டதில்லை (என்று பலமுறை கூறினார்கள்).50 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் அன்பையும் கருணை யையும் படைத்தபோது அதனை நூறு வகைகளாக அமைத்தான். அவற்றில் தொண்ணூற்று ஒன்பது வகைகளைத் தன்னிடமே வைத்துக்கொண்டான். (மீதியுள்ள) ஒரு வகையை மட்டுமே தன் படைப்புகள் அனைத்துக்கும் வழங்கினான். ஆகவே, இறைமறுப்பாளன் அல்லாஹ்வின் கருணை முழுவதையும் அறிந்தால், சொர்க்கத்தின் மீது அவ நம்பிக்கை கொள்ளமாட்டான். (இதைப் போன்றே,) இறைநம்பிக்கையாளர் அல்லாஹ் வழங்கும் வேதனை முழுவதையும் அறிந்தால் நரகத்தைப் பற்றிய அச்சமில்லாமல் இருக்கமாட்டார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.53 அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும் செலவுக்குப் பணமும்) கேட் டார்கள். அவ்வாறு கேட்ட யாருக்குமே நபி (ஸல்) அவர்கள் கொடுக்காமல் இருக்கவில்லை. இறுதியாக, நபியவர் களிடம் இருந்த அனைத்தும் தீர்ந்து விட்டன. தம் கரங்களால் செலவிட்டு எல்லாப் பொருட்களும் தீர்ந்துபோன பின்பு அந்த அன்சாரிகளிடம் நபி (ஸல்) அவர்கள், “என்னிடத்தில் உள்ள எந்தச் செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப்போவதில்லை. (இருப்பினும்,) யார் சுயமரியாதையோடு நடந்துகொள்கிறாரோ அவரை அல்லாஹ் சுயமரியாதையுடன் வாழச்செய்வான். யார் (இன்னல்களைச்) சகித்துக்கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் (மேலும்) சகிப்புத் தன்மையை வழங்குவான். யார் பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை (வேறெதுவும்) உங்களுக்கு வழங்கப்படவில்லை” என்று கூறினார்கள்.55 அத்தியாயம் :
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தம் பாதங்கள் ‘வீங்கும் அளவுக்கு’ அல்லது ‘புடைக்கும் அளவுக்கு’ நின்று தொழுவார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது “நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?” என்று கேட்பார்கள்.56 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் யாரெனில், ஓதிப்பார்க்கமாட்டார்கள்; பறவை சகுனம் பார்க்கமாட்டார்கள்; தம் இறைவ(ன்மீது முழு நம்பிக்கை கொண்டு அவ)னையே சார்ந்திருப்பார்கள்.58 அத்தியாயம் :
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் எழுத்தரான வர்ராத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்கள் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களுக்கு (ஒரு கடிதம்) எழுதியிருந்தார்கள். அதில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து தாங்கள் செவியுற்ற ஹதீஸ் ஒன்றை எனக்கு எழுதியனுப்புங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்கள். அப்போது முஃகீரா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) எழுதினார்கள்: நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்தவுடன், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு நிகரானோர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே சொந்தம். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன்” என்று கூறுவார்கள்.60 மேலும், நபி (ஸல்) அவர்கள், (இவ்வாறு) சொல்லப்பட்டது; (இவ்வாறு) அவர் சொன்னார் என்று (ஊர்ஜித மில்லாதவற்றை, அல்லது தேவைக்கதி கமாகப்) பேசுவது, அதிகமாகக் (கேள்வி, அல்லது யாசகம்) கேட்பது, செல்வத்தை வீணாக்குவது, (அடுத்தவருக்குத் தர வேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்த வருக்கு உரியதைத்) தருமாறு கோருவது, அன்னையரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றுக்குத் தடை விதித்து வந்தார்கள்.61 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் தம் இரு தாடைகளுக்கு இடையே உள்ளத(ôன நாவி)ற்கும், தம் இரு கால்களுக்கு இடையே உள்ளத(ôன பிறவி உறுப்பி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிக்கிறாரோ அவருக்காகச் சொர்க்கத் திற்கு நான் உத்தரவாதம் அளிக் கிறேன்.62 இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளை யும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத் தட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.63 அத்தியாயம் :
அபூஷுரைஹ் அல்அதவீ அல்குஸாஈ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை என் காதுகள் செவியுற்றன; என் உள்ளம் அதை மனனமிட்டது: விருந்தோம்பல் மூன்று நாட்களாகும். (அவற்றில்) அவருடைய கொடையும் அடங்கும். அப்போது “அவருடைய கொடை என்ன?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “(அவருடைய கொடை) ஒரு பகல் ஓர் இரவு (விருந்தோம்பல்) ஆகும்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். மேலும், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்” என்று சொன்னார்கள்.64 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலை வைவிட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்.65 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் அல்லாஹ்வின் அன்புக் குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவருடைய தகுதிகளை அல்லாஹ் உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.66 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில்) ஏழு பேருக்கு அல்லாஹ் தனது (அரியணையின்) நிழலில் அடைக்கலம் அளிக்கிறான். (தனிமையில்) அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடிப்பவர் (அவர்களில் ஒருவராவார்). இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.67 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூ இஸ்ராயீல் மக்களில்) ஒருவர் தாம் செய்துவந்த (குற்றச்) செயல் குறித்து அஞ்சியவராக (இறக்கும் தறுவாயில்) தம் வீட்டாரிடம், “நான் இறந்துவிட்டால் என்னை(க் கரித்துச் சாம்பலை) எடுத்து சூறாவளிக் காற்று வீசும் காலத்தில் கடலில் தூவிவிடுங்கள்” என்று கூறினார். (அவர் இறந்தவுடன்) அவரை அவ்வாறே அவருடைய வீட்டாரும் செய்தனர். அல்லாஹ் (காற்றோடு கலந்துவிட்ட) அவரது உடலை ஒன்றுதிரட்டியபின் “நீ இவ்வாறு செய்ததற்குக் காரணம் என்ன?” என்று கேட்டான். அவர் “உன்னைப் பற்றிய அச்சமே என்னை இவ்வாறு செய்யத் தூண்டியது” என்று பதிலளித் தார். ஆகவே, அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான். இதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.69 அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘முன்சென்ற’ அல்லது ‘உங்களுக்குமுன் வாழ்ந்த’ ஒரு மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அல்லாஹ் அவருக்குச் செல்வத்தையும் குழந்தைகளையும் வழங்கியிருந்தான். அவருக்கு இறப்பு நெருங்கியபோது அவர் தம் மக்களிடம் “உங்களுக்கு நான் எப்படிப்பட்ட தந்தையாக இருந்தேன்?” என்று கேட்டார். அவர்கள், “சிறந்த தந்தையாக இருந்தீர்கள்” என்று பதில் கூறினர். அவர் தமக்காக அல்லாஹ்விடம் எந்த நன்மையும் சேமித்திருக்கவில்லை. அல்லாஹ்வின் முன்னிலையில் தாம் சென்றால் தம்மை அவன் வேதனை செய்துவிடுவான் என அவர் அஞ்சினார். ஆகவே, (அவர் தம் மக்களிடம்) “நன்றாகக் கவனியுங்கள். நான் இறந்துவிட்டால் என்னைப் பொசுக்கிவிடுங்கள். நான் (வெந்து) கரியாக மாறிவிட்டால் என்னைப் ‘பொடிப் பொடியாக்கிவிடுங்கள்’. அல்லது ‘துகள் துகளாக்கிவிடுங்கள்’. பிறகு சூறாவளிக் காற்று வீசும் நாளில் காற்றில் என்னைத் தூவிவிடுங்கள்” என்று கூறி, தாம் கூறியபடி செய்யவேண்டுமென அவர்களிடம் அவர் உறுதிமொழியும் வாங்கிக் கொண்டார். என் இறைவன் மீதாணையாக! அவ்வாறே அவர்களும் செய்தனர். அப்போது அல்லாஹ் “(பழையபடி முழு மனிதனாக) ஆகிவிடு!” என்று கூறினான். உடனே (அந்த) மனிதர் (உயிர்பெற்று) எழுந்தார். (அவரிடம்) அல்லாஹ், “என் அடியானே! இவ்வாறு நீ செய்யக் காரணமென்ன?” என்று கேட்டான். அந்த மனிதர் உன்னைக் குறித்த அச்சமே என்னை இவ்வாறு செய்யத் தூண்டியது” என்று பதிலளித்தார். (இறுதியில்) அவர் அடைந்தது இறையருளைத்தான்.70 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. சல்மான் அல்ஃபார்சி (ரலி) அவர்களும் இதைப் போன்றே அறிவித்துள்ளார்கள். ஆனால் (காற்றில் என்னைத் தூவிவிடுங்கள் எனுமிடத்தில்) ‘கடலில் என்னைத் தூவிவிடுங்கள்’ என்றோ, வேறுவிதமாகவோ கூடுதலாக அறிவித்தார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கும் என்னை அல்லாஹ் எ(ந்த மார்க்கத்)தைக் கொண்டு அனுப்பி யுள்ளானோ அதற்கும் எடுத்துக்காட்டாகிறது, ஒரு மனிதரின் நிலையைப் போன்றதாகும். அவர் ஒரு சமூகத்தாரிடம் சென்று “நான் (இன்ன பெரும்) படையை என் கண்களால் பார்த்தேன். (எந்நேரமும் அப்படை உங்களைத் தாக்கலாம். அதை எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் இல்லை.) நான், நிர்வாணமாக (ஓடி வந்து) எச்சரிக்கை செய்ப(வனைப் போன்ற)வன் ஆவேன்.71 ஆகவே, (ஓடுங்கள்;) தப்பித்துக் கொள்ளுங்கள்; தப்பித்துக்கொள்ளுங்கள்” என்று கூறினார். அப்போது ஒரு பிரிவினர் அவருக்குக் கீழ்ப்படிந்து இரவோடு இரவாக மெல்ல வெளியேறித் தப்பிவிட்டனர். ஆனால், இன்னொரு பிரிவினர் அவரை நம்ப மறுத்தனர். பிறகு அதிகாலையில் அப்படையினர் வந்து அவர்களைத் தாக்கிப் பூண்டோடு அழித்தனர்.72 இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது நிலையும் மக்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் தீ மூட்டினார். அவரைச் சுற்றிலும் அது ஒளிவீசியபோது விட்டில் பூச்சிகளும் நெருப்பில் விழும் இதரப் பூச்சிகளும் அந்தத் தீயில் விழலாயின. அந்த மனிதரோ அவற்றை (தீயில் விழாமல்) தடுத்துக்கொண்டிருந்தார். (ஆனால்,) அவை அவரையும் மீறி தீயில் விழுகின்றன. (இவ்வாறுதான்) நரகத்(தில் விழுவ)திலிருந்து (உங்களைத்) தடுக்க உங்கள் இடுப்புகளை நான் பிடித்துக்கொண்டிருக்கிறேன். (ஆனால்,) நீங்களோ (என்னையும் மீறி) நரகத்தில் நுழைந்துகொண்டிருக்கிறீர்கள்.73 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவருடைய நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளி)லிருந்து பிற முஸ்லிம் கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக்கொண்டாரோ அவரே (உண்மையான) முஹாஜிர் (துறந்தவர்) ஆவார். இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.74 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் அறிவதை நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயம் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் அறிவதை நீங்கள் அறிவீர் களாயின் நிச்சயம் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.75 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மன இச்சைகளால் நரகம் மூடப்பட் டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப் பட்டுள்ளது.76 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கம் உங்களின் செருப்பு வாரைவிட உங்களுக்கு மிக அருகில் உள்ளது. நரகமும் அதைப் போன்றே (மிக அருகில் உள்ளது).77 இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருட்கள் அனைத்தும் அழியக் கூடியவையே” எனும் பாடல்தான் கவிஞர்கள் சொன்ன வரிகளிலேயே மிக உண்மையானதாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.78 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்.79 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் வல்லமையும் மாண்பும் மிக்க தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமை களையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே-அதைச் செயல்படுத்தாவிட்டாலும்- அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால், ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான். அத்தியாயம் :
அனஸ் (ரலி) அவர்கள் கூறி னார்கள்: நீங்கள் சில (பாவச்) செயல்களைப் புரிகிறீர்கள். அவை உங்கள் பார்வையில் முடியைவிட மிக மெலிதாகத் தோன்றுகின்றன. (ஆனால்,) அவற்றை நாங்கள் நபி (ஸல்) அவர்களது காலத்தில் ‘மூபிகாத்’ என்றே கருதிவந்தோம். அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: ‘மூபிகாத்’ என்றால் ‘பேரழிவை ஏற்படுத்துபவை’ என்பது பொருள்.80 அத்தியாயம் :
சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (கைபர் போரின்போது) நபி (ஸல்) அவர்கள் (யூத) இணைவைப்பாளர்களி டம் போரிட்டுக்கொண்டிருந்த (குஸ்மான் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதரைப் பார்த்தார்கள். அவர் எதிரிகளுக்குப் பதிலடி கொடுப்பதில் முஸ்óம்களிலேயே மகத்தான (பங்காற்றுப)வராக இருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நரகவாசி களில் ஒருவரைப் பார்க்க விரும்புகின்றவர் இவரைப் பார்த்துக் கொள்ளலாம்” என்று (குஸ்மான் எனும் அந்த மனிதரைக் குறித்துக்) கூறினார்கள். (அவரைப் பற்றி நபியவர்கள் ஏன் அவ்வாறு கூறினார்கள் என்று அறிந்துகொள்வதற்காக) உடனே அவரை இன்னொரு மனிதர் பின்தொடர்ந்தார். (குஸ்மான் என்ற) அந்த மனிதரோ (எதிரிகளுடன் கடுமையாகப்) போராடிக்கொண்டு இருந்தார். இறுதியில் அந்த மனிதர் (எதிரிகளால் கடுமையாகக்) காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துவிட விரும்பி, தனது வாளின் (கீழ்ப் பகுதியைப் பூமியில் நட்டுவைத்து, அதன்) கூரான பகுதியைத் தம் மார்புகளுக்கிடையே வைத்து, அந்த வாளின் மீது உடலை அழுத்திக்(கொண்டு தற்கொலை செய்து)கொண்டார். வாள் அவருடைய தோள்களுக்கிடையே இருந்து வெளியேறியது. அப்போது நபி (ஸல்) அவர்கள் “ஓர் அடியார் மக்களின் பார்வையில் சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். (இதைப் போன்றே) ஓர் அடியார் மக்களின் பார்வையில் நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்துவருவார். (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன” என்று சொன்னார்கள்.81 அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் சிறந்தவர் யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “(அல்லாஹ்வின் பாதையில்) தம் உடலாலும் பொருளாலும் போராடுகின்றவர். (அடுத்துச் சிறந்தவர்,) மலைக் கணவாய்களில் ஒன்றில் தம் இறைவனை வழிபட்டுக்கொண்டு மக்களுக்குத் தம்மால் தீங்கு நேராமல் தவிர்ந்து வாழ்கின்றவர்” என்று பதிலளித்தார்கள்.82 இந்த ஹதீஸ் மொத்தம் பத்து அறிவிப் பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வங்களிலேயே ஆடுதான் சிறந்த தாக இருக்கும். குழப்பங்களிலிருந்து தமது மார்க்க (விசுவாச)த்தைக் காப்பாற்றிக்கொள்ள அந்த ஆட்டை ஓட்டிக்கொண்டு அவர் மலை உச்சிக்கும், மழைத்துளிகள் விழும் (கணவாய்கள், பள்ளத்தாக்குகள் போன்ற) இடங்களுக்கும் சென்று வாழ்வார். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.83 அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு கிராமவாசியிடம்), “நம்பகத் தன்மை பாழ்படுத்தப்பட்டுவிட்டால் மறுமை நாளை நீ எதிர்பார்க்கலாம்” என்று கூறினார்கள். அவர், “அல்லாஹ்வின் தூதரே! அது எவ்வாறு பாழ்ப்படுத்தப்படும்?” என்று கேட்டார். அதற்கு “(ஆட்சியதிகாரம், நீதிநிர்வாகம் போன்ற) எந்தப் பொறுப்பும் அதற்குத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படும்போது மறுமை நாளை எதிர்பார்த்துக்கொள்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.84 அத்தியாயம் :
ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (நம்பகத் தன்மை தொடர்பாக) இரு செய்திகளைக் கூறினார்கள். அவற்றில் ஒன்றை நான் (என் வாழ்நாளிலேயே) பார்த்துவிட்டேன். மற்றொன்றை எதிர்பார்த்திருக்கிறேன். ஒரு செய்தி யாதெனில், (இயற்கை யாகவே) மனிதர்களின் ஆழ்மனத்தில் (‘அமானத்’ எனும்) நம்பகத் தன்மை இடம் பிடித்தது. பின்னர் அவர்கள் குர்ஆனிலிருந்தும் (அதை) அறிந்துகொண்டார்கள். பிறகு (எனது வழியான) சுன்னாவிலிருந்தும் (அதை) அறிந்துகொண்டார்கள். (நபியவர்கள் கூறிய இதை நான் பார்த்துவிட்டேன்.) இரண்டாவது செய்தி, நம்பகத் தன்மை அகற்றப்படுவது தொடர்பானதாகும். மனிதன் ஒருமுறை உறங்குவான். (உறக்கத்திலேயே) அவனது உள்ளத்திலிருந்து நம்பகத் தன்மை (சிறிது) கைப்பற்றப்படும். அதையடுத்து அ(து அகற்றப்பட்ட)தன் அடையாளம் சிறு (கரும்)புள்ளி அளவுக்கு (அவனில்) தங்கிவிடும். பிறகு மீண்டும் ஒருமுறை அவன் உறங்குவான். அப்போது (மறுபடியும்) அது கைப்பற்றப்படும். இம்முறை அ(து அகற்றப்பட்ட)தன் அடையாளம் (கடின உழைப்பால் கையில் ஏற்படும்) காய்ப்பு அளவுக்கு (அவனில்) நிலைத்துவிடும். (இவ்வாறு முதலில் ‘நம்பகத் தன்மை’ எனும் ஒளி உள்ளத்தில் ஏற்றப்பட்டுப் பிறகு சிறிது சிறிதாக அது அணைக்கப்படுவதானது) காலில் தீக்கங்கை உருட்டிவிட்டு, அதனால் கால் கொப்பளித்து உப்பிவிடுவதைப் போன்றதாகும். பார்வையில் அது உப்பிப் பெரிதாகத் தெரியுமே தவிர, அதனுள் ஒன்றும் இருக்காது. பின்னர் காலையில் மக்கள் தங்களிடையே கொடுக்கல் வாங்கல் செய்துகொள்வார்கள். (ஆனால், அவர்களில்) யாருமே நம்பிக்கையைக் காப்பாற்ற எத்தனிக்கமாட்டார்கள். இன்னாருடைய மக்களில் நம்பிக்கையான ஒருவர் இருக்கிறார் என்று (தேடிக் கண்டுபிடித்து) சொல்லப்படும் (அளவுக்கு நம்பிக்கையாளர்கள் அரிதாகிவிடுவார்கள்). மேலும், ஒருவரைப் பற்றி, “அவருடைய அறிவுதான் என்ன? அவருடைய விவேகம்தான் என்ன? அவருடைய வீரம்தான் என்ன?” என்று (சிலாகித்துக்) கூறப்படும் ஆனால், அந்த மனிதருடைய இதயத்தில் கடுகளவுகூட (இறை) நம்பிக்கை இருக்காது. அறிவிப்பாளர் ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: என்மீது ஒரு காலம் வந்திருந்தது. அக்காலத்தில் நான் உங்களில் யாரிடம் கொடுக்கல் வாங்கல் செய்கிறேன் என்று பொருட்படுத்திய தில்லை. (ஏனெனில்,) முஸ்லிமாக இருந்தால், இஸ்லாம் (எனது பொருளை அவரிடமிருந்து) என்னிடம் திருப்பித் தந்துவிடும். கிறித்தவராக இருந்தால் அவருக்கான அதிகாரி (எனது பொருளை) அவரிடமிருந்து எனக்கு மீட்டுத் தந்துவிடுவார். ஆனால், இன்றோ நான் இன்னார், இன்னாரிடம் மட்டுமே கொடுக்கல் வாங்கல் செய்கிறேன். (இங்கு ‘மனிதர்களின் ஆழ்மனம்’ என்பதைக் குறிக்க மூலத்தில்) ‘ஜத்ரு குலூபிர் ரிஜால்’ எனும் சொற்றொடர் ஆளப்பட்டுள்ளது. ‘அல்ஜத்ர்’ என்பது ஒவ்வொரு பொருளிலும் அதன் அடிப்படையைக் குறிக்கும். (‘கரும்புள்ளி’ என்பதைக் குறிக்க) ‘வக்த்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது, ஒரு பொருளில் உள்ள சிறிய அடையாளத்தைக் குறிக்கும். (‘காய்ப்பு’ என்பதைக் குறிக்க) ‘அல்மஜ்ல்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. கையில் ஏற்படும் அழுத்தமான காய்ப்பை இது குறிக்கும். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்கள் (பொதி சுமக்கும்) நூறு ஒட்டகங்கள் போன்றவர்கள். அவற்றில் பயணத்திற்குப் பயன்படும் ஒட்டகத்தை நீ காண்பது அரிது.85 இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள், “யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். யார் முகப்புகழ்ச்சிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்” என்று கூறியதைக் கேட்டேன்.87 அறிவிப்பாளர் சலமா பின் குஹைல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜுன்துப் (ரலி) அவர்கள் தவிர வேறு யாரிடமும் நான் கேட்டதில்லை. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் ஒரு வாகனத்தில் அமர்ந்துகொண்டிருந்தேன். எனக்கும் நபியவர்களுக்கும் இடையே (ஒட்டகச்) சேணத்துடன் இணைந்த சாய்வுக்கட்டை தவிர வேறெதுவும் இருக்கவில்லை. (அந்த அளவுக்கு நெருக்கத்தில் நான் இருந்தேன்.) அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘முஆதே!’ என்று அழைத்தார்கள். நான் “அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)” என்றேன். பிறகு சிறிது தூரம் சென்ற பின்னர் மீண்டும் ‘முஆதே!’ என்றார்கள். நான் “அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)” என்றேன். பிறகு சிறிது தூரம் சென்றதும் மீண்டும் ‘முஆத் பின் ஜபலே!’ என அழைத்தார்கள். நான் (அப்போதும்), “அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், “அடியார்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா!” என்று கேட்டார் கள். நான் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அடியார்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனையே வழிபட வேண்டும்; அவனுக்கு எதனையும் (எவரையும்) இணையாக்கக் கூடாது” என்று கூறினார்கள். பிறகு சிறிது தூரம் சென்ற பின்னர் ‘முஆத் பின் ஜபலே!’ என்று அழைத்தார்கள். நான் “அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அடியார்கள் அதை நிறைவேற்றினால் அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன தெரியுமா?” என்று கேட்டார்கள். நான் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று சொன்னேன். “அடியார்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்னவென்றால், அவர்களை அவன் (மறுமையில்) வேதனைசெய்யாமல் இருப்பதாகும்” என்று சொன்னார்கள்.89 அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ‘அள்பா’ என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவராலும் வெல்ல முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக்கூடிய)தாக இருந்தது. (ஒரு பயணத்தின்போது) கிராமவாசி ஒருவர் தமது (ஆறு வயதுக்குட்பட்ட) வாட்டசாட்டமான ஒட்டகத்தின் மீது வந்து நபிகளாரின் அந்த ஒட்டகத்தை முந்திச் சென்றார். இது முஸ்லிம்களுக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது. முஸ்லிம்கள், “அள்பா பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது” என்று கூறினர். (இதை அறிந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உலகில் உயர்ந்துவிடுகின்ற எந்தப் பொருளாயி னும் நிச்சயமாக (ஒருநாள்) அதைக் கீழே கொண்டுவருவதே அல்லாஹ்வின் நியதியாகும்” என்று கூறினார்கள்.90 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக்கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்ப மான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றைவிட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வழிபாடுகளால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறை நம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.91 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நானும் மறுமை நாளும் இப்படி அனுப்பப்பட்டுள்ளோம்” என்று கூறி, தம் இரு விரல்களையும் (சுட்டுவிரல், நடுவிரல் இரண்டையும்) நீட்டியவாறு சைகை செய்தார்கள்.92 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நானும் மறுமை நாளும் இதோ இந்த (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய) இரண்டை யும் போன்று (நெருக்கமாக) அனுப்பப்பட்டுள்ளோம். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நானும் மறுமை நாளும் இதோ இந்த (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய) இரு விரல்களைப் போன்று (நெருக்கமாக) அனுப்பப்பட்டுள்ளோம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மேற்கிலிருந்து சூரியன் உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அவ்வாறு அது மேற்கிலிருந்து உதயமாகும்போது அதைப் பார்த்துவிட்டு மக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இறைநம்பிக்கை கொள்வார்கள். ஆனால், முன்பே இறைநம்பிக்கை கொண்டிராத, அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் நன்மையேதும் செய்திராத எந்த மனிதருக்கும் அந்த நேரத்தில் கொள்ளும் நம்பிக்கை பயனளிக்காது.93 இரண்டு பேர் (விற்பனைக்காகத்) துணியை விரித்து(ப் பார்த்து)க்கொண்டி ருப்பார்கள். அதை அவர்கள் விற்பனை செய்திருக்கவுமாட்டார்கள்; சுருட்டிக்கூட வைத்திருக்கவுமாட்டார்கள். அதற்குள் மறுமை சம்பவித்துவிடும். மேலும், ஒரு மனிதர் மடிகனத்த தமது ஒட்டகத்தி(ல் பால்கறந்து அப்போதுதா)ன் பாலுடன் (வீடு) திரும்பியிருப்பார்; இன்னும் அதைப் பருகிக்கூட இருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்துவிடும். ஒருவர் தமது நீர் தொட்டியை (அப்போதுதான்) கல்வைத்துப் பூசியிருப்பார்; இன்னும் அதில் நீர் இறைத்திருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்துவிடும். உங்களில் ஒருவர் தமது உணவை (அப்போதுதான்) வாயருகில் கொண்டுசென்றிருப்பார்; அதை உண்டிருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்துவிடும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “யார் அல்லாஹ்வை தரிசிக்க விரும்புகின்றாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகின்றான். யார் அல்லாஹ்வை தரிசிப்பதை வெறுக்கின்றாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கின்றான்” என்று கூறினார்கள். அப்போது ‘ஆயிஷா (ரலி) அவர்கள்’ அல்லது ‘நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர்’ “நாங்கள் மரணத்தை வெறுக்கிறோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “(அல்லாஹ்வின் தரிசனம் என்பதற்குப் பொருள்) அதுவல்ல. மாறாக, இறைநம்பிக்கையாளருக்கு இறப்பு நேரம் வரும்போது, அவர்மீது அல்லாஹ் அன்பு கொண்டிருப்பதாகவும் அவரைக் கௌரவிப்பதாகவும் அவருக்கு நற்செய்தி கூறப்படும். அப்போது இறப்புக்குப் பின்னால் உள்ள (மறுமை) வாழ்வைவிட விருப்பமானதாக வேறெதுவும் அவருக்கு இராது. எனவே, அவர் அல்லாஹ்வை தரிசிக்க விரும்புவார். அல்லாஹ்வும் அவரைச் சந்தி(த்துஉபசரி)க்க விரும்புவான். இறைமறுப்பாளனுக்கு மரணவேளை வரும்போது, அல்லாஹ் வழங்கும் வேதனை குறித்தும் தண்டனை குறித்தும் அவனுக்கு அறிவிக்கப்படும். அப்போது மரணத்திற்குப் பின்னால் உள்ள (மறுமை) வாழ்வைவிட வெறுப்பானதாக வேறெதுவும் அவனுக்கு இராது. எனவே, அவன் அல்லாஹ்வை தரிசிப்பதை வெறுப்பான்; அல்லாஹ்வும் அவனைச் சந்தி(த்து அருள்பாலி)ப்பதை வெறுப்பான்” என்று (விளக்கம்) சொன்னார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. இதே ஹதீஸ், ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கப்பட் டுள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் அல்லாஹ்வை தரிசிக்க விரும்புகின்றாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகின்றான். எவர் அல்லாஹ்வை தரிசிப்பதை வெறுக்கின்றாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கின்றான். இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ஆரோக்கியமாக இருந்தபோது, “சொர்க்கத்தில் தமது இருப்பிடத்தைப் பார்த்து, பிறகு (இன்னும் சில காலம் உயிர் வாழ்வதற்கு) வாய்ப்பளிக்கப்படாத வரை எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப்படவில்லை” என்று கூறுவார்கள். பிறகு அவர்களுக்கு நோய் கண்டு, தமது தலையை எனது மடிமீது வைத்திருந்த நிலையில் சிறிது நேரம் மயக்கமுற்றார்கள். பிறகு மயக்கம் தெளிந்தபோது வீட்டின் கூரையை நோக்கி அவர்களின் பார்வை நிலைகுத்தி நின்றது. பிறகு, “இறைவா! (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)” என்று சொன்னார்கள். நான், “அவர்கள் இப்போது நம்முடன் இருப்பதைத் தேர்ந்தெடுக்க வில்லை (மறுமைப் பெருவாழ்வைத் தேர்ந்தெடுத்துக்கொண்டுவிட்டார்கள்)” என்று (மனத்துக்குள்) கூறிக்கொண்டேன். (அவர்கள் ஆரோக்கியமாக இருந்த போது, ‘இறைத்தூதர்கள் இறக்கும்முன் இம்மை மறுமை இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்துகொள்ள வாய்ப்பளிக்கப் படுவார்கள்’ என்று) நம்மிடம் அவர்கள் கூறிய சொல் இதுதான் என நான் அறிந்துகொண்டேன். நபி (ஸல்) அவர்கள் பேசிய கடைசி வார்த்தை, ‘இறைவா! உயர்ந்த தோழர்களுடன் (என்னையும் சேர்த்தருள்)’ என்பதாகவே இருந்தது. இதை அறிஞர்கள் பலர் இருந்த அவையில் உர்வா பின் அஸ்ஸுபைர், சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) ஆகியோர் அறிவித்தனர்.94 அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நோய்வாய்ப்பட்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் ‘தோல் பாத்திரம் ஒன்று’ அல்லது ‘பெரிய மரக் குவளையொன்று’ இருந்தது. அதில் தண்ணீரும் இருந்தது. அவர்கள் தம் இரு கைகளையும் அந்தத் தண்ணீருக்குள் நுழைத்து முகத்தில் தடவிக்கொண்டே “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நிச்சயமாக மரணத்தின்போது பல வேதனைகள் உண்டு” என்று கூறினார்கள். பிறகு தமது கையை உயர்த்தியவாறு “(இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)” எனப் பிரார்த்திக்கலானார்கள். இறுதியில், அவர்களின் உயிர் கைப்பற்றப்பட, அவர்களின் கரம் சரிந்தது.96 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகி றேன்: (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘உல்பா’ என்பது மரப் பாத்திரத்தையும், ‘ரக்வா’ என்பது தோல் பாத்திரத்தையும் குறிக்கும். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: கடின சுபாவம் படைத்த கிராமவாசிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “மறுமை நாள் எப்போது?” என்று கேட்பார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவர்களிலேயே வயதில் சிறியவரான ஒருவரை நோக்கி “இவர் உயிர் வாழ்ந்தால், இவரை முதுமை அடைவதற்கு முன்பே உங்கள்மீது மறுமை சம்பவித்துவிடும்” என்று கூறுவார்கள். இங்கு ‘மறுமை’ (ஸாஅத்) என்பது மரணத்தைக் குறிக்கும் என (அறிவிப்பாளர்) ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.97 அத்தியாயம் :
அபூகத்தாதா பின் ரிப்ஈ அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களைக் கடந்து ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டுசெல்லப்பட்டது. அப்போது அவர்கள் “(இவர்) ஓய்வு பெற்றவராவார்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவரா வார்” என்று சொன்னார்கள். மக்கள் “அல்லாஹ்வின் தூதரே! ஓய்வு பெற்ற வர்; ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் “இறைநம்பிக்கை கொண்ட அடியார் (இறக்கும்போது) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையிலிருந்தும் ஓய்வுபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான அடியான் (இறக்கும்போது) அவனி(ன் தொல்லைகளி)டமிருந்து மற்ற அடியார்கள், (நாடு)நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு(பெற்று நிம்மதி) பெறுகின்றன” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இவர்) ஓய்வு பெற்றவர்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவர் ஆவார். இறைநம்பிக்கையாளர் (இறக்கும்போது, இவ்வுலகத் துன்பங்களிலிருந்து) ஓய்வு பெறுகிறார். இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறந்துபோனவரை மூன்று பொருட்கள் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பிவிடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகிறது. அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் (மறுமையில்) அவர் (தங்கப்போகும்) இருப்பிடம் காலையிலும் மாலையிலும் அவருக்கு எடுத்துக்காட்டப்படும். (அது) ஒன்று நரகமாயிருக்கும்; அல்லது சொர்க்கமாயிருக்கும். அப்போது “இதுதான் உன் இருப்பிடம். இறுதியில் இங்குதான் நீ அனுப்பப்படுவாய்” என்று கூறப்படும். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.98 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறந்தோரை ஏசாதீர்கள். ஏனெனில், அவர்கள் தாம் செய்த (நன்மை, தீமை ஆகிய)வற்றின்பால் சென்று சேர்ந்துவிட்டார்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.99 அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: இரண்டு பேர் சச்சரவிட்டுக்கொண்டனர். அவர்களில் ஒருவர் முஸ்லிம்; மற்றொருவர் யூதர். அந்த முஸ்லிம் (தாம் செய்த ஒரு சத்தியத்தின்போது) “அகிலத்தார் அனைவரையும்விட முஹம்மத் (ஸல்) அவர்களை (சிறந்தவ ராக)த் தேர்ந்தெடுத்துக்கொண்டவன்மீது சத்தியமாக!” என்று கூறினார். அந்த யூதர், “அகிலத்தார் அனைவரையும்விட மூசா (அலை) அவர்களை (சிறந்தவ ராக)த் தேர்ந்தெடுத்துக்கொண்டவன் மீதாணையாக!” என்று கூறினார். இதைக் கேட்ட அந்த முஸ்லிம் கோபமடைந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். உடனே அந்த யூதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று தம் நடவடிக்கையையும் அந்த முஸ்லிமின் நடவடிக்கையையும் தெரிவித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மூசா (அலை) அவர்களைவிடச் சிறந்தவராக என்னை ஆக்காதீர்கள். ஏனெனில், (மறுமை நாளில் எக்காளம் ஊதப்படும். அப்போது) மக்கள் மூர்ச்சையுற்று (கீழே) விழுந்து விடுவார்கள். அப்போது நான்தான் மயக்கம் தெளிந்து எழுபவர்களில் முதல் ஆளாக இருப்பேன். அந்த நேரத்தில் மூசா (அலை) அவர்கள் இறைவனது அரியணையின் ஓர் ஓரத்தைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள். மூசா எனக்கு முன்பே மயக்கம் தெளிந்து (எழுந்து)விட்டாரா? அல்லது மூர்ச்சையடைந்து விழுவதிலிருந்து அல்லாஹ் விதிவிலக்களித்தவர்களில் ஒருவராய் அவர் இருந்தாரா? என்பது எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.101 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூர்ச்சையடைந்து விழும் (மறுமை) நாளில் மக்கள் மூர்ச்சையடைந்து (கீழே) விழுந்துவிடுவார்கள். நான்தான் (மயக்கம் தெளிந்து) எழுபவர்களில் முதல் ஆளாக இருப்பேன். அந்த நேரத்தில் மூசா (அலை) அவர்கள் இறைவனது அரியணையின் ஓர் ஓரத்தைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள். அவர் மூர்ச்சையுற்று விழுந்தவர்களில் ஒருவரா என்பது எனக்குத் தெரியாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.102 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (மறுமை நாளில்) பூமியைத் தனது கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானத்தைத் தனது வலக் கரத்தில் சுருட்டிக்கொள்வான்; பிறகு “நானே அரசன்; பூமியின் அரசர்கள் எங்கே?” என்று கேட்பான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.105 அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “மறுமை நாளில் இந்தப் பூமி (அடுப்பில் இருக்கும்) ஒரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர் தமது ரொட்டியை (அடுப்பிலிருந்து எடுத்துக் கையில் வைத்து)ப் புரட்டுவதைப் போன்று, சர்வ வல்லமை படைத்த (இறை)வன் பூமியைத் தனது கரத்தால் புரட்டிப்போடுவான். (அதையே) சொர்க்கவாசிகளுக்கு விருந்தாக்குவான்” என்று கூறினார்கள்.106 அப்போது யூதர்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அபுல் காசிமே! அளவற்ற அருளாளன் உங்களுக்கு வளம் வழங்கட்டும். மறுமை நாளில் செர்க்கவாசிகளின் விருந்துணவு என்னவென்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘சரி’ என்றார்கள். அவர் நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே “மறுமை நாளில் இந்தப் பூமி ஒரேயொரு ரொட்டியைப் போன்று இருக்கும்” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களைக் கூர்ந்து பார்த்துவிட்டு, தம் கடைவாய்ப் பற்கள் தெரிய சிரித்தார்கள். பிறகு “உங்களுக்கு சொர்க்கவாசிகளின் குழம்பு எது எனத் தெரிவிக்கட்டுமா?” என்று அந்த யூதர் கேட்டுவிட்டு, அவர்களின் குழம்பு ‘பாலாம்’ மற்றும் ‘நூன்’ என்றார். மக்கள் “இது என்ன?” என்று கேட்டார்கள். அந்த யூதர், “(அவை) காளைமாடும் மீனும் ஆகும். அந்த இரண்டின் ஈரல்களுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித்துண்டை (மட்டுமே சொர்க்கவாசி களில்) எழுபதாயிரம் பேர் புசிப்பார்கள்” என்று கூறினார். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உமியோ தவிடோ கலக்காத) சுத்தமான மாவினாலான ரொட்டியைப் போன்று தூய வெண்மையான (சம) தளத்தின் மீது மறுமை நாளில் மனிதர்கள் ஒன்று திரட்டப்படுவார்கள். இதன் அறிவிப்பாளரான சஹ்ல் (ரலி) அவர்கள், அல்லது மற்றொருவர் “அந்தப் பூமியில் (மலை, மடு, காடு, வீடு என) எந்த அடையாளமும் யாருக்கும் இருக்காது” என்று (கூடுதலாக) அறிவித்தார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாள் ஏற்படுவதற்கு சற்று முன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி) மக்கள் மூன்று பிரிவினராக ஒன்று திரட்டப்படுவார்கள். (அதில் முதல் பிரிவினர்) அச்சத்துடனும் ஆர்வத்துடனும் செல்வார்கள். (இரண்டாவது பிரிவினர்) (வாகனப் பற்றாக்குறையால் தாமதித்துப் பின்னர்) ஒரே ஒட்டகத்தின் மீது இரண்டு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது மூன்று பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது நான்கு பேராக, ஒரே ஒட்டகத்தின் மீது பத்துப் பேராகச் செல்வார்கள். அவர்களில் எஞ்சியவர்(களே மூன்றாவது பிரிவினராவர். அவர்)களை (பூமியில் ஏற்படும் ஒரு பெரும்) தீ (விபத்து) ஒன்றுதிரட்டும். அவர்கள் மதிய ஓய்வெடுக்கும்போதும், இரவில் ஓய்வெடுக்கும்போதும், காலை நேரத்தை அடையும்போதும், மாலை நேரத்தை அடையும்போதும் (இப்படி எல்லா நேரங்களிலும்) அந்தத் தீ அவர்களுட னேயே இருக்கும். அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! (25:34ஆவது இறைவசனத்தின்படி மறுமை நாளில்) இறைமறுப்பாளன் தனது முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவது எப்படி?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “இம்மையில் அவனை இரு கால்களால் நடக்கவைத்த (இறை)வனுக்கு, மறுமை நாளில் அவனை அவனது முகத்தால் நடக்கவைத்திட முடியாதா?” என்று (திருப்பிக்) கேட்டார்கள். (இதை அறிவித்த) கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள், “ஆம். (முடியும்). எங்கள் இறைவனின் வல்லமையின் மீதாணையாக!” என்று சொன்னார்கள்.108 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, காலால் நடந்த வர்களாக, விருத்தசேதனம் செய்யப் படாதவர்களாக (பிறந்த மேனியுடன்) அல்லாஹ்வைச் சந்திப்பீர்கள். “இது நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்ட (பிரபலமான) ஹதீஸ்களில் ஒன்றென நாங்கள் கருதுகிறோம்” என்று சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் (மிம்பர்) மீது இருந்தபடி, “நிச்சயமாக நீங்கள் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக அல்லாஹ்வைச் சந்திப்பீர்கள்” என்று உரையில் குறிப்பிட்டதை நான் கேட்டேன். அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்றபடி உரையாற்றினார்கள். அப்போது (பின்வருமாறு) கூறினார்கள்: (மறுமை நாளில்) நீங்கள் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்றுதிரட்டப் படுவீர்கள். அல்லாஹ் கூறுகின்றான்: முதன்முதலாக அவர்களை நாம் படைத்ததைப் போன்றே (அந்நாளில்) அவர்களை மீண்டும் படைப்போம். இது நம்மீது (பொறுப்பாகிவிட்ட) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்வோம். (21:104) மறுமை நாளில் படைப்பினங் களிலேயே முதன்முதலாக ஆடையணி விக்கப்படுபவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆவார்கள். மேலும், என் சமுதாயத்தாரில் சிலபேர் இடப் பக்கமாக (நரகம் நோக்கி)க் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான், “என் இறைவா! (இவர்கள்) என் தோழர் களில் சிலர்” என்பேன். அப்போது அல்லாஹ் “இவர்கள் உம(து இறப்பு)க் குப்பின் (மார்க்கத்தில்) என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்பது உமக்குத் தெரியாது” என்பான். அப்போது நான், நல்லடியார் (நபி ஈசா (அலை) அவர்கள்) சொன்னதைப் போன்று, “நான் அவர்களுடன் இருந்த வரை அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக்கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்” (5:117) என்று சொல்வேன். அப்போது “இவர்கள் தம் குதிகால் (சுவடு)களின் வழியே மார்க்கத்திலிருந்து வெளியேறிக்கொண்டேயிருந்தார்கள்” என்று கூறப்படும்.109 அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “நீங்கள் மறுமை நாளில் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்றுதிரட்டப்படுவீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் “அல்லாஹ்வின் தூதரே! (நிர்வாணமான) ஆண்களும் பெண்களும் சிலரைச் சிலர் பார்ப்பார்களே?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு (அங்குள்ள) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (சுமார் நாற்பதுபேர்) நபி (ஸல்) அவர்களுடன் ஒரு (தோல்) கூடாரத்தி னுள் இருந்துகொண்டிருந்தோம். அப் போது அவர்கள், “சொர்க்கவாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா?” என்று கேட்டார்கள். நாங்கள் ‘ஆம்’ என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்கள், “சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்புகின்றீர்களா?” என்று கேட்டார்கள். நாங்கள் ‘ஆம்’ என்று சொன்னோம். அவர்கள் “சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?” என்று கேட்டார்கள். நாங்கள் ‘ஆம்’ என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்கள் “முஹம்மதின் உயிர் எவனது கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக (என் சமுதாயத்தாரான) நீங்கள் இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். அதற்குக் காரணம், சொர்க்கத்தில் முஸ்லிமைத் தவிர வேறெவரும் நுழைய முடியாது. இணைவைப்பாளர்களை ஒப்பிடும்போது நீங்கள் கறுப்புக் காளை மாட்டின் தோலில் உள்ள வெள்ளை முடியைப் போன்றுதான்; அல்லது சிவப்புக் காளை மாட்டிலுள்ள கறுப்பு முடியைப் போன்றுதான் இருக்கிறீர்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: மறுமை நாளில் முதன் முதலில் அழைக்கப்படுபவர் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களாவார்கள். அப்போது அவர்கள்முன் அவர்களுடைய சந்ததிகள் இருப்பார்கள். சந்ததிகளிடம் “இவர்தான் உங்கள் தந்தை ஆதம்” என்று கூறப்படும். உடனே ஆதம் (அலை) அவர்கள் (இறைவனின் அழைப்பை ஏற்று, “இறைவா!) இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன்” என்று சொல்வார்கள். அப்போது இறைவன் “உங்கள் சந்ததியினரில் நரகத்திற்குச் செல்லவிருப்போரை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள்” என்று சொல்வான். அதற்கு அவர்கள், “இறைவா! எத்தனை பேரை (அவ்வாறு) பிரிக்க வேண்டும்?” என்று கேட்பார்கள். அதற்கு இறைவன், “ஒவ்வொரு நூறுபேரிலிருந்தும் தொண்ணூற்று ஒன்பதுபேரைத் தனியாகப் பிரித்திடுங்கள்” என்று கூறுவான் என நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். உடனே மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒவ்வொரு நூறுபேரிலும் தொண்ணூற்று ஒன்பதுபேர் (நரகத்திற்கெனப் பிரித்து) எடுக்கப்பட்டுவிட்டால் எங்களில் (சொர்க்கத்திற்கென) யார்தான் மிஞ்சுவார்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “மற்றச் சமுதாயங்களுக்கிடையே என் சமுதாயத்தார் கறுப்புக் காளை மாட்டிலுள்ள வெள்ளை முடியைப் போன்றவர்கள் ஆவார்கள்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) அல்லாஹ் (ஆதி மனிதரை நோக்கி) ‘ஆதமே!’ என்று அழைப்பான். அதற்கு அவர்கள், “(இறைவா!) இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கட்டளையிடு.) நலம் அனைத்தும் உன் கரங்களில்தான்” என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் “(உங்கள் சந்ததிகளில்) நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள்” என்று கூறுவான். ஆதம் (அலை) அவர்கள், “எத்தனை நரகவாசிகளை?” என்று கேட்பார்கள். அதற்கு அவன் “ஒவ்வோர் ஆயிரம் பேரிóருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை (தனியாகப் பிரித்திடுங்கள்)” என்று பதிலளிப்பான். (அப்போதுள்ள பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) பாலகன்கூட நரைத்து (மூப்படைந்து)விடுகின்ற, கர்ப்பம் கொண்ட ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பத்தை(ப் பீதியின் காரணத்தால் அரைகுறையாக)ப் பிரசவித்துவிடுகின்ற நேரம் இதுதான். மக்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்கமாட்டார்கள். மாறாக, அல்லாஹ்வின் வேதனை கடுமை யானதாகும். இவ்வாறு நபியவர்கள் கூறியது மக்களுக்குச் சிரமமாக இருந்தது. எனவே அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (ஒவ்வோர் ஆயிரத்திலும் நரகத்திற்குச் செல்லாமல் எஞ்சியிருக்கும்) அந்த ஒரு நபர் எங்களில் யார்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(பயப்படாதீர்கள்;) நற்செய்தி பெறுங்கள். யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரில் ஆயிரம்பேர் என்றால், உங்களில் ஒருவர் (நரகத்திற்குச் செல்ல தனியாக பிரிக்கப்பட்டோரில்) இருப்பார்” என்று கூறிவிட்டுப் பிறகு, “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக! நீங்கள் சொர்க்க வாசிகளில் மூன்றில் ஒரு பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் பேராவல் கொள்கிறேன்” என்று கூறினார்கள். உடனே நாங்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து தக்பீர் (அல்லாஹு அக்பர்) முழக்கமிட்டோம். பிறகு நபி (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக இருக்க வேண்டுமென நான் பேராவல் கொள்கின்றேன். மற்றச் சமுதாயங்களோடு ஒப்பிடுகையில் நீங்கள் கறுப்புக் காளை மாட்டின் தோலிலுள்ள வெள்ளை முடியைப் போன்று, அல்லது கழுதையின் காலிலுள்ள வெள்ளை சொட்டையைப் போன்று இருக்கிறீர்கள்” என்று சொன்னார்கள். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.111 அத்தியாயம் :
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “அந்நாளில் அகிலத்தாரின் அதிபதி முன் மக்களெல்லாரும் (விசாரணைக்காக) நிற்பார்கள்” எனும் (83:6ஆவது) வசனம் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறுகை யில், “அன்று தம் இரு காதுகளின் பாதிவரை தேங்கி நிற்கும் தமது வேர்வையில் அவர்களில் ஒருவர் நிற்பார்” என்று குறிப்பிட்டார்கள்.112 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் மனிதர்களுக்கு (அவர்களின் தலைக்கருகில் நெருங்கி வரும் சூரியனால்) வியர்வை ஏற்படும். அவர்களின் வியர்வை தரையினுள் எழுபது முழம்வரை சென்று, (தரைக்கு மேல்) அவர்களின் வாயை அடைந்து, இறுதியில் அவர்களின் காதையும் அடையும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் மனிதர்களுக்கிடையே முதன்முதலில் தீர்ப்பளிக்கப்படுவது (உலகில் சிந்தப்பட்ட) இரத்தங்கள் (கொலைகள்) குறித்துத்தான்.115 இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் சகோதரருக்கு அநீதி ஏதேனும் இழைத்திருந்தால் (அவருடன் பேசி விமோசனம் கண்டு) அதிலிருந்து அவர் (இவ்வுலகிலேயே) தம்மை விடுவித்துக்கொள்ளட்டும். ஏனெனில், அங்கு (மறுமையில் ஈட்டுத்தொகை கொடுக்க) பொற்காசோ வெள்ளிக்காசோ இருக்காது. இவர் தம் சகோதரருக்கு (இழைத்த அநீதிக்கு ஈடாக) இவருடைய நன்மைகளிலிருந்து (தேவையானவை) எடு(த்துக் கொடு)க்கப்படும்; இவரிடம் நன்மைகளே இல்லை என்றால், (அநீதிக்குள்ளான) சகோதரனின் பாவங்களிலிருந்து (விகிதாசாரப்படி) எடுத்து இவர்மீது சுமத்தப்(படும். இந்நிலை ஏற்)படுவதற்கு முன்பே (இம்மையில் சமரசம் செய்துகொள்ளட்டும்). இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.116 அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர்கள் நரகத்தி(ன் பாலத்தி)லிருந்து தப்பி வரும்போது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அங்கு உலகில் (வாழ்ந்தபோது) அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்காகச் சிலரிடமிருந்து சிலர் கணக்குத் தீர்த்துக்கொள்வார்கள். இறுதியில் அவர்கள் (மாசு) நீங்கித் தூய்மையாகிவிடும்போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங் கப்படும். முஹம்மதின் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக! அவர்கள் சொர்க்கத்தில் உள்ள தமது வசிப்பிடத்தை, உலகத்திலிருந்த அவர் களின் இல்லத்தைவிட எளிதாக அடையாளம் கண்டுகொள்வார்கள். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.117 (அறிவிப்பாளர்களில் ஒருவரான) யஸீத் பின் ஸுரைஉ (ரஹ்) அவர்கள், “(இவ்வுலகில் ஒருவர்மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தை அவர்களின் இதயங்களிலிருந்து அகற்றிவிடுவோம்” எனும் (7:43ஆவது) வசனத்தை ஓதிவிட்டு, (அதற்கு விளக்கமாக) இந்த ஹதீஸை அறிவித்தார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “எவர் (மறுமை நாளில்) துருவித்துருவி விசாரிக்கப்படுவாரோ அவர் வேதனை செய்யப்படுவார்” என்று கூறினார்கள். நான் “உயர்ந்தோன் அல்லாஹ் (தன் வேதத்தில்) ‘வலக் கரத்தில் தமது வினைப்பதிவுச் சீட்டு வழங்கப்பட்டவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்’ (84:8) என்றல்லவா கூறுகின்றான்?” எனக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் “இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர் களின் நன்மை, தீமை பட்டியலை அவர்களுக்கு முன்னால்) சமர்ப்பிக்கப் படுதலாகும்” என்று கூறினார்கள்.118 இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மறுமை நாளில் விசாரணை செய்யப்படும் எவரும் அழிந்தே போய்விடுவார்” என்று கூறி னார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! ‘எவரது வினைப்பதிவுச் சீட்டு அவரது வலக் கரத்தில் வழங்கப் படுமோ அவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்’ என்றல்லவா உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்?” (84:8) என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர்களின் நன்மை, தீமைகளின் பட்டியலை அவர்களுக்குமுன்) சமர்ப்பிக்கப்படுவதுதான். மறுமையில் துருவித்துருவி விசாரணை செய்யப்படும் எவரும் வேதனை செய்யப்படாமóருப்பதில்லை” என்று கூறினார்கள். அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: மறுமை நாளில் இறைமறுப்பாளன் (விசாரணைக்காகக்) கொண்டுவரப்பட்டு “உனக்கு பூமி நிரம்பத் தங்கம் சொந்தமாக இருந்தால் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் நரக வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன்வருவாயல்லவா?” என்று அவனிடம் கேட்கப்படும். அதற்கு அவன் ‘ஆம்’ என்று பதிலளிப்பான். அப்போது “இதைவிட தெளிவான ஒன்றே (அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமலிருப்பதையே) உன்னிடம் கோரப்பட்டிருந்தது. (ஆனால், அதை நீ ஏற்கவில்லை)” என்று கூறப்படும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவந்தார்கள்.119 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் (தனித்தனியாகப்) பேசாமலிருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களில் ஒருவருக்கும் இடையே மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்கமாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். தமக்கு முன்புறம் எதையும் அவர் காணமாட்டார். பிறகு தம(துமுகத்து)க்கு எதிரே பார்ப்பார். அப்போது அவரை (நரக) நெருப்புதான் வரவேற்கும். ஆகவே, முடிந்தால் பேரீச்சம்பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள். இதை அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.120 அத்தியாயம் :
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் “நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டுப் பிறகு (நரகத்தைப் பார்த்து அஞ்சுவதைப் போன்று) முகத்தைத் திருப்பிக்கொண் டார்கள். பிறகு (மீண்டும்) “நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டுப் பிறகு, (நரகத்தைக் கண்டு அஞ்சுவதைப் போன்று) தம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். அவர்கள் நரகத்தையே பார்க்கிறார்களோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்கு மூன்றுமுறை (இவ்வாறு) செய்தார்கள். பிறகு “பேரீச்சம்பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் உங்களை நரகத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள். அதுவும் இல்லாதவர் இன்சொல்லைக் கொண்டேனும் நரகத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.121 அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (விண்ணுலகப் பயணத்தின் போது) பல சமுதாயத்தார் எனக்கு எடுத்துக்காட்டப்பட்டனர். அப்போது ஓர் இறைத்தூதருடன் (கணிசமான எண்ணிக்கையிலிருந்த) ஒரு கூட்டம் கடந்துசென்றது. மற்றோர் இறைத்தூதருடன் சிலபேர் கடந்துசென்றனர். மற்றோர் இறைத்தூதருடன் பத்துப் பேரும், இன்னோர் இறைத்தூதருடன் ஐந்து பேரும் கடந்துசென்றனர். பிறிதோர் இறைத்தூதர் தனியாகச் சென்றார். அப்போது ஒரு மிகப் பெரிய கூட்டத்தைக் கண்டேன். நான் “(வானவர்) ஜிப்ரீலே! இவர்கள் என் சமுதாயத்தாரா?” என்று கேட்டேன். ஜிப்ரீல், “இல்லை. மாறாக, அடிவானத்தைப் பாருங்கள்” என்றார். உடனே நான் பார்த்தேன். அங்கே மிகப் பெரும் மக்கள் திரள் இருக்கக் கண்டேன். ஜிப்ரீல், “இவர்கள்தான் உங்கள் சமுதாயத்தார். இவர்களின் முன்னணியில் இருக்கும் இந்த எழுபதாயிரம் பேருக்கு விசாரணையுமில்லை. வேதனையுமில்லை” என்று கூறினார். நான் ‘ஏன்?’ என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல், “இவர்கள் (நோய்க்காக) சூடிட்டுக்கொள்ளாதவர்களாகவும், ஓதிப்பார்க்காதவர்களாகவும், பறவை சகுனம் பார்க்காதவர்களாகவும், தங்கள் இறைவன்மீதே முழு நம்பிக்கை வைத்தவர்களாகவும் இருந்தார்கள்” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்களை நோக்கி உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் எழுந்து (வந்து), “அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வே! இவரை அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களை நோக்கி இன்னொரு மனிதர் எழுந்து (வந்து), “அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தி யுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள் “இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார்” என்று சொன்னார்கள்.123 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டம், பௌர்ணமி இரவில் முழுநிலவு பிரகாசிப்பதைப் போன்று முகங்கள் பிரகாசித்தபடி (விசாரணையின்றி சொர்க்கத்துக்குள்) நுழைவார்கள்” என்று கூறினார்கள். உடனே உக்காஷா பின் மிஹ்ஸன் அல்அசதீ (ரலி) அவர்கள் தம்மீதிருந்த கோடுபோட்ட சால்வையை உயர்த்தியவாறு எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே! இவரையும் அவர்களில் ஒருவராக ஆக்குவாயாக!” என்று பிரார்த்தனை செய்தார்கள். பிறகு அன்சாரிகளில் ஒருவர் எழுந்து “அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: நிச்சயமாக என் சமுதாயத்தாரில் ‘எழுபதாயிரம் பேர்’ அல்லது ‘ஏழு லட்சம் பேர்’ ஒருவரையொருவர் பற்றிக்கொண்டு ஒரேசீராக (விசாரணையின்றி) சொர்க்கத்தில் நுழைவார்கள். அவர்களில் முதலாமவரும் இறுதியானவரும் (ஒரே நேரத்தில்) சொர்க்கத்தில் நுழையும் அளவுக்கு (ஓரணியில்) செல்வார்கள். மேலும், அவர்களுடைய முகங்கள் பௌர்ணமி இரவில் முழுநிலவு பிரகாசிப்பதைப் போன்று பிரகாசிக்கும். இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.124 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைவார்கள். பிறகு ஓர் அறிவிப்பாளர் அவர்களிடையே எழுந்து, “நரகவாசிகளே! இனி மரணம் இல்லை. சொர்க்கவாசிகளே! மரணம் இல்லை; இது நிரந்தரம்” என்று அறிவிப்பார். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகளிடம், “(இது) நிரந்த ரம்; (இனி) மரணம் இல்லை” என்றும், நரகவாசிகளிடம் “(இது) நிரந்தரம்; (இனி) மரணம் இல்லை” என்றும் சொல்லப்படும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (விண்ணுலகப் பயணத்தின்போது) சொர்க்கத்தை எட்டிப்பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப்பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களையே கண்டேன். இதை இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறர்கள்.126 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: நான் சொர்க்கத்தின் வாசலில் நின்றிருந்தேன். அதில் நுழைபவர்களில் பெரும்பாலானோர் ஏழைகளாகவே இருந்தார்கள். தனவந்தர்கள் (விசாரணைக்காக சொர்க்கத்தில் நுழைந்து விடாமல்) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர்; ஆனால், நரகவாசிகளை நரகத்திற்குக் கொண்டுசெல்லுமாறு ஆணையிடப்பட்டி ருந்தது. நான் நரகத்தின் வாசலில் நின்றிருந்தேன். அதில் நுழைபவர்களில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருந்தார்கள். இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும், நரகவாசிகள் நரகத்திற்கும் சென்று சேர்ந்தபிறகு ‘மரணம்’ (ஓர் ஆட்டின் உருவத்தில்) கொண்டுவரப்பட்டு, சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே நிறுத்தப்படும். பின்னர் அது அறுக்கப்படும். பிறகு அறிவிப்பாளர் ஒருவர், “சொர்க்கவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது; நரகவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது” என அறிவிப்பார். அப்போது சொர்க்கவாசிகளுக்கு மகிழ்ச்சிக்குமேல் மகிழ்ச்சி அதிகமாகும். நரகவாசிகளுக்குக் கவலைக்குமேல் கவலை அதிகமாகும்.127 இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (மறுமையில்) சொர்க்க வாசிகளை நோக்கி, ‘சொர்க்கவாசிகளே!’ என்று அழைப்பான். அதற்கு அவர்கள் “எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம்” என்று பதிலளிப்பார் கள். அப்போது அல்லாஹ் “திருப்தி அடைந்தீர்களா?” என்று கேட்பான். அதற்கு அவர்கள் “உன் படைப்புகளில் யாருக்கும் நீ வழங்கியிராத (அருட்செல்வங்கள், இன்பங்கள் ஆகிய)வற்றை எங்களுக்கு நீ வழங்கியுள்ளபோது நாங்கள் திருப்தி அடையாமல் இருப்போமா?” என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் “அதைவிடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கப்போகிறேன்” என்பான். அவர்கள் “அதிபதியே! அதைவிடச் சிறந்தது எது?” என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் “உங்கள்மீது என் அன்பை அருளுகிறேன். இனி ஒருபோதும் உங்கள்மீது கோபப்பட மாட்டேன்” என்று கூறுவான். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.128 அத்தியாயம் :
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: இளைஞராயிருந்த ஹாரிஸா பின் சுராக்கா அல்அன்சாரி (ரலி) அவர்கள் பத்ர் போரில் கொல்லப்பட்டார்கள். அப்பால் அவர்களின் தாயார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (என் மகன்) ஹாரிஸாவுக்கு என்னிடமுள்ள இடத்தைத் தாங்கள் அறிந்துள்ளீர்கள். (இப்போது) ஹாரிஸா சொர்க்கத்தில் இருந்தால் நான் நன்மையை நாடி பொறுமை காப்பேன். இதுவன்றி நிலைமை வேறாக இருப்பின், நான் என்ன செய்வேன் என்பதைத் தாங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அடப்பாவமே! இழப்பால் துடிக்கிறாயோ! அதுவென்ன, சொர்க்கம் ஒன்றுதான் உள்ளதா? சொர்க்கங்க(ளின் படித்தரங்க)ள் நிறைய உள்ளன. (உன் மகன்) ஹாரிஸா (உயர்ந்த சொர்க்கமான) ‘ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்’ எனும் சொர்க்கத்தில் இருக்கிறார்” என்று கூறினார்கள்.129 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நரகத்தில்) இறைமறுப்பாளரின் இரு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம், துரிதமாகப் பயணிப்பவர் மூன்று நாட்கள் கடக்கும் தூரமாகும்.130 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழலில் பயணிப்பவர் நூறு வருடங்கள் பயணித்தாலும் அதைக் கடந்துசெல்ல முடியாது. இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. (அதன் நிழலில்) விரைந்து செல்லும் கட்டான உடலுள்ள உயர் ரகக் குதிரை நூறாண்டுகள் பயணித்தாலும் அதைக் கடக்க முடியாது.131 இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக என் சமுதாயத்தாரில் ‘எழுபதாயிரம் பேர்’ அல்லது ‘ஏழு லட்சம் பேர்’ (விசாரணையின்றி) சொர்க்கத்தில் நுழைவார்கள். -அறிவிப்பாளர் அபூஹாஸிம் (ரஹ்) அவர்களுக்கு இந்த இரண்டில் எது என்று (உறுதியாகத்) தெரியவில்லை- அவர்களில் ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு ஒரே சீராக நுழைவார்கள். அவர்களில் கடைசி நபர் நுழையாத வரை முதல் நபர் நுழையமாட்டார். (அனைவரும் ஓரணியில் நுழைவர்.) அவர்களின் முகங்கள் பௌர்ணமி இரவில் (பிரகாசிக்கும்) முழுநிலவின் வடிவத்தில் இருக்கும். இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.132 அத்தியாயம் :
நபி (ஸல் அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசி(களில் கீழ்த்தட்டில் இருப்பவர்)கள் (மேல்) அறை(களில் உள்ளவர்)களை, வானில் நீங்கள் நட்சத்திரங்களைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள். இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இந்த ஹதீஸை நுஅமான் பின் அபீஅய்யாஷ் (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: இந்த ஹதீஸை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு அதில் “கிழக்கு அடிவானில் (தோன்றி), மேற்கு அடிவானில் மறையும் விண்மீனைப் பார்ப்பதைப் போன்று” எனக் கூடுதலாக அறிவித்ததை நான் உறுதியாகக் கேட்டேன்.133 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிக இலேசான வேதனை அளிக்கப்படு பவரிடம், “பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தால் நீ அவற்றை பிணைத் தொகையாகத் தர(வும் அதன்மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன்வருவாய் அல்லவா?” என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவர் ‘ஆம்’ என்று பதிலளிப்பார். அப்போது அல்லாஹ், “நீ (மனிதர்களின் தந்தை) ஆதமின் முதுகுத்தண்டில் (அணுவாக) இருந்தபோது இதைவிட இலேசான ஒன்றை-எனக்கு எதையும் இணை கற்பிக்கலாகாது என்பதை-த்தான் உன்னிடமிருந்து எதிர்பார்த்தேன். ஆனால் (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணைகற்பிப்பதைத் தவிர வேறெதற்கும் நீ ஒப்புக்கொள்ளவில்லையே!” என்று கூறுவான். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.134 அத்தியாயம் :
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “பரிந்துரையால் (நரகவாசிகளில் சிலர்) நரகத்திலிருந்து வெளியேறுவார்கள். அப்போது அவர்கள் ‘ஸஆரீர்’ போன்று இருப்பார்கள்” என்று கூறினார்கள்.135 அறிவிப்பாளர் ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் ‘ஸஆரீர்’ என்றால் என்ன? என்று அறிவிப்பாளர் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அன்னார் ‘வெள்ளரிப் பிஞ்சுகள்’ என்று பதிலளித்தார்கள். அன்னாருக்குப் பல் விழுந்துவிட்டிருந்தது. (இதனால் ‘ஷஆரீர்’ என்பதை ‘ஸஆரீர்’ என்று உச்சரித்தார்கள்.) மேலும், “பரிந்துரையால் (சிலர்) நரகத்திலிருந்து வெளியேறுவர்” என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன் என்று ஜாபிர் (ரலி) அவர்கள் உங்களிடம் கூறினார்களா? என அம்ர் பின் தீனார் அவர்களிடம் வினவினேன். அவர்கள் ‘ஆம்’ என்றார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சிலர் (நரக நெருப்பு தீண்டியதால்) தமது சருமத்தின் நிறம் மாறியபின் நரகத்திலிருந்து வெளியேறி, சொர்க்கத்துக்குள் நுழைவார்கள். அவர்களைச் சொர்க்க வாசிகள், ‘ஜஹன்னமிய்யூன்’ (நரக விடுதலை பெற்றோர்) எனப் பெயரிட்டு அழைப்பார்கள். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில் விசாரணை முடிந்த பின்) சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைந்து விட்டபின் அல்லாஹ், “எவரது உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை உள்ளதோ அவரை (நரகத்திலிருந்து) வெறியேற்றி விடுங்கள்” என்று கூறுவான். உடனே அவர்கள் கருகிய நிலையில் வெறியேறு வார்கள். அப்போது அவர்கள் கரிக்கட்டைகளாகக் காட்சியளிப்பார்கள். பின்னர் அவர்கள் ‘நஹ்ருல் ஹயாத்’ எனும் (ஜீவ) நதியில் போடப்படுவார்கள். உடனே அவர்கள் ‘சேற்று வெள்ளத்தில்’ அல்லது ‘வெள்ளத்தின் கறுப்புக் களிமண்ணில்’ விதை முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறிவிடுவார்கள். அந்த வித்து(விலிருந்து வரும் புற்பூண்டுகள்) மஞ்சள் நிறத்தில் (பார்ப்பதற்கு அழகாகவும், காற்றில்) அசைந்தாடியதாக(வும்) முளைப்பதை நீங்கள் கண்டதில்லையா? இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.136 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப் படுபவர் ஒரு மனிதராவார். அவருடைய உள்ளங்கால்களின் நடுவில் (நரக) நெருப்புக் கங்கு வைக்கப்படும். அதனால் அவரது மூளை கொதிக்கும். இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப் படுபவர் ஒரு மனிதராவார். அவருடைய உள்ளங்கால்களின் நடுவில் இரண்டு நெருப்புக் கங்குகள் வைக்கப்படும். (அடுப்பில் வைக்கப்பட்டுள்ள) செம்புப் பாத்திரம், (அல்லது) பன்னீர் பாத்திரம் கொதிப்பதைப் போன்று அவற்றால் அவரது மூளை கொதிக்கும். இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். (அப்போது நரகத்தைப் பார்த்து அஞ்சுவதைப் போன்று) தமது முகத்தைத் திருப்பிக்கொண்டு நரகத்திலிருந்து பாதுகாப்புக் கோரினார்கள். பிறகு (மீண்டும்) நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போதும் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டு, நரகத்திலிருந்து பாதுகாப்புக் கோரினார்கள். பின்னர் “பேரீச்சம்பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் நரகத்திó ருந்து தப்பித்துக்கொள்ளுங்கள். அதுவும் இல்லாதவர் இன்சொல்லைக் கொண்டேனும் (தப்பித்துக்கொள்ளுங்கள்)” என்று கூறினார்கள்.137 அத்தியாயம் :
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் அவர் களுடைய பெரிய தந்தை அபூதாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டது. அப்போது அவர்கள், “அவருக்கு என் பரிந்துரை மறுமை நாளில் பயனளிக்கக் கூடும்; (அதனால்) நரக நெருப்பு அவரது (முழு உடலையும் தீண்டாமல்) கணுக்கால்கள்வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்) அதனால் அவருடைய மூளையின் மூலப்பகுதி (தகித்துக்) கொதிக்கும்” என்று சொல்ல நான் கேட்டேன்.138 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் மக்களை ஒன்றுகூட்டுவான். அப்போது அவர்கள் “(அதி பயங்கரமான) இந்த இடத்திலிருந்து நம்மை விடுவிக்க நம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (யாரையாவது) நாம் கேட்டுக்கொண்டால் நன்றாயிருக்குமே!” என்று கூறியவாறு (ஆதி மனிதரும் ஆதித் தூதருமான) ஆதம் (அலை) அவர்களிடம் வருவார்கள். அவரிடம் “அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்தான். தன்(னால் படைக்கப்பட்ட) உயிரை உங்கள் உடலுக்குள் ஊதினான். மேலும், தன் வானவர்களுக்கு அவன் கட்டளையிட, அவர்கள் உங்களுக்குச் சிரம்பணிந்தனர். ஆகவே, (இந்தத் துன்ப நிலையிலிருந்து எங்களை விடுவிக்கும்படி) எங்களுக்காக நம் இறைவனிடத்தில் பரிந்துரை செய்யுங்கள்” என்று கூறுவார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை” என்று கூறியவாறு, (உலகில்) தாம் புரிந்தவற்றை அவர்கள் நினைவுகூருவார்கள். பிறகு “நீங்கள் (எனக்குப்பின்) முதல் தூதராக இறைவன் அனுப்பிவைத்த நபி நூஹ் அவர்களிடம் செல்லுங்கள்” என்று கூறுவார்கள். உடனே மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அன்னாரும் “(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை” என்று கூறி, (உலகில்) தாம் புரிந்த தவற்றை நினைவுகூர்ந்து, “அல்லாஹ் தன்னுடைய உற்ற நண்பராக்கிக்கொண்ட (நபி) இப்ராஹீமிடம் நீங்கள் செல்லுங்கள்” என்று கூறிவிடுவார்கள். உடனே மக்கள் அன்னாரிடம் செல்ல, அவர்களும் “(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை” என்று கூறியவாறு, தாம் புரிந்த தவற்றை நினைவு கூருவார்கள். பிறகு “அல்லாஹ் உரையாடிய (நபி) மூசாவிடம் செல்லுங்கள்” என்று கூறிவிடுவார்கள். உடனே மக்கள் அன்னாரிடம் செல்ல, அவர்களும் “(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை” என்று கூறியவாறு தாம் புரிந்த தவற்றை அவர்கள் நினைவுகூர்ந்தபடி “(நபி) ஈசாவிடம் செல்லுங்கள்!” என்று கூறிவிடுவார்கள். உடனே மக்கள் அன்னாரிடம் செல்வார்கள். அப்போது அவர்கள் “(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை. நீங்கள் இறுதி நபியான முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள். ஏனெனில், அவர் முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்” என்று கூறுவார்கள். உடனே மக்கள் என்னிடம் வருவார் கள். அப்போது நான் என் இறைவனிடத் தில் அனுமதி கேட்பேன். அவனை நான் கண்டதும் சிரவணக்கத்தில் விழுந்துவிடுவேன். அவன் நாடிய நேரம்வரை (நான் விரும்பியதைக் கோர) என்னை விட்டுவிடுவான். பிறகு (இறைவன் தரப்பிலிருந்து) “உங்கள் தலையை உயர்த்துங்கள். கேளுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும். சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்” என்று என்னிடம் கூறப்படும். உடனே நான் எனது தலையை உயர்த்தி இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன் (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் நரகத்திலிருந்து வெளியேற்றி சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் சென்று சிரவணக்கத்தில் விழுவேன். அதைப் போன்றே மூன்றாம் முறை அல்லது நான்காம் முறை செய்வேன். இறுதியாக குர்ஆன் தடுத்துவிட்டவர்(களான நிரந்தர நரகம் விதிக்கப்பட்ட இறைமறுப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் எஞ்சியிருக்கமாட்டார்கள். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள், ‘குர்ஆன் தடுத்துவிட்டவர்களைத் தவிர’ என்பதற்கு விளக்கமாக, ‘நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்களைத் தவிர’ என்று கூறுவார்கள்.139 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இந்த) முஹம்மதின் பரிந்துரையால் ஒரு கூட்டம் நரகத்திலிருந்து வெளி யேறி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் ‘ஜஹன்னமிய்யூன்’ (நரக விடுதலை பெற்றோர்) என்று பெயரிட்டு அழைக்கப் படுவார்கள்.140 இதை இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 6567அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹாரிஸா பின் சுராக்கா அல்அன்சாரி (ரலி) அவர்கள் பத்ர் போரில் யாரோ எறிந்த அம்பு தாக்கி இறந்துபோனார்கள். இந்நிலையில் அவருடைய தாயார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (என் மகன்) ஹாரிஸாவுக்கு என் இதயத்தில் உள்ள இடத்தைத் தாங்கள் அறிவீர்கள். அவர் (இப்போது) சொர்க்கத்தில் இருந்தால் அவருக்காக நான் அழப்போவதில்லை. அவ்வாறில்லையேல், நான் என்ன செய்வேன் என்பதைத் தாங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்” என்று கூறினார். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இழப்பால் துடிக்கிறாயா? அதுவென்ன, சொர்க்கம் ஒன்றுதான் உள்ளதா? சொர்க்கங்(களின் படித்தரங்)கள் நிறைய உள்ளன. உன் மகன் ‘ஃபிர்தவ்ஸ்’ எனும் உயர்ந்த சொர்க்கத்தில் உள்ளார்” என்று கூறினார்கள்.141 அத்தியாயம் :
மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் பாதையில் காலையில் சிறிது நேரம், அல்லது மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களையும்விடச் சிறந்தது ஆகும்.142 உங்களில் ஒருவருக்குச் சொர்க்கத்தில் ஒருவில் அளவுக்கு, அல்லது ஒரு பாதம் வைக்கும் அளவுக்கு இடம் கிடைப்பது இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங் களையும்விடச் சிறந்தது ஆகும்.143 சொர்க்கத்து மங்கையரில் ஒருவர் பூமியில் தோன்றினால், வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள பகுதிகளெல் லாம் ஒளிரும். மேலும், அப்பகுதிகள் அனைத்திலும் நறுமணம் கமழும். அந்த மங்கையின் முகத்திரை (மட்டுமே) இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங் களையும்விட மேலானதாகும். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (சொர்க்கவாசிகளில்) எவரும், (உலக வாழ்வில்) தாம் பாவம் புரிந்திருந்தால் நரகத்தில் தமது இருப்பிடம் எதுவாக இருந்திருக்கும் என்று காட்டப்படாமல் சொர்க்கத்தில் நுழையமாட்டார். அவர் அதிகமாக (மகிழ்ச்சியடைந்து இறைவனுக்கு) நன்றி செலுத்துவதற்காகவே (இவ்வாறு காட்டப்படும்). (நரகவாசிகளில்) எவரும், (உலக வாழ்வில்) தாம் நன்மை புரிந்திருந்தால் சொர்க்கத்தில் தமது இருப்பிடம் எதுவாக இருந்திருக்கும் என்று காட்டப்படாமல் நரகத்தில் நுழையமாட்டார். இது அவருக்கு (பெரும்) துயரமாக அமைய வேண்டும் என்பதற்காவே (காட்டப்படுகிறது). இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் “அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் மக்களிலேயே தங்களின் பரிந்துரை மூலம் நற்பேறு பெறுகின்றவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள். “அபூஹுரைராவே! என்னைப் பற்றிய செய்திகள்மீது உமக்கிருக்கும் பேராவல் எனக்குத் தெரியும். ஆதலால், இந்தச் செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் வேறு யாரும் நிச்சயமாகக் கேட்கமாட்டார்கள் என்று நான் எண்ணியிருந்தேன். மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரை மூலம் நற்பேறு பெறுகின்றவர் யாரெனில், உளப்பூர்வமாக தூய்மையான எண்ணத்துடன் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொன்னாரே அவர்தான்” என்று கூறினார்கள்.144 அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்: நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும், சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகின்ற ஒரு மனிதரே அவர். அவரிடம் அல்லாஹ், “நீ போய் சொர்க்கத்தில் நுழைந்துகொள்” என்பான். அவர் சொர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும். உடனே அவர் திரும்பிவந்து “என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன்” என்று கூறுவார். அதற்கு அல்லாஹ் “நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்துகொள்” என்று (மீண்டும்) சொல்வான். அவர் சொர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும். ஆகவே, அவர் திரும்பிவந்து “என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன்” என்று கூறுவார். அதற்கு அவன், “நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்துகொள். ஏனெனில், ‘உலகம் மற்றும் அதைப் போன்ற பத்து மடங்கு’ அல்லது ‘உலகத்தைப் போன்று பத்து மடங்கு’ (இடம் சொர்க்கத்தில்)உனக்கு உண்டு” என்று சொல்வான். அதற்கு அவர் ‘அரசனாகிய நீ என்னை ‘பரிகாசம் செய்கிறாயா?’ அல்லது ‘என்னைக் கண்டு நகைக்கின்றாயா?’ என்று கேட்பார். (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடை வாய்ப்பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன். அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்: இவரே சொர்க்கவாசிகளில் குறைந்த தகுதி உடையவர் ஆவார் என்று கூறப்பட்டுவந்தது. அத்தியாயம் :
அப்பாஸ் (பின் அப்தில் முத்தலிப் - ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம், “அபூதாலிப் அவர்களுக்கு ஏதேனும் நீங்கள் (பிரதி) உபகாரம் செய்தீர்களா?” என்று கேட்டேன்.145 அத்தியாயம் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்களில் சிலர் “அல்லாஹ்வின் தூதரே! மறுமையில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்டார்கள். அப்போது நபி அவர்கள், “மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?” என்று கேட்டார்கள். மக்கள் “இல்லை; அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “பௌர்ணமி இரவில் மேகம் மறைக்காத முழுநிலவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?” என்று கேட்டார்கள். மக்கள் “(சிரமம்) இல்லை; அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வாறுதான் மறுமை நாளில் உங்கள் இறைவனை நீங்கள் காண்பீர்கள். அல்லாஹ் மனிதர்களை (மறுமை மன்றத்தில்) ஒன்றுகூட்டி, “(உலகத்தில்) யார் எதை வழிபட்டுக் கொண்டிருந்தார்களோ அதைப் பின்தொடர்ந்து செல்லட்டும்” என்பான். ஆகவே, சூரியனை வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள் (சூரியனைப்) பின்தொடர்ந்து செல்வார்கள். சந்திரனை வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள் (அதைப்) பின்தொடர்ந்து செல்வார்கள். ஷைத்தான்களை வழிபட்டுக் கொண்டிருந்தவர்கள் (அவற்றைப்) பின்பற்றிச் செல்வார்கள். இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களி டையே நயவஞ்சகர்களும் இருப்பார்கள். அப்போது இறைவன், அவர்கள் அறியாத தோற்றத்தில் அவர்களிடம் வந்து “நான்தான் உங்கள் இறைவன்” என்பான். உடனே அவர்கள் “உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக் கோருகிறோம். எங்கள் இறைவன் எங்களிடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம். எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம்” என்பர். அப்போது இறைவன் அவர்கள் அறிந்த தோற்றத்தில் அவர்களிடம் வந்து, “நானே உங்கள் இறைவன்” என்பான். அதற்கு அவர்கள் “நீயே எங்கள் இறைவன்” என்று கூறிவிட்டு அவனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அங்கு நரகத்தின் மீது பாலம் அமைக்கப்படும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நானே (அந்தப் பாலத்தைக்) கடப்பவர்களில் முதல் ஆளாக இருப்பேன். அப்போதைய நிலையில் இறைத்தூதர்கள் அனைவரின் பிரார்த்தனையும் ‘அல்லாஹ்வே! காப்பாற்று காப்பாற்று’ என்பதாகவே இருக்கும். அந்தப் பாலத்தில் கொக்கிகள் மாட்டப்பட்டிருக்கும். அவை கருவேல மரத்தின் முட்களைப் போன்றிருக்கும். “கருவேலமர முள்ளை நீங்கள் பார்த்ததில்லையா?” என்று கேட்டார்கள். மக்கள் “ஆம் (பார்த்திருக்கிறோம்) அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். (தொடர்ந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அந்தக் கொக்கிகள் கருவேல மரத்தின் முள்ளைப் போன்று இருக்கும். ஆயினும், அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அப்போது அந்தக் கொக்கிகள் மக்களை அவர்களின் செயல்களுக்கேற்ப கவ்விப் பிடிக்கும். அவர்களில் (இறைமறுப்பு உள்ளிட்ட) தம் (தீய) செயல்களால் அழிந்துபோனவரும் இருப்பார். (இறைநம்பிக்கை இருந்தாலும் பாவம் செய்த காரணத்தால்) மூர்ச்சையாகிப் பிறகு பிழைத்துக்கொள்பவரும் இருப்பார். இறுதியாக இறைவன், தன் அடியார் களிடையே தீர்ப்பு வழங்கி முடித்தபின், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று உறுதிகூறியவர்களில் தான் நாடிய சிலரை நரகத்திலிருந்து வெளியேற்ற விரும்புவான். அப்போது அவர்களை வெளியேற்று மாறு வானவர்களுக்கு ஆணையிடுவான். வானவர்கள் அவர்களை சஜ்தாவின் (சிரவணக்கத்தின்) அடையாளங்களை வைத்து இனங்கண்டுகொள்வார்கள். (ஏனெனில்,) அல்லாஹ் நரகத்திற்கு, மனிதனை அவனிலுள்ள சஜ்தாவின் அடையாளத்தில் தீண்டக் கூடாதெனத் தடை விதித்துள்ளான். ஆகவே, வானவர்கள் அவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுவார்கள். அப்போது அவர்கள் (நரக நெருப்பில்) கரிக்கப்பட்டிருப்பார்கள். எனவே, அவர்கள்மீது ‘மாஉல் ஹயாத்’ எனப்படும் (ஜீவ) நீர் ஊற்றப்படும். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப்பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறிவிடுவார்கள். அவர்களில் தமது முகத்தால் நரகத்தை முன்னோக்கிக்கொண்டிருக்கும் ஒரு மனிதர் மட்டும் எஞ்சுவார். அவர், “என் இறைவா! நரகத்தின் (வெப்பக்) காற்றால் எனக்கு மூச்சடைக்கிறது. அதன் ஜுவாலை என்னைக் கரித்துவிட்டது. ஆகவே, நரகத்தைவிட்டு என் முகத்தை (வேறு பக்கம்) திருப்பிவிடுவாயாக!” என்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக்கொண்டேயிருப்பார். அப்போது அல்லாஹ் “(உன் கோரிக்கையை ஏற்று) இதை நான் உனக்கு வழங்கிவிட்டால் வேறொரு கோரிக்கையையும் நீ முன்வைக்கலாம் அல்லவா?” என்று கேட்பான். அதற்கு அவர் “இல்லை; உன் கண்ணியத்தின் மீதாணையாக! வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்” என்பார். ஆகவே, இறைவன் அவரது முகத்தை நரகத்தைவிட்டு (வேறு பக்கம்) திருப்பிவிடுவான். அதற்குப் பிறகு “என் இறைவா! சொர்க்கத்தின் வாசல் அருகே என்னைக் கொண்டுசெல்வாயாக!” என்பார் அவர். அதற்கு இறைவன், “வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று நீ கூறவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன!” என்பான். ஆனால், அவர் தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருப்பார். அப்போது இறைவன், “நீ கேட்டதை உனக்கு நான் கொடுத்தால் இன்னொன்றையும் நீ என்னிடம் கேட்கக்கூடும்” என்பான். அதற்கு அவர், “இல்லை; உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதுவல் லாத வேறெதையும் உன்னிடம் கேட்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டு, வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் அவர் இறைவனிடம் வழங்குவார். இதையடுத்து இறைவன் அவரை சொர்க்கத்தின் வாசல் அருகே கொண்டு செல்வான். சொர்க்கத்திற்குள் இருப்பவற்றைக் காணும்போது அல்லாஹ் நாடிய நேரம்வரை மௌனமாக இருப்பார். பிறகு “இறைவா! என்னைச் சொர்க்கத்திற்கு அனுப்புவாயாக!” என்று கூறுவார். பின்னர் இறைவன், “வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று நீ சொல்லவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உனது ஏமாற்று வேலைதான் என்ன!” என்று கேட்பான். அதற்கு “என் இறைவா! என்னை உன் படைப்புகளிலேயே நற்கதியற்றவனாக ஆக்கிவிடாதே!” என்று இறைவன் சிரிக்கும்வரை பிரார்த்தித்துக்கொண்டே இருப்பார். அவரைக் கண்டு இறைவன் சிரித்துவிடும்போது சொர்க்கத்தில் நுழைய அவருக்கு இறைவன் அனுமதி வழங்கிவிடுவான். சொர்க்கத்திற்குள் அவர் நுழைந்தபின், “நீ (விரும்பிய) இன்னதை ஆசைப்படலாம்” என்று சொல்லப்படும். அவ்வாறே அவரும் ஆசைப்படுவார். பிறகு (மீண்டும்) “நீ (விரும்பிய) இன்னதை ஆசைப்படலாம்” என்று சொல்லப்படும். அவ்வாறே அவரும் ஆசைகள் முழுதும் முற்றுப்பெறும்வரை ஆசைப்பட்டு (தம் விருப்பங்களைத் தெரிவித்து)க்கொண்டே இருப்பார். அப்போது இறைவன், “இது உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்” என்பான். அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இந்த மனிதர்தான் சொர்க்கத்தில் நுழையும் இறுதி மனிதராவார்.147 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அதாஉ பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மேற்கண்ட ஹதீஸை) அபூஹுரைரா (ரலி) அவர்கள் (அறிவித்தபோது, அவர்கள்) உடன் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். அன்னார் இந்த ஹதீஸ் தொடர்பாக எந்த மாற்றத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால், “இது உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்” என்று கூறியபோதுதான், அபூசயீத் (ரலி) அவர்கள் “இதுவும் இதைப் போன்று பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்” என்றார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் “இதைப் போன்று இன்னொரு மடங்கு” என்றே நான் மனனமிட்டுள்ளேன் என்று கூறினார்கள். அத்தியாயம் :
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: “நான் உங்களுக்கு முன்பே (‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு முன்பே (‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னுடன் இருப்பதாகக் காட்டப்படுவார்கள். பின்னர் என்னிடமிருந்து அவர்கள் விலக்கிவைக்கப்படுவார்கள். உடனே நான் “இறைவா! (இவர்கள்) என் தோழர்களாயிற்றே!” என்பேன். அப்போது “இவர்கள் உங்களுக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது” எனக் கூறப்படும். இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களும் இந்த ஹதீஸை அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில் என்னுடைய ‘அல்கவ்ஸர்’ எனும்) தடாகம் உங்களுக்கு முன்னால் இருக்கும். (அதன் விசாலமானது, அன்றைய ஷாம் நாட்டின்) ‘ஜர்பா’ மற்றும் ‘அத்ருஹ்’ ஆகிய இடங்களுக்கிடையேயான தூரமாகும்.151 இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (108:1ஆவது வசனத்திலுள்ள) ‘அல்கவ்ஸர்’ தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகையில், “அது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அனைத்து நன்மைகளையும் குறிக்கும்” என்று தெரிவித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (அவற்றில் ஒன்றின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூபிஷ்ர் ஜஅஃபர் பின் அபீவஹ்ஷிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், “சிலர் ‘அல்கவ்ஸர்’ என்பது சொர்க்கத்திலுள்ள ஒரு நதியாகும் என்று கூறுகின்றனரே!” என்று கேட்டேன். அதற்கு சயீத் (ரஹ்) அவர்கள், “நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளிய (அளவற்ற) நன்மைகளில் சொர்க்கத் திலுள்ள அந்த நதியும் அடங்கும்” என்று சொன்னார்கள்.152 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (‘அல்கவ்ஸர்’ எனும்) என் தடாகம் ஒருமாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலைவிட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியைவிட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகின்றார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள்.153 இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் தடாகத்தின் (பரப்பு) அளவு யமனிலுள்ள ‘ஸன்ஆ’ நகரத்திற்கும் (ஷாம் நாட்டை ஒட்டியிருந்த) ‘அய்லா’ நகரத்திற்கும் இடையேயான (தொலைதூரத்)தைப் போன்றதாகும். மேலும், அதில் விண்மீன்களின் எண்ணிக்கையைப் போன்று (கணக்கிலடங்கா) கோப்பைகள் (வைக்கப்பட்டு) இருக்கும். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தில் பயணம் செய்தேன். அப்போது அங்கு ஓர் ஆறு இருந்தது. அதன் இருமருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான், “(வானவர்) ஜிப்ரீலே! இது என்ன?” என்று கேட்டேன். அவர் “இதுதான் உங்கள் இறைவன் உங்களுக்கு (சிறப்பாக) வழங்கிய அல்கவ்ஸர்” என்றார். ‘அதன் மண்’ அல்லது ‘அதன் வாசனை’ நறுமணமிக்க கஸ்தூரியாகும். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.154 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், ‘வாசனை’யா (தீப்)? ‘மண்ணா’ (தீன்)? என்பதில் அறிவிப்பாளர் ஹுத்பா பின் காலித் (ரஹ்) அவர்கள் சந்தேகம் தெரிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமையில்) என் தோழர்களில் சிலர் (அல்கவ்ஸர்) தடாகத்தின் அருகில் என்னிடம் வருவார்கள். நான் அவர்களை அடையாளம் கண்டுகொள்ளும்போது என்னைவிட்டு அவர்கள் விலக்கிவைக்கப் படுவார்கள். அப்போது நான், “(இவர்கள்) என் தோழர்களாயிற்றே!” என்பேன். அதற்கு இறைவன், “உமக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்பதை நீர் அறியமாட்டீர்” என்பான். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு முன்பே ‘அல்கவ்ஸர்’ தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். யாருக்கு என்னிடம் வரமுடிகிறதோ அவர் (அந்தத் தடாகத்தின் நீரை) அருந்துவார். யார் (அதை) அருந்துகிறாரோ அவருக்கு இனி ஒருபோதும் தாகமே ஏற்படாது. (இந்நிலையில்) என்னிடம் சிலர் வருவார்கள். அவர்களை நான் அறிந்துகொள் வேன். என்னையும் அவர்கள் அறிந்துகொள்வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படும். இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
(அறிவிப்பாளர்) அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (நான் இந்த ஹதீஸை அறிவித்தபோது) நான் கூறுவதை செவியுற்றுக் கொண்டிருந்த நுஅமான் பின் அபீஅய்யாஷ் (ரஹ்) அவர்கள் “இவ்வாறுதான் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்று சொன்னேன். அதற்கு அவர்கள், அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் இதைவிட அதிகமாக அறிவிப்பதை உறுதியாக நான் கேட்டுள்ளேன்: “(இறைவா!) இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்” என்று நான் கூறுவேன். அதற்கு “உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியதை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று சொல்லப்படும். உடனே நான் “எனக்குப் பின்னால் (தமது மார்க்கத்தை) மாற்றிவிட்டவர்களை இறைவன் தன் கருணையிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக!” என்று (இரண்டு முறை) கூறுவேன். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறி னார்கள்: (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘சுஹ்கன்’ (அப்புறப்படுத்துவது) என்பதற்கு தொலைவு, தூரம் என்று பொருள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான், “இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்” என்பேன். அதற்கு இறைவன் “உமக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உமக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றுவிட்டார்கள்” என்று சொல்வான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் என் தோழர்களில் சிலர் என்னிடம் (‘அல்கவ்ஸர்’) தடாகத் திற்கு வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு விரட்டப்படுவார்கள். உடனே நான் “இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்” என்பேன். அதற்கு இறைவன் “உமக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உமக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல், வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றுவிட்டார்கள்” என்று சொல்வான். இதை நபித்தோழர்கள் சிலரிடமிருந்து சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். அறிவிப்பாளர் ஷுஐப் பின் அபீ ஹம்ஸா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அவர்கள் (அல்கவ்ஸர் தடாகத்திலிருந்து) ஒதுக்கப்படுவார்கள்” என்றும், அறிவிப்பாளர் உகைல் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ‘விரட்டப்படுவார்கள்’ என்றும் இடம் பெற்றுள்ளது. இதே ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மூன்று அறிவிப் பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உறங்கிக்கொண்டிருந்தேன். அப்போது (கனவில்) நான் (அல்கவ்ஸர் தடாகத்தின் அருகில்) நின்றுகொண்டிருக்கிறேன். அப்போது ஒரு குழுவினரை நான் அடையாளம் கண்டுகொள்கிறேன். எனக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு(வான)வர் தோன்றி (அந்தக் குழுவினரை நோக்கி) ‘வாருங்கள்’ என்று அழைக்கிறார். உடனே நான் (அவரிடம்) “எங்கே (இவர்களை அழைக்கிறீர்கள்)?” என்றேன். அவர் “அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்கு” என்றார். நான் “இவர்கள் என்ன செய்தார்கள்?” என்றேன். அவர் “உங்களுக்குப் பின்னால் இவர்கள் திரும்பிப் பார்க்காமல், வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றுவிட்டார்கள்” என்றார். பிறகு மற்றொரு குழுவினரையும் நான் அடையாளம் கண்டுகொள்கிறேன். எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு(வான)வர் தோன்றி, ‘வாருங்கள்’ என (அவர்களிடம்) கூறுகிறார். நான் “(இவர்களை) எங்கே (அழைக்கிறீர்கள்)?” என்றேன். அவர் “அல்லாஹ்வின் மீதாணையாக! நரகத்திற்குத்தான்” என்றார். நான் “இவர்கள் என்ன செய்தார்கள்?” என்று கேட்டேன். அவர், “இவர்கள் உங்களுக்குப் பின்னால் திரும்பிப் பார்க்காமல், வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்றுவிட்டார்கள்” என்று பதிலளித்தார். அவர்களில் காணாமல்போன ஒட்டகத்தைப் போன்று ஒரு சிலரைத் தவிர வேறெவரும் தப்பித்துக்கொள்வார்கள் என நான் கருதவில்லை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது இல்லத்திற்கும் எனது மிம்பருக்கும் (சொற்பொழிவு மேடை) இடைப்பட்ட பகுதியானது, சொர்க்கத்துப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். எனது மிம்பர் (சொற்பொழிவு மேடை) எனது (அல்கவ்ஸர்) தடாகத்தின் மீது அமைந்துள்ளது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.155 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களுக்கு முன்பே (‘அல் கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன்.156 இதை ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து இறந்தவர்களுக்காகத் தொழுவிப்பதைப் போன்று உஹுத் போர் உயிர்த் தியாகிகளுக்காகத் தொழுதார்கள். பிறகு சொற்பொழிவு மேடைக்கு (மிம்பர்) வந்து, “உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்) காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (‘அல்கவ்ஸர்’ எனும்) எனது தடாகத்தைக் காண்கின்றேன். மேலும், எனக்கு ‘பூமியின் கருவூலத் திறவுகோல்கள்’ அல்லது ‘பூமியின் திறவுகோல்கள்’ கொடுக்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குப் பின்னால் நீங்கள் (இறைவனுக்கு) இணைவைப்பவர்களாக ஆகிவிடுவீர் களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகச் செல்வங்களுக்காக நீங்கள் ஒருவரோடொருவர் போட்டி யிட்டு (மோதி)க்கொள்வீர்களோ என்று தான் அஞ்சுகின்றேன்” என்று சொன் னார்கள்.157 அத்தியாயம் :
ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் (‘அல்கவ்ஸர்’) எனும் தடாகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது “(அதன் பரப்பளவானது,) மதீனாவுக்கும் (யமனிலுள்ள) ‘ஸன்ஆ’ நகரத்துக்கும் இடையேயான தூரமாகும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
ஹாரிஸா (ரலி) அவர்கள் (மேற்கண்ட ஹதீஸில் கூடுதலாகக்) கூறியதாவது: “ (‘அல்கவ்ஸர்’ எனும்) எனது தடாக(த்தின் விசால)மானது, (யமனிலுள்ள) ‘ஸன்ஆ’விற்கும் மதீனாவிற்கும் இடையேயான தூரமாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன் என்று சொன்னேன். அப்போது முஸ்தவ்ரித் பின் ஷத்தாத் (ரலி) அவர்கள் என்னிடம், “அதன் கோப்பைகள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறியதை நீங்கள் கேட்கவில்லையா?” என்று வினவினார்கள். நான் ‘இல்லை’ என்றேன். அதற்கு அவர்கள், “(அல்கவ்ஸர்) தடாகத்தில் வைக்கப்பட்டுள்ள கோப்பைகள் நட்சத்திரங்களைப் போன்று காணப்படும்” என (நபி-ஸல்) அவர்கள் தெரிவித்ததாகச் சொன்னார்கள். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (‘அல்கவ்ஸர்’) தடாகத்தின் அருகில் இருந்தவாறு உங்களில் யார் என்னிடம் வருகிறார்கள் என்பதை உற்றுப்பார்த்துக்கொண்டிருப்பேன். அப்போது என்னை நெருங்க விடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள். உடனே நான், “இறைவா! (இவர்கள்) என்னைச் சேர்ந்தவர்கள்; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்” என்பேன். அதற்கு “உங்களுக்குப் பின்னால் இவர்கள் செய்ததை நீங்கள் அறிவீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்கள் தங்கள் குதிகால்கள்மீது (தம் பழைய மதத்திற்கே) திரும்பச் சென்றுகொண்டேயிருந்தார்கள்” என்று கூறப்படும். இதை அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள், “அல்லாஹ்வே! நாங்கள் எங்கள் குதிகால்கள்மீது திரும்பிச் செல்வதிலிருந்தும், நாங்கள் எங்கள் மார்க்கம் தொடர்பாகக் குழப்பத்தில் ஆழ்த்தப்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறோம்” என்று பிரார்த்திப்பார்கள். “நீங்கள் உங்கள் குதிகால்கள்மீது திரும்பிச் சென்றுகொண்டிருந்தீர்கள்” (23:66) எனும் வசனத்திற்கு, ‘வந்த வழியே திரும்பிச் செல்லல்’ என்பது பொருளாகும். அத்தியாயம் :