அனைத்து இஸ்லாம் நூலகம்

70 - உணவு

1

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பசித்தவருக்கு உணவளியுங்கள். நோயாளியை நலம் விசாரியுங்கள். (போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள். இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3 (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ‘அல்ஆனீ’ எனும் சொல்லுக்கு ‘கைதி’ என்பது பொருள். அத்தியாயம் :

2

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹம்மத் (ஸல்) அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் (தொடர்ந்து) மூன்று நாட்கள் வயிறு நிரம்ப உணவு உண்டதில்லை. அத்தியாயம் :

3

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு (பசியால்) கடும் சோர்வு ஏற்பட்டது. ஆகவே, நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அப்போது நான் அவர்களிடம், அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஏதேனும் ஒரு வசனத்தை ஓதும்படி கேட்டேன். உடனே அவர்கள் தம் வீட்டினுள் நுழைந்து குர்ஆன் வசனத்தை எனக்கு ஓதிக்காட்டினார்கள்.4 (அங்கிருந்து வெளியேறி) சற்று தூரம்தான் நான் நடந்திருப்பேன். அதற்குள் சோர்வாலும் பசியாலும் நான் முகம் குப்புற விழுந்துவிட்டேன். (மூர்ச்சை தெளிந்து பார்த்தபோது) என் தலைமாட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் (என்னை நோக்கி), ‘அபூஹுரைரா!’ என்று அழைத்தார்கள். நான், ‘‘இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன், அல்லாஹ்வின் தூதரே; கட்டளையிடுங்கள்” என்று பதிலளித்தேன். அவர்கள் என் கரத்தைப் பிடித்து என்னைத் தூக்கி நிறுத்தினார்கள். எனக்கேற்பட்டிருந்த நிலையைப் புரிந்துகொண்டார்கள். என் னைத் தம்முடன் அழைத்துக்கொண்டு தமது இல்லம் சென்றார்கள். எனக்கு ஒரு பெரிய பாத்திரத்தில் பால் வழங்க உத்தரவிட்டார்கள். நான் அதிலிருந்து (பால்) அருந்தினேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் ‘‘இன்னும் அருந்துங்கள், அபூஹிர்!” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் மறுபடியும் அருந்தினேன். பிறகு ‘‘மீண்டும் (அருந்துங்கள்)” என்றார்கள். நான் வயிறு நிரம்பும்வரை மீண்டும் அருந்தினேன். ஆகவே, வயிறு (உப்பி) பாத்திரத்தைப் போன்றாகிவிட்டது. பிறகு, நான் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து, அவர்களிடம் எனக்கு நடந்த நிகழ்ச்சியைத் தெரிவித்தேன். ‘‘(என் பசியைப் போக்கும் பொறுப்பை) உங்களைவிட அதற்கு மிகவும் தகுதியுடையவரிடம் அல்லாஹ் ஒப்படைத்துவிட்டான். உமரே! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட நான் இறைவசனத்தை நன்கு ஓதத் தெரிந்தவனாக இருந்துகொண்டே அதை எனக்கு ஓதிக்காட்டும்படி உங்களிடம் நான் கேட்டேன்” என்று சொன்னேன். உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (என் வீட்டிற்கு) அழைத்துச் சென்று (உங்களுக்கு உணவளித்து) இருந்தால், அதுவே எனக்கு (விலை உயர்ந்த) சிவப்பு ஒட்டகங்கள் கிடைப்பதைவிட விருப்பமானதாய் இருந்திருக்கும்” என்று சொன்னார்கள்.5 அத்தியாயம் :

4

நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகிய) உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒருமுறை) என் கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்துகொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘சிறுவரே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு!” என்று சொன்னார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது. அத்தியாயம் :

5

நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் உம்மு சலமா (ரலி) (அவர்களுக்கு) அவர்களின் (முதல் கணவர் மூலம் பிறந்த) புதல்வரான உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உணவு உண்டேன். தட்டின் ஓரங்களிருந்து எடுத்து உண்ணத் தொடங்கினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

6

வஹ்ப் பின் கைசான் அபீநுஐம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உணவொன்று கொண்டுவரப் பட்டது. அவர்களுடன் அவர்களுடைய வளர்ப்பு மகன் உமர் பின் அபீசலமா (ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்து உண்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

7

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தையற்காரர் ஒருவர் தாம் தயாரித்த உணவுக்காக (விருந்துக்கு) அழைத்தார். நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சென்றேன். அப்போது அவர்கள் உணவுத் தட்டின் நாலா பாகங்களிலும் சுரைக்காயைத் தேடுவதை நான் கண்டேன். அன்றிலிருந்து நான் சுரைக்காயை விரும்பி(ச் சாப்பிட்டு)க்கொண்டே இருக்கிறேன்.7 அத்தியாயம் :

8

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (அங்கத்தூய்மை மற்றும் குளியல் மூலம்) தம்மைத் தூய்மைப்படுத்திக்கொள்ளும்போதும், அவர்கள் காலணி அணியும்போதும், தலைவாரிக்கொள்ளும்போதும் தம்மால் இயன்றவரை வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பிவந்தார்கள். அறிவிப்பாளர் ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த ஹதீஸை) இதற்குமுன் (இராக்கில் உள்ள) ‘வாசித்’ நகரில் வைத்து அஷ்அஸ் (ரஹ்) அவர்கள் அறிவித்தபோது, ‘‘நபி (ஸல்) அவர்கள் தம் செயல்கள் அனைத் திலும் (வலப் பக்கத்தை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்)” என்று (கூடுதலாகக்) கூறியிருந்தார்கள்.9 அத்தியாயம் :

9

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதல்ஹா (ஸைத் அல்அன்சாரீ-ரலி) அவர்கள் தம் துணைவியார் உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம், ‘‘நான் நபி (ஸல்) அவர்களுடைய குரலைப் பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான் (அவர்களுக்கு இருக்கும்) பசியை அறிந்துகொண்டேன். உன்னிடம் (உணவு) ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். ஆகவே, உம்மு சுலைம் (ரலி) அவர்கள் தொலி நீக்கப்படாத கோதுமை ரொட்டித் துண்டுகள் சிலவற்றை எடுத்து வந்தார்கள். பிறகு உம்மு சுலைம் அவர்கள் தமது முகத்திரை ஒன்றை எடுத்து அதன் ஒரு பகுதியால் ரொட்டியைச் சுருட்டி எனது கை (அக்குளு)க்குக் கீழே மறைத்து வைத்துவிட்டு, மற்றொரு பகுதியை எனக்கு மேல்துண்டாக ஆக்கினார்கள். பிறகு என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் அதைக் கொண்டுசென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பள்ளிவாசலில் கண்டேன். அவர்களுடன் மக்களும் இருந்தனர். நான் அவர்களுக்கு முன்னால் (போய்) நின்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உன்னை அபூதல்ஹா அனுப்பினாரா?” என்று கேட்டார்கள். நான், ‘‘ஆம்” என்று சொன்னேன். ‘‘உணவுடனா அனுப்பியுள்ளார்?” என்று அவர்கள் கேட்க, நான் ‘ஆம்’ என்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர் களிடம், ‘‘எழுந்திருங்கள்” என்று சொல்லிவிட்டு நடக்கலானார்கள். நான் அவர்களுக்கு முன்னால் நடந்தேன். இறுதியில் அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் வந்(து விவரத்தைத் தெரிவித்)தேன். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் (என் தாயாரிடம்) ‘‘உம்மு சுலைமே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுடன் வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு உணவளிக்க நம்மிடம் உணவு இல்லையே!” என்று சொன்னார்கள். (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறினார்கள். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தாமே நபி (ஸல்) அவர்களை முன்சென்று வரவேற்பதற்காகப்) போய் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அபூதல்ஹா அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் வந்து வீட்டுக்குள் நுழைந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உம்மு சுலைமே! உன்னிடமிருப்பதைக் கொண்டுவா!” என்று சொன்னார்கள். உடனே உம்மு சுலைம் அவர்கள் அந்த ரொட்டியைக் கொண்டுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைத் துண்டுதுண்டாகப் பிய்க்கும்படி பணித்தார்கள். அவ்வாறே அது பிய்க்கப்பட்டது. பிறகு உம்மு சுலைம் (ரலி) அவர்கள் தோல் பையிலிருந்து வெண்ணெய் எடுத்துப் பிழிந்து அதை உருக்கினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவன் நாடிய (பிஸ்மில்லாஹ் மற்றும் இதர பிரார்த்தனை வரிகள் சில)வற்றைச் சொன்னார்கள். பிறகு ‘‘பத்துப் பேருக்கு (உள்ளே வர) அனுமதியளியுங்கள்” என்று (அபூதல்ஹாவிடம்) சொன்னார்கள். அவ்வாறே அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதியளித்தார்கள். அப்போது அவர்கள் (பத்துப் பேரும்) வயிறு நிரம்பும்வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘இன்னொரு பத்துப் பேருக்கு (உள்ளே) வர அனுமதி அளியுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதியளிக்க, அவர்களும் வயிறு நிரம்பும்வரை உண்டுவிட்டு வெளியேறினார்கள். பிறகு ‘‘மேலும் பத்துப் பேருக்கு அனுமதியளியுங்கள்” என்று கூற, அபூதல்ஹாவும் அனுமதியளித்தார்கள். அவர்களும் வயிறு நிரம்பச் சாப்பிட்டு விட்டு வெளியேறினார்கள். பிறகு பத்துப் பேருக்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். மக்கள் அனைவரும் (இவ்வாறே) வயிறு நிரம்பும்வரை உண்டார்கள். (அப்படி உண்ட) அந்த மக்கள் எண்பது பேர் ஆவர்.11 அத்தியாயம் :

10

அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நூற்று முப்பது பேர் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்களில் யாரிடமாவது உணவேதும் இருக்கின்றதா?” என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதரிடம் ‘ஒரு ஸாஉ’ அல்லது ‘அது போன்ற அளவு’ உணவு (மாவு)தான் இருந்தது. அது தண்ணீர் கலந்து குழைக்கப்பட்டது. (சற்று நேரத்திற்குப்)பின் மிக உயரமான பரட்டைத் தலை கொண்ட இணைவைக்கும் மனிதர் ஒருவர் ஆடுகளை ஓட்டியபடி வந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ‘‘(இவை) விற்பதற்கா? அல்லது அன்பளிப்பா?” என்று கேட்டார்கள். அவர் ‘‘இல்லை. விற்பதற்காகத்தான் (கொண்டுவந்துள்ளேன்)” என்று பதிலளித்தார். அவரிடமிருந்து ஓர் ஆட்டை நபி (ஸல்) அவர்கள் விலைக்கு வாங்கினார்கள். அது அறு(த்து சமை)க்கப்பட்டது. அதன் ஈரலைப் பொறிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் நூற்று முப்பது பேரில் ஒருவர் விடாமல் அனைவருக்கும் அதன் ஈரலில் ஒரு துண்டை நபி (ஸல்) அவர்கள் துண்டித்துத் தந்தார்கள். அங்கிருந்தவருக்கு அவரிடமே (நேரடியாக) அதைக் கொடுத்து விட்டார்கள். அங்கில்லாதவருக்காக எடுத்து(ப் பாதுகாத்து) வைத்தார்கள். பிறகு இரு (அகன்ற) தட்டுகளில் அந்த ஆட்டு இறைச்சியை வைத்தார்கள். நாங்கள் அனைவரும் வயிறு நிரம்ப உண்டோம். அப்படியிருந்தும் இரு தட்டுகளிலும் மீதியிருந்தது. எனவே, நான் அதை ஒட்டகத்தின் மீது ஏற்றிச் சென்றேன்.12 அத்தியாயம் :

11

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: இரு கறுப்பு நிறப் பொருள்களான பேரீச்சம்பழம் மற்றும் தண்ணீரை அருந்தி நாங்கள் வயிறு நிரம்பி இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.13 அத்தியாயம் :

12

சுவைத் பின் நுஅமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபருக்குச் சென்றோம். நாங்கள் ‘ஸஹ்பா’ எனும் இடத்தில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உணவைக் கொண்டுவரும்படி கூறினார்கள். -இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: ஸஹ்பா என்பது கைபரிலிருந்து ஒரு மாலை நேரப் பயணத் தொலைவில் உள்ள இடமாகும்.- அப்போது மாவுதான் கொண்டுவரப் பட்டது. அதை நாங்கள் மென்று சாப்பிட்டோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டுவரும்படி பணித்தார்கள். (தண்ணீர் வந்தவுடன்) வாய் கொப்புளித் தார்கள். நாங்களும் கொப்புளித்தோம். எங்களுடன் மஃக்ரிப் தொழுகையைத் தொழுதார்கள். (புதிதாக) அங்கத் தூய்மை (உளூ) செய்யவில்லை. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், ‘‘இந்த ஹதீஸை நான் யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்களிடமிருந்து முதலாவதாகவும் இறுதியாகவும் கேட்டேன்” என்று கூறுகிறார்கள்.14 அத்தியாயம் :

13

கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அவர்களுடன் அவர்களுக்காக ரொட்டி தயாரிப்பவர் ஒருவரும் இருந்தார். அப்போது ‘‘நபி (ஸல்) அவர்கள் தாம் இறக்கும்வரை மிருதுவான ரொட்டியையோ, வெந்நீரால் முடி களையப்பட்டுத் தோலுடன் சமைக்கப்பட்ட (இளம்) ஆட்டையோ உண்டதில்லை” என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :

14

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (தொடுகறி வைக்கப் பயன்படும்) கிண்ணத்தில் வைத்து (உணவு) உண்டதை ஒருபோதும் நான் அறிந்ததில்லை. அவர்களுக்காக ஒருபோதும் மிருதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டதில்லை. மேலும், அவர்கள் உணவு மேசையில் (அமர்ந்து) ஒருபோதும் சாப்பிட்டதில்லை. இதன் அறிவிப்பாளரான கத்தாதா (ரஹ்) அவர்களிடம், ‘‘அப்படியென்றால், அவர்கள் எதில் அமர்ந்து உண்டுவந்தார் கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘உணவு விரிப்பில்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :

15

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கி, (கைபருக்கும் மதீனாவுக்கும் இடையே மூன்று நாட்கள்) தங்கினார்கள். அப்போது நான் அவர்களின் மண விருந்துக்காக முஸ்லிம்களை அழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் தோல்விரிப்புகளைக் கொண்டுவரும்படி பணித்தார்கள். அவ்வாறே அவை (கொண்டுவந்து) விரிக்கப்பட்டன. பிறகு, அவற்றில் பேரீச்சம்பழங்கள், பாலாடைக் கட்டி, நெய் ஆகியவை வைக்கப்பட்டன.15 அம்ர் பின் அபீஅம்ர் (ரஹ்) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் மற்றோர் அறிவிப்பில் அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஸஃபிய்யா (ரலி) அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். பிறகு (மணவிருந்திற்காக) ‘ஹைஸ்’ எனும் ஒரு வகைப் பண்டத்தைத் தயாரித்து தோல் விரிப்பில் வைத்தார்கள்.16 அத்தியாயம் :

16

வஹ்ப் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஷாம்வாசிகள் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களைக் குறை கூறிக்கொண்டிருந்தார்கள்.17 ‘இரண்டு கச்சுடையாளின் மகனே!’ என்று (அவரை) அழைப்பார்கள். அப்போது (அப்துல்லாஹ் வின் தாயார்) அஸ்மா (ரலி) அவர்கள், ‘‘என்னருமை மகனே! அவர்கள் உன்னை இரண்டு கச்சுகளைச் சொல்லிக் குறை சொல்கிறார்கள். ‘இரண்டு கச்சுகள்’ என்பது என்ன என்று உனக்குத் தெரியுமா? அது என் கச்சுதான். அதை நான் இரு பாதிகளாகக் கிழித்து அவற்றில் ஒன்றால் (ஹிஜ்ரத் பயணத்தின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோல் பை(யின் வா)யைக் கட்டினேன். மற்றொன்றை அவர்களின் உணவு விரிப்புக்காக வைத்தேன்” என்று கூறினார்கள்.18 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் வஹ்ப் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (இதன் பின்) ஷாம்வாசிகள் இரண்டு கச்சுகளைக் குறிப்பிட்டு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களைக் குறை கூறும்போது அவர்கள், ‘‘ஆம்! (உண்மைதான்.) இறைவன்மீதாணையாக! இது ஒரு கூப்பாடு. இதில் உன்மீது எந்தக் குறையுமில்லை” என்று (ஒரு கவிதை வரியை மேற்கோள் காட்டி தமக்குத்தாமே) கூறுவார்கள். அத்தியாயம் :

17

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தாயாரின் சகோதரியான உம்மு ஹுஃபைத் பின்த் அல்ஹாரிஸ் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நெய்யையும் பாலாடைக் கட்டியையும் உடும்புகளையும் அன்பளிப்பாக வழங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த உடும்புகளை எடுத்து வரச்சொன்னார்கள். அவை (சமைக்கப்பட்டு) அவர்களுடைய விரிப்பின் மீது உண்ணப்பட்டன. நபி (ஸல்) அவர்கள் அவற்றை அருவருப்பது போல் தோன்றியது. அவற்றை உண்ணாமல் விட்டுவிட்டார்கள். அவை தடை செய்யப்பட்டவையாக இருந்திருந்தால் நபி (ஸல்) அவர்களின் உணவு விரிப்பில் அவை உண்ணப்பட்டிருக்கமாட்டா. அவற்றை உண்ணும்படி அவர்கள் கட்டளையிட்டிருக்கவுமாட்டார்கள்.19 அத்தியாயம் :

18

சுவைத் பின் நுஅமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ‘ஸஹ்பா’ எனுமிடத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அது கைபரிலிருந்து ஒரு மாலை நேரப் பயணத் தொலைவிலுள்ள இடமாகும். அப்போது தொழுகை நேரம் வந்தது. உடனே நபி (ஸல்) அவர்கள் உணவு கொண்டு வரச்சொன்னார்கள். மாவைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. அதை அவர்கள் மென்று சாப்பிட்டார்கள். நாங்களும் அவர்களுடன் மென்று சாப்பிட்டோம். பிறகு அவர்கள் தண்ணீரைக் கொண்டுவரச்சொல்லி வாய் கொப்புளித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தொழுதிட நாங்களும் தொழுதோம். ஆனால், நபி (ஸல்) அவர்கள் (புதிதாக) அங்கத் தூய்மை (உளூ) செய்ய வில்லை.20 அத்தியாயம் :

19

‘அல்லாஹ்வின் வாள்’ என்றழைக் கப்படும் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (அன்னை) மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அவர்கள் எனக்கும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் சிறிய தாயார் ஆவார்கள். (அன்னை) மைமூனாவிடம் பொரிக்கப்பட்ட உடும்பு ஒன்றைக் கண்டேன். அதை அவர்களுடைய சகோதரி ஹுஃபைதா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் நஜ்திலிருந்து கொண்டுவந்திருந்தார்கள். (அன்னை) மைமூனா (ரலி) அவர்கள் அந்த உடும்பு இறைச்சியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்முன் வைத்தார்கள். அல்லாஹ்வின் தூதரோ, எந்த உணவாயி னும் அதன் பெயர் தமக்குக் கூறப்பட்டு, அதைப் பற்றிய விவரம் சொல்லப்படாத வரை அதன் பக்கம் தமது கையை நீட்டுவது அரிதாகும். (இந்நிலையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையை அந்த உடும்பின் பக்கம் நீட்ட அங்கிருந்த பெண்களில் ஒருவர், ‘‘நீங்கள் பரிமாறியிருப்பது என்னவென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக் குத் தெரிவியுங்கள். அது உடும்பு, அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடும்பைவிட்டுத் தமது கையை எடுத்துக்கொண்டார்கள். அப்போது நான் ‘‘உடும்பு தடை செய்யப்பட்டதா? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘இல்லை; ஆயினும், அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. ஆகவே, என் மனம் அதை விரும்பவில்லை” என்று சொன்னார்கள். உடனே நான் அதைத் துண்டித்துச் சாப்பிட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அத்தியாயம் :

20

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்.21 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

21

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் தம்முடன் சாப்பிட ஓர் ஏழையேனும் அழைத்து வரப்படாமல் உணவு உண்ணமாட்டார்கள். ஆகவே, (ஒருநாள்) அவர்களுடன் சாப்பிட ஒருவரை நான் அழைத்துச் சென்றேன். அம்மனிதர் நிறைய உண்டார். இப்னு உமர் (ரலி) அவர்கள் ‘‘நாஃபிஉ! இவரை (இனிமேல்) என்னிடம் அழைத்து வராதீர்கள். நபி (ஸல்) அவர்கள் ‘இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடு வார். இறைமறுப்பாளரோ ஏழு குடல்களில் சாப்பிடுவார்’ எனக் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

22

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார்; ‘இறைமறுப்பாளர்’ அல்லது ‘நயவஞ்சகர்’ ஏழு குடல்களில் சாப்பிடுவார். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்தா பின் சுலைமான் (ரஹ்) அவர்கள், ‘‘இதை எனக்கு அறிவித்த உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள், ‘இறைமறுப் பாளர்’, ‘நயவஞ்சகர்’ ஆகிய இரு சொற்களில் எதைச் சொன்னார் என்பது எனக்குத் தெரியாது (நினைவில்லை)” என்று கூறுகிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

23

அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மக்காவாசியான) அபூநஹீக் என்பவர் அதிகம் சாப்பிடக்கூடியவராக இருந்தார். அவரிடம் இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘இறைமறுப்பாளர் ஏழு குடல்களில் சாப்பிடுவார்’ என்று கூறியுள்ளார்கள்” எனச் சொன்னார்கள். அதற்கு அபூநஹீக் ‘‘நான் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளேன். (எனவே, இதில் விதிவிலக்கு உண்டு)” என்று சொன்னார். அத்தியாயம் :

24

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உண்மையான) முஸ்லிம் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளரோ ஏழு குடல்களில் சாப்பிடுவார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 5397அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அதிகமாகச் சாப்பிட்டு வந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்றார். (அதிலிருந்து) குறைவாக உண்பவராகி விட்டார். இவ்விஷயம் நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. அப்போது அவர்கள், ‘‘இறைநம்பிக்கை யாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளரோ ஏழு குடல்களில் சாப்பிடுவார்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

25

26

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் சாய்ந்தபடி சாப்பிடமாட்டேன். இதை அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

27

அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவர்கள் தம்முடனிருந்த ஒரு மனிதரிடம், ‘‘நான் சாய்ந்துகொண்டு சாப்பிடமாட்டேன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

28

காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் பொரிக்கப் பட்ட உடும்பு ஒன்று கொண்டுவரப்பட்டது. அதை உண்பதற்காக அவர்கள் தமது கையைக் கொண்டுபோனார்கள். அவர்களிடம், ‘‘இது உடும்பு” என்று சொல்லப்பட்டது. உடனே அவர்கள் தமது கையை இழுத்துக்கொண்டார்கள். நான், ‘‘இது தடை செய்யப்பட்டுள்ளதா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இல்லை. ஆனால், இது என் சமுதாயத்தாரின் பூமியில் இருப்பதில்லை. ஆகவே, என் மனம் இதை விரும்பவில்லை” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்துக்கொண்டிருக்க, நான் அதைச் சாப்பிட்டேன்.24 மற்றோர் அறிவிப்பில், (‘பொரிக்கப் பட்டது’ என்பதைக் குறிக்க ‘மஷ்விய்யு’ எனும் சொல்லுக்குப் பதிலாக) ‘மஹ்னூஃத்’ எனும் சொல் இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

29

பத்ர் போரில் கலந்துகொண்ட அன்சாரி நபித்தோழர்களில் ஒருவரான இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் என் சமூகத்தாருக்குத் தொழுகை நடத்துபவனாக இருக்கிறேன். நான் கண் பார்வையை இழந்துவருகிறேன். மழை வந்தால் எனக்கும் (என் சமூகத்தாரான) அவர்களுக்குமிடையே உள்ள பள்ளத்தாக்கில் வெள்ளம் வழிந்தோடும். அவர்களின் பள்ளிவாசலுக் குச் சென்று அவர்களுக்கு என்னால் தொழவைக்க இயலவில்லை. ஆகவே, அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் வந்து எனது வீட்டில் தொழுகை நடத்த வேண்டுமென்றும் (தாங்கள் நின்று தொழும்) அந்த இடத்தை நான் (என்) தொழுமிடமாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்றும் நான் விரும்பினேன்” என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) நான் (அவ்வாறே) செய்வேன்” என்று சொன்னார்கள். தொடர்ந்து இத்பான் (ரலி) அவர்கள் கூறலானார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் மறுநாள் நண்பகல் நேரத்தில் என்னிடம் வந்தனர். நபி (ஸல்) அவர்கள் (என் இல்லத்தினுள் வர) அனுமதி கேட்டார்கள். நான் அனுமதியளித்தேன். வீட்டினுள் வந்த நபி (ஸல்) அவர்கள் உடனே உட்காரவில்லை. பிறகு என்னிடம், ‘‘(இத்பானே!) உங்கள் வீட்டில் எந்த இடத்தில் நான் தொழ வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான் வீட்டின் ஒரு மூலையைக் காட்டினேன். நபி (ஸல்) அவர்கள் (அந்த இடத்தில்) நின்று ‘தக்பீர் (தஹ்ரீம்)’ சொன்னார்கள். நாங்கள் (அவர்களுக்குப் பின்னே) அணிவகுத்து நின்றுகொண்டோம். அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு ‘சலாம்’ கொடுத்தார்கள். நாங்கள் தயாரித்திருந்த ‘கஸீர்’ எனும் (கஞ்சி) உணவி(னை உட்கொள்வத)ற்காக அவர்களை நாங்கள் இருக்கவைத்தோம். (நபி (ஸல்) அவர்கள் வந்திருந்ததைக் கேள்விப்பட்ட) அந்தப் பகுதி மக்களில் கணிசமான பேர் (சிறுகச் சிறுக) வந்து என் வீட்டில் திரண்டுவிட்டனர். அம்மக்களில் ஒருவர், ‘‘மாலிக் பின் துக்ஷுன் எங்கே?” என்று கேட்டார். அதற்கு அவர்களில் மற்றொருவர், ‘‘அவர் அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் நேசிக்காத ஒரு நயவஞ்சகர். (அதனால்தான் அல்லாஹ்வின் தூதரைச் சந்திக்க அவர் வரவில்லை)” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் ‘‘அப்படிச் சொல்லாதீர்கள். அல்லாஹ்வின் அன்பை நாடியவராக அவர் ‘‘லா இலாஹ இல்லல்லாஹு” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொன்னதை நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மிக அறிந்தவர்கள்” என்று சொன்னார். அப்போது நாங்கள் ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) அவர் (மாலிக் பின் துக்ஷுன்) நயவஞ்சகர்களுடன் தொடர்பு வைத்திருப் பதையும் அவர்கள்மீது அபிமானம் கொண்டிருப்பதையும் காண்கிறோம். (அதனால்தான் அவ்வாறு சொல்லப்பட்டது)” என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் அன்பை நாடி ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று சொன்ன வரை நரகத்திலிருந்து அல்லாஹ் தடுத்து (ஹராமாக்கி)விட்டான் அல்லவா?” என்று கேட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அறிவிப்பாளர் களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்: பனூ சாலிம் குலத்தாரில் ஒருவரும் அவர்களில் முக்கியமானவர்களில் ஒருவருமான ஹுசைன் பின் முஹம்மத் அல்அன்சாரீ (ரஹ்) அவர்களிடம் மஹ் மூத் பின் ரபீஉ அல்அன்சாரீ அவர்கள் அறிவித்த இந்த ஹதீஸ் குறித்துக் கேட்டேன். அவர்கள் அதை (‘‘இது உண்மைதான்” என்று) உறுதிப்படுத்தி னார்கள்.25 அத்தியாயம் :

30

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு என் தாயாரின் சகோதரி (உம்மு ஹுஃபைத்) அவர்கள் உடும்பு, பாலாடைக் கட்டி, பால் ஆகியவற்றை அன்பளிப்புச் செய்தார்கள். நபி (ஸல்) அவர்களின் உணவு விரிப்பின்மீது உடும்பு வைக்கப்பட் டது. அது விலக்கப்பட்டதாக இருந்திருப் பின் அவ்வாறு வைக்கப்பட்டிராது. நபி (ஸல்) அவர்கள் (உடும்பை மட்டும் விட்டு விட்டு) பாலை அருந்தினார்கள். பாலாடைக் கட்டியையும் சாப்பிட்டார்கள்.27 அத்தியாயம் :

31

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: வெள்ளிக்கிழமை வருவதால் நாங்கள் மகிழ்ச்சியடைந்துவந்தோம். எங்களுக்கு ஒரு மூதாட்டி இருந்தார். அவர் தண்டுக் கீரையின் தண்டுகளை எடுத்து தனது பாத்திரமொன்றில் அவற்றையிட்டு அதில் தொலி நீக்கப்படாத கோதுமை தானியங்கள் சிறிதைப் போட்டு(க் கடைந்து) வைப்பார். நாங்கள் (வெள்ளிக்கிழமைத் தொழுகை) தொழுத பின்னர் அவரைச் சந்திப்போம். அவர் அதை எங்களுக்குப் பரிமாறுவார். இதன் காரணத்தால் நாங்கள் வெள்ளிக்கிழமை மூலம் மகிழ்ச்சியடைந்துவந்தோம். நாங்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக் குப் பின்புதான் காலைச் சிற்றுண்டி அருந்துவோம்; மதிய ஓய்வெடுப்போம். அல்லாஹ்வின் மீதாணையாக! (அவர் பரிமாறிய) அந்த உணவில் கெட்டியான கொழுப்போ திரவக் கொழுப்போ எதுவும் இருந்ததில்லை.28 அத்தியாயம் :

32

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஆட்டின்) சப்பை எலும்பு ஒன்றை (அது வெந்துகொண்டிருந்த பாத்திரத்தில் இருந்து) எடுத்து அதிலிருந்த இறைச்சியைக் கடித்துச் சாப்பிட்டார்கள். பிறகு எழுந்து தொழுதார்கள். ஆனால், (புதிதாக) அங்கத் தூய்மை (உளூ) செய்யவில்லை. அத்தியாயம் :

33

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (குழம்புப்) பாத்திரத்திலிருந்து எலும்பொன்றை எடுத்து (அதிலிருந்து இறைச்சியைக் கடித்து)ச் சாப்பிட்டார்கள். பிறகு தொழுதார்கள்; ஆனால். (புதிதாக) அங்கத் தூய்மை (உளூ) செய்யவில்லை. அத்தியாயம் :

34

அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஹுதைபிய்யா ஆண்டில்) மக்காவை நோக்கிப் புறப்பட்டோம்.29 அத்தியாயம் :

35

அபூகத்தாதா அஸ்ஸலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஹுதைபிய்யா ஆண்டில்) ஒரு நாள் மக்கா (செல்லும்) சாலையில் இருந்த ஓரிடத்தில் நபித்தோழர்கள் சிலருடன் அமர்ந்திருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் முன்னால் தங்கியிருந்தார்கள். மக்கள் அனைவரும் இஹ்ராம் கட்டியிருந்தார்கள். நான் (மட்டும்) இஹ்ராம் கட்டியிருக்கவில்லை. அப்போது மக்கள் ஒரு காட்டுக் கழுதையைக் கண்டனர். நானோ எனது செருப்பைத் தைப்பதில் ஈடுபட்டிருந்தேன். அவர்கள் அக்கழுதை குறித்து எனக்கு அறிவிக்கவில்லை. (ஆனால்,) நான் அதைப் பார்க்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள். நான் (தற்செயலாக) அதைத் திரும்பிப் பார்த்தேன். உடனே நான் எழுந்து குதிரையின் பக்கம் சென்று அதற்குச் சேணமிட்டு அதில் ஏறினேன். சாட்டையையும் ஈட்டியையும் (எடுத்துக்கொள்ள) நான் மறந்துவிட்டேன். நான் அவர்களிடம் ‘‘அந்தச் சாட்டையையும் ஈட்டியையும் எடுத்து என்னிடம் கொடுங்கள்” என்று சொன்னேன். அதற்கு (இஹ்ராம் கட்டியிருந்த) அவர்கள், ‘‘மாட்டோம். அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்குச் சிறிதும் நாங்கள் உமக்கு உதவமாட்டோம்” என்று சொன்னார்கள். நான் கோபமுற்று இறங்கி அவ்விரண்டையும் எடுத்துக்கொண்டு (குதிரையின் மீது) ஏறினேன். காட்டுக் கழுதையைத் தாக்கி அதை (அதன் கால் நரம்புகளில்) வெட்டினேன். பிறகு அதை (மக்களிடம்) கொண்டுவந்தேன். அதற்குள் அது இறந்துவிட்டிருந்தது. மக்கள் அதை(ச் சமைத்து) உண்பதற்காக அதன்மீது பாய்ந்தார்கள். பிறகு அவர்கள் ‘தாம் இஹ்ராம் கட்டியிருந்த நிலையில் அதை உண்டது சரிதானா?’ என்று சந்தேகம் கொண்டார்கள். அப்போது நாங்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) சென்றோம். நான் (அதன்) முன்னங்கால் சப்பையை (எடுத்து) என்னிடம் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றவுடன் இது குறித்து அவர்களிடம் வினவினோம். அவர்கள், ‘‘அதிலிருந்து மிச்சம் மீதி ஏதாவது உள்ளதா?” என்று கேட்டார்கள். நான் அந்த முன்னங்கால் சப்பையை எடுத்துக் கொடுத்தேன். அதன் எலும்பைக் கடித்துத் துப்பும்வரை அதை அவர்கள் சாப்பிட்டார்கள். அப்போது நபி அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தார்கள்.30 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

36

அம்ர் பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களைத் தமது கரத்திலிருந்த ஆட்டுச் சப்பையை(க் கத்தியால்) துண்டுபோ(ட்டுச் சாப்பி)டு வதைப் பார்த்தேன். அப்போது தொழுகைக்காக அழைக்கப்பட்டது. உடனே அவர்கள் அந்த ஆட்டுச் சப்பை யையும் அதைத் துண்டிக்கப் பயன்படுத்திய கத்தியையும் (அப்படியே) கீழே போட்டு விட்டு எழுந்து தொழுதார்கள். (புதிதாக) அங்கத் தூய்மை (உளூ) செய்ய வில்லை.31 அத்தியாயம் :

37

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.32 அத்தியாயம் :

38

அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்களின் காலத்தில் (சலித்து) சுத்தம் செய்யப்பட்ட வெள்ளை மாவை நீங்கள் பார்த்ததுண்டா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இல்லை” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘அப்படியானால் நீங்கள் தொலி நீக்கப்படாத கோதுமையை (சல்லடையில்) சலிப்பீர்கள்தானே?” என்று கேட்க, அவர்கள் ‘‘இல்லை; ஆனால், நாங்கள் அதை (வாயால்) ஊதி (சுத்தப்படுத்தி) வந்தோம்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

39

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் தம் தோழர்களிடையே பேரீச்சம்பழங்களைப் பங்கிட்டார்கள். அப்போது ஒவ்வொரு மனிதருக்கும் ஏழு பேரீச்சம்பழங்களை வழங்கினார்கள். எனக்கும் ஏழு பேரீச்சம் பழங்கள் கொடுத்தார்கள். அவற்றில் ஒன்று (நன்றாகக் கனியாத, காய்ந்த) தாழ்ந்த ரகப் பேரீச்சம்பழமாக இருந்தது. அந்தப் பழங்களிலேயே அதுதான் எனக்கு வியப்பளித்தது. மெல்வதற்குச் சிரமப்பட வேண்டியிருந்தது. அத்தியாயம் :

40

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடன் (ஆரம்பமாக இஸ்லாத்தை ஏற்று) இருந்த ஏழு பேரில் ஏழாவது நபராக நான் இருந்தேன். (உண்பதற்கு) ‘ஹுப்லா’ அல்லது ‘ஹபலா’ எனும் (முள்) மரத்தின் இலையைத் தவிர வேறெதுவும் எங்களிடம் இருக்கவில்லை. எந்த அளவுக்கென்றால் (அந்த இலைகளை உண்டு) நாங்கள் ஆடு கழிக்கின்ற (கெட்டிச் சாணத்)தைப் போன்றே மலம் கழித்துவந்தோம். பிறகு (கூஃபாவாசிகளான) ‘பனூஅசத்’ குலத்தார் (நான் முறையாகத் தொழுவிப்ப தில்லை என்று கூறி, எனது) இஸ்லாம் தொடர்பாக என்னைக் குறை கூறலானார் கள். அப்படியானால், (இதுவரை நான் செய்துவந்த வழிபாட்டு) முயற்சியெல்லாம் வீணாகி, நான் இழப்புக்குள்ளாகிவிட்டேன் (போலும் என வருந்தினேன்).34 அத்தியாயம் :

41

அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நன்கு சலித்து சுத்தம் செய்யப்பட்ட மாவில் தயாரிக்கப்பட்ட) வெள்ளை ரொட்டியைச் சாப்பிட்டதுண்டா?” என்று கேட்டேன். அதற்கு சஹ்ல் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மை (இறைத்தூதராக) அல்லாஹ் தேர்ந்தெடுத்ததிலிருந்து தமக்கு அவன் இறப்பை அளிக்கும்வரை (சலித்து சுத்தமாக்கப்பட்ட மாவினாலான) வெள்ளை ரொட்டியைப் பார்த்ததேயில்லை” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் உங்களிடம் சல்லடைகள் இருந்ததுண்டா?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மை (இறைத்தூதராக) அல்லாஹ் தேர்ந்தெடுத்ததிலிருந்து தம்மை அவன் இறக்கச் செய்யும்வரை சல்லடையைக் கண்டதேயில்லை” என்றார்கள். நான், ‘‘கோதுமையை நீங்கள் எப்படிச் சாப்பிட்டுவந்தீர்கள்? சலிக்காமலேயா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நாங்கள் கோதுமையை அரைத்து, (உமியை நீக்க) அதில் (வாயால்) ஊதுவோம். அதிலிருந்து (தவிடு, உமி போன்ற) பறப்பன பறந்துவிடும். எஞ்சியதைத் தண்ணீர் கலந்து (ரொட்டி தயாரித்து) உண்போம்” என்றார்கள்.35 அத்தியாயம் :

42

சயீத் பின் அபீசயீத் அல்மக்புரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (நபித்தோழர்) அபூஹுரைரா (ரலி) அவர்கள் (ஒருநாள்), தம் முன்னே பொரிக்கப்பட்ட ஓர் ஆட்டை(ச் சாப்பிடு வதற்காக) வைத்திருந்த ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றார்கள். அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களை(த் தம்முடன் அதைச் சாப்பிட வருமாறு) அழைத்தார்கள். ஆனால், அன்னார் அவர்களுடன் சாப்பிட மறுத்து ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொலி நீக்கப்படாத கோதுமை ரொட்டியால் வயிறு நிரம்பாத நிலையிலேயே இந்த உலகிலிருந்து சென்றுவிட்டார்கள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :

43

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உணவு மேசையில் (அமர்ந்து) சாப்பிட்டதில்லை; (தொடுகறி வைக்கப் பயன்படும்) கிண்ணத் தில் வைத்தும் சாப்பிட்டதில்லை; அவர் களுக்காக மிருதுவான ரொட்டி தயாரிக் கப்பட்டதுமில்லை. (அறிவிப்பாளர்களில் ஒருவரான) யூனுஸ் பின் அபில்ஃபுராத் அல்குறஷீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்களிடம், ‘‘எதன் மீது அமர்ந்து அவர்கள் சாப்பிடுவார்கள்?” என்று நான் கேட்டேன். அவர்கள், ‘‘(தோலாலான) உணவு விரிப்புகளின் மீது” என்று பதிலளித்தார்கள்.36 அத்தியாயம் :

44

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததிலிருந்து அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் தொலி நீக்கப்பட்ட கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை. அத்தியாயம் :

45

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களுடைய குடும்பத்தாரில் யாரேனும் இறந்துவிட்டால், அதற்காகப் பெண்கள் கூடிப் பிறகு, அவர்களின் குடும்பத்தாரும் நெருங்கிய உறவினர்களும் தவிர மற்ற பெண்கள் அனைவரும் கலைந்து சென்றுவிடு வார்கள். அப்போது ஒரு பாத்திரத்தில் ‘தல்பீனா’ (எனும் பால் பாயசம்) தயாரிக்கும்படி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவார்கள். அவ்வாறே அது தயாரிக்கப்படும். பிறகு ‘ஸரீத்’ (எனும் தக்கடி) தயாரிக்கப்படும். அதில் ‘தல்பீனா’ ஊற்றப்பட்ட பிறகு (அங்குள்ள பெண்களிடம்) ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘இதைச் சாப்பிடுங்கள்; ஏனெனில், ‘தல்பீனா’ (எனும் பாயசம்) நோயாளியின் மனத்திற்கு ஆறுதல் அளிக்கும்; கவலைகளில் சிலவற்றைப் போக்கும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்” என்று சொல்வார்கள். அத்தியாயம் :

46

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆண்களில் பல பேர் முழுமை பெற்றிருக்கிறார்கள். ஆனால், பெண்களில் இம்ரானின் புதல்வி மர்யமையும், ஃபிர்அவ்னின் துணைவியார் ஆசியாவை யும் தவிர வேறெவரும் முழுமைபெற வில்லை. மற்ற பெண்களை விட ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு எல்லா வகை உணவுகளையும்விட ‘ஸரீது’க்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும். இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.39 அத்தியாயம் :

47

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மற்றப் பெண்களைவிட ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு மற்ற எல்லா வகையான உணவுகளையும்விட ‘ஸரீது’க்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.40 அத்தியாயம் :

48

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன், அவர்களின் பணியாளரும் தையற்காரருமான ஒருவரிடம் சென்றேன். அவர் நபி (ஸல்) அவர்கள் முன்னே ‘ஸரீத்’ எனும் உணவு இருந்த ஒரு தட்டை வைத்தார். பிறகு தமது வேலையைப் பார்க்கச் சென்று விட்டார். (அத்தட்டில்) நபி (ஸல்) அவர்கள் சுரைக்காயைத் தேடலானார்கள். நானும் அதைத் தேடி எடுத்து அவர்கள் முன்னே வைக்கலானேன். அதற்குப்பின் நான் சுரைக்காயை விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டே இருக்கிறேன்.41 அத்தியாயம் :

49

கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்று வருவோம். அவர்களுடன் அவர்களுக்காக ரொட்டி தயாரிப்பவர் ஒருவரும் இருப்பார். (ஒருநாள்) அனஸ் (ரலி) அவர்கள், ‘‘சாப்பிடுங்கள்! (ஆனால்,) நான் அறிந்த வரையில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும்வரை மிருதுவான ரொட்டியைப் பார்த்ததில்லை. வெந்நீரால் முடி களையப்பட்டு தோலுடன் சமைக்கப்பட்ட (இளம்) ஆட்டை அவர்கள் தமது கண்ணாலும் ஒருபோதும் கண்டதில்லை” என்று கூறினார்கள்.42 அத்தியாயம் :

50

அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆட்டின் சப்பையை(க் கத்தியால்) துண்டு போட்டு, அதிலிருந்து (இறைச்சியை) உண்டதை நான் பார்த்தேன். அப்போது தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்பட்டது. உடனே அவர்கள் எழுந்து கத்தியை எறிந்துவிட்டுத் தொழுதார்கள். ஆனால், (புதிதாக) அங்கத் தூய்மை (உளூ) செய்யவில்லை.43 அத்தியாயம் :

51

ஆபிஸ் பின் ரபீஆ அல்கூஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘(‘ஈதுல் அள்ஹா’ பெருநாளில் அறுக்கப்படும்) குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்குமேல் வைத்துச் சாப்பிடுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்களா?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘மக்கள் (பஞ்சத்தால்) பசி பட்டினியோடு இருந்த ஓர் ஆண்டில்தான் அவர்கள் அப்படி(த் தடை) செய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (பட்டினியைப் போக்க) வசதி உள்ளவர், ஏழைக்கு உணவளிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். (பிறகு) நாங்கள் ஆட்டுக்காலை எடுத்துவைத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகும்கூட அதைச் சாப்பிட்டுவந்தோம்” என்று பதிலளித்தார்கள். ‘‘உங்களுக்கு இப்படிச் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன வந்தது?” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் சிரித்துவிட்டு, ‘‘முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும்வரை அவர்களுடைய குடும்பத்தார் தொடர்ச்சி யாக மூன்று நாட்கள்கூட (கறிக்) குழம்புடன் வெள்ளைக் கோதுமை ரொட்டியை வயிறு நிரம்பச் சாப்பிட்ட தில்லை” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

52

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் (ஹஜ்ஜின்போது அறுக்கப்படும்) குர்பானிப் பிராணிகளின் இறைச்சிகளை (மக்காவிலிருந்து) மதீனாவுக்கு(ச் செல்லும்போது) பயண உணவாக எடுத்துச் செல்வோம்.45 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் இப்னு ஜுரைஜ் (அப்துல் மக் பின் அப்தில் அஸீஸ்-ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான், அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், ‘‘ஜாபிர் (ரலி) அவர்கள் ‘மதீனாவுக்கு நாங்கள் வந்து சேரும்வரை’ எனும் வாக்கியத்தையும் சேர்த்து அறிவித்தார்களா?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இல்லை” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :

53

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூதல்ஹா (ஸைத் பின் சஹ்ல்-ரலி) அவர்களிடம், ‘‘உங்கள் சிறுவர்களில் ஒருவரை எனக்குச் சேவகம் செய்ய அழைத்து வாருங்கள்” என்று சொன்னார்கள். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தமது வாகனத்தில்) என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக்கொண்டு புறப்பட்டார்கள். ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சேவகம் புரிந்துவந்தேன். அவர்கள் (வழியில் எங்கேனும்) இறங்கித் தங்கும்போதெல்லாம் ‘‘இறைவா! துக்கம், கவலை, இயலாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன்சுமை, மனிதர்களின் அடக்குமுறை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று அதிகமாகப் பிரார்த்தனை புரிவதை நான் செவியுற்றுள்ளேன். நாங்கள் கைபரிலிருந்து புறப்பட்டுச் செல்லும்வரை நான் அவர்களுக்குச் சேவகம் செய்துகொண்டேயிருந்தேன். ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை (கைபர் போர்ச் செல்வத்தில் தமது பங்காகத்) தேர்ந்தெடுத்துக்கொண்டபின் அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யாவுக்காக ஓர் ‘அங்கியால்’ அல்லது ‘ஒரு போர்வையால்’ தமக்குப் பின்னே திரை அமைத்துப் பிறகு அவர்களைத் தமக்குப் பின்னால் (வாகனத்தில்) அமர்த்திக்கொள்வதை நான் பார்த்தேன். நாங்கள் ‘(சத்துஸ்) ஸஹ்பா’ எனும் இடத்தை அடைந்தபோது அவர்கள் ‘ஹைஸ்’ எனும் பலகாரத்தைத் தயாரித்து ஒரு தோல் விரிப்பில் வைத்தார்கள். பிறகு என்னை அவர்கள் அனுப்பிட நான் (வலீமா விருந்திற்காக) மக்களை அழைத்தேன். அவர்கள் வந்து விருந்து உண்டார்கள். அது (அன்னை) ஸஃபிய்யா (ரலி) அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தொடங்கிய(தற்கு அளித்த மணவிருந்)தாக அமைந்தது. பிறகு அவர்கள் முன்னேறிச் செல்ல அவர்களுக்கு ‘உஹுத்’ மலை தென்பட்டது. அவர்கள், ‘‘இது நம்மை நேசிக்கின்ற ஒரு மலை. இதை நாமும் நேசிக்கின்றோம்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனா நகரை நெருங்கியபோது, ‘‘இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனிதமானதாக அறிவித்ததைப் போன்று மதீனாவின் இரு மலைகளுக்கிடையேயுள்ள அதன் நிலப்பரப்பை நான் புனிதமானதாக அறிவிக்கிறேன். இறைவா! மதீனாவாசிகளின் ‘ஸாஉ’ மற்றும் அவர்களின் ‘முத்(து)’ ஆகிய அளவைகளில் அவர்களுக்கு வளத்தைக் கொடுப்பாயாக” என்று பிரார்த்தித்தார்கள்.47 அத்தியாயம் :

54

அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஹுதைஃபா பின் அல்யமான்(ரலி) அவர்களிடம் (இராக்கில் உள்ள ‘தைஃபூன்’ நகரில்) இருந்தோம். அப்போது அவர்கள் குடிக்கத் தண்ணீர் கேட்டார்கள். அக்னிஆராதனை செய்பவர் (மஜூசீ) ஒருவர் (வெள்ளிப் பாத்திரத்தில்) தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தார். கோப்பையை அவர்களின் கையில் அவர் வைத்தபோது அதை அவர்கள் அவர்மீது வீசியெறிந் தார்கள். பிறகு ‘‘நான் பலமுறை இவரை (வாய்மொழியால்) தடுத்திராதிருந்தால்...” என்று சொன்னார்கள். (அதாவது ‘‘பல தடவை வாய்மொழியால் தடுத்தபோது அவர் இணங்கியிருந்தால்) நான் இவ்வாறு (வீசியெறியும் செயலைச்) செய்திருக்க மாட்டேன்” என அவர்கள் சொல்வதைப் போன்றுள்ளது. ஆயினும், (நான் ஏன் இவ்வாறு செய்தேன் என்றால்,) நபி (ஸல்) அவர்கள் ‘‘சாதாரண பட்டையோ அலங்காரப் பட்டையோ அணியாதீர்கள். பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் அருந்தாதீர்கள். பொன் மற்றும் வெள்ளித் தட்டுகளில் உண்ணவும் செய்யாதீர்கள். ஏனெனில், அவை இம்மையில் (இறைமறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறைநம்பிக்கையாளர்களான) நமக்கும் உரியவையாகும்” என்று சொல்லக் கேட்டிருக்கிறேன் என்றார்கள். அத்தியாயம் :

55

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதும் இறைநம்பிக்கையாளரின் நிலையானது, நாரத்தைப் பழம் போன்றதாகும். அதன் மணமும் நன்று; சுவையும் நன்று. குர்ஆனை ஓதாத இறை நம்பிக்கையாளரின் நிலையானது பேரீச்சம் பழத்தைப் போன்றதாகும். அதற்கு மணம் கிடையாது; (ஆனால்,) அதன் சுவை இனிமையானது. குர்ஆனை ஓதுகின்ற நயவஞ்சகனின் நிலையானது, துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் மணம் நன்று. அதன் சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலையானது, குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கிறது. அதற்கு மணமும் கிடையாது. அதன் சுவையும் கசப்பான தாகும். இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.49 அத்தியாயம் :

56

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மற்றப் பெண்களைவிட ஆயிஷாவுக்கு உள்ள சிறப்பு, மற்ற எல்லா உணவுகளை யும்விட ‘ஸரீத்’ எனும் உணவுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்.50 இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். அத்தியாயம் :

57

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பயணம், வேதனையின் ஒரு பகுதியாகும். உங்கள் தூக்கத்தையும் உணவையும் அது தடுத்துவிடுகிறது. ஆகவே, பயணி தாம் நாடிச்சென்ற நோக்கத்தை முடித்துக்கொண்டுவிட்டால், உடனே தம் வீட்டாரை நோக்கி விரைந்து வரட்டும்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.51 அத்தியாயம் :

58

காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (அடிமைப் பெண்ணாயிருந்து விடுதலை பெற்ற) பரீரா (ரலி) அவர்களின் விஷயத்தில் மூன்று வழிமுறைகள் கிடைத்தன: 1. (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்கள் அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்ய விரும்பினார்கள். அப்போது பரீராவின் உரிமையாளர்கள், ‘‘அவளுடைய வாரிசுரிமை (‘வலா’) எங்களுக்கு உரிய தாகவே இருக்கும்” என்று சொன்னார்கள். அதை ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் குறிப்பிட்டபோது அவர்கள், ‘‘நீ விரும்பினால், பரீராவின் வாரிசுரிமை உனக்கேயுரியது என்று அவர்களுக்கு நீ நிபந்தனையிடலாம். ஏனெனில், வாரிசுரிமை (அவ்வடிமையை) விடுதலை செய்தவருக்கே கிடைக்கும்” என்று சொன்னார்கள். 2. அவ்வாறே அவர் விடுதலை செய்யப்பட்டபோது அவர் தம் (அடிமைக்) கணவருடன் அவரது மணபந்தத்தில் நீடிக்கவும் செய்யலாம்; அல்லது கணவரைப் பிரிந்துவிடவும் செய்யலாம் என (இரண்டில் விரும்பியதைச் செய்துகொள்ள) விருப்ப உரிமை அளிக்கப்பட்டார். 3. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருநாள் ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டினுள் நுழைந்தார்கள். அப்போது அடுப்பில் பாத்திரம் ஒன்று கொதித்துக்கொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்கள் காலை உணவைக் கொண்டு வரும்படி பணித்தார்கள். உடனே அவர்களுக்கு ரொட்டியும் வீட்டிலிருந்த குழம்பும் கொண்டுவரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ‘‘இறைச்சி (சமைக்கப்படும் காட்சி)யை நான் பார்க்கவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு வீட்டார், ‘‘ஆம், அல்லாஹ்வின் தூதரே! ஆனால், அது பரீராவுக்குத் தர்மமாக வழங்கப்பட்ட இறைச்சியாகும். அதை அவர் நமக்கு அன்பளிப்பாகத் தந்தார்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘அது அவருக்குத் தர்மமாகும். நமக்கு அன்பளிப்பாகும்” என்று கூறினார்கள்.52 அத்தியாயம் :

59

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இனிப்புப் பண்டத்தையும் தேனையும் விரும்பிவந்தார்கள். அத்தியாயம் :

60

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (‘நபிமொழிகளை அதிகமாக அபூஹுரைரா அறிவிக்கிறாரே’ என்று மக்கள் -என்னைப் பற்றிக் குறை- கூறிக்கொண்டிருந்தார்கள்.) நான் என் வயிறு நிரம்பினால் போதும் என்று நபி (ஸல்) அவர்களுடனேயே எப்போதும் இருந்துவந்தேன். அந்தக் காலகட்டத்தில் புளித்து உப்பிய (உயர்தரமான) ரொட்டியை நான் உண்பதுமில்லை; (மெல்லிய) பட்டாடையை நான் அணிவதுமில்லை; இன்னவரோ இன்னவளோ எனக்குப் பணிவிடை செய்வதுமில்லை. (பசியின் காரணத்தால்) நான் என் வயிற்றில் கூழாங்கற்களை வைத்துக் கட்டிக்கொண்டிருந்தேன். என்னை ஒரு மனிதர் (தமது இல்லத்திற்கு) அழைத்துச் சென்று, எனக்கு உணவளிக்க வேண்டும் என்ப(தை உணர்த்துவ)தற்காக (‘எனக்கு விருந்தளியுங் கள்’ என்ற பொருள் கொண்ட ‘அக்ரினீ’ எனும் சொல்லைச் சற்று மாற்றி) ‘அக்ரிஃனீ’ (எனக்கு ஓர் இறைவசனத்தை ஓதிக்காட்டுங்கள்) என்பேன். அவ்வசனம் என்னுடன் (முன்பே மனப்பாடமாக) இருக்கும். மக்களிலேயே ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள்தான் ஏழைகளுக்கு அதிகமாக உதவி செய்பவர் ஆவார். அவர் எங்களை அழைத்துச் சென்று தமது வீட்டிலிருக்கும் உணவை எங்களுக்கு அளிப்பார். எந்த அளவுக்கென்றால் அவர் எதுவுமில்லாத நெய் (அல்லது தேன்) பையை எங்களிடம் கொண்டுவருவார். அதை நாங்கள் பிளந்து அதில் (ஒட்டிக்கொண்டு) இருப்பதை நாக்கால் வழித்து உண்போம்.53 அத்தியாயம் :

61

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய அடிமையும் தையற்காரருமான ஒருவரிடம் சென்றார்கள். அவர்களுக்குச் சுரைக்காய் (உணவு) கொண்டுவரப்பட்டது. அதை நபி (ஸல்) அவர்கள் உண்ணத் தொடங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை (விரும்பி)ச் சாப்பிடுவதைப் பார்த்ததிலிருந்து அதை நானும் விரும்பி(ச் சாப்பிட்டு)க்கொண்டே இருக்கிறேன்.54 அத்தியாயம் :

62

அபூமஸ்ஊத் உக்பா பின் ஆமிர் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூஷுஐப் என்று அழைக்கப்படும் ஒருவர் அன்சாரிகளில் இருந்தார். அவரிடம் இறைச்சி விற்கும் பணியாளர் ஒருவர் இருந்தார். அவர் அந்தப் பணியாளரிடம், ‘‘எனக்காக உணவு தயாரித்து வை! (ஐந்து பேரை விருந்துக்கு அழைக்கவிருக்கிறேன். அந்த) ஐவரில் ஒருவராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைக்கவிருக்கிறேன்” என்று கூறிவிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஐந்து பேரில் ஒருவராக அழைத்தார். அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து மற்றொருவரும் வந்துவிட்டார். எனவே, நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் என்னை ஐந்து பேரில் ஒருவராக (விருந்துக்கு) அழைத்தீர்கள்! இந்த மனிதரோ எங்களைப் பின்தொடர்ந்து வந்துவிட்டார். நீங்கள் விரும்பினால் அவருக்கு அனுமதியளிக்கலாம்; நீங்கள் நினைத்தால் அவரை விட்டுவிடலாம்” என்று சொன்னார்கள். அதற்கு அபூஷுஐப் (ரலி) அவர்கள் ‘‘இல்லை; அவருக்கு நான் அனுமதியளித்துவிட்டேன்” என்று சொன்னார்கள்.55 (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) முஹம்மத் பின் யூசுஃப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: முஹம்மத் பின் இஸ்மாயீல் (அல்புகாரீ -ரஹ்) அவர்கள், ‘‘(விருந்தில்) ஒரு வட்டிலில் (ஸஹனில்) அமர்ந்துள்ள நபர்கள் மற்றொரு வட்டிலில் இருந்து (உணவை) எடுத்து உண்ணலாகாது. ஆனால், ஒரே வட்டிலில் அமர்ந்திருப் போர் (வேண்டுமானால், அதிலுள்ள உணவை) ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளலாம்; அல்லது (அதைச் செய் வதைக்கூட) கைவிடலாம்” என்று சொன்னார்கள்.56 அத்தியாயம் :

63

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (அவர்கள் செல்லுமிட மெல்லாம்) செல்கின்ற சேவகனாக இருந்தேன். (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய பணியாளரும் தையற்காரருமான ஒருவரிடம் சென்றார்கள். அவர் உணவும் அதன் மீது சுரைக்காய்க் குழம்பும் உள்ள ஒரு தட்டை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காயைத் தேடலானார் கள். அதை நான் பார்த்தவுடன் சுரைக்காயை அவர்களுக்கு முன்னால் ஒன்றுசேர்த்து வைக்கலானேன். அப்போது அந்தப் பணியாளர் தமது பணியைக் கவனிக்கச் சென்றுவிட்டார். நபி (ஸல்) அவர்கள் இப்படிச் செய்வதை (பிரியமாக சுரைக்காய் உண்பதை)ப் பார்த்தபின் நானும் சுரைக்காயை விரும்பி(ச் சாப்பிட்டு)க் கொண்டே இருக்கிறேன்.57 அத்தியாயம் :

64

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: தையற்காரர் ஒருவர் நபி (ஸல்) அவர்களைத் தாம் தயாரித்திருந்த உணவி(னை உண்பத)ற்காக அழைத்தார். நானும் நபி (ஸல்) அவர்களுடன் சென்றேன். அவர் தொலிநீக்கப்படாத கோதுமை ரொட்டியையும், சுரைக்காயும் உப்புக்கண்டமும் இருந்த குழம்பையும் நபி (ஸல்) அவர்களின் முன்னால் வைத்தார். நபி (ஸல்) அவர்கள் உணவுத் தட்டின் நாலாபாகங்களிலும் சுரைக்காயைத் தேடுவதை நான் பார்த்தேன். அன்றிலிருந்து நானும் சுரைக்காயை விரும்பி(ச் சாப்பிட்டு)க்கொண்டே இருக்கிறேன்.58 அத்தியாயம் :

65

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் சுரைக்காயும் உப்புக்கண்டமும் உள்ள குழம்பு கொண்டுவரப்பட்டதைக் கண்டேன். அப்போது அவர்கள் சுரைக்காயைத் தேடி உண்பதைப் பார்த்தேன். அத்தியாயம் :

66

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்கள்) அதை (குர்பானி இறைச்சிகளை மூன்று நாட்களுக்கு மேலும் சேமித்து வைத்து உண்பதை) மக்கள் பட்டினியோடு இருந்த ஓர் ஆண்டில்தான் அப்படி(த் தடை) செய்தார்கள். வசதியுள்ளவர் ஏழைக்கு உணவளிக்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள். நாங்கள் ஆட்டுக்காலை எடுத்துவைத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகு அதை உண்டுவந்தோம். முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத் தார் குழம்புடன்கூடிய வெள்ளைக் கோதுமை ரொட்டியை (தொடர்ச்சியாக) மூன்று நாட்கள்கூட வயிறு நிரம்ப உண்டதில்லை.59 அத்தியாயம் :

67

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: தையற்காரர் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தாம் தயாரித்த உணவி(னை உண்பத)ற்காக அழைத்தார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அந்த உணவை உண்ணச் சென்றேன். அந்தத் தையற்காரர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகே தொலிநீக்கப்படாத கோதுமை ரொட்டியையும், சுரைக்காயும் உப்புக்கண்டமும் உள்ள குழம்பையும் வைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தட்டைச் சுற்றிலும் சுரைக்காயைத் துழாவுவதை நான் கண்டேன். அன்றிலிருந்து சுரைக்காயை நானும் விரும்பி(ச் சாப்பிட்டு)க்கொண்டே இருக்கிறேன். (மற்றோர் அறிவிப்பில்) ஸுமாமா பின் அப்தில்லாஹ் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறியுள்ளார்கள்: அனஸ் (ரலி) அவர்கள், ‘‘நான் சுரைக்காயை ஒன்றுசேர்த்து நபி (ஸல்) அவர்கள்முன் வைத்தேன்” என்று கூறினார்கள்.60 அத்தியாயம் :

68

அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் பின் அபீதாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளரிக்காயுடன் (சேர்த்து) பேரீச்சச் செங்காய்களை உண்பதை நான் கண்டேன். அத்தியாயம் :

69

அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் ஏழு இரவுகள் விருந்தாளியாகத் தங்கியிருந்தேன். அவர்களும் அவர் களுடைய துணைவியாரும் அவர்களுடைய பணியாளும் இரவை மூன்று பங்குகளாகப் பிரித்துக்கொண்டு முறைவைத்து எழுந்து தொழுதுவந்தார்கள். முதலில் ஒருவர் தொழுவார்; பிறகு அவர் மற்றொருவரை எழுப்பிவிடுவார். (அவர் தொழுது முடித்தவுடன் இன்னொருவரை தொழுகைக்கு எழுப்புவார்.) (அபூஹுரைராவுடன் தங்கியிருந்த போது) அவர்கள் (இவ்வாறு) கூற நான் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை) தம் தோழர்களி டையே பேரீச்சம்பழங்களைப் பங்கிட்டார் கள். எனக்கு ஏழு பேரீச்சம்பழங்கள் கிடைத்தன. அவற்றில் ஒன்று (நன்றாகக் கனியாத) தாழ்ந்த ரகப் பேரீச்சம்பழமாக இருந்தது. 5441லிஆ (மற்றோர் அறிவிப்பில்) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) எங்களிடையே பேரீச்சம் பழங்களைப் பங்கிட்டார்கள். அவற்றிலிருந்து எனக்கு ஐந்து பழங்கள் கிடைத்தன; அவற்றில் நான்கு (கனிந்த) பேரீச்சம்பழங்களும் (நன்கு கனியாத) தாழ்ந்த ரகப் பேரீச்சம்பழம் ஒன்றும் இருந்தன. பிறகு நான் அந்தத் தாழ்ந்த ரகப் பேரீச்சம்பழத்தை என் கடைவாய்ப் பல்லால் மெல்வதற்குச் சிரமப்பட வேண்டியிருந்தது.61 அத்தியாயம் :

70

71

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இரு கறுப்பு நிறப் பொருள்களான பேரீச்சம்பழம் மற்றும் தண்ணீரால் வயிறு நிரம்பியிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.62 அத்தியாயம் :

72

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: மதீனாவில் யூதர் ஒருவர் இருந்தார். அவர் என் பேரீச்சம்பழங்களுக்காக, அவை இறக்கப்படும் (நாள்)வரை (எனக் கால வரம்பிட்டு) எனக்குக் கடன் கொடுத் திருந்தார். ‘ரூமா’ கிணற்றுச் சாலையிலிருந்த நிலம் எனக்குச் சொந்தமாயிருந்தது. அது விளைச்சல் தரவில்லை. ஆகவே, கடன் ஓர் ஆண்டு தள்ளிப்போனது. அந்த யூதர் அறுவடை வேளையில் என்னிடம் (கடனைத் திருப்பிக் கேட்டு) வந்தார். (ஆனால்,) அந்த நிலத்திலிருந்து நான் எதையும் (அந்த ஆண்டு) அறுவடை செய்யவில்லை. ஆகவே, நான் அவரிடம் அடுத்த ஆண்டுவரை அவகாசம் தரும்படி கேட்கலானேன். அவர் மறுக்கலானார். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தம் தோழர்களிடம் ‘‘புறப்படுங்கள்; நாம் ஜாபிருக்காக அந்த யூதரிடம் அவகாசம் கேட்போம்” என்று சென்னார்கள். நான் எனது பேரீச்சந்தோப்பில் இருந்தபோது அவர்கள் (அனைவரும்) என்னிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த யூதரிடம் பேசத் தொடங்க, அவர், ‘‘அபுல் காசிமே! நான் அவருக்கு அவகாசம் அளிக்க மாட்டேன்” என்று கூறலானார். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் எழுந்து பேரீச்சமரங்களுக்கு இடையே சுற்றி வந்தார்கள்; பிறகு, அந்த யூதரிடம் சென்று மீண்டும் பேசலானார்கள். அப்போதும் அவர் மறுத்துவிட்டார். பிறகு, நான் எழுந்து செங்காய்கள் சிலவற்றைக் கொண்டுவந்து நபி (ஸல்) அவர்கள்முன் வைத்தேன். அவர்கள் (அதை) உண்டார்கள். பிறகு ‘‘(நீ ஓய்வெடுக்கும்) பந்தல் எங்கே, ஜாபிர்?” என்று கேட்டார்கள். நான் அதைக் காட்டினேன். நபி (ஸல்) அவர்கள் ‘‘எனக்கு அங்கே படுக்கை தயார் செய்” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் அவர்களுக்குப் படுக்கை விரித்துக் கொடுத்தேன். அவர்கள் (அதனுள்) சென்று உறங்கிப் பிறகு விழித்தார்கள். இன்னொரு கைப்பிடி (செங்காய்களை) அவர்களிடம் கொண்டுவந்து கொடுத்தேன். அதிலிருந்து அவர்கள் உண்டார்கள். பிறகு எழுந்து அந்த யூதரிடம் (மீண்டும்) பேசினார்கள். அவர் அதற்கும் (உடன்பட) மறுத்துவிட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் முறையாக செங்காய்கள் கொண்ட பேரீச்சம் மரங்களுக்கிடையே நின்றார்கள். பிறகு ‘‘ஜாபிரே! (பழத்தைப்) பறித்து (உமது கடனை) அடைப்பாயாக!” என்று சொன்னார்கள். அவர்கள் பறிக்குமிடத்தில் நிற்க, நான் (எனது கடனை) அடைக்கும் அளவுக்கு மரத்திலிருந்து (பழங்களைப்) பறித்தேன். (பிறகும்) பழம் மீதியிருந்தது. நான் புறப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு இந்த மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்தேன். அவர்கள், ‘‘நான் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நானே சாட்சியம் அளிக்கின்றேன்” என்று சொன்னார்கள். (இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) ‘அரீஷ்’ (பந்தல்) மற்றும் ‘அர்ஷ்’ ஆகிய சொற்களுக்கு ‘கட்டடம்’ என்பது பொருள். ‘‘(இச்சொல்லில் இருந்து பிறந்த) ‘மஅரூஷாத்’ எனும் சொல்லுக்கு ‘திராட்சை முதலியவற்றின் பந்தல்’ என்பது பொருள்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். (குர்ஆனில் 2:259ஆவது வசனத்தில் இடம்பெற்றுள்ள) ‘உரூஷிஹா’ என்பதற்கு ‘அக்கிராமத்தின் கட்டடங்கள்’ எனப் பொருள் கூறப்படுகிறது. இந்த ஹதீஸில் ‘ஓராண்டு தள்ளிப்போனது’ என்பதைக் குறிக்க ‘கலா ஆமன்’ எனும் வாக்கியம் இடம்பெறுகிறது. இது என்னிடம் சரியானதாக இல்லை. ‘ஜல்லா’ என்றிருந்தால், அதில் ஐயமில்லை. இவ்வாறு புகாரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :

73

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது பேரீச்சமரத்தின் குருத்து ஒன்று கொண்டுவரப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘மரங்களில் ஒன்று உண்டு. அதன் வளம் முஸ்லிமுக்குள்ள வளத்தைப் போன்றதாகும்” என்று சொன்னார்கள். உடனே நான், ‘‘அவர்கள் பேரீச்சமரத்தைத்தான் குறிப்பிடுகிறார்கள்” என்று நினைத்தேன். ஆகவே, நான் ‘‘அது பேரீச்சம் மரம்தான், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூற விரும்பினேன். பிறகு (என்னுடனிருப்பவர்களைத்) திரும்பிப் பார்த்தேன். (அங்கிருந்த) பத்துப் பேரில் நான் பத்தாமவனாக, அவர்கள் அனைவரிலும் இளம் வயதுடையவனாக இருந்தேன். ஆகவே, மௌனமாகி விட்டேன். அப்போது நபி (ஸல்) அவர் களே, ‘‘அது பேரீச்சமரம்தான்” என்று சொன்னார்கள்.63 அத்தியாயம் :

74

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தினந்தோறும் காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு ‘அஜ்வா’ (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகின்றவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது. இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

75

ஜபலா பின் சுஹைம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் (ஹிஜாஸ் பகுதியின் ஆட்சியாளராக) இருந்தபோது எங்களுக்குப் பஞ்ச ஆண்டு ஏற்பட்டது. அவர்கள் எங்களுக்குப் பேரீச்சம் பழம் கொடுத்தார்கள். நாங்கள் அவற்றைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் எங்களைக் கடந்து செல்வார்கள். அப்போது அவர்கள், ‘‘(பேரீச்சம் பழங்களை) இரண்டிரண்டாக ஒன்று சேர்த்துச் சாப்பிடாதீர்கள். ஏனெனில், (இரண்டு பழங்களை) ஒன்றாகச் சேர்த்துச் சாப்பிடுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்” என்று சொல்வார்கள். பிறகு, ‘‘ஒருவர் தம் சகோதரரிடம் (அவ்வாறு சேர்த்துச் சாப்பிட) அனுமதி பெற்றிருந்தால் தவிர” என்று சொல்வார் கள்.64 ‘‘அனுமதி (தொடர்பான இக்கருத்து) இப்னு உமர் (ரலி) அவர்களின் கூற்றாகும்” என்று (அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :

76

அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வெள்ளரிக்காய்களுடன் (சேர்த்து) பேரீச்சச் செங்காய்களை உண்பதை நான் பார்த்திருக்கிறேன்.65 அத்தியாயம் :

77

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மரங்களில் ஒரு மரம் உண்டு. அது முஸ்லிமைப் போன்று (வளமுள்ளது) ஆகும். அதுதான் பேரீச்சமரமாகும். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.66 அத்தியாயம் :

78

அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வெள்ளரிக்காய்களுடன் பேரீச்சச் செங்காய்களையும் ஒன்றாகச் சேர்த்துச் சாப்பிடுவதை நான் பார்த்திருக்கிறேன்.67 அத்தியாயம் :

79

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தாயார் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஒரு ‘முத்(து)’ அளவு தொலிநீக்கப்படாத கோதுமையை எடுத்து நொறுகலாக அரைத்து (பால் கலந்து) கஞ்சி தயாரித்துத் தம்மிடமிருந்த நெய் உள்ள தோல்பை ஒன்றையும் எடுத்து (அதிலிருந்த நெய்யை அந்தக் கஞ்சியில்) ஊற்றினார்கள். பிறகு என்னை நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பிவைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடையே அமர்ந்திருக்க நான் அவர்களிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்கள், ‘‘என்னுடன் இருப்பவர்களும் (வரலாமா)?” என்று கேட்டார்கள். நான் சென்று (என் தாயாரிடம்), ‘‘நபி (ஸல்) அவர்கள் தம்முடன் இருப்பவர்களும் வரலாமா? எனக் கேட்கிறார்கள்” என்று சொன்னேன். உடனே (என் தாயாரின் இரண்டாம் கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இது (என் மனைவி) உம்மு சுலைம் தயாரித்த (சிறிதளவு) உணவுதான்” என்று சொன் னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் (எங்கள் வீட்டினுள்) வந்தார்கள். அந்த உணவு கொண்டுவரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘‘என்னிடம் பத்துப் பேரை வரச் சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே பத்துப் பேர் வந்தார்கள். அவர்கள் அனைவரும் வயிறு நிரம்பும்வரை உண்டார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘என்னிடம் (இன்னுமொரு) பத்துப் பேரை வரச்சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்கள் பத்துப் பேரும் வந்து வயிறு நிரம்பும்வரை உண்டார்கள். பிறகு மீண்டும் ‘‘(மற்றுமொரு) பத்துப் பேரை என்னிடம் வரச்சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். இவ்வாறே நாற்பது பேரை எண்ணும்வரை சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களும் உண்டுவிட்டு எழுந்தார்கள். நான் அதிலிருந்து ஏதேனும் குறைந்துள்ளதா என்று கவனிக்கலானேன். (குறையாமல் அப்படியே இருந்தது.)68 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

80

அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அனஸ் (ரலி) அவர்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள் வெள்ளைப்பூண்டு குறித்து என்ன சொல்ல நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்?” என்று வினவப்பட்டது. அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், ‘‘(அதைச்) சாப்பிட்டவர் நம் பள்ளிவாசலை நெருங்க வேண்டாம் எனச் சொன்னார்கள்” என்று பதிலளித்தார்கள்.70 அத்தியாயம் :

81

அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘வெள்ளைப் பூண்டோ வெங்காயமோ சாப்பிட்டவர் ‘நம்மிடமிருந்து விலகியிருக்கட்டும்’ அல்லது ‘நம் பள்ளிவாசலிலிருந்து விலகி யிருக்கட்டும்’ ‘‘ என்று சொன்னதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.71 அத்தியாயம் :

82

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ‘மர்ருழ் ழஹ்ரான்’ எனுமிடத்தில் (‘கபாஸ்’ எனும்) மிஸ்வாக் மரத்தின் பழத்தைப் பறித்துக்கொண்டி ருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இதில் கறுப்பானதைப் பறியுங்கள்; ஏனெனில், அதுதான் மிகவும் நன்றாக இருக்கும்” என்று சொன்னார்கள். அப்போது ‘‘தாங்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தீர்களா?” என்று கேட்கப்பட்டது. அவர்கள், ‘‘ஆம்! அதை மேய்க்காத இறைத்தூதரும் உண்டா?” என்று கேட்டார்கள்.72 அத்தியாயம் :

83

சுவைத் பின் நுஅமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபருக்குப் புறப்பட்டோம். நாங்கள் ‘ஸஹ்பா’ எனுமிடத்தில் இருந்த போது நபி (ஸல்) அவர்கள் உணவு கொண்டுவரச் சொன்னார்கள். அவர்களிடம் மாவு மட்டுமே கொண்டுவரப்பட்டது. அதை நாங்கள் (அனைவரும்) உண்டோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக எழுந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் வாய் கொப்புளித்தார்கள். நாங்களும் வாய் கொப்புளித்தோம். அத்தியாயம் :

84

சுவைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபருக்குச் சென்றோம். நாங்கள் ‘ஸஹ்பா’ எனுமிடத்தில் இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் உணவு கொண்டுவரச் சொன்னார்கள். மாவு மட்டும்தான் அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. நாங்கள் அவர்களுடன் அதை மென்று உண்டோம். பிறகு தண்ணீர் கொண்டுவரச் சொல்லி வாய் கொப்புளித்தார்கள். நாங்களும் அவர்களுடன் வாய் கொப்புளித்தோம். பிறகு, எங்களுடன் அவர்கள் மஃக்ரிப் தொழுகை தொழுதார்கள். ஆனால், (புதிதாக) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்யவில்லை. யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘ஸஹ்பா’ எனும் அந்த இடம் கைபரிலிருந்து ஒரு மாலை நேரப் பயணத் தொலைவில் உள்ளது.73 அத்தியாயம் :

85

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் சாப்பிட்டால் அவர் தமது கையைத் தாமே உறிஞ்சாமல், அல்லது (மனைவி போன்றவரிடம்) உறிஞ்சத் தராமல் அதை அவர் துடைத்துக் கொள்ள வேண்டாம். இதை இப்னு அப்பாஸ் ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :

86

சயீத் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம், ‘‘நெருப்புத் தீண்டிய (சமைத்த) உணவை உண்பதால் (தொழுகைக்காக மீண்டும்) அங்கத் தூய்மை (உளூ) செய்ய வேண்டுமா?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘தேவையில்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அது போன்ற உணவு அரிதாகவே எங்களுக்குக் கிடைத்துவந்தது. அவ்வாறு எங்களுக்கு அது கிடைக்கும்போது எங்கள் முன்கைகள், மேல்கைகள் மற்றும் பாதங்கள்தான் எங்களின் கைகுட்டை களாக இருந்தன. பிறகு நாங்கள் தொழுவோம். (நெருப்பால் சமைத்த உணவை உண்டதற்காகப் புதிதாக) அங்கத் தூய்மை செய்யமாட்டோம்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :

87

அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (சாப்பிட்டு முடித்தபின்) தமது உணவு விரிப்பை எடுக்கும் போது, ‘‘அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா” என்று பிரார்த்திப்பார்கள். (பொருள்: அதிகமான, தூய்மையான, வளமிக்க எல்லாப் புகழும் (நன்றியும்) அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! இப்புகழ் முற்றுப்பெறாதது; கைவிடப்படக் கூடாதது; தவிர்க்க முடியாதது ஆகும்.) அத்தியாயம் :

88

அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ‘உணவு உண்ட பின்’ அல்லது ‘தமது உணவு விரிப்பை எடுக்கும்போது’ ‘‘அல்ஹம்து லில்லாஹி கஃபானா வ அர்வானா ஃகைர மக்ஃபிய்யின் வலா மக்ஃபூரின்” என்று கூறுவார்கள். (பொருள்: எங்களுக்குப் போதுமான உணவு அளித்து, எங்களின் தாகம் தணித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (நன்றியும்) உரியது. இப்புகழ் முற்றுப் பெறாதது; மறுக்க முடியாதது ஆகும்.) சில வேளைகளில், ‘‘ல(க்)கல் ஹம்து ரப்பனா, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் ரப்பனா” என்று கூறுவார்கள். (பொருள்: உனக்கே எல்லாப் புகழும் (நன்றியும்) உரியது எங்கள் இறைவா! இப்புகழ் முற்றுப்பெறாதது; கைவிப்படக் கூடாதது; தவிர்க்க இயலாதது ஆகும்.) அத்தியாயம் :

89

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டுவந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக்கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக்கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ‘ஒரு பிடி அல்லது இரு பிடிகள்’ அல்லது ‘ஒரு கவளம் அல்லது இரு கவளங்கள்’ உணவு கொடுக்கட்டும். ஏனெனில், அவர் (அதை சமைத்தபோது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக்கொண்டார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.74 அத்தியாயம் :

90

அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூஷுஐப் எனும் குறிப்புப் பெயரால் அழைக்கப்படும் ஒருவர் அன்சாரிகளில் இருந்தார். அவருக்கு இறைச்சி விற்கும் பணியாளர் ஒருவர் இருந்தார். (ஒருமுறை) அபூஷுஐப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது நபியவர்கள் தம் தோழர்களுடன் இருந்தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்களின் முகத்தில் பசியின் வாட்டத்தைக் கண்டார். உடனே இறைச்சி விற்கும் தம் பணியாளிடம் சென்று, ‘‘ஐந்து பேருக்குப் போதுமான உணவொன்றை எனக்காகத் தயார் செய். நான் அந்த ஐந்து பேரில் ஒருவராக நபி (ஸல்) அவர்களை அழைக்கக்கூடும்” என்று சொன்னார். உடனே அந்தப் பணியாளர் அவருக்காகச் சிறிய அளவில் ஓர் உணவைத் தயாரித்தார். பிறகு அபூஷுஐப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களை (உணவுண்ண) அழைத்தார்கள். அப்போது நபியவர்களைப் பின்தொடர்ந்து மற்றொருவரும் வந்தார். எனவே, நபி (ஸல்) அவர்கள் ‘‘அபூஷுஐபே! ஒரு மனிதர் எம்மைப் பின்தொடர்ந்து வந்துவிட்டார். நீங்கள் நினைத்தால் (நம்மோடு உணவருந்த) அவருக்கும் அனுமதியளிக்கலாம்; நீங்கள் நினைத்தால் அவரை விட்டுவிடலாம்” என்று சொன்னார்கள். அதற்கு அபூஷுஐப் (ரலி) அவர்கள், ‘‘(அவரைத் திருப்பி அனுப்ப) வேண்டாம். நான் அவருக்கு அனுமதியளித்து விட்டேன்” என்று சொன்னார்கள்.76 அத்தியாயம் :

91

அம்ர் பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்திலிருந்த ஆட்டுச் சப்பையை(க் கத்தியால்) துண்டு போ(ட்டுச் சாப்பி)டுவதை நான் பார்த்தேன். அப்போது தொழுகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உடனே அவர்கள் அதையும் அதைத் துண்டிக்கப் பயன்படுத்திய கத்தியையும் (அப்படியே) போட்டுவிட்டு எழுந்து தொழுதார்கள். (புதிதாக) அங்கத் தூய்மை (உளூ) செய்யவில்லை.77 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :

92

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவு உணவு உங்களுக்குமுன் வைக்கப்பட்டுக்கொண்டிருக்கத் தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்டு விட்டால், முதலில் உணவை உண்ணுங்கள். (பிறகு தொழச் செல்லுங்கள்.) இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதைப் போன்றே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களாலும் அறிவிக்கப் பட்டுள்ளது. அத்தியாயம் :

93

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருமுறை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் இரவு உணவு அருந்தினார்கள். அப்போது (தொழுகையில்) இமாம் ஓதியதை இப்னு உமர் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அத்தியாயம் :

94

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்டுக் கொண்டிருக்க இரவு உணவு வந்து விட்டால் முதலில் உணவை அருந்துங்கள். (பின்னர் தொழுங்கள்.) இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரு அறிவிப்புகளில் ‘‘(இரவு உணவு வந்துவிட்டால்” என்பதற்குப் பதிலாக) ‘‘இரவு உணவு வைக்கப்பட்டுவிட்டால்” என்று கூறப்பட்டுள்ளது.78 அத்தியாயம் :

95

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பர்தாவின் சட்டத்தை (எடுத்துரைக்கும் வசனம் இறங்கிய சூழ்நிலை குறித்து) மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நான்தான். உபை பின் கஅப் (ரலி) அவர்கள் என்னிடம் அது பற்றிக் கேட்டுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களின் மணாளராக ஆனார்கள். ஸைனப் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் மதீனா நகரில் மணமுடித்திருந்தார்கள். அப்போது அவர்கள் உச்சிப் பொழுதுக்குப்பின் மக்களை மணவிருந்துக்காக (வலீமா) அழைத்திருந்தார்கள். (விருந்து முடிந்து) மக்கள் எழுந்து சென்றபிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சற்று நேரம்) அமர்ந்திருந்தார்கள். அவர்களுடன் வேறுசிலரும் அமர்ந்திருந்தார்கள். இறுதியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சென்றுவிட்டார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். அவர்கள் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களின் அறை வாசலை அடைந்தார்கள். பிறகு வீட்டில் அமர்ந்திருந்தவர்கள் வெளியேறிவிட்டதாகக் கருதித் திரும்பிவந்தார்கள். நானும் அவர்களுடன் திரும்பிவந்தேன். அப்போதும் அந்தச் சிலபேர் அதே இடத்தில் அமர்ந்திருந் தார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் திரும்பிவிட, அவர்களுடன் நானும் இரண்டாவது முறையாகத் திரும்பினேன். இறுதியில் ஆயிஷா (ரலி) அவர்களின் அறை வாசலை அடைந்தார்கள். பிறகு (ஸைனப் (ரலி) அவர்களின் இல்லத்திற்கு) நபியவர்கள் திரும்ப, நானும் அவர்களுடன் திரும்பிவந்தேன். அப்போது அவர்கள் எழுந்து சென்றுவிட்டிருந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் தமக்கும் எனக்கும் இடையே திரையிட்டார்கள். அப்போதுதான் பர்தா(வின் சட்டத்தைக் கூறும் இறைவசனம்) அருளப்பெற்றது.79 அத்தியாயம் :